பணம் பறிப்பதற்காக தனியார் மருத்துவமனை ஒன்றில், இறந்தவரின் உடலை வைத்து சிகிச்சை அளிப்பதுபோல ‘ரமணா’ படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். அதுபோல தங்களின் தவறான சிகிச்சையால் இறந்த பெண் ஒருவர் உயிருடன் இருப்பதாகச் சொல்லி, பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர்கள் நாடகமாடியதாக புகார் எழுந்துள்ளது.
பெரம்பலூர் அருகேயுள்ள செட்டிக்குளத்தைச் சேர்ந்த செந்தில்குமார்-மணிமேகலை தம்பதிக்கு, திருமணமாகி ஏழு வருடங்களாகக் குழந்தை இல்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, மணிமேகலைக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அவருக்கு இரண்டாவதாக, பெரம்பலூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நான்கு மாதங்களுக்கு முன்பாக ஓர் ஆண் குழந்தை பிறந்தது.

அதற்கு மேல் என்ன நடந்தது என்பதை நம்மிடம் கண்ணீருடன் விவரித்தார், மணிமேகலையின் தாயார் தமிழ்செல்வி.
“இரண்டாவது குழந்தை எந்தப் பிரச்னையும் இல்லாமல்தான் பிறந்தது. எங்களிடம் கேட்காமலே என் மகளுக்கு ‘காப்பர் டி’ என்ற கருத்தடை சாதனத்தை வைத்தார்கள். ஆனால், இது சரியாகப் பொருத்தப்படாததால், ரத்தப்போக்கு ஏற்பட்டது. மருத்துவமனைக்குப் போய்க் கேட்டதற்கு, ‘போகப் போகச் சரியாகிவிடும்’ என்று சொல்லி மாத்திரை கொடுத்தார்கள். ஆனாலும், ரத்தப்போக்கும் வலியும் நிற்கவில்லை. மீண்டும் மருத்துவமனைக்குப் போனபோது, ‘ஸ்கேன்தான் எடுக்கணும். இப்போ ஸ்கேன் மெஷின் ரிப்பேரா இருக்கு. நாளைக்கு வாங்க’னு சொன்னாங்க.
என் மகள் வலி தாங்கமுடியாமல் துடிச்சதால், ஒரு தனியார் மருத்துவமனையில் ஸ்கேன் எடுத்தோம். அந்த ரிப்போர்ட்டைப் பார்த்துவிட்டு, ‘காப்பர் டி வைத்த இடத்தில் நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கு. கர்ப்பப்பைக்குப் பக்கத்தில் கொஞ்சம் சிக்கலான இடத்தில் காப்பர் டி இருக்கு. கொஞ்சம் செலவாகும்’ என்று அந்த தனியார் மருத்துவமனையில் சொன்னார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எங்களுக்கு அந்த அளவு வசதியில்லை. அதனால், ஸ்கேன் ரிப்போர்ட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுபோய்க் காட்டினோம். ‘சரி... நாங்களே அதை எடுக்கிறோம்’ என்று சொல்லி, ஆகஸ்ட் 8-ம் தேதி ஆபரேஷன் தியேட்டருக்குக் கொண்டுபோனார்கள். காப்பர் டி-யை எடுப்பதற்காக, கிடுக்கியை வேகமாக செலுத்தியபோது, மலக்குடலில் ஓட்டை விழுந்துள்ளது. பதற்றத்தில் என்ன செய்வதென்று தெரியாமல், என் மருமகனை அழைத்த டாக்டர்கள், ‘உபகரணத்தைப் பயன்படுத்தியபோது, குடலில் சின்ன ஓட்டை விழுந்துள்ளது. ஆபரேஷன் செய்தால் சரியாகிவிடும்’ என்று சொன்னார்கள். அப்படியே, ஒரு வெற்றுத்தாளில் கையெழுத்துக் கேட்டனர். ‘ஏன்?’ என்று கேட்டதற்கு, ‘ஆபரேஷனை உடனே செய்யணும். உங்களுக்கு நாங்க கியாரன்ட்டி’னு சொன்னார்கள். குடல் ஓட்டையை சரி செய்வதற்காக ஆகஸ்ட் 9-ம் தேதி இரவு பத்தரை மணிக்கு ஆபரேஷன் தியேட்டருக்குக் கொண்டுபோனார்கள். அப்புறம் அவளைப் பிணமாதான் காட்டினாங்க...” என்று கதறினார்.
மணிமேகலையின் கணவர் செந்தில்குமாரிடம் பேசினோம். “ஆபரேஷன் செய்த பிறகு, இரண்டு நாள்களுக்கு என் மனைவியைப் பார்க்க விடவே இல்லை. அவர்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தனர். ஒரு கையில் ட்ரிப்ஸ் ஏறியது. இன்னொரு பக்கம் யூரின் பேக் போட்டிருந்தனர். ‘மணிமேகலையைப் பார்க்க வேண்டும்’ என்று நாங்கள் வலியுறுத்தினால், எங்கள் கூடவே ஒரு டாக்டர் வருவார். எங்களைத் தொட்டுக்கூட பார்க்கவிடவில்லை. ‘என்ன டாக்டர், கண் திறக்கவே இல்லையே’ என்று நாங்கள் கேட்டதற்கு, ‘கொஞ்ச நேரத்துக்கு முன்புதான் விழித்துப் பார்த்தார். அவர் கண்விழிக்கும்போது

கூப்பிடுகிறோம்’ என்றார்கள். என் கண்ணெதிரிலேயே, அவர்கள் பணத்தைக் கொடுத்து வெளியில் மருந்து வாங்கிவரச் சொன்னார்கள். அதையெல்லாம் பார்த்து, ‘எப்படியும் என் மனைவியைக் காப்பாற்றிவிடுவார்கள்’ என்று நம்பியிருந்தோம். ஆனால், ‘மயக்க மருந்தின் அளவு அதிகமானதைத் தாங்க முடியாமல் அட்டாக் வந்து மணிமேகலை இறந்துவிட்டார்’ என்று ஆகஸ்ட் 11-ம் தேதி சொன்னார்கள். ஏற்கெனவே இறந்துவிட்ட என் மனைவியின் உடலை வைத்து நாடகமாடி இருக்கிறார்கள்” என்று கதறினார்.
இது குறித்து நாம் தமிழர் கட்சியின் மாவட்டச் செயலாளர் அருளிடம் பேசினோம். “தங்கள் தவற்றை மறைப்பதற்காக டாக்டர்கள் நாடகம் ஆடியிருக்கிறார்கள். டாக்டர்கள் சூர்யபிரபா, ரமணி ஜீவாகேத்ரின் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர். இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, இதே மருத்துவமனையில் பர்வீன் என்ற பெண்ணுக்கு வயிற்றில் பஞ்சை வைத்துத் தைத்துவிட்டார்கள். அதனால், சீழ் வைத்து அந்தப் பெண் இறந்தார். இப்படி நோயாளிகளைச் சாகடிக்கும் துயரம் தொடர்கிறது” என்றார் வேதனையுடன்.
மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் செல்வராஜனிடம் பேசியபோது, “கவனக்குறைவால் இப்படி ஒரு சம்பவம் நடந்தது உண்மைதான். இரண்டு மருத்துவர்களை விசாரிக்கக் குழு அமைத்துள்ளோம். தவறு நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூலாகச் சொன்னார்.
உயிரைக் கொல்லும் அலட்சியங்களுக்குத் தண்டனை தரப்பட வேண்டும்.
- எம்.திலீபன், தி.ஹரிஹரசுதன்
படங்கள்: செ.ராபர்ட்