
ஆடவர் காது திருகினால்
சூடான தண்ணீரும்
பெண்டிர் காது திருகினால்
குளிர்ந்த தண்ணீரும் தரும்
அதிசயத் தெருக்குழாய் அது
தாகம் தீர்க்க வந்த காக்கைக்கு
துள்ளலாக உதட்டு முத்தம் கொடுக்கிறது
நீண்டு செல்லும் குடங்களின் வரிசையில் புதியதாகத் தென்பட்ட
தண்ணீர்க் கேன்களைக் கருதி
பெண்டிர் இடுப்பு குறித்தான
கவலையில் மூழ்குகிறது
குடத்துக்கும் கேனுக்குமான
கொள்ளளவுக்காக
செல்லம்மா கிழவிக்கும் லதா சித்திக்குமான தலைமுடிச் சண்டையை WWE ஆட்டம் போல ரசிக்கிறது.
உபரிநீர் வழித்தடத்தை
துண்டுஓடு கொண்டு முருங்கைக்கு மடை மாற்றியத்தில் பெருமிதம் கொள்கிறது
மணல் திருடர்களின் ராஜங்கத்தில்
எம்-சாண்ட் கொழுக்கட்டை தின்று
லிட்டருக்குப் பத்து ரூபாய் கொடுக்க அர்த்தமாகிறது
சமீபத்திய காது திருகுதலில்
வந்த பெருமூச்சில்.