மத்திய அரசு சொல்லி தமிழக அரசு கொண்டு வந்திருக்கும் ‘நீட் - ஓராண்டு விலக்கு அவசரச் சட்டம்’ அர்த்தமற்றதாகிவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது. சுதந்திர தினத்துக்கு முதல் நாள் மத்திய அரசிடம் இதற்கான வரைவு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. 16-ம் தேதி மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், ‘தமிழக அரசுக்கு இந்த அவசரச் சட்டத்தைக் கொண்டுவர சட்டரீதியான உரிமை இருக்கிறது. அதற்கு அனுமதி வழங்கலாம்’ என்று பரிந்துரை செய்தார். அன்று மாலையே சட்டத்துறை ஒப்புதல் வழங்கியது. ஓரிரு நாள்களில் மத்திய அரசின் சுகாதாரம், மனிதவள மேம்பாட்டுத்துறை உள்ளிட்ட ஆறு துறைகளிடமும் ஒப்புதல் பெற்று அவசரச் சட்டம் அமலுக்கு வரும் என நம்பிக்கையுடன் காத்திருந்தனர், சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கரும், செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகளும்.

அவசரச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர்தான் யாரேனும் நீதிமன்றத்தை நாடுவார்கள் என்று நினைத்திருந்த நிலையில், வழக்கறிஞர் நளினி சிதம்பரம் திடீரென வழக்கு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். நீட் தேர்வில் வெற்றிபெற்ற மாணவி காவ்யா நக்கீரன் சார்பில் அந்த வழக்குத் தொடரப்பட்டது. ‘தமிழகத்தில் நீட் தேர்வு முடிவுகள் அடிப்படையில் கலந்தாய்வுப் பட்டியலை வெளியிட்டு, மருத்துவ மாணவர் சேர்க்கையை ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க உத்தரவிட வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தார் அவர். நீதிமன்றத்தில் வியாழன் அன்று விசாரணை தொடங்கியது. ப்ளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தும் நீட் தேர்வில் வெற்றி பெறாத அரியலூர் மாணவி அனிதாவும் எதிர் மனுதாரராக வழக்கில் இணைந்தார்.
இந்திய மருத்துவக் கவுன்சிலின் வழக்கறிஞர் கௌரவ் ஷர்மா, நளினிக்கு ஆதரவாக வாதிட்டார். ‘‘நீட் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படாவிட்டால் அது நீதிமன்ற அவமதிப்பு. தமிழக அரசு இதைச் செய்யவில்லை என்றால், மருத்துவ இடங்களை மத்திய ஒதுக்கீட்டுக்கு சரண்டர் செய்ய வேண்டும்’’ என்று அவர் தடாலடியாக வாதாடியதைத் தமிழக அரசு எதிர்பார்க்கவில்லை. ப்ளஸ் டூ மாணவர்களுக்காக வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதிட்டார். கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவதை அவர் எடுத்துரைத்தார். தமிழக அரசு சார்பில், ‘‘அவசரச் சட்டம் கொண்டுவர அரசுக்கு அதிகாரம் உள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘தமிழக அரசு கொண்டுவரும் சட்டம், அரசியல் சாசனத்துக்கு உட்பட்டதாகவும் இருக்கலாம், இல்லாமலும் போகலாம். ஆனால், அந்தச் சட்டத்தை அனுமதிக்கலாம்’’ எனச் சொன்ன மத்திய அரசு வழக்கறிஞர் மேத்தா, ‘‘செவ்வாய்க்கிழமைக்குள் அவசரச் சட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கிவிடும்’’ என்றார். இதனை எல்லாம் கேட்ட நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் பெஞ்ச், தமிழக அரசுக்கு எதிராக சரமாரி கண்டனங்களை வெளிட்டது. ‘‘கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை இவ்வளவு காலதாமதமாகத்தான் உணர்ந்தீர்களா... முன்பே இந்த அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்திருக்க வேண்டும். ஏன் இந்த தாமதம்? அப்படியானால் நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை என்ன செய்யப்போகிறீர்கள்? இந்த விவகாரத்தில் ஒரு மாணவர்கூட பாதிக்கப்படக் கூடாது’’ என்றனர் அவர்கள்.
இனி, இரு தரப்பு மாணவர்களுக்கும் சம நிலையான வாய்ப்பை எப்படி வழங்குவது என்று தமிழக அரசும், இந்திய மருத்துவக் கவுன்சிலும் பதிலளிக்க வேண்டும். 22-ம் தேதி மீண்டும் வழக்கு விசாரணைக்கு வரும்போதுதான் இரு தரப்புக்கும் 50:50 என்று நிர்ணயிக்கப்படுமா... அல்லது 60:40 என்று பிரிக்கப்படுமா என்பது தெரியவரும். ஒருவேளை அவசரச் சட்டம் கொண்டு வந்தாலும், இப்படி ஒரு ‘பாகப்பிரிவினை ஃபார்முலாவை’ உச்ச நீதிமன்றம் தந்தால், அவசரச் சட்டத்துக்கு வேலை இல்லாமல் போய்விடும்.
தமிழக அரசும், மத்திய அரசும் செய்த காலதாமதமே எல்லாக் குளறுபடிகளுக்கும் காரணம்.
- டெல்லி பாலா

‘‘கனவு சிதைந்துவிடக் கூடாது என்பதற்காகவே சட்டப் போராட்டம்!”
இந்த வழக்கில், அரியலூர் மாவட்டம் குழுமூரைச் சேர்ந்த அனிதா, எதிர் மனுதாரராக மனு தாக்கல் செய்துள்ளார். டெல்லியிலிருந்த அனிதாவிடம் பேசினோம். “நான் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவள். பத்து வருடங்களுக்கு முன்பு, உடல்நிலை சரியில்லாமல் எங்கள் அம்மா இறந்துபோனார். எங்கள் பகுதியில் டாக்டர்கள் இருந்திருந்தால், அம்மாவைக் காப்பாற்றியிருக்கலாம். இப்படியொரு துயரம் யாருக்கும் வரக்கூடாது என்பதற்காகவே, ‘நாம் டாக்டராக வேண்டும்’ என்று கனவு கண்டேன். என் அப்பா, திருச்சி காந்தி மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழிலாளி. அந்த வருமானத்தில் என்னைப் படிக்க வைத்தார்.
12-ம் வகுப்பில் 1176 மதிப்பெண்கள் பெற்றேன். மருத்துவத்துக்கான எனது கட் ஆஃப் 196.5. கடந்த ஆண்டு போலவே இந்த முறையும் 12-ம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் கலந்தாய்வு நடந்தால், எனக்கு எம்.பி.பி.எஸ் சீட் கிடைக்கும். ஆனால், மத்திய அரசு நீட் தேர்வைக் கொண்டுவந்துவிட்டது. நீட் தேர்வில், 12-ம் வகுப்புப் பாடப்புத்தகங்களோடு தொடர்பில்லாத கேள்விகளைக் கேட்டனர். அதனால், 86 மதிப்பெண்களை மட்டுமே பெறமுடிந்தது. திடீரென நீட் தேர்வைக் கொண்டுவந்து எழுதச் சொன்னால் என்ன அர்த்தம்? டாக்டர் ஆகவேண்டும் என்ற கனவில் என்னைப்போலவே எத்தனை மாணவர்கள் இருந்திருப்பார்கள். நீட் தேர்வால் அவர்களின் கனவு சிதைந்துவிடக் கூடாது என்பதற்காகவே சட்டப் போராட்டம் நடத்துகிறேன்” என்றார் அனிதா.
- எம்.திலீபன், படம்: ராபர்ட்