Published:Updated:

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 4

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 4
பிரீமியம் ஸ்டோரி
கிறுக்கு ராஜாக்களின் கதை! - 4

முகில்

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 4

முகில்

Published:Updated:
கிறுக்கு ராஜாக்களின் கதை! - 4
பிரீமியம் ஸ்டோரி
கிறுக்கு ராஜாக்களின் கதை! - 4
கிறுக்கு ராஜாக்களின் கதை! - 4

‘மக்களால் நான், மக்களுக்காக நான்!’

தினைந்து, பதினாறாம் நூற்றாண்டுகளில் மாஸ்கோவில் தீ விபத்து என்பது வழக்கமான ஒன்று. கல் கட்டடங்கள் கிடையாது. மரத்தாலான வீடுகளே. சமைக்கும்போதோ, குளிர் காயும்போதோ, காற்றினால் சிறு பொறி சிதறினால் கூட, பல பகுதிகள் சிதைவதும் பல உயிர்கள் வதைபடுவதும் தொடர்ந்தன.

அன்றைக்கும் அப்படித்தான் மாஸ்கோவில் நெருப்பு பற்றிக் கொண்டது. ஆஸ்ட்ரோவ்கா என்ற ஊரில் முகாமிட்டிருந்த பேரரசர் நான்காம் இவான், செய்தி கேள்விப்பட்டதும் குதிரையேறி மாஸ்கோவுக்கு வந்தார். நெருப்பின் நடுவே மக்கள் பரிதவித்துக் கொண்டிருந்தனர். அவரது அரண்மனையான கிரெம்லினுக்கு ஆபத்தில்லை என்று தெரிந்ததும் நிம்மதியடைந்தார்.

ஆனால், கி.பி. 1547, மார்ச் 24-ல் கிரெம்லினின் மேற்கே அர்பாட் என்ற இடத்தில் தீப்பற்றிக் கொண்டது. காற்றின் வேகம் அதிகமாக இருக்கவே... 4ஜி வேகத்தில் தீ பரவியது. முதலில் ஒரு தேவாலயம் தீக்கிரையானது. பிறகு பல வீடுகள். தீயின் திசை மாறி, கிரெம்லின் வளாகத்திலும் நின்றாடியது. கருவூலம், நூலகம், ஆயுதக்கிடங்கு, அலுவலகம் என்று எங்கெங்கும் நெருப்பின் நடனம். வெடிமருந்துக் கிடங்கு ஒன்று பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. நெருப்பு பரவி, டோர்மிஷன் தேவாலயத்தின் பிரமாண்ட மணி அறுந்து விழுந்தது.

நகரமே தவித்துக் கொண்டிருக்க... மக்களைக் காக்க வேண்டிய பேரரசர் இவான், தன் உற்றார் உறவினர்களுடன் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் அடைக்கலம் தேடிக்கொண்டார். ஒயினை உறிஞ்சியபடியே, தூரத்தில் தெரிந்த புகைமூட்டத்தை இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தார். ஓரிரு நாள்கள் கழித்து கிரெம்லின் வளாகத்தின் சேதங்களைச் சரிசெய்யக் கட்டளையிட்டார். பாதிக்கப்பட்ட மக்கள் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

பல மணி நேரங்கள் நின்றாடிய அந்தத் தீயினால் பலத்த சேதம். 88,000 பேர் இடம் பெயர்ந்தனர். உயிரிழப்பு சுமார் 2,700க்கும் மேல். எல்லாவற்றையும் இழந்து பரிதவித்துக் கொண்டிருந்த மக்களின் கோபம், மன்னரின் குடும்பத்தின் மீது திரும்பியது. ‘நெருப்பு பரவியது விபத்து அல்ல. மாய மந்திர வித்தை. ஒரு உயிருள்ள மனிதனின் நெஞ்சைக் கிழித்து, இதயத்தை எடுத்து, அதை நீரில் போட்டு, மந்திரங்கள் ஓதி, அந்த மாய நீரை நகரமெங்கும் தெளித்து, அதன்மூலம் தீயைப் பரவ வைத்திருக்கின்றனர். அப்படிச் செய்தது ஒரு சூனியக்காரக் கிழவி. அவள் பெயர் அனா’ என்று வதந்தி பரவியது..

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 4

அனா, வேறு யாருமல்ல. பேரரசரின் தாய்வழிப்பாட்டி. அவளும் அவளைச் சார்ந்த பிற உறவினர்களுமே மந்திர சக்தியால் மாஸ்கோவைத் தீக்கிரையாக்கிவிட்டனர் என்று மக்கள் கொதித்தனர். ஆம், அன்றைய ஐரோப்பிய சமூகங்களில் ‘பிளாக் மேஜிக்’ மீது மக்களுக்கு அபரிமிதமான நம்பிக்கையும் பயமும் இருந்தது. ஆகவே பாதிக்கப்பட்ட மக்கள், கொலை வெறியுடன் அனாவையும் அவளைச் சார்ந்தவர்களையும் தேடினர். இவானின் மாமன் ஒருவர் சிக்கினார். அவரைக் கொன்று, செஞ்சதுக்கத்தில் தொங்க விட்டனர். கோபம் அடங்காத கூட்டம், கிழவியையும் மற்றவர்களையும் தேடி, இவான் முன்பாகவே வந்து நின்று கூப்பாடு போட்டது. ‘‘கிழவியை வரச்சொல்லுங்கள்!’’

‘என்னது... எனக்கே கட்டளையிட்டு, என்னையே அவமதிக்கிறீர்களா?’ இவான் வீறுகொண்டு வீரர்களைக் கூட்டத்தின் மீது ஏவினார். ரத்தம். அபயக்குரல்கள். சில பிணங்கள். கிழவிக்கு ஆபத்தில்லை.

இப்படி மங்களகரமாக தீ விபத்துடன் ஆரம்பமான நான்காம் இவானின் ஆட்சியில், அவருக்கு ஆலோசனை வழங்க அனுபவமுள்ள, நம்பிக்கையான மூவர் குழு ஒன்று இருந்தது. அவர்களது சொற்களைச் சற்றே காதில் வாங்கிய இவான், வறுமைக்கு வாழ்க்கைப்பட்டிருந்த பொருளாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கினார். தீயணைப்பு முன்னேற்பாடுகளைச் செய்தார். தேவாலயங்களைச் சீரமைத்தார். விசுவாசமற்ற போயர்களையும் கவர்னர்களையும் கட்டம் கட்டிக் கழுத்தறுத்தார். வஞ்சம் வைத்து நெஞ்சம் பிளந்தார். கொலையுதிர் காலம் தொடர்ந்தது.

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 4

ஏராளமான ஆள்களைச் சேர்த்து ராணுவத்தை விரிவுபடுத்தினார். கி.பி. 1552-ல் காஸன் என்ற இஸ்லாமிய நகரத்தின் மீது படையெடுப்பு நிகழ்த்தப்பட்டது. நாற்பது நாள்கள் நடந்த கடும்போரில் காஸன், இவானிடம் வீழ்ந்தது. ‘இஸ்லாமியர்கள் மீது கிறிஸ்தவர்கள் நடத்திய கொடூரப்போர்’ என்றே இதனை வரலாற்றாளர்கள் விவரிக்கின்றனர். வெற்றிக்குப் பிறகு ரஷ்யப் படைகள் வெறியாட்டம் போட்டன. போரிலும் அதற்குப் பிறகான வன்முறையிலும் கொல்லப்பட்ட + காணாமல் போன காஸன் தரப்பு எண்ணிக்கை சுமார் 65ஆயிரம். கைதானவர்கள் சுமார் 1,90,000 பேர். அந்நகரத்தின் இளம்பெண்கள், சிறுமிகளை எல்லாம் பரிசுப்பொருள்களாகக் கைப்பற்றிக்கொண்டு மாஸ்கோ திரும்பினார் இவான்.

காஸன் வெற்றி, மங்கோலிய தத்தார்களுக்கு எதிரான ரஷ்யப் பேரரசர் நான்காம் இவானின் முதல் வெற்றி. முழு உத்வேகத்துடன் அடுத்தடுத்த படையெடுப்புகளை நிகழ்த்தினார் இவான். ரஷ்யர்களின் ராட்சஷத் தாக்குதலில் அஸ்ட்ராகான் ராஜ்ஜியம் அலறியது. சைபீரிய இனக்குழுக்கள் சரிந்தன. பின்லாந்தின் பாகன்கள் பின்வாங்கினர். துருக்கியர்கள் தோற்கடிக்கப்பட்டனர். ரஷ்யப் பேரரசின் எல்லை, எல்லைகள் தாண்டி விரிந்தது. இப்படிப் பல்வேறு இன, மத, மொழி மக்கள் புதிதாக இவானின் அதிகாரத்தின் கீழ். அவர்களைத் தனது பேரரசின் குடிமக்களாக ஏற்றுக்கொள்ள இவான் ஒரே ஒரு நிபந்தனை மட்டும் விதித்தார். ‘கிறிஸ்துவர்களாக மதம் மாற வேண்டும்.’ சம்மதித்து அடிபணிந்தவர்களுக்கு அரசாங்க வேலை உள்ளிட்ட சலுகைகள் கிட்டின. சகலரையும் உள்ளடக்கிய புனித ரஷ்யப் பேரரசு உருவாகியது. உலகின் கண்கள் மாஸ்கோவை சற்றே அச்சத்துடன் உற்று நோக்கின.

இந்தப் போர்களுக்கு மத்தியில் பேரரசருக்குத் திடீரென உடல்நலம் குன்றியது (கி.பி. 1553). கடும் காய்ச்சல். படுத்த படுக்கை. தன் நம்பிக்கைக்குரிய இளவரசர்களை, போயர்களை அழைத்தார். ‘‘என் மகனும் இளவரசனுமாகிய டிமிட்ரியையே அடுத்த பேரரசனாக அரியணை ஏற்றுவோம் எனச் சத்தியம் செய்து கொடுங்கள்’’ என்று கேட்டார். டிமிட்ரி அப்போது கைக்குழந்தை. ‘இவான் போய்ச் சேர்ந்துவிடுவார்’ என்று அதீத நம்பிக்கையில் பலரும் அதைப் புறக்கணித்தனர். ஆனால், காய்ச்சல்தான் போய்ச் சேர்ந்தது. கம்பீரமாக எழுந்து உட்கார்ந்தார் பேரரசர். சத்தியம் செய்யாதவர்களையெல்லாம் தேடிப்பிடித்துத் தீர்த்துக் கட்டினார்.

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 4

ஆனாலும், டிமிட்ரிக்குக் கொடுத்து வைக்கவில்லை. படகுப் பயணம் ஒன்றில் வேலைக்காரப் பெண் தவறவிட, நீரில் மூழ்கி குழந்தை இறந்துபோனது. அதற்குப் பின்னும் இரண்டு ஆண் குழந்தைகளை (இவானோவிச், பியோடோர்) பெற்றுக் கொடுத்த புண்ணியவதி அனாஸ்டாஸியா, கி.பி. 1560-ல் நோய்வாய்ப்பட்டு இறந்து போனாள். இவான் நிலைகுலைந்தார். தன் காதல் பேரரசியின் இழப்பை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவளை விரும்பாத போயர்களே விஷம் வைத்துக் கொன்றுவிட்டதாக மனதார நம்பினார். அதற்கு ஆதாரோ, ஆதாரமோ இல்லையென்றாலும், அவரது தாய்க்கு நேர்ந்த மரணம் மனதில் நிழலாடியது. மனநலம் பாதிக்கப்பட்டு உக்கிரமானார். தரையில் புரண்டு அழுதார். கிடைத்ததை எல்லாம் போட்டுடைத்தார். தன் தலையாலேயே முட்டி பொருள்களைச் சேதப்படுத்தினார். வில்லன் இவான், வெறிகொண்ட இவானாக மாறியது, காதல் மனைவியின் இறப்புக்குப் பிறகுதான்.

காஸன் மற்றும் பிற போர்களில் கிடைத்த வெற்றிகளின் அடையாளமாக, மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் மாபெரும் தேவாலயம் ஒன்றைக் கட்டியெழுப்பச் சொன்னார் இவான். செயின்ட் பஸில் தேவாலயம் 1561–ல் வானுயர்ந்து நின்றது. கண் படும் அழகுடன் மிளிர்ந்தது. அதைக் கட்டிய கட்டடக்கலை நிபுணரை வரவழைத்தார் இவான். பெரும் பரிசை எதிர்பார்த்து நின்றவர், இவானிடமிருந்து உதிர்ந்த உத்தரவால் விதிர்விதிர்த்துப் போனார். ‘‘இதேபோல் ஓர் அற்புதமான தேவாலயம் உலகில் வேறெங்குமே உருவாகிவிடக்கூடாது. இவனது கண்களைத் தோண்டி எடுங்கள்!’’

கி.பி. 1564. ‘போயர்களும் டூமாவும்தான் தனது அதிகாரத்தை மட்டுப்படுத்துகிறார்கள். பெரும் தலைவலியாக இருக்கிறார்கள்’ எனக் கொதித்தார் இவான். ‘பேரரசு எங்கும் பரவிக் கிடக்கும் போயர்களைக் கூண்டோடுப் பரலோகம் அனுப்பிவிட்டால் டூமா டுமீல் ஆகிவிடும்’ எனத் திட்டமிட்டார். பக்கா ஸ்கிரிப்ட் உடன் ரியாலிட்டி ஷோ ஒன்றை அரங்கேற்றினார். தனது உடைமைகளையெல்லாம் எடுத்துக்கொண்டு மாஸ்கோவை விட்டு ரகசியமாக வெளியேறினார் இவான்.

வெளியே ஓரிடத்தில் தங்கியபடி மாஸ்கோவுக்கு இரண்டு கடிதங்களை அனுப்பினார். அதில் ஒன்று, போயர்களின் ஊழல்களையும், அவர்களின் குற்றங்களையும் துரோகங்களையும் பட்டியலிட்டது. ‘போயர்கள் முற்றிலும் ஒதுங்கினால் மட்டுமே நான் மீண்டும் மாஸ்கோவுக்குத் திரும்புவேன். முழு அதிகாரத்துடன் ஆட்சியைத் தொடர்வேன்’ என்று அந்தக் கடிதம் முழக்கமிட்டது. ‘மக்களால் நான், மக்களுக்காக நான்!’ என்று இரண்டாவது கடிதம் மக்கள் நல மகுடி வாசித்தது. ‘பேரரசின் நலன் கருதி, மக்கள் இதற்காகத் தெருவில் இறங்கிப் போராட வேண்டும்’ என்று உசுப்பிவிட்டது.

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 4

நம்பிய மக்கள், பேரரசருக்காக வெம்பி, தெம்புடன் தெருவில் இறங்கிப் போராடினார்கள். ‘பேரரசர் நாடு திரும்ப வேண்டும். போயர்கள் ஒழிக! டூமா - டௌன் டௌன்!’ ஒரு மாதம் பிகு பண்ணிவிட்டு, நல்லதொரு நாளில் கிரெம்லினுக்குள் மீண்டும் புகுந்தார் இவான். கொடுங்கோலனாக. சர்வாதிகாரியாக. வில்லாதி வில்லனாக. ‘இனி எந்தக் கேள்வியும் இன்றி பகைவர்களைப் பந்தாடுவேன். எதிரிகளை எரிப்பேன். துரோகிகளைத் துவம்சம் செய்வேன். நானே ஜெகஜ்ஜால ஜார்! சர்வ அதிகாரமும் எனதே!’

அதன்பின் முதல் வேலையாக Oprichniki என்ற பெயரில் ரகசியக் காவல் படை ஒன்றை உருவாக்கினார் இவான். முரட்டு மூடர்கள், மூர்க்கமான கிரிமினல்களால் ஆன வெறியேறிய படை அது. வீரர்கள் ஒவ்வொருவரும் இவானிடம் தனிப்பட்ட முறையில் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டு படையில் சேர்ந்தனர். கருப்புச்சீருடையில் கருப்புக் குதிரைகளில் ஆப்ரிச்நிகிகள் வலம் வந்தாலே சகலரும் நடுநடுங்கினர். அவர்கள் கையில் நாயின் மண்டையும் துடைப்பமும். நாய் போன்ற எதிரிகளைத் துடைப்பத்தால் பெருக்கித் தள்ளுவதே படையின் உயரிய நோக்கம்.

ஆப்ரிச்நிகிகளுடன் இணைந்து இவான் ஆடிய ஆட்டம், குருதி கொப்பளிக்கும் ஓர் அத்தியாயம்.

(அடுத்த இதழிலும் இவானே வருவார்...)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism