Published:Updated:

அடுத்து என்ன? - ஜெ.பிரான்சிஸ் கிருபா

அடுத்து என்ன? - ஜெ.பிரான்சிஸ் கிருபா
பிரீமியம் ஸ்டோரி
அடுத்து என்ன? - ஜெ.பிரான்சிஸ் கிருபா

துருவேறிய கண்ணீர்த் துளிகளைத் துடைத்து வைக்கிறேன்படங்கள் : ஜெ.வேங்கடராஜ்

அடுத்து என்ன? - ஜெ.பிரான்சிஸ் கிருபா

துருவேறிய கண்ணீர்த் துளிகளைத் துடைத்து வைக்கிறேன்படங்கள் : ஜெ.வேங்கடராஜ்

Published:Updated:
அடுத்து என்ன? - ஜெ.பிரான்சிஸ் கிருபா
பிரீமியம் ஸ்டோரி
அடுத்து என்ன? - ஜெ.பிரான்சிஸ் கிருபா

சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனிலிருந்து புறப்பட்டு, மும்பை தாதர் ஸ்டேஷனைச் சென்றடையும் தாதர் எக்ஸ்பிரஸ் ரயிலில் தொடங்கி, மும்பை தாதர் ஸ்டேஷனிலிருந்து புறப்பட்டு, சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனை வந்தடையும் தாதர் எக்ஸ்பிரஸில் முடிவடையும் கதைதான், இப்போது (அவ்வப்போது) நான் எழுதிக்கொண்டிருக்கும் `ஏறக்குறைய இறைவன்’ நாவல்.     

அடுத்து என்ன? - ஜெ.பிரான்சிஸ் கிருபா

முழுக்க முழுக்க மும்பை மாநகர வாழ்க்கையை, குறிப்பாகத் தமிழர்களின் வாழ்க்கை முறையைப் பின்னணியாகக்கொண்டு நாவலைப் பின்னிக்கொண்டிருக்கிறேன். தமிழ்நாட்டைவிட அதிகத் தமிழ்ச் சங்கங்கள் மும்பையில் இருக்க வாய்ப்புள்ளது எனச் சொன்னால், நம்ப சிரமமாகத்தான் இருக்கும். அங்கே பத்துத் தமிழர்கள் ஒன்றுகூடி ஒற்றுமையாகச் செயல்பட்டாலே, அது ஒரு தமிழ்ச் சங்கம்தான். அந்நிய மண்ணில் பிழைக்கப் போனவர்களுக்கு, ஒரு காலகட்டத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் அப்படியொரு கட்டாய ஒற்றுமையைத் தகவமைத்திருக்கிறது. மும்பை மாநகரம் பம்பாயாக இருந்த காலத்தில், தமிழகத்தில் தீவிரமடைந்தது தனித் தமிழ்நாடு கோரிக்கை. தமிழகத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டம் மும்பையில் எதிரொலித்து, பெரிய கலவரமாக வெடித்திருக்கிறது. சிவசேனா என்ற கட்சியே, தமிழர்களை அங்கிருந்து துரத்தியடிக்கும் ‘சீரிய நோக்கத்தோடு’ பால் தாக்ரேவால் சீரியஸாகத் தொடங்கப்பட்டதுதான். `இந்தியாவில் இருந்துகொண்டு `இந்தி பேச மாட்டேன்; படிக்க மாட்டேன்’ என்பவர்களுக்கு இங்கே என்ன வேலை?’ என்ற ஆதங்கம் அவர்களை வன்முறையாளர்களாக்கி, தமிழர்கள்மீது கொலைவெறித் தாக்குதல்களைக் கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது.

பம்பாயின் பல பகுதிகளில் உதிரிகளாகச் சிதறிக்கிடந்த தமிழர்கள், தகரச்சுவர்களாலான தாராவி என்னும் கோட்டையில் ஒன்றுகூடி அதை எதிர்த்துப் போராடி வெற்றிபெற்று, தங்கள் இருப்பை அங்கே தக்கவைத்திருக்கிறார்கள். தமிழகத்தின் தென் மாவட்டங்களிலிருந்து அதிகமும் பிழைப்புக்காகப் பம்பாய் சென்ற தமிழர்கள், மூன்று நாள் ரயில் பயணத்துக்குத் தேவையான கட்டுச்சோற்றுப் பொட்டலங்களோடு போகிறார்களோ இல்லையோ, நிச்சயமாக ஒரு வெட்டருவாளையோ, வீச்சருவாளையோ வேட்டியில் சுற்றியபடி எடுத்துச் சென்றிருக்கிறார்கள். பம்பாய் `மும்பை’ ஆன பிறகே, நாவல் தொடங்குகிறது. தொடங்கினாலும் கதையோட்டத்தில் அவ்வப்போது ‘பம்பாய்’க்கும் சென்று வட்டமடித்துச் சுற்றிப்பார்த்துவிட்டு வருகிறது.

ஒருமுறை சொந்த ஊருக்கு வந்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்தேன். அப்போ தெல்லாம் இன்றுபோல் அல்ல. நெல்லையிலிருந்து நெல்லை எக்ஸ்பிரஸில் ஏறி எக்மோரில் இறங்கி, சென்ட்ரலுக்கு வந்து வேறு ரயில் மாறிச் செல்ல வேண்டும். அப்படிச் சென்றுகொண்டிருந்தபோது அறிமுகமானவன், மிஸ்திரி ராஜு. என்னையொத்த வயதிருக்கலாம் (19). மாநிறம், களையான முகம், தெலுங்குப் பையன். நன்றாகத் தமிழ் பேசினான். குண்டக்கல் வரை டிக்கெட் எடுத்திருந்தான். அன்ரிசர்வ்டு கோச், நல்ல கூட்டம் இருந்தாலும் கக்கூஸ் பக்கத்தில் இருவருக்கும் உட்கார இடம் கிடைத்தது.     

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அடுத்து என்ன? - ஜெ.பிரான்சிஸ் கிருபா

இருவரும், களைப்பு தெரியாமல் ஏதேதோ கதையடித்துக்கொண்டு வந்தோம். அதிகமும் தமிழ் சினிமாவைப் பற்றியே பேச்சுகள். ``அப்போதெல்லாம் புதுப் படங்கள் ரிலீஸான உடனே சுடச்சுடப்  பார்த்திடுவேன்’’ என்றேன். மும்பையில் இருந்துகொண்டு அது எப்படிச் சாத்தியமென்று ஆச்சர்யப்பட்டான். அங்கே அந்தக் காலகட்டத்தில் தாராவி, பாண்டூப், முலுன்ந்த், பிவாண்டி எனப் பல பகுதிகளில் பரவலாகத் தமிழ்ப் படங்கள் ஓடும் இருநூறு முந்நூறு தியேட்டர்கள் இருந்தன.  எல்லாமே வீடியோ தியேட்டர்கள்.

``குடிப்பதற்கு, குளிப்பதற்கு, குண்டி கழுவுவதற்கு என எல்லா உபயோகத்துக்கும் ஒரே தண்ணீர்தான். அதுவும் பன்னீர் போன்ற தண்ணீர். அதில் குளித்தாலே சருமத்தின் பொலிவு கூடிவிடும்’’ எனச் சொன்னதும் வியந்தே போனான். இன்னும் பல மும்பைச் சிறப்புகளைக் கூட்டிக் குறைத்துப் பகிர்ந்துகொண்டதும், அவனுக்கும் மும்பையைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. ``அண்ணே நானும் உங்ககூட மும்பைக்கு வரட்டுமா? அங்கே அந்தேரி என்ற பகுதியில் எங்க சொந்தக்காரங்க எல்லாரும் இருக்காங்க’’ என்று கேட்டான்.

எனக்கு அதில் உடன்பாடில்லை. ``இப்போது வேண்டாம். வேண்டுமானால், என் முகவரியைத் தருகிறேன். முதலில் நீ உன் வீட்டுக்குப் போய் வீட்டில் சொல்லிவிட்டு, பொறுமையாகப் புறப்பட்டு வா’’ என்றேன். அதற்கு அவன் இசைவதாக இல்லை. அதற்குப் பிறகு அவனிடம் பேசுவதை நிறுத்திக்கொண்டேன். அவன் பேசுவதைக் கேட்பதையும் தவிர்த்து வந்தேன். குண்டக்கல் ஸ்டேஷன் வந்தது. ரயில் நின்றது. என்னை ஆழமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு இறங்கிப்போன மிஸ்திரி ராஜு, அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் மீண்டும் அதே பெட்டியில் வந்து ஏறினான்; கையில் மும்பைக்கான டிக்கெட்டும் உதட்டில் புன்சிரிப்புமாக. பதிலுக்கு நான் அவனைப் பார்வையாலேயே எரித்து விடுவதுபோல் பார்த்துவிட்டு, அதற்குப் பிறகு அவனைப் பார்க்கவே இல்லை.

ரயில், மாலையைக் கடந்து இரவுக்குள் நுழைந்துகொண்டிருந்தது. அவன் அடிக்கடி என்னையே வெறித்துப் பார்ப்பதை உணர முடிந்தது. ஆனாலும், நான் மனம் தளரவில்லை. இரவு உணவை முடித்துவிட்டு, கிடைத்த இடத்தில் படுத்துக்கொண்டேன். அசதியில் அயர்ந்து தூங்கிவிட்டேன். அதிகாலையில் எழுந்து முகம் கழுவாமல் முதல் டீயைக் குடித்துக்கொண்டிருக்கும்
போது, பக்கத்தில் இருந்த ஒரு பெரியவர் ``நைட் என்னாச்சு தெரியுமா... நீ நல்லா தூங்கிட்ட...” என்று ஆரம்பித்துக் கூறிய தகவல், நெஞ்சை இரண்டாகப் பிளந்தது. திக்பிரமை பிடித்தவன்போல் எந்த உணர்ச்சியுமின்றி டீயையும் குடித்து முடித்தேன். 

அடுத்து என்ன? - ஜெ.பிரான்சிஸ் கிருபாஒருமுறை பயணத்தின்போது ஓடும் ரயிலில் வாசல் அருகே நின்று இளநீர் குடித்துவிட்டு, மட்டையைத் தூக்கி வெளியில் போட்டேன். நிலத்தில் விழுந்த வேகத்தில் எழுந்து ராக்கெட்போல் பாய்ந்து சென்று, அடுத்த பெட்டியின் ஜன்னல் கம்பியை வளைத்தது நினைவுக்கு வந்துபோனது. என்னையும் அறியாமல் கண்களில் நீர் இறங்கிக்கொண்டிருந்தது. படிக்கட்டில் கால் வைத்தவாறு வாசலில் அமர்ந்து காற்று வாங்கியபடி வந்திருக்கிறான். நள்ளிரவில் நடுக்காட்டில் ரயில் நல்ல வேகத்தில் சென்றுகொண்டிருக்கிறது. தூக்கத்தில் நழுவிக் கீழே விழுந்திருக்கிறான். இருட்டுக்குள் விழும் சத்தம் மட்டும் கேட்டிருக்கிறது. உருவத்தை யாரும் பார்க்கவில்லை. இன்றுவரையிலும் அவ்வப்போது நினைவில் வந்துபோகின்றன, மிஸ்திரி ராஜுவின் முகமும் `அண்ணே... அண்ணே’ என்ற அன்பான குரலும்.

அவனை என்னோடு அழைத்துச் சென்றிருந்தால், அந்த விபத்து தடுக்கப்பட்டிருக்குமோ? ‘அவனை நான்தான் கொன்றுவிட்டேனோ’ என்ற குற்ற உணர்ச்சி 20 ஆண்டுகளைக் கடந்து இன்னும் நெஞ்சில் குமைந்து  கொண்டிருக்கிறது. மிஸ்திரி ராஜு பார்க்க, ஆசைப்பட்ட மும்பையை எழுத்து வடிவிலேனும் சித்திரித்து, அவன் ஆத்மாவுக்குக் காணிக்கையாகப் படைக்கும் முயற்சிதான் இந்த நாவல்.