‘காயங்களைக் காலம் ஆற்றுகிறதுதான். இருந்தாலும், சில நேரங்களில் அது நடுக்கமேற்படுத்தும் கனவுகளுக்குள் இப்பொழுதும் இழுத்துச் செல்கிறது. எதிர்காலத்திலும் அதற்குள் தள்ளுகிறது’ என்று தொடங்குகிறார் விபூதி நாராயண் ராய். இவர், உத்தரப்பிரதேச மாநில போலீஸ் ஐ.ஜி-யாக இருந்து ஓய்வுபெற்றவர்.
ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரிக்கு ஏன் இந்தக் குற்றவுணர்ச்சி வருகிறது?

சுதந்திர இந்தியாவில் நடந்த காவல்துறைப் படுகொலைகளில், மறைக்கப்பட்டது ஹாஷிம்புரா சம்பவம். 1987-ம் ஆண்டு மே மாதம் 22-ம் தேதி நள்ளிரவில், 42 இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அவர்கள் அனைவருமே முஸ்லிம்கள். இவ்வளவு பெரிய என்கவுன்டர், ஒரே இடத்தில் அதன்பிறகு நடந்திருக்குமா எனத் தெரியவில்லை. ‘மனநோயால் பாதிக்கப்பட்டவராக இருந்தால் மட்டும்தான், மிக அருகில் வைத்துக்கொண்டு இப்படிச் சுட முடியும்’ என்கிறார் இந்த போலீஸ் அதிகாரி.
‘‘இந்தச் சம்பவத்தை நான் அறிய நேர்ந்தபோது, இரவு மணி 10.30. நான், மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் இன்னபிற அதிகாரிகளுடன் ஹிண்டன் ஆற்றினை அடைந்தேன். மதச்சார்பற்ற இந்தியாவின் மிக வெட்கக்கேடான அந்தக் கொடிய சம்பவத்துக்கு நான் சாட்சியமாகிறேன் என்பதை அந்த இடத்தை அடையும்வரை என்னால் நம்ப முடியவில்லை” என்பதுதான், இந்தப் புத்தகத்தை எழுதுவதற்கு விபூதி நாராயண் ராவைத் தூண்டியுள்ளது.
இந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமும் நடுங்கச் செய்கிறது. ஒவ்வொரு வார்த்தையும் உறைய வைக்கிறது. “பாபுதீன் தனது வயிற்றுக்கு அருகில் ஈரத்தை உணர்ந்தார். ஈரமான பகுதியை அவர் தொட்டுப் பார்த்தார். அவர் சுடப்பட்டிருந்தார்’’ என்பது போன்ற நேரடிச் சாட்சிகளும் இதில் உண்டு.
இதுபோன்ற குற்றவுணர்ச்சி மற்ற போலீஸாருக்கு ஏன் வருவதில்லை? ‘‘அரசு நிர்வாகப் பொறுப்பாளர்கள் அனைவரும் தங்கள் பொறுப்புகளில் ஒளிந்து விளையாடினார்களே தவிர, பிடித்து விளையாடவில்லை. பலரும் குற்றங்களை ஒதுக்கிப் புறந்தள்ளுவது என்பதன் பின்னால் ஒளிந்துகொண்டார்கள்” என்கிறார் விபூதி. இந்த இரக்கமற்ற, அதேநேரத்தில் சுயநலமுள்ள மனோபாவம்தான் பாவங்களுக்கு அடித்தளமாக அமைகிறது.
“இது நான் தீர்க்கும் கடனாகும். இதனை நான் செய்யாவிட்டால் எனது சவக்குழிக்குள் நடுக்கமின்றி நான் செல்ல இயலாது” என்கிறார் விபூதி. இந்த மனசாட்சியே அதிகாரத்தில் இருக்கும் அனைவருக்கும் தேவை.
ஹாஷிம்புரா மே 22
(இந்தியாவில் மறைக்கப்பட்ட மாபெரும் சிறைப்படுகொலை)
விபூதி நாராயண் ராய்
தமிழில்: யூசுஃப் ராஜா
இலக்கியச் சோலை, 26, பேரக்ஸ் சாலை, பெரியமேடு, சென்னை-3.
தொடர்புக்கு: 044 - 25610969
விலை: ரூ.120/-
- புத்தகன்