ஒரு கட்சி பல அணிகளாக உடைவதையும், அந்த அணிகள் மீண்டும் இணைவதையும்விட, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியவை வருமான வரித்துறையின் அதிரடி ரெய்டுகள்தான். கடந்த 16 மாதங்களில், 10-க்கும் மேற்பட்ட ரெய்டுகளைத் தமிழகத்தில் வருமான வரித்துறை நடத்தியுள்ளது. பல ரெய்டுகளின்போது, கட்டுகட்டாகப் பணம், தங்கக் கட்டிகள், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகச் சொல்லப்பட்டது. ஆனாலும், சேகர் ரெட்டி உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டதைத் தவிர யார் மீதும் பெரிதாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அப்படியென்றால், அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் அச்சுறுத்திப் பணிய வைப்பதற்கு மட்டுமே இந்த ரெய்டுகளா?
கடந்த ஒன்றரை ஆண்டுகளில் தமிழகத்தில் நடைபெற்ற ரெய்டுகள் பற்றிய ஓர் பார்வை...


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
2016 ஏப்ரல் 21
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரம் சூடுபிடித்த நிலையில், கரூர் அய்யம்பாளையத்தில் உள்ள அன்புநாதன் என்பவரின் வீட்டுக்குள் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக நுழைந்தனர். அப்போதைய ஜெயலலிதா அமைச்சரவையில் இருந்த ‘ஐவரணி’ அமைச்சர்களுக்கு நெருக்கமாக இருந்தார், அன்புநாதன். பத்து மாவட்ட வாக்காளர்களுக்கு அ.தி.மு.க சார்பில் விநியோகிப்பதற்காக அன்புநாதனிடம் பல கோடி ரூபாய் கொடுத்துவைக்கப் பட்டதாகத் தகவல் வெளியானதால், அந்த ரெய்டு நடந்தது எனச் சொல்லப்பட்டது. அன்புநாதன் எஸ்கேப் ஆகிவிட்டார். இரண்டு நாள்கள் நடந்த சோதனையில், ரூ. 4.77 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. பணம் எண்ணும் 12 இயந்திரங்கள், நான்கு கார்கள், ஒரு டிராக்டர், ஒரு ஆம்புலன்ஸ் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. ஆம்புலன்ஸில் அரசுச் சின்னம் இருந்தது. இப்போது இந்த வழக்கில் அன்புநாதன் ஜாமீனில் இருக்கிறார்.
2016 செப்டம்பர் 12
முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் பவர்ஃபுல் அமைச்சராக வலம் வந்தவர், நத்தம் விசுவநாதன், இவரது வீடு மற்றும் சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வீடு உள்பட 40 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி காட்டினர். நத்தம் விசுவநாதன் கைதுசெய்யப்படுவார் என்று பரபரப்பு நிலவியது. அதன் பிறகு, இந்த ரெய்டு குறித்து எந்த ஒரு தகவலும் இல்லை.
2016 டிசம்பர் 8
அப்போதைய தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நெருக்கமான மணல் கான்ட்ராக்டர் சேகர் ரெட்டியின் ஆறு வீடுகள் மற்றும் இரண்டு அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அப்போது பழைய ரூபாய் நோட்டுகள், புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள், தங்கம் என்று 142.81 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் கைப்பற்றப்பட்டன. இரண்டாவது நாளாகத் தொடர்ந்த சோதனையில் மேலும் 32 கோடி ரூபாய் ரொக்கப்பணமும். 30 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டன. சேகர் ரெட்டி கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

2016 டிசம்பர் 21
தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகன ராவ் வீடு, தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறை மற்றும் அவருடைய நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. சேகர் ரெட்டி வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டில், ராம மோகன ராவுக்கு எதிராக ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்றும், அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த ரெய்டு நடந்தது என்றும் கூறப்பட்டது. தலைமைச் செயலாளர் பதவியை ராம மோகன ராவ் இழந்தார். சில மாதங்களுக்குப் பிறகு, தொழில்முனைவோர் மேம்பாட்டுக் கழக இயக்குநராக அவர் நியமிக்கப்பட்டார். அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், ரெய்டுக்கான காரணங்கள் இன்றுவரை புரியாத புதிராகவே உள்ளன.
2016 டிசம்பர் 24
சேகர் ரெட்டியின் கூட்டாளிகளான, ராமச்சந்திரன், ரத்தினம் ஆகியோரின் வீடுகளில் வருமானவரித் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, மணல் குவாரிகள் தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. கைதுசெய்யப்பட்ட ராமச்சந்திரனும், ரத்தினமும் ஜாமீனில் வெளியே வந்தனர்.

2017 ஏப்ரல் 7
தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரித் துறை சோதனை போட்டது. ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா செய்ததாக எழுந்த புகாரின் பேரில் இந்த ரெய்டு நடந்தது. அதேநேரத்தில் அ.தி.மு.க-வின் முன்னாள் எம்.பி-யான சிட்லபாக்கம் ராஜேந்திரன், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் ஆகியோர் வீடுகளிலும், சரத்குமாரின் மனைவி ராதிகாவின் ராடன் நிறுவனத்திலும் ரெய்டுகள் நடைபெற்றன. ராடன் நிறுவனம், வரி ஏய்ப்பு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக 89 கோடி ரூபாய் பட்டுவாடா செய்தது தொடர்பான ஆவணங்கள், விஜயபாஸ்கர் மீதான சோதனையின்போது கைப்பற்றப் பட்டன. வருமான வரித்துறையின் ஆவணத்தை அடிப்படையாகக் கொண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரைத் தேர்தல் ஆணையம் குற்றம் சாட்டியது. அதனடிப்படையில், வழக்கும் பதிவுசெய்யப்பட்டது. தேர்தலே தள்ளி வைக்கப்பட்ட பிறகும், இந்தப் புகார் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை இல்லை. இதன் தொடர்ச்சியாக சென்னையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்துக்கு விஜயபாஸ்கர் விசாரணைக்காகச் சென்றுவந்தார். அவர் குடும்பத்தினரும் விசாரிக்கப்பட்டனர். விஜயபாஸ்கரின் குவாரியைச் சுற்றிய 97 ஏக்கர் நிலங்களின் ஆவணங்களை, வருமான வரித்துறை வழக்கோடு இணைத்துள்ளது.

2017 மே 16
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் வீடு மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ சோதனை நடைபெற்றது. ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம், விதிமுறைகளை மீறிப் பெற்ற வெளிநாட்டு முதலீடுகளை கார்த்தி சிதம்பரம் சரிசெய்து கொடுத்ததாகக் குற்றச்சட்டு. இதற்காக அவருக்கு அந்த நிறுவனம் பணம் கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில் இந்த ரெய்டு நடத்தப்பட்டது. இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது, கார்த்தி சிதம்பரம் வெளிநாடு தப்பிப் போய்விடுவார் என்று விமான நிலையங்களில் தேடுதல் நோட்டீஸ் கொடுக்கப் பட்டது. இந்த நோட்டீஸுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. இந்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தற்போது தடை விதித்துள்ளது. கார்த்தி சிதம்பரம் வீடுகளில் ஏற்கெனவே ஏர்செல்-மேக்சிஸ் வழக்குத் தொடர்பாக 2015-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதியே வருமானவரித் துறை, அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் ரெய்டு நடத்தினர்.
அரசியல் காரணம் இல்லை!
வருமான வரித்துறை ரெய்டுகள் குறித்து வருமானவரி புலனாய்வுப் பிரிவு உயர் அதிகாரியிடம் பேசினோம். “கரூர் அன்புநாதனுக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறோம். பறிமுதல் செய்யப்பட்ட பணம் எப்படி வந்தது என்பது குறித்து ரிட்டர்ன் தாக்கல் செய்வதாகச் சொல்லி இருக்கிறார். அவர் தாக்கல் செய்த பிறகுதான் இதில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ள முடியும்.

2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் விஜயபாஸ்கர் வேட்புமனு தாக்கல் செய்தபோது, தமது வருமான வரி விவரங்களைத் தாக்கல் செய்தார். அதில் 2011-ம் ஆண்டைவிட குறைவான வருமானத்தைக் காட்டி இருந்தார். அதையெல்லாம் பரிசீலித்தே அவர் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது. அப்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களைத் தேர்தல் ஆணையத்திடம் கொடுத்தோம். 86 கோடி ரூபாய் வாக்காளர்களுக்கு வழங்கியதற்கான ஆவணம் குறித்து அமைச்சரால் விளக்கம் அளிக்க முடியவில்லை. எனவே, அது கறுப்புப் பணம்தான் என்று எங்களால் முடிவுக்கு வர முடிகிறது. இதற்கிடையே பினாமி சட்டத்தின் படி விஜயபாஸ்கரின் நிலப்பத்திரங்களை வழக்கோடு இணைத்துள்ளோம். விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடத்தியபோது கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நடிகர் சரத்குமார் வீட்டில் ரெய்டு நடத்தினோம். அப்போது ராதிகா சரத்குமாரின் ராடன் நிறுவனம் வரி ஏய்ப்பு செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் அந்த வரியைச் செலுத்தி விட்டனர்.
சேகர் ரெட்டி வீட்டில் புதிய ரூபாய் நோட்டுகள் உள்பட ஏராளமான பணம், தங்க நகைகள் கைப்பற்றினோம். அதன் அடிப்படையில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பினோம். அதன் பேரில் அவர் எங்கள் முன் ஆஜராகி ஆவணங்களை அளித்து வருகிறார். அந்த ஆவணங்களின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் கடந்த ஒன்றரை வருடங்களாக நடக்கும் ரெய்டுகளுக்கு அரசியல் காரணங்கள் ஏதும் இல்லை. வருமான வரிச் சட்டம் என்ன சொல்கிறதோ அதன் அடிப்படையில்தான் நடக்கிறோம். தாமதம் ஆனாலும், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன” என்றார் அவர்.
- கே.பாலசுப்பிரமணி
‘‘சந்தேகங்களுக்கு விடை கிடைக்கவில்லை!’’
இந்த ரெய்டுகள் குறித்து வருமானவரித் துறையின் ஓய்வுபெற்ற அதிகாரி ஒருவரிடம் பேசினோம். “ரெய்டுக்குப் பிறகு, உரிய ஆவணங்களைத் தராவிட்டால், கைப்பற்றப்பட்ட பணம் ரிசர்வ் வங்கியில் ஒப்படைக்கப்படும். நகைகள் லாக்கரில் பாதுகாப்பாக வைக்கப்படும். பதவியில் இருக்கும் மத்திய அரசு அதிகாரியின் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டு, முறைகேடாக சம்பாதித்த பணம் பறிமுதல் செய்யப்பட்டால், அந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்கும். அதுவே மாநில அரசு அதிகாரி என்றால், அவர் மீதான வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்து நடத்தும். சோதனைக்குப் பின்னர், வருமானவரித் துறை நோட்டீஸ் கொடுத்ததிலிருந்து இரண்டு நிதி ஆண்டுகளுக்குள் வழக்குகள் முடிக்கப்பட வேண்டும். இதை இப்போது 18 மாதங்களாகக் குறைத்துள்ளனர். ஆனால், சம்பந்தப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்தால் காலதாமதம் ஏற்படும்” என்றார்.

கன்டெய்னர் பணம் என்ன ஆனது?
ஓய்வுபெற்ற சி.பி.ஐ அதிகாரி ரகோத்தமனிடம் பேசினோம். “சட்டம் எல்லோருக்கும் பொதுவானது. அதை எப்படி, யார் மீது, எந்த சமயத்தில் அமல்படுத்த வேண்டும் என்பதை முடிவுசெய்வது மத்திய, மாநில அரசுகளின் கைகளில் இருக்கிறது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது, கோவை அருகே 570 கோடி ரூபாயுடன் சென்ற கன்டெய்னர் லாரிகளைப் பிடித்தனர். அந்த லாரிகளில் இருந்த பதிவு எண்கள் போலியானவை என்று கண்டுபிடிக்கப்பட்டது. வழக்கு சி.பி.ஐ வசம் சென்றது. விசாரணைக்குப் பின்னர், அந்தப் பணம் வங்கிக்குச் சொந்தமான பணம் என்று ஒரு வரியில் சி.பி.ஐ அதிகாரிகள் சொல்லிவிட்டார்கள். மக்களின் பல சந்தேகங்களுக்கு விடை கிடைக்கவில்லை. இந்த விவகாரத்தில், தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கும் உரிய பதில்கள் அளிக்கப்படவில்லை. வருமான வரிச் சோதனை, சி.பி.ஐ சோதனை போன்றவற்றில் எல்லாம் என்ன முடிவு ஏற்பட்டது என்பதை வெளிப்படையாகச் சொல்ல வேண்டும்” என்றார் அவர் ஆற்றாமையுடன்.