Published:Updated:

``தமிழக வரலாற்றை குழந்தைகளிடம் கொண்டுசெல்ல வேண்டும்!” - மொழிபெயர்ப்பாளர் பவித்ரா ஸ்ரீனிவாசன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
``தமிழக வரலாற்றை குழந்தைகளிடம் கொண்டுசெல்ல வேண்டும்!” - மொழிபெயர்ப்பாளர் பவித்ரா ஸ்ரீனிவாசன்
``தமிழக வரலாற்றை குழந்தைகளிடம் கொண்டுசெல்ல வேண்டும்!” - மொழிபெயர்ப்பாளர் பவித்ரா ஸ்ரீனிவாசன்

அறிவியலைவிட வரலாறுதான் நம்முடைய வாழ்க்கையில் அதிகமாகத் தொடர்பில் இருக்கும் ஒரு பாடம். அப்படியான வரலாற்றைச் சிறுவர்களும் விரும்பும் வண்ணம் கதையாக மாற்றிக் கொடுப்பதுதான் என்னுடைய மிக முக்கியமான நோக்கம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

``கல்கியின் `பொன்னியின் செல்வன்', `சிவகாமியின் சபதம்’ ஆகியவற்றை தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்துள்ளேன். அதேபோல விகடனில் வெளிவந்த `வந்தார்கள் வென்றார்கள்’ என்ற நூலையும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்துள்ளேன். தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மட்டுமல்ல, ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் மொழிபெயர்ப்பு செய்துள்ளேன்'' என்று கூறும் பவித்ரா ஸ்ரீனிவாசனுக்கு, குழந்தைகளுக்கான வரலாற்றுக் கதைகள் எழுதுவதில் ஆர்வம் அதிகம். வரலாற்றுக் கதைகளாக மொழிபெயர்ப்பது மட்டுமல்லாமல், வரலாற்றுக் கதைகளை எழுத ஆரம்பித்ததன் வரலாற்றை அவரிடம் கேட்டேன்...

``இன்றைய கல்விச் சூழலில், அறிவியல் பாடம்தான் எல்லோருக்கும் பிடித்ததாக இருக்கிறது. அறிவியல் படித்தால் எளிதில் வேலை கிடைக்கும் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். அப்படித்தான் வேலைவாய்ப்பே இல்லாத பாடமாக வரலாற்றுப் பாடத்தைக் கருதிக்கொண்டு, அதில் நமக்கு பெரிய அளவில் ஆர்வமில்லாமல் இருக்கிறோம். இதையே குழந்தைகள் மனதிலும் பதித்துவிட்டோம். இன்றைக்கு குழந்தைகளிடம் கேட்டால், அவர்களுக்குப் பிடிக்காத பாடமாக வரலாற்றுப் பாடம்தான் இருக்கும். ஆனால், அறிவியலைவிட வரலாறுதான் நம்முடைய வாழ்க்கையில் அதிக தொடர்பில் இருக்கும் ஒரு பாடம். அப்படியான வரலாற்றைச் சிறுவர்களும் விரும்பும்வண்ணம் கதையாக மாற்றிக்கொடுப்பதுதான் என்னுடைய மிக முக்கியமான நோக்கம்” என்கிறார் பவித்ரா ஸ்ரீனிவாசன்.

``நான் படித்தது காமர்ஸ். சிறிய வயதிலிருந்தே விடுமுறை நாளில் நூலகங்களுக்குச் சென்று, அங்கு இருக்கும் புத்தகங்களை தவணைமுறையில் எடுத்து வந்து படிக்க ஆரம்பித்தேன். ஆங்கிலவழியில் படித்த எனக்கு, தமிழ் மறந்துவிடுமோ என்ற பயத்திலும், படிக்கப் படிக்கத்தான் மொழி வளரும் என்ற எண்ணத்திலும் என்னுடைய அம்மாதான் நான்  நூல்களை வாசிப்பதை ஊக்குவித்தார். அப்படிப் படித்தது மட்டுமல்லாமல், படித்த கதைகளைப்போல நானும் புதிய கதைகள் எழுத ஆரம்பித்தேன்.

இப்படி நூல்களைப் படித்துக்கொண்டிருந்தபோதுதான் எனக்கு `பொன்னியின் செல்வன்’ நாவல் அறிமுகமானது. அந்த நாவலின் கவிதை

மாதிரியான எழுத்துநடை, கதை சொல்லும்விதம், வரலாற்றுத்தன்மை என அனைத்தும் எனக்கு ரொம்பப் பிடித்திருந்தன. இந்த நாவலை வாசித்த பிறகு என்னுடைய ஆர்வம் முழுவதும் வரலாற்றுக் கதைகள்மீது வந்தது. நான் `ஒரு நல்ல கதை படித்தால் அது உடனே மறந்துபோயிடணும்’ என்று எண்ணுவேன். இதை கடவுளிடம் ஒருவன் வேண்டுவதாகவே ஒரு கதை எழுதினேன். ஏனென்றால், அப்போதுதான் மறுபடியும் அந்தக் கதையை முதலிலிருந்து படிக்க முடியும் அல்லவா! அந்த மாதிரிதான் `பொன்னியின் செல்வன்' மீது எனக்கு ஆர்வம் இருந்தது.

அதன் பிறகு `பொன்னியின் செல்வன்' ரசிகர்கள் குழு ஒன்று ஆரம்பித்து அந்த நாவலில் வரும் இடங்களுக்கெல்லாம் பயணித்தோம். அந்தப் பயணம் என் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. ஒரு வரலாற்றுக் கதையிலிருக்கும் வரலாறு என்பது, வெறும் கதைக்கானதாக மட்டுமல்லாது, உண்மையான வரலாறாகவே இருக்கிறது என்பதை அந்தப் பயணம் எனக்கு உணர்த்தியது. அப்படி ஒரு படைப்பில் இருக்கும் வரலாற்றின் உண்மைத்தன்மையை அறிந்துகொண்டு அது இப்போது எப்படியிருக்கிறது என்பதை ஆவணப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. அப்படி ஆவணப்படுத்துதல் என்பது வரலாற்று நூல்களாக இல்லாமல், சமூக அக்கறையோடுகூடிய வரலாற்றுக் கதைகளாகவும் எழுத ஆரம்பித்தேன். அதுவும் குறிப்பாகக் குழந்தைகளை மையமிட்டே என்னுடைய கதைகளை எழுத ஆரம்பித்தேன். அதே நேரத்தில் நான் மொழிபெயர்ப்பையும் கைவிட்டுவிடவில்லை. ஆனால், இப்போது, மொழி பெயர்ப்பு என்பதைத் தவறாகப் புரிந்துகொண்டு அதில் வேலை செய்துவருகிறார்கள். அதனால்தான் மொழிபெயர்ப்பைப் படிக்கும்போது ஒரு வெறுப்பு உண்டாகிறது. ஆனால், மொழிபெயர்ப்பு என்பது வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்ப்பதல்ல.

மொழிபெயர்ப்பு என்பது, ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு ஒரு பண்பாட்டை மாற்றுவது. ஒரு மொழிபெயர்ப்பாளருடைய வேலையே கதையோடு சேர்த்து அந்தக் கதையின் பின்புலத்தையும் பிற மொழிகளுக்குக் கொண்டுசெல்வது. மொழிபெயர்ப்பைச் செய்யத் தொடங்குவதற்கு முன், தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்டதைச் சரிசெய்யும் பணியில் இருந்தேன். அப்போதுதான் மொழிபெயர்ப்பின் தன்மையை அறிந்துகொண்டேன்.

மூலநூல் ஆசிரியரின் குரலை அப்படியே பயன்படுத்த வேண்டும். மூலநூலின் தன்மையை ஓரளவாவது மொழிபெயர்ப்பில் கொண்டுவந்தால், அதுதான் வெற்றி என்பதைப் புரிந்துகொண்டேன். ஆனால், மொழிபெயர்ப்பில் ஈடுபடும் பலரும் இதை மறந்துவிடுகிறார்கள். இதை மனதில் வைத்துதான் என்னுடைய மொழிபெயர்ப்புகளைச் செய்தேன். தமிழுக்கே உரிய சிறப்புச் சொற்களை நான் தனியாக எடுத்து விளக்கியிருந்தேன். இது நல்ல வரவேற்பைப் பெற்றது. என்னுடைய மொழிபெயர்ப்பைப் படிப்பவர்கள் ஒரு புதிய படைப்பைப் படிப்பதைப்போலவே உணர்வதாகச் சொல்வதே எனக்கான பெரிய பாராட்டாக நான் நினைக்கிறேன். 

பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றில் ஒவ்வொரு மாதமும் ஒரு கதை என, குறிப்பாக சிறுவருக்கான கதைதான் எழுதிக்கொண்டிருக்கிறேன். பொதுவாக எனக்கு தமிழ் வரலாற்றின் மீது பெரிய ஆர்வம் உண்டு. அதை ஏதாவது ஒரு வகையில் வெளியே கொண்டுவர வேண்டும் என நினைத்திருந்தேன். தமிழ்நாட்டில் அதிகமாகப் பயணம் சென்றபோது பார்த்தவற்றை எல்லாம் எல்லோருக்கும் கொண்டுசெல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் வந்தது” என்று கூறிவிட்டு ``இவை தவிர்த்து, தமிழக வரலாற்றை நான் ஓவியமாக வரைகிறேன்” என்றார். 

எல்லோருக்கும் ஒன்றின் மீது ஆர்வம் இருக்கும். ஆனால், எவரும் கவனிக்காத ஒன்றின் மீது ஆர்வத்தை வளர்த்துக்கொண்டு அதைச் செயல்படுத்தும்போதுதான் நாம் அனைவராலும் கவனிக்கப்படுகிறோம். அந்த வகையில் பவித்ரா ஸ்ரீனிவாசனின் மொழிபெயர்ப்புகள், சிறுவர் இலக்கியங்கள், ஓவியங்கள் என எல்லாம் கவனிக்கப்பட்டுவருகின்றன. இன்னும் பெரிய அளவில் அவரும், அவரால் தமிழக வரலாறும் மாற்றுவடிவில் கவனிக்கப்பட வேண்டும். அது தேவையும்கூட!

இவர் வரைந்த பழைய கட்டட ஓவியங்கள் சில...

சென்னை உயர் நீதிமன்றம்.

வடசென்னையைப் பார்வையிடும் இங்கிலாந்தின் ஜார்ஜ் மன்னர்.

சென்னை அரசு அருங்காட்சியகத்தின் சுற்றுச்சுவர்.

சென்னை சைதாப்பேட்டையில் பழைய ஆர்மீனிய வணிகர் கோஜா பெட்ரஸ் உஸ்கன் கட்டிய மார்மலாங்க் பாலத்தின் கல்வெட்டு. 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு