ஐந்தே நாட்களில் மத்திய அரசு அந்தர்பல்டி அடித்ததில், நீட் விவகாரத்தில் தமிழகப் பாடத் திட்டத்தில் பயின்று தேர்வு எழுதிய மாணவர்களின் இறுதி நம்பிக்கையும் கரைந்து போனது. ஆகஸ்ட் 17-ம் தேதி, ‘தமிழக அரசின் அவசரச் சட்டத்தைப் பரிசீலித்து வருகிறோம். 22-ம் தேதிக்குள் அனுமதி வழங்கிவிடுவோம்’ என்று மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. எனவே, ‘இரு தரப்பு மாணவர்களும் பாதிக்காதபடி மாணவர் சேர்க்கை நடத்த ஒரு ஃபார்முலாவைத் தயாரித்து வாருங்கள்’’ எனத் தமிழக அரசுக்கும், இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் களம் இறங்கினர். ‘இரு தரப்பு மாணவர்களுக்கும் வாய்ப்பு வழங்கும் அடிப்படையில் கூடுதலாக இந்த ஆண்டு சுமார் 2,600 இடங்களைத் தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டும்’ என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் இரண்டு முறை சென்று இந்திய மருத்துவக் கவுன்சில் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தார். ப்ளஸ் டூ மதிப்பெண் அடிப்படையிலும், நீட் அடிப்படையிலும் கலந்தாய்வுப் பட்டியல்கள் தயாரிக்கப்பட்டன. அவை 15 வால்யூம் புத்தகங்களாக பைண்ட் செய்யப்பட்டன.

எல்லாவற்றையும் 22-ம் தேதி வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு எடுத்து வந்தனர். மூன்று மணிக்கு வழக்கு விசாரணை என்றாலும்கூட, 12 மணிக்கே அதிகாரிகள் நீதிமன்றத்துக்கு வந்துவிட்டனர். இரு தரப்புக்கும் 50:50 அல்லது 60:40 என்கிற அடிப்படையில் ஒரு தீர்ப்பு வரலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், வழக்கு விசாரணை தொடங்கியதுமே மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா எழுந்து, ‘‘தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு அனுமதி வழங்க வேண்டாம் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஒரு மாநிலத்துக்கு மட்டும் நீட் தேர்விலிருந்து விலக்கு வழங்குவது என்பது சரியாக இருக்காது’’ என்று தடாலடியாகத் தெரிவித்தார். இதைக் கேட்ட அடுத்த நொடியே நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் பெஞ்ச், ‘‘அப்படியானால் நீட் தேர்வு அடிப்படையிலேயே கலந்தாய்வுப் பட்டியலைத் தமிழக அரசு வெளியிட்டு, மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும்’’ என்று உத்தரவிட்டது. மத்திய அரசின் திடீர் பல்டி காரணமாக, நீதிபதிகள் தமிழக அரசிடமோ, மனுதாரர்களிடமோ புதிய வாதங்கள் எதையும் கேட்கவில்லை. இரண்டே நிமிடங்களில் முடிவெடுத்து தீர்ப்பை வழங்கிவிட்டனர். நீதிமன்றத்தில் இருந்த அனைவருமே அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர்.
மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபாலிடம் முதலில் சட்டத்துறை ஆலோசனை கேட்டபோது ‘தமிழக அரசின் அவசரச் சட்டத்துக்கு அனுமதி வழங்கலாம்’ என்று பரிந்துரை செய்தார். ஆனால், சுகாதாரத்துறையிலிருந்து கேட்டபோது, ‘இந்த அவசரச் சட்டம், நீட் தொடர்பான மத்திய அரசின் சட்டத்துக்கு எதிரானது’ என்று சொன்னார். ‘திடீரென அவர் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதும், மத்திய அரசின் சுகாதார துறை தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததுமே மத்திய அரசின் முடிவுக்குக் காரணம்’ என்கிறார்கள்.
‘‘இரண்டு மாதங்களாக எவ்வளவோ முயன்றோம். கடைசியில் இப்படி ஆகிவிட்டதே...” எனச் சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் குரல் உடைந்து கண்ணீரோடு டெல்லி நிருபர்களிடம் சொன்னார். தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரிடம், ‘‘ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் இணைப்புக்கு மத்திய அரசு வழங்கிய பரிசா நீட் மறுப்பு?’’ என்று நிருபர்கள் கேட்டனர். ‘‘அவசரச் சட்டம் மறுக்கப்பட்டதற்கு பா.ஜ.க காரணம் இல்லை. அதிகாரிகள்தான் பிரச்னை’’ என்றார் தம்பிதுரை. மாணவர்களின் மருத்துவக் கனவு சிதைந்ததற்கு அ.தி.மு.க-வும், பா.ஜ.க-வுமே காரணம் என்பதை மறுக்க முடியாது!
- டெல்லி பாலா
படங்கள்: சொ.பாலசுப்ரமணியன், வி.ஸ்ரீனிவாசுலு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
‘‘கடவுளே ஏமாற்றினால் என்ன செய்வது?’’
நீட் விலக்குக்காக தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்திய கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, ‘‘கொஞ்சம் சிந்தித்துச் செயல்பட்டிருந்தால்கூட ‘2016-ல் கொடுத்த அதே நீட் விலக்கு 2017-ம் ஆண்டுக்கும் செல்லுபடியாகும்’ என்று உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டு இருக்கலாம். அத்தனை தமிழக மாணவர்களையும் நம்ப வைத்து ஏமாற்றியுள்ளது இந்த அரசு. இதற்குப் பிரதமர் நரேந்திர மோடி நேரடியாகப் பொறுப்பேற்க வேண்டும். மக்களை நம்ப வைத்து மோசம் செய்த மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும், தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கரும் பதவி விலகவேண்டும்’’ என்று கொதித்தார்.

நீட் வழக்கில் எதிர் மனுதாரராக இணைந்தவர், அரியலூர் மாவட்டம் குழுமூரைச் சேர்ந்த அனிதா. ப்ளஸ் டூ-வில் இவர் மருத்துவத்துக்காக பெற்ற கட் ஆஃப் 196.5. நீட் அடிப்படையில் சேர்க்கை என்பதால், இவரின் மருத்துவ வாய்ப்பு பறி போய்விட்டது. ‘‘தமிழக அரசு கொடுத்த நம்பிக்கையில் நீட் விலக்கு எப்படியும் கிடைத்துவிடும் என்று நம்பினாள் அனிதா. சட்டப் புத்தகம்தான் எங்களுக்குக் கடவுள். அதுவே எங்களை ஏமாற்றும்போது என்ன செய்வது? மனிதர்களுக்கான மருத்துவம் படிக்க வேண்டும் என்று இருந்தவள், இப்போது கால்நடை மருத்துவம் படிக்க இருக்கிறாள்” என்கிறார், அனிதாவின் அண்ணன் மணிரத்னம்.
- ஐஷ்வர்யா