Published:Updated:

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 5

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 5
பிரீமியம் ஸ்டோரி
கிறுக்கு ராஜாக்களின் கதை! - 5

முகில்

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 5

முகில்

Published:Updated:
கிறுக்கு ராஜாக்களின் கதை! - 5
பிரீமியம் ஸ்டோரி
கிறுக்கு ராஜாக்களின் கதை! - 5
கிறுக்கு ராஜாக்களின் கதை! - 5

செம்பனியான உறைபனி!

சோவியத் ரஷ்யாவின் தன்னிகரற்றத் தலைவரான ஜோசப் ஸ்டாலின், தன் மனம் கவர்ந்த முன்மாதிரி நாயகர்களாகச் சிலரைக் குறிப்பிட்டிருக்கிறார். அதில் ஒருவர் முதலாம் ஜார் மன்னரான நான்காம் இவான். ஆனால், ‘Ivan – The Terrible’ என்பதே அன்னாருக்கு வரலாற்றில் நிலைத்த பெயர். ஏன் என்பது வாசித்தால் புரியும்.

என்றைக்கும் சாமியார்களையும் அரசியலையும் பிரிக்க முடியாதல்லவா! அப்படி அன்றைக்கும் இருந்தார்கள். ரஷ்யப் பேரரசில் தனக்கு எதிராக மதகுருக்கள் செயல்படுகிறார்கள் எனப் பேரரசருக்குச் சந்தேகம். அவர்களை எல்லாம் கிருபையுடன் வாழ்விலிருந்து விடுதலை கொடுத்து ரட்சிக்க விரும்பினார் இவான்.

தேவாலயம். பிரார்த்தனை நடந்து கொண்டிருக்கும். ரகசியக் காவல் படையினரான ஆப்ரிச்நிகிகள் தடதடவென உள்ளே நுழைவார்கள். கண்மூடித்தனமான தாக்குதல். மதகுருவின் ரத்தத்தால் பலிபீடம் பரிசுத்தமாக்கப்படும். அல்லது, கடத்தப்பட்ட மதகுருவின் உயிருக்குப் பேரரசரே விடுதலை அளிப்பார்.

பேரரசருக்கு வேண்டாத போயர்களுக்கும் அதேநிலைதான். அவர்கள் எந்தப் பொந்தில் பதுங்கியிருந்தாலும், ஆப்ரிச்நிகிகள் அநாயசமாகக் கண்டுபிடித்து, வதைத்துக் கொன்றனர். செத்த பிறகும் அவன் நரகத்துக்கே செல்ல வேண்டும் என்பது பேரரசரின் ஆசை. கொல்லப்பட்டவனுக்கு வேண்டிய யாராவது, இறந்தவனுடைய ஆன்மா பரலோகத்தை அடைய பிரார்த்தனை செய்துவிட்டால்? கொல்லப்பட்டனுக்குத் துணையாக அவனுடைய குடும்பத்தினரை, உறவினர்களை, நண்பர்களை எல்லாம் சேர்த்தே அனுப்பி வைத்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 5

‘தான்’ என்ற அகங்காரம் உச்சமடைந்தபோது, இவான் தன்னை ராஜ்ஜியத்தின் கடவுளாக அறிவித்துக்கொண்டு, புதியதொரு வழிபாட்டு மரபை உருவாக்கினார். அவரே மடாதிபதி! அவருக்கு விசுவாசமான படையினரே மதகுருக்கள்! அதற்கான மதச்சடங்குகளையும் உருவாக்கினார். கம்பீர உடையணிந்து வழிபாட்டுக் கூடத்தில் பிரசன்னமாவார் இவான். வீரர்களின் கூட்டம் ஆர்ப்பரிக்கும். பலிபீடத்தின் முன் மண்டியிடுவார். மடாரென தலையைத் தரையில் மோதி, பாவ மன்னிப்பு கேட்டுக் கதறுவார். முன் நெற்றியில் ரத்தம் கசிய, எழுந்து நிற்பார். பாவங்கள் கரைந்துவிட்டதால், புதிய பாவச்செயல்களுக்கான கணக்கு ஆரம்பமாகும்.

ஆண் கைதிகளை இழுத்து வருவார்கள். இவான் கையிலிருக்கும் சூடேற்றிய கூர்மையான கம்பி, அவர்களின் நெஞ்சில் நர்த்தனம் புரியும். அந்தக் கதறலே இவானுக்கு மெல்லிசையாக, அவர் தன் பிரசங்கத்தைத் தொடங்குவார். அரங்கம் அதிரப் பாடுவார். மிதமிஞ்சிய போதை கரைபுரண்டோட, பெண்கள் இழுத்து வரப்படுவர். வேறெதற்கு? காமமே கடவுளை அடைய கதகதப்பான வழி என்பதும் காலங்காலமாக நம்பப்படுவதுதானே. ஆபாவாணன் அன்றே ரஷ்யாவில் பிறந்திருந்தால் ‘ராத்திரி நேரத்து பூஜையில்... ரகசிய தரிசன ஆசையில்...’ என்று இவானுக்காக எழுதியிருக்கக் கூடும். வேறென்ன, ஹ்ஹா... ஹ்ஹா... தினம் ஆராதனை! ஹ்ஹா... ஹ்ஹா... அதில் சுகவேதனை!

ஒருமுறை போயர் ஒருவருக்கு இவான் குரூர மரண தண்டனை விதித்தார். ‘‘அந்தப் பீப்பாயில் வெடிமருந்தை நிரப்புங்கள். அதை அவனது உடம்பில் கட்டி வெடிக்க வையுங்கள்.’’ அந்த உடல் சில்லு சில்லாகச் சிதறி விழுந்தது. ஆப்ரிச்நிகிகளுக்குத் துப்பாக்கிச் சுட்டுப் பழகுவதற்கு ஏதாவது இலக்கு வேண்டுமல்லவா. ‘‘வயலில் வேலை செய்யும் பெண்களை இழுத்து வாருங்கள். துணிகளை உருவிக் கட்டிப்போடுங்கள். நீ முதல் பெண்ணின் கழுத்தில் சுடு. அடுத்தவன் இரண்டாவதுப் பெண்ணின் நெஞ்சில் சுடு.  நீ மூன்றாவதாக நிற்பவளது...’’

சந்தேகத்தால், மிக நெருக்கமானவர்களைக்கூட துளியும் வருத்தமின்றித் தீர்த்துக் கட்டியிருக்கிறார் இவான். பேரரசின் கருவூல அதிகாரி நிகிடா ஃபனிகோவ், நீர் கொதிக்கும் கொப்பரையில் வேக வைத்துக் கொல்லப்பட்டார். அரசவை உறுப்பினரான விஸ்கோவாடி, தூக்கில் இடப்பட்டார். பின் அவரது உடல் சில நூறு துண்டுகளாக நறுக்கப்பட்டது.

ஜெரோம் ஹார்ஸே, பிரிட்டிஷ்காரர். ரஷ்ய ராஜ்ஜியத்துக்கு, எலிசபெத் மகாராணி அனுப்பிய ராஜ தூதுவர். இவானின் வெறியாட்டங்களை நேரில் கண்டு பதிவுசெய்த ஐரோப்பியர். போரிஸ் டெலுபா என்ற எதிரி இளவரசனை, இவான் எப்படிக் கொன்றார் என்ற ஜெரோமின் பதிவு குலைநடுங்க வைப்பது.

‘இளவரசர் போரிஸ் இழுத்துவரப்பட்டார். கூர்மையான நீண்ட மரக்கம்பு தரையில் நிற்க வைக்கப்பட்டிருந்தது. போரிஸை அதில் சொருகினார்கள். ஆசனவாயில் புகுந்த கம்பு, கழுத்தைக் கிழித்து வெளியே வந்தது. ஆனால், போரிஸின் உயிர் உடனே வெளியேறவில்லை. அவரது தாயை அழைத்து வந்தார்கள். மகனைக் கண்டு அவள் கதறினாள். துப்பாக்கி ஏந்திய நூறு ஆப்ரிச்நிகிகள் அவளைச் சூழ்ந்துநின்று சுட ஆரம்பித்தனர். அந்த ஒற்றை உடலை, கணக்கில்லாமல் தோட்டாக்கள் துளைத்தன. இந்தக் கொடுமையைப் பார்த்தபடி கிடந்த போரிஸின் உடலிலிருந்து, உயிர் சொட்டுச் சொட்டாக வெளியேற 15 மணி நேரம் பிடித்தது.’

இவான் தனித்தனியாக பல்வேறு காலங்களில் மேற்கொண்ட மேற்படி கொடுமைகளை எல்லாம், ‘காம்போ பேக்’ போல ஒரே இடத்தில் ஒருமுறை நிகழ்த்தினார். நோவ்கோரோட். மாஸ்கோவின் வடமேற்கில் ரஷ்யப் பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்த நகரம். அதற்கு மேற்கில்தான் லிவோனியா (இன்றைய எஸ்டோனியாவும் லாத்வியாவும் இணைந்த பகுதி) இருந்தது. லிவோனியா மீதான ஆக்கிரமிப்பு முயற்சியை கி.பி. 1558-ல் இவான் மேற்கொண்டார். ஆனால், அதன் அண்டை நாடுகளான ஸ்வீடன், டென்மார்க், போலந்து, லித்துவேனியா போன்றவை இணைந்து ரஷ்யப் படைகளுக்கு பெப்பே காட்டின. போர் இழுத்துக்கொண்டே செல்ல... இவானுக்குள் சந்தேகப் புயல் சுழன்றாடியது.

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 5

ஒருவேளை நோவ்கோரோட் போயர்களும் மக்களும் எதிரிகளுடன் கைகோத்து நம்மைக் கவிழ்க்க நினைக்கிறார்களோ? சந்தேகமும் உயிர்க்கொல்லி நோய்தான். அடுத்தவர்களின் உயிரைக் கொல்லும் நோய். ஆப்ரிச்நிகிகள், நோவ்கோரோடுக்குள் புகுந்து வேட்டையாட ஆரம்பித்தார்கள் (கி.பி. 1570). தினமும் ஆயிரக்கணக்கான கொலைகள். ‘குடும்பத்தோடு எரி. வோல்கோவ் நதியின் உறைபனி நீரில் கும்பலாகத் தள்ளிக் கொல். ஆண்மையை நீக்கு. வன்புணர். வரிசையாக நிற்க வைத்துக் தலைகளை வெட்டு...’ ஐந்து வாரங்கள் தொடர்ந்த படுகொலையால் உறைபனி செம்பனியானது. பலி எண்ணிக்கை 30 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை இருக்கலாம் என்கிறது ஒரு சரித்திரக் குறிப்பு. இதையெல்லாம் தன் மகன், இளவரசன் இவானோவிச்சைப் பார்த்து ரசிக்கச் சொன்னார் இவான்.

அங்கிருந்து மாஸ்கோவுக்குத் திரும்பிய பின், அவரால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. ‘யார் எப்போது நம்மைக் கொல்வார்களோ’ என்ற பயம் துரத்தியது. கிரெம்லினிலிருந்து வெளியேறி, மாஸ்கோவுக்கு வெளியே அலெக்ஸாண்ட்ரோவ்ஸ்கயா கோட்டையில் சில காலம் பதுங்கியிருந்தார். 300 ஆப்ரிச்நிகிகள் எப்போதும் பாதுகாப்புப் பணியில் இருந்தனர்.

லிவோனியா போர் கி.பி. 1583 வரை இழுத்தது. இறுதியில் ரஷ்யப் படைகளுக்குத் தோல்வியையே பரிசளித்தது. மண்ணாசையால் மடத்தனமாகத் தொடர்ந்து போர்களை நடத்திக் கொண்டிருந்த இவான், வீழ்ச்சியைச் சந்தித்தார். பேரரசின் பொருளாதாரமும் பொசுங்கிப் போனது. இவானின் உடலும் உள்ளமும் நோய்களின் பிணைக்கைதியாகின. முதல் மனைவி அனாஸ்டாஸியாவை இழந்த சோகத்துக்குப் பின் பேரரசர், எட்டே எட்டு திருமணங்கள் மட்டும் செய்துகொண்டார். அந்த மனைவிகளில் சிலரை விலக்கி வைத்தார். சிலரது மரணத்துக்குக் காரணமாக இருந்தார். ஒருத்தியை அடித்துத் துரத்தினார்.

இவானுக்குப் பிறகான ராஜ வாரிசாக, இளவரசர் இவான் இவானோவிச் (அனாஸ்டாஸியாவின் இரண்டாவது மகன்) அறிவிக்கப்பட்டிருந்தார். இளவரசரின் முதல் இரு மனைவிகளையும், ‘குழந்தையில்லை’ என்று குறைகூறி கன்னிமடத்துக்குத் துரத்திவிட்டார் இவான். மூன்றாவது மனைவி யெலெனா ஸெரிமெட்டாவா கர்ப்பமாக இருந்தாள். அன்றைக்கு மெல்லிய உடை அணிந்திருந்த யெலெனாவைக் கண்டதும் மாமனார் இவானுக்கு ஆத்திரம் பொங்கியது. அவளைக் கண்மூடித்தனமாக அடித்தார். அவளது கதறல் கேட்டு இளவரசன் இவானோவிச் அங்கே வந்தார். தகப்பனின் தகாத செயலைக் கண்டு கொதித்தெழுந்து எதிர்த்தார். தன்னிலை இழந்தார் இவான். தன் செங்கோலால் மகனுடைய மண்டையில் ஒரே அடி! தலையில் ரத்தம் பீறிட இளவரசர் விழுந்தார். ‘ஐயோ... நானே என் மகனைக் கொன்று விட்டேனே!’ எனப் பேரரசர் கதறினார்.

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 5

யெலெனாவின் கர்ப்பம் கலைந்திருந்தது. மகன் படுத்த படுக்கையானான். காரணகர்த்தாவான இவான், ஏதாவது அற்புதம் நிகழ்த்தச் சொல்லி, கண்ணீருடன் ஆண்டவரிடம் ஜெபித்துக் கொண்டிருந்தார். ஐந்தாவது நாளில் இளவரசர் இறந்துபோனார். (கி.பி. 1581, நவம்பர் 19) மகனுடைய சவப்பெட்டி மீது தன் தலையால் மோதிக்கொண்டே இருந்தார் இவான்.

பால்வினை நோய்கள் உள்ளிட்ட பல நோய்கள் பேரரசர் உடல் மீது போர் தொடுத்தன. தோல் சுருங்கியது. உடலில் தீரா துர்நாற்றம். அவரால் கொல்லப்பட்டவர்களது ஆவி, அவரைச் சூழ்ந்து மிரட்டுவது போன்ற கனவுகளால் தூக்கம் தொலைத்தார். ‘இத்தனை பேரைக் கொன்று விட்டேனே’ எனப் பாவ மன்னிப்புப் பிரார்த்தனைகளைத் தொடர்ந்தார். விஷத்தன்மை கொண்ட பாதரசத்தால் செய்யப்பட்ட மருந்துகளைச் சாப்பிட ஆரம்பித்தார். அவருக்கு மரணம் தேவைப் பட்டது. ஆகவே ஜோதிடர்களை அழைத்து நாள் குறித்தார்.

1584, மார்ச் 18. புதன்கிழமை.

அன்றைக்கு உற்சாகமாகவே விடிந்தது. மரணத்துக்காகப் பேரரசர் ஆவலுடன் காத்திருந்தார். எதுவும் நடப்பது போலில்லை. ஜோதிடர்களை எச்சரித்து செய்தி அனுப்பினார். ‘இன்னும் இன்றைய நாள் முடியவில்லை’ என்று அவர்கள் பதில் அனுப்பினார்கள்.

குளித்துவிட்டு வந்து சதுரங்கம் ஆட அமர்ந்தார் நான்காம் இவான். சிப்பாய் ஒன்றை வெட்ட நினைத்தபோது, அவரது உடல் வெட்டியது. வாய் கோணியது. மயங்கிச் சரிந்தார். சதுரங்கப் பலகையில் ராஜா வெட்டப்படவில்லை. நான்காம் இவான், காலத்திடம் வீழ்ந்து கிடந்தார்.

(வருவார்கள்...)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism