Published:Updated:

நவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 11- சி.மோகன்

நவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 11- சி.மோகன்
பிரீமியம் ஸ்டோரி
நவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 11- சி.மோகன்

நவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 11- சி.மோகன்

நவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 11- சி.மோகன்

நவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 11- சி.மோகன்

Published:Updated:
நவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 11- சி.மோகன்
பிரீமியம் ஸ்டோரி
நவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 11- சி.மோகன்

அரூபக் கலைவெளி ஜாக்சன் பொலாக்: உள்முக மாயங்கள்

1940-களில் நவீனக் கலை உலகின் மைய கேந்திர அந்தஸ்து, பாரிஸை விட்டு நீங்கி நியூயார்க்கை அடைந்தது. இரண்டாம் உலகப்போரின் தொடர்ச்சியாக நிகழ்ந்த மாற்றம் இது. இரண்டாம் உலகப்போர் காலகட்டத்திலும் (1939-1945), அதைத் தொடர்ந்தும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து பல கலைஞர்கள் வெளியேறி, அமெரிக்க ஐக்கிய நாடுகளைத் தஞ்சமடைந்ததின் தொடர்விளைவு இது. போர்க் கொடூரங்களால் பீடிக்கப்பட்ட விரக்தியும், இலட்சியங்களின் தகர்வும், நம்பிக்கையின் பிடிமானத்தை இழந்த பரிதவிப்பும் படைப்பாளிகளை உலுக்கியெடுத்தன. கலை வரலாற்றின் பரிணாமங்களாக உருவான கோட்பாடுகள் கேள்விக்குள்ளாகின. இவற்றின் விளைவாக, அமெரிக்காவின் முதல் கலை இயக்கமாக ‘அப்ஸ்ட்ராக்ட் எக்ஸ்பிரஷனிஸம்’ (அரூப வெளிப்பாட்டியம் – Abstract Expressionism) உருவானது. அதனாலேயே இந்த வகைக் கலை வெளிப்பாடு ‘நியூயார்க் பள்ளி’ எனவும் அழைக்கப்பட்டது.    

நவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 11- சி.மோகன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உருவ வெளிப்பாட்டை அறவே புறக்கணித்த கலை இயக்கம் இது. அர்த்தங்களின் உலகிலிருந்து பூரணமாக விடுபட்டு, அழகியலின் பரிபூரண உச்சத்தைத் தொட்ட கலை இயக்கம். படைப்பாக்கத்தின்போதான படைப்பாளியின் மனோநிலைகளையும் உணர்ச்சிகளையும் படைப்பு வெளியில் வசப்படுத்தும் குணாம்சம் கொண்டது. கோடுகளும் வண்ணங்களும் தம் சுயமான இயக்கத்தில் ஓர் அலாதியான இசைமையில் லயப்படும் தன்மையிலான முற்றிலும் புதியதோர் படைப்புலகம். உளவியல் மேதை சிக்மண்ட் ஃப்ராய்டின் நனவிலி சக்திகள் பற்றிய சிந்தனைகளும், கார்ல் யூங்கின் கூட்டு நனவிலி (Collective Unconscious) பற்றிய கருத்தாக்கங்களும் அரூப வெளிப்பாட்டியப் படைப்பு மனங்களுக்குப் புதிய திறப்புகளாக அமைந்தன. சர்ரியலிசம் மனித மனமெய்மைகளைக் கனவுலகப் படிமங்கள் வழியாகக் கண்டடைய முற்பட்டது எனில், அந்நேரத்திய மனோநிலைகளையும் உணர்ச்சிகளையும் படைப்பாக்கத்தின்போது அகப்படுத்தும் பிரயாசைகொண்டது, அரூப வெளிப் பாட்டியம். அது, உணர்ச்சிகளைச் சித்திரங்களாக விளக்குவதில்லை; மாறாக, அவற்றைச் சுபாவமாகவும் உடனடித் தன்மையோடும் படைப்பு வெளியில் வெளிப்படுத்துகிறது. அதுவரைக் கட்டமைக்கப்பட்ட சிந்தனை முறைகளிலிருந்தும், வரையறுக்கப்பட்ட வெளியீட்டு உத்திகளிலிருந்தும் முழுமையாக விடுபட்டு, முற்றிலும் சுதந்திரமான ஸ்திதியிலிருந்து உள்ளுணர்வின் சமிக்ஞைகளால் வழி நடத்தப்பட்ட படைப்பியக்கம்.

இந்த இயக்கத்தைக் கண்டடைந்த அபூர்வ படைப்பு சக்தி, ஜாக்ஸன் பொலாக். அதுவரையான ஐரோப்பியக் கலை வரலாறு அளித்த சகல கலைநுட்பங்களையும், முன்மொழியப்பட்ட அணுகுமுறைகளையும், கோட்பாடுகளையும், கருத்தாக்கங்களையும், படைப்புப் பொருள்களையும் முற்றிலுமாகப் புறக்கணித்த ஒரு பேராற்றல் மிக்க சக்தியாகவும், தனித்துவமிக்க கலை இயக்கமாகவும் வெளிப்பட்டவர் இவர். எவ்வித உருவப் பிரதிநிதித்துவமும் இன்றி, வண்ணம் மற்றும் கோடுகளின் சுயமான இயக்கத்தில் அலாதியான இசைமையைக் கட்டமைப்பதில் அசாத்தியமான எல்லைகளைத் தொட்டவர். பிரமாண்ட அளவுகளிலான தூய அரூப ஓவியங்கள் மூலம், பார்வையாளர்களின் உணர்ச்சி நாண்களை மாயமாய் மீட்டும் கலை மேதைமையாளர்.  

நவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 11- சி.மோகன்

1912-ம் ஆண்டு பிறந்த பொலாக், தன்னுடைய 16-வது வயதில் ஓவியம் பயிலத் தொடங்கினார். 1928-1930 வரை லாஸ் ஏஞ்செல்ஸ் ஓவியப் பள்ளியிலும் 1930-1933 வரை நியூயார்க் கலைப் பள்ளியிலும் ஓவியம் கற்று, தன் ஓவிய வாழ்க்கையை மேற்கொண்டார். குடிபோதையில் அவர் ஓட்டிச் சென்ற கார், ஒரு மரத்தில் மோதிய விபத்தில் 1956-ம் ஆண்டு மரணமடைந்தார். 44 வயது காலமே வாழ்ந்த பொலாக், கடைசி ஆண்டுகளில் அமெரிக்கக் கலை உலகில் மாபெரும் நட்சத்திர அந்தஸ்துடன் திகழ்ந்தார். அமெரிக்காவின் பிரசித்தி பெற்ற ‘லைஃப்’ பத்திரிகை, 1949-ம் ஆண்டு ஆகஸ்ட் இதழில், ‘ஜாக்ஸன் பொலாக்: அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மகத்தான வாழும் கலைஞன்’ என்றொரு கட்டுரையை வெளியிட்டு அவரின் கலை மகத்துவத்தை உறுதிப்படுத்தியது.

பொலாக்கின் தொடக்ககால உருவ ஓவியங்கள் வீரியமானவை. அதையடுத்து, சர்ரியலிஸ பாணி ஓவியங்களை உருவாக்கினார். அதீதக் குடிப்பழக்கத்திற்கு ஆட்பட்டிருந்த பொலாக், உளவியல் சிகிச்சைக்குத் தன்னை உட்படுத்தியிருந்தார். இதன் தொடர்ச்சியாக, சிக்மண்ட் ஃப்ராய்டு மற்றும் கார்ல் யூங்கின் உளவியல் சிந்தனைகளின்மீது ஈடுபாடுகொண்டார். கலையில் நனவிலி சக்திகளின் வெளிப்பாடு குறித்த ஆர்வம் மேலிட்டது. 1945-ல் லீ க்ராஸ்நெர் என்ற ஓவியரை மணந்தார். அடுத்த ஆண்டில், முற்றிலும் புதிய ஒரு கலை பாணியில் முனைப்புடன் ஈடுபட்டு, தன் பிரத்தியேகக் கலை உலகைக் கண்டடைந்தார். அதுவே அரூப வெளிப்பாட்டியம். 1946-லிருந்து பொலாக் மேற்கொண்ட கலைப் பிரயாசைகளினால், செவ்வியல் ஓவியத் தன்மைகளிலிருந்து முழுமுற்றாக விடுபட்ட முழுமையான அரூப ஓவியவெளி புலப்படலாயிற்று. ஓவியவெளியில் ஒன்றை மறு உருவாக்கம் செய்வது, மறு வடிவமைப்பு செய்வது, பரிசீலிப்பது, கற்பனையான அல்லது நிஜமான ஒரு பொருளை வெளிப்படுத்துவது என்ற அன்றைய கலை அணுகுமுறைகளுக்கு மாறாக, ஓவியவெளியில் ஒரு செயலை நிகழ்த்திக் காட்டுவதாகக் கலை, புது மலர்ச்சி பெற்றது. இதைத் தொடர்ந்து, அமெரிக்க ஓவிய உலகின் தனித்துவ சக்தியாக பொலாக் நிலைபெற்றார். ஒரு புதிய கலை இயக்கம் எழுச்சி பெற்றது.     

நவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 11- சி.மோகன்

சொட்டு ஓவியம் (Drip Painting) என்று பிரத்தியேகமாகப் பொலாக்கினால் அடையாளப்படுத்தப்பட்ட அவரது புதிய ஓவிய பாணி, கலை விமர்சகர்களால், ‘செயல் ஓவியம்’ (Action Painting) என்றும் அழைக்கப்பட்டது. அதுவரை, ஓவியம் வரைவதற்கான அடிப்படை உபகரணங்களாக இருந்த ஈசல் மற்றும் தூரிகைகளை அவர் முதலாவதாக நிராகரித்தார். அவற்றின் கட்டுப்பாடுகளிலிருந்து விடுபட்டார். ஈசலில் கேன்வாஸை வைத்துத் தூரிகையால் வரையும் நடைமுறைக்குப் பதிலாக, மிகப் பெரிய அளவிலான கேன்வாஸைத் தன் ஓவியக்கூடத்தின் தரையில் விரித்தார். அதன்மீது, வண்ண டப்பாவிலிருந்து வண்ணத்தைச் சொட்டுச் சொட்டாக ஊற்றியும், தெளித்தும், சிதறியும் ஓர் ஓவியத்தின் வாழ்வைத் தொடங்குகிறார். மணல், கண்ணாடித் துகள்கள், அலுமினியம், எனாமல் ஆகியவையும் படைப்புப் பயணத்தில் தூவப்படுகின்றன. உள்ளார்ந்திருக்கும் சக்தியும் மனோநிலையும் ஓவியத்தின் திசையை ஓர் இசைமையோடு கட்டமைக்கின்றன. வண்ணச் சொட்டுகளின் அடர்த்தி மற்றும் அதன் தொடர் சலனத்தோடு கோடுகள் இணைந்து லயப்படுகின்றன. மிகுந்த நிதானத்தோடும் கவனக் குவிப்போடும் இந்தப் பயணம் நிகழ்கிறது. தரையில் விரிக்கப்பட்டிருக்கும் கேன்வாஸைச் சுற்றிலும் நடந்தபடி பொலாக் படைப்பாக்கத்தைத் தொடர்கிறார். வரைபொருள்களாகக் குச்சி, கத்தி, தகடு, துணி போன்றவை பங்காற்றுகின்றன. நாற்புறமிருந்தும் படைப்புவெளிக்குள் பிரவேசித்து, படைப்போடு இசைந்து பயணிக்கிறார்.

இப்படியான படைப்பு முறை மூலம், படைப்புக்குள் அவர் உள் நுழைவதாகவும், படைப்பாக்கத்தின்போது, தான் ஓர் ஊடகமாக உருமாறுவதாகவும் பொலாக் உணர்கிறார். அதனால்தான் பொலாக் கூறுகிறார்: “இதன் மூலம் படைப்பாக்கத்தின்
போது படைப்புக்கு மிக நெருக்கமாக இருப்பதாக நான் உணர்கிறேன். அதைச் சுற்றிலும் நடக்கவும், நான்கு பக்கமிருந்து பணி செய்யவும் முடிகிறது. அதனோடு நான் இருந்துகொண்டிருக்கிறேன்.” அவருடைய ஓவியச் செயல்பாட்டின் வழியாக கேன்வாஸில் உருவாவது ஒரு படமல்ல; மாறாக, ஒரு நிகழ்வு நடந்தேறுகிறது. அதனாலேயே அவருடைய பிரத்யேகக் கலை பாணியானது செயல் ஓவியம் எனப் போற்றப்பட்டது. பொலாக் கூறுகிறார்: “நான் ஓர் ஓவிய ஆக்கத்தில் ஈடுபட்டிருக்கும்போது, நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்பது பற்றி நான் எதுவும் அறிந்திருப்பதில்லை... ஓர் ஓவியமானது தனதான வாழ்வைக் கொண்டிருக்கிறது. அது வெளிப்பட நான் ஏதுவாகிறேன்.” உள்முகத்தின் மாயங்களுக்குத் தன்னை ஒப்புக் கொடுத்ததில் விளைந்த மகத்துவம் இது.

அவருடைய அரூப ஓவியங்கள் தொடக்கமும் முடிவும் இல்லாத ஒரு கலை லயத்தில் சஞ்சரிப்பவை. அவரின் இத்தகைய எந்தவோர் ஓவியத்தையும் எதிர்கொள்ளும் கண்களுக்கு எளிதில் புலனாகும் ஓர் அம்சம் இது. ஒரு பார்வையாளர் இத்தன்மையை ஒரு குற்றச்சாட்டாக முன்வைத்தபோது, “உண்மையில் இது ஓர் அருமையான பாராட்டு” என்றார் பொலாக்.    

நவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 11- சி.மோகன்

இந்தக் கட்டுரையில் பொலாக்கின் படைப்பாக்க அணுகுமுறையைப் புலப்படுத்தும் வகையில், அவர் ஓர் ஓவிய ஆக்கத்தில் ஈடுபட்டிருக்கும் தருணத்திய புகைப்படம் இடம்பெற்றிருக்கிறது. அவருடைய பிரத்யேக பாணி அரூப ஓவியங்களோடு உறவுகொள்வதற்கு ஏதுவாக மூன்று ஓவியங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. அவை: ‘எண் 4’ (Nu. 4 - 1950), ‘நீலக் கம்பங்கள்’ (Blue poles – 1952), ‘வெளிப்புற ஒப்பனை’ (Frieze – 1954). இவற்றை நாம் எதிர்கொள்ளும்போது, புரிந்துகொள்வதற்கோ, பரிசீலிப்பதற்கோ அப்பாற்பட்ட, அர்த்தங்களைக் கடந்த அனுபவ உலகை அவை கொண்டிருக்கின்றன என்பதை எளிதில் உணர  முடியும். அவற்றின் தலைப்புகள்கூட அடையாளப்
படுத்துவதற்கானவை மட்டுமே. அர்த்தங்களின் சுமை ஏதும் அவற்றுக்கு இல்லை. நம் உணர்ச்சி நாண்களை மீட்டும் வல்லமைகொண்ட ஓவியங்கள் இவை. நாம் அவற்றோடு உறவுகொள்ளும்போது, நம் மன அமைப்பின் தன்மைக்கு ஏற்ப அவை வெவ்வேறு விதமான உணர்வுகளை நம்மிடம் மீட்டக்கூடும்; அதிர்வுகளை எழுப்பக்கூடும். எனினும், அவருடைய மிகவும் பிரசித்திபெற்ற, நுண்மையான, மகத்துவமானது என்று போற்றப் படுவதுமான, ‘நீலக் கம்பங்கள்’ (Blue Poles) ஓவியம் பற்றிய சில விஷயங்களை மட்டும் அறிந்துகொள்ளலாம். இது 1952-ல் உருவானது. இந்த ஓவியம் முதலில் ‘எண்-11’ என்றே அவரால் சுட்டப்பட்டிருந்தது. அவர் தன் அரூப ஓவியக் காலகட்டத்தில் ஓவியங்களுக்குத் தலைப்பிடாது எண்கள் மட்டுமே இட்டு வந்தார். இந்த ஓவியம் பிரசித்தி பெற்றபோது, அது ‘நீலக் கம்பங்கள்’ எனப் பெயரும் பெற்றது. இந்த ஓவியத்தில் சட்டென அடையாளம் காணக் கூடியதாகவும் அடர்த்தியாகவும் அமைந்திருக்கும் எட்டு செங்குத்தான, அதேசமயம் வெவ்வேறு கோணங்களிலான, அடர்நீல வண்ணப் பட்டைகள் இந்தப் பெயருக்கான காரணமாக இருக்கலாம். இந்தப் பெயரை இட்டது பொலாக் என்றே கருதப்படுகிறது. இரண்டு மீட்டருக்குக் கூடுதலான உயரமும், ஐந்து மீட்டருக்குக் கூடுதலான அகலமும் கொண்ட மிகப் பெரிய ஓவியம் இது.

நவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 11- சி.மோகன்1952-ம் ஆண்டு, படைப்பாக்க முறைகளில் அவர் மிகத் தீவிரமான பரிசோதனைகள் மேற்கொண்ட காலம். படைப்பு உருவாக்கத்துக்கான ஊடகப் பொருள்களில் அவர் தொடர்ந்து மாற்றங்கள் செய்து கொண்டே வந்தார். ஒன்றைப்போல் மற்றொன்று இல்லாமல், ஒவ்வொரு படைப்பும் வேறுபட்டு வெளிப்பட வெவ்வேறு ஊடகங்களின் வழியாக அதன் அடுக்குகளைக் கட்டமைப்பதில் கடும் பிரயாசைகள் மேற்கொண்டார். இவருடைய ஒவ்வோர் ஓவியமும் வெவ்வேறுபட்ட கலவை ஊடகத்தால் (Mixed Media) ஆனவை. இன்று கலவை ஊடக வெளிப்பாடுகள் வெகு சாதாரணம். ஆனால், அன்று இத்தகைய வெளியீட்டு அணுகுமுறைகளைக் கண்டடைந்தவர் பொலாக்.

இந்த ஓவிய உருவாக்கத்தில் அமைந்த ஒரு விநோதமான சேர்க்கை, அவருடைய மனோநிலைகளுக்கும் படைப்புக்கும் உள்ள அதீதப் பிணைப்பை உணர்த்தும். கடும் மனச்சோர்வு, மனஅழுத்தம், குடிபோதை இவற்றில் சதா உழன்றுகொண்டிருந்தவர்; குடித்துக்கொண்டே வரைபவர். இந்த ஓவிய ஆக்கத்தின்போது, போதையின் உச்சத்தில் கண்ணாடி டம்ளரை, பாட்டிலை கேன்வாஸின்மீது விசிறியடித்து, கேன்வாஸில் நொறுங்கிச் சிதறிய கண்ணாடித் துண்டங்களை வெறும் காலால் மிதித்து, நசுக்கிப் படைப்பின் வடிவ லயத்தோடு இணைத்திருக்கிறார். கால் தடப் பதிவுகள் ஓவியத்தில் தென்படுகின்றன. ஓவியத்தில் ரத்தமும் கலந்திருக்கக்கூடும் என்பதில் சந்தேகமில்லை.

இந்த ஓவியத்தின் அருமையை உணர்த்தும் இன்னொரு தகவல்: ஆஸ்திரேலியாவின் அரசியலிலும் சமகால வரலாற்றிலும் இந்த நியூயார்க் ஓவியம் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. அந்நாட்டின் பெருமிதங்களில் ஒன்றாகவும், சர்ச்சைக்குரியதாகவும் அதன் தேசியக் கலைக் கண்காட்சிக் கூடத்தில் வீற்றிருக்கிறது. 1973-ல் அன்றைய ஆஸ்திரேலியப் பிரதமர் விட்லம் அனுமதியோடு, 13 லட்சம் டாலருக்குத் தேசியக் கலைக் கண்காட்சிக் கூடத்தால் இது வாங்கப்பட்டது. அரூப ஓவியம் அவ்வளவாக ஏற்றுக்கொள்ளப்படாதிருந்த அந்தக் காலகட்டத்தில், அதுவும் ஒரு வெளிநாட்டு ஓவியம் இவ்வளவு விலை கொடுத்து வாங்கப்பட்டது பொறுப்பற்ற, ஊதாரித்தனமான செயல் என விமர்சனத்திற்கு உள்ளானது. இந்தச் செயலை ஆதரித்து, பிரதமர் விட்லம், ‘அது ஒரு மகத்தான படைப்பு என்றும், அது நம்மிடம் இருப்பது பெருமிதத்துக்கு உரியதென்றும்’ விளக்கமளித்தார். இதை விமர்சித்த ஆஸ்திரேலியாவின் பிரபல நாளிதழான ‘டெய்லி மிர்ரர்’, ‘குடி வரைந்த நம்முடைய ஒரு மில்லியன் டாலர் மகத்தான படைப்பு’ என்று கேலி செய்தது. இன்று இந்த ஓவியத்தின் சந்தை மதிப்பு 35 கோடி டாலர். அதாவது, 2,000 கோடி ரூபாய்க்கும் மேல். இன்றும் விமர்சனம் தொடர்கிறது. 35 கோடி டாலர் ஒரு கண்காட்சிக்கூடச் சுவரில் தொங்கிக்கொண்டிருப்பதற்குப் பதிலாக, அதை விற்று தேசத்தின் நிதி நெருக்கடியைச் சமாளிக்கலாம் என்ற பேச்சு நிலவுகிறது. எனினும் இந்த ஓவியம், ஆஸ்திரேலியாவின் அரிய பொக்கிஷமாகத் தேசியக் கலைக் கண்காட்சிக் கூடத்தில் தன் நுண்வசீகரத்துடன் தொங்கிக்கொண்டிருக்கிறது.

பொலாக்கின் புதிய காட்சி உலகம், பார்வையாளனை ஈர்க்கக்கூடிய நுண்வசீகரத்தைக்கொண்டிருக்கிறது. நனவிலி சக்திகளின் மாயத்தில் இசைமைகொள்ளும் அவருடைய பிரமாண்டமான படைப்பு வெளி திகைப்பூட்டும் அழகியல் குணாம்சங்களைக்கொண்டது. அது, பார்வையாளன் தப்பிக்கவியலா மாயக் கலைப் பெருவெளி. 1950-களில் நிலைபெற்ற அரூப ஓவியம் இன்றுவரை ஒரு வலுவான கலை இயக்கமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்று கலைவெளியில் உருவ ஓவியம், அரூப ஓவியம் இரண்டுமே இரு வேறு பாதைகளை வகுத்துக்கொண்டு பயணம் செய்தாலும், அவற்றின் இலக்கு ஒன்றுதான். இரண்டுமே கலையில் பிரதிநிதித்துவப்படுத்தும் தன்மைகளை முற்றிலுமாகப் புறக்கணித்துப் படைப்புச் சக்தியையே அடிப்படையாகக்கொண்டு இயங்குகின்றன.  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism