Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்

படம்: அ.குரூஸ்தனம்

சொல்வனம்

படம்: அ.குரூஸ்தனம்

Published:Updated:
சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்
சொல்வனம்

தினசரி

சில வீடுகளுக்கு நகர்ந்தவாறே வீசிச்செல்கிறான்
அந்த வீடுகள் பூட்டியே இருக்கின்றன.
சில வீடுகளில் “சார் பேப்பர்” என்று குரலெழுப்புகிறான்
அந்த வீடுகள் எப்போதாவது பதில் சொல்கின்றன.
சில வீடுகளிடம் ஏதும் பேசாமல் செருகிச் செல்கிறான்
அந்த வீடுகள் மௌனம் கலைப்பதேயில்லை.
சில வீடுகளை ரசித்துச் செல்கிறான்
அந்த வீடுகள் அவனிடம் புன்னகை செய்கின்றன.
சில வீடுகளில் மட்டுமே நின்று கேட்கிறான்
“அக்கா தண்ணி குடுக்கா”
அந்த வீடுகளும் அவனிடம் கேட்கத் தவறுவதில்லை.
“வேலைய முடிச்சிட்டு ஒழுங்கா ஸ்கூலுக்குப் போறியாடா?”


- சுபா செந்தில்குமார்

நினைவு ஊஞ்சல்

ஓய்வெடுக்கும் ஒரு ஞாயிறு மதியத்தில்
என்றுமில்லா சத்தம் எங்கள் தெருவில்
புதிதாய் வந்த பிள்ளைகள் தந்த சத்தம்
திட்டித் தீர்க்கலாமென சன்னல் திறந்தால்
நாங்கள் ஆடிய பின் யாரும் ஆடாத
புளியமரக் கிளையில்
`ஓ’ வெனக் கத்தி ஆர்ப்பரித்து
ஊஞ்சல் கட்டி ஆடும் பிள்ளைகளைக் கண்டு
ஊமையாய் வேடிக்கை பார்த்துப் பின்
ஊஞ்சல் மேலே போகும்போதெல்லாம்
`ஓ’ வென நானும் கத்துகிறேன் இங்கிருந்து
ஒப்பாகத் திரும்ப ஊஞ்சலில் இருந்து
`ஓ’ வெனக் கத்துவதும் நான்தான்
ஊஞ்சல் தள்ளிவிடும் டவுசர் சிறுவன்
உம்மணாமூஞ்சி குமார்தானே...
உனைப் பார்த்து முப்பது வருசமாச்சே நண்பா.


-நாகராஜ சுப்ரமணி

கோடையை விழுங்குதல்

இருளில் நடக்கும் சிறுமியென
மிகக் கவனமாய் அடியெடுத்து
நகரக்கூடிய காலம்
வேனல் தாங்காமல்
நீர்த் தேடி நொண்டுகிறது.
துணிகளைக் கிழித்தெறிந்து
தெருவில் ஓடும் காலத்தை
கையில் கால்சராயுடன்
துரத்துகிறாள் தாயொருத்தி.
வியர்வை பூக்கத் தொடங்கி
நனைந்து உழன்றுகொண்டிருப்பவன்
மன்றாடுகிறான்
‘இந்த நகரத்தின் உயரத்திலிருக்கும்
கல்நார் வேயப்பட்ட
பத்துக்கு ஆறு அறையைக் குளமாக்கி
அதில் நீந்தும் சிறு புழுவாக்குக் கோடையே!
நீ வறுத்துத் தின்னும் வாதைக்கு
மீனின் ஒரு விழுங்கில் சுகப்படுவேன்’
உச்சந்தலைக்கு மேல் மணி ஒளிர்கிறது
பன்னிரண்டு முறை கடிகாரத்தில்
பகலின் கதறெலன.
அடிக்கடி காறி உமிழும்
நோயுற்ற கிழவனின்
எச்சில் குவளை காய்ந்து கிடக்கிறது
கனன்றிருக்கும் படுக்கையிலிருந்து நிமிர்பவன்
முதுகை ஈரத் துவாலையால் அரக்கியபடி
தன்னை நொந்து வெக்கையை ஏசுகிறான்.
ஒரு மிடறு எச்சிலூறும் கணத்தில்
அமைதியடைந்து
ஒட்டகம்போல் நீர் அறையில் தேக்கிக்கொண்டு
ஒவ்வொரு மிடறையும்
முன் வைக்கிறான்
வாளேந்தி வரும் வேனிற்காலத்துக்கு எதிராக.


-ஸ்டாலின் சரவணன்

மழைச்சாமி

கூழ் ஊற்றும் திருவிழாவில்
கொட்டிய பம்பை உடுக்கையில்
மருள் வந்தாடிய
மாணிக்கம் சம்சாரம்
அத்தனைக்கும் பதில் சொன்னது
அசராது.
மழையேயில்லையே தாயென்று
மக்கள் கேட்டிட ஏனோ
கமுக்கமாய் மலையேறியது
கனியொன்றை விழுங்கி.


- இரா.ஜெயசங்கரன்

 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism