
உள்ளிருப்பு
வகுப்பறைக்குள்ளிருந்து
ஜன்னல் கம்பியின் இடுக்குகளில்
ஏக்க பாவனைகளுடன் ஏகப்பட்ட முகங்கள்
வெளியில் பறந்தலையும் பட்டாம்பூச்சிகள்
சிறுசிறு பறவைகளே
பொழுதுபோக்கு
சுதந்திரம் இழந்த குழந்தைகளுக்கு
தன்பக்கம் வரும்
பட்டாம்பூச்சிகளைப் பிடிக்கும் முயற்சியில்
சில ஜோடிக் கைகள்
இன்னும் சற்றுநேரத்திற்குள் வந்துவிடும்
ஆசிரியரை எண்ணி
இப்பொழுதே
கைகளனைத்தும்
பின்வாங்கத் துவங்கிவிட்டன
ஒவ்வொன்றாய்.
- அயன் கேசவன்
எல்லார்க்கும் பெய்யும்...
அலுவலகம் முடிந்து
வீடு திரும்புகையில்
பெய்திருக்கும் மழையின் ஈரம்
ஞாபகப்படுத்துகிறது
ஊரிலிருக்கும் அம்மாவை,
மழை கசிந்த ஆரம்பப்பள்ளியை,
நனைந்தபடியே பெரிய
விளக்கு
ஏற்றப்பட்ட கார்த்திகைத் திருநாளை,
கப்பல் மூழ்கியதால் அழுத
ஒரு கார்கால மாலையை,
கொஞ்சம் ஈரமானாலும் வீசப்படும் பந்துகளின்
வேகத்தை மட்டுப்படுத்தி
சுலபமாய் அடிப்பதற்கு வாகாக்கித்தரும்
மங்களமேட்டு கிரிக்கெட் மைதானத்தை,
ரம்மியங்களை மனசுக்குள் எழுதும்
வாகை மரப் பூக்களின் வாசத்தை,
குடையை விரிக்காமல்
மழை தழுவத் தழுவ பூங்கொடியுடன்
நடந்துபோனதை...
மழை
மழையாக மட்டுமே
பெய்துவிட்டுப்
போவதில்லை
ஒருபோதும்.
-சௌவி
காயம்
தலை கவிழ்ந்து நிற்பதால்
தவறு செய்தவன் என அர்த்தமில்லை.
மெளனத்தைத் துப்பியபடி
மெல்ல நகர்கின்றன
நீண்ட காலத்தின் மணித்துளிகள்.
தேற்றலுக்கான மொழியையும்
ஆறுதலுக்கான உணர்வையும்
தொலைத்துவிட்டு
பெருமூச்சிட்டு நகர்கிறது
மற்றுமொரு சந்திப்பு.
என்றோ வரும்
என் தருணமென
வெட்டிய மரக்கிளையில்
மெல்லிய வலை பின்னித் தொங்கும்
சிலந்தியின் மனது
ஆறாத காயங்களோடு
தனிமையில் ஆடிக் கொண்டிருக்கிறது.
- ர. ராஜலிங்கம்
பாதை
நொடிக்கொருமுறை
வாகனங்கள்
கர்ஜித்துக் கடக்கும்
இந்த நெடுஞ்சாலையில் புதையுண்டு கிடக்கின்றன
ரெட்டைப் பனங்காய் வண்டியின்
தடங்கள்.
-கோ.பகவான்