Published:Updated:

இவன் - அகரமுதல்வன்

இவன் - அகரமுதல்வன்
பிரீமியம் ஸ்டோரி
இவன் - அகரமுதல்வன்

ஓவியங்கள் : செந்தில்

இவன் - அகரமுதல்வன்

ஓவியங்கள் : செந்தில்

Published:Updated:
இவன் - அகரமுதல்வன்
பிரீமியம் ஸ்டோரி
இவன் - அகரமுதல்வன்

வனுக்குச் சொந்தவூர் யாழ்ப்பாணம். இரண்டு காதுகளும் கேட்காது. இயக்கம் அடிச்சுத்தான் காது கேட்காமல் போனது. இரண்டாயிரத்து பன்னிரண்டாம் ஆண்டு நாட்டிலயிருந்து வெளியேறி சென்னையில இருந்திருக்கிறான். அடுத்த ரெண்டு வருஷம் கழிச்சு களவாய்க் கனடாவிற்குப் போய்த் திரும்ப ஒரு மாத லீவில இப்ப சென்னைக்கு வந்திருக்கிறான். இன்னும் பத்து நாளில கலியாணம். இது இவனுக்கு இரண்டாவது கலியாணம்தான். முதல் மனிசியும் பிள்ளையும் முள்ளிவாய்க்காலில செத்துப்போயிட்டினம். இந்தக் கதையை நான் முடித்துக்கொள்ள சரியாக ஏழரை நிமிடங்கள் ஆகும். கதை நிகழத் தொடங்கிற்று. பத்து நாள்களில் கலியாணப் பந்தலில் மாப்பிளை வேஷத்தோடு இருக்கப்போகிற இவன் சிறைச்சாலையில்தான் எனக்கு அறிமுகமானான். சிறிய குற்றங்களுக்கான குற்றவாளிகளை அடைக்கும் புலிகளின் சிறைச்சாலையில் தண்ணீருக்குக் கஷ்டம் இருந்தது. இவனுக்கு அதிகமாக வியர்ப்பதோடு அடிக்கடி மூத்திரம் போகும் பழக்கத்தையும் கொண்டிருந்ததால், மிகவும் துன்பப்பட்டான். இருண்ட நிலக்கீழ் அறையில் தன்னை அடைத்துவைக்கப் போகிறார்கள் என அஞ்சி சில வேளைகளில் அழவும் செய்தான். குற்றங்களை ஒப்புக்கொண்டுவிட்டால் அப்படி எதுவும் நடக்க வாய்ப்பில்லை என்று சக குற்றவாளி சொன்னபோது இவன் மனஆறுதல் அடைந்தான். அடுத்த விசாரணையில் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொள்ள வேண்டும் எனத் தனக்குத் தானே சத்தியம் செய்தான். தண்ணீரில்லை என்று கூண்டறைக்குள் இருந்து கேட்டபோது, குற்றவாளிகள் தண்ணீரைக் குடிக்கக் கூடாது எனப் பதில் சொல்லப்பட்டது. “நான் குற்றவாளியே இல்லை, நீங்கள் யாரென்று கண்டுபிடிக்க முடியாத வறுமையில் என்னைப் பிடித்து அடைத்திருக்கிறீர்கள்” என்று கத்தினான். எங்கிருந்து நீண்டதென்று தெரியாமல் இவனின் முதுகைப் பனைமட்டையின் கருக்கு அறுத்தது. இவன் அழவில்லை. “இந்தப் பாவங்கள் உங்களைச் சும்மா விடாது” என மீண்டும் குரலெடுத்துக் கத்தினான். சக குற்றவாளிகள் இவனின் வாயைப் பொத்தினார்கள். அவன் மீண்டும் தண்ணீர் என்று கேட்டதும், அதே பதில் கிடைத்தது.   

இவன் - அகரமுதல்வன்

குற்றங்களை ஒப்புக்கொள்ள மறுக்கிறவர்கள் குற்றங்களைப் பெருக்குகிறார்கள் என்று நான் சொன்னதும் என்னைப் பார்த்தான். இவனின் முதுகில் நீளமான மண்புழுவைப்போல ரத்தம் கீழ் நோக்கி வழிந்துகொண்டிருந்தது. எனது கைகளைப் பற்றி “உண்மையைச் சொல்லிவிடுகிறேன் என்னை விட்டுவிடச் சொல்லுங்கள்” என்றான். இவனை நம்புவதற்கு யாரும் தயாரில்லை. ஐந்தாறு நாள்களாய் நடந்துகொண்டிருக்கும் விசாரணையில் பிடி குடுக்காமல் தப்பித்துக் கொண்டேயிருந்தான். இவனை வேறொரு சிறைச்சாலைக்கு மாற்றுவது பற்றிய உரையாடல்கள் நடந்தபடியிருந்தன. இப்போது எந்தக் காட்டிலுள்ள எந்தச் சிறையில் தானிருக்கிறேன் என்று தெரியாமல் இருந்தான். அடைத்து வைக்கப்பட்டிருக்கும் சக குற்றவாளிகளில் ஒருத்தன் இவனோடு மிக நெருக்கமாக இருந்தான் என்று தகவல் கிடைத்ததும் அவன் பிறிதொரு அறைக்கு மாற்றப்பட்டான். இவன் செய்திருக்கும் குற்றமானது கொலை முயற்சி. உறுதிசெய்யப்படும் நொடியில் கடூழியச் சிறைவாழ்வு. இவன் ஒப்புக்கொள்வதாக எழும்பிய அடுத்த நாள், இந்தச் சம்பவத்தோடு தொடர்புடைய இன்னொருவன் சிறைக்குக் கொண்டு வரப்பட்டான். புதியவனைப் பார்த்ததும் இவன் தனது கண்களை நிலத்தில் குத்திக் கொந்தளிப்பானான். இவனை விசாரணைக்காக அறையொன்றுக்குக் கூட்டிச் செல்கையில் எனது கால்களைப் பிடித்து, “அந்தக் கிழவியைக் கொல்லத்  திட்டம்போட்டது நான்தான்” என்று அழுதான்.``இதை விசாரணையில் வந்து ஒப்புக்கொள்’’ என்று அறைக்குள் கூட்டிச் சென்றேன். இன்றைக்கு இவனை விசாரணை செய்யப்போகும் அதிகாரியான ஜோர்ஜ் அண்ணை, பட்டாம்பூச்சி நாவலைப் படித்துக்கொண்டிருந்தார். அறைக்குள்ளே போனதும், இவன் ஒரே கத்தலாக “நான்தான் அந்தக் குற்றத்தைச் செய்தேன்” என்று அழுதான். ஜோர்ஜ் அண்ணை நாவலை மூடிவைத்துவிட்டு இவனைக் கதிரையில் இருக்கும்படிச் சொன்னார். இவன் நிலத்திலேயே சப்பணமிட்டு இருந்தான். ஜோர்ஜ் அண்ணை கதிரையில் இருக்கும்படிச் சொன்னதை இவன் பொருட்படுத்தவே இல்லை. எழும்பிவந்த ஜோர்ஜ் அண்ணை இவனின் காதைப் பொத்தி அறைந்தார். காதுக்குள்ளிருந்து ரத்தம் வெளியே ஊர்ந்து வந்தது. ஜோர்ஜ் அண்ணையிடம்  ஒன்றுவிடாமல் சொல்லத் தொடங்கினான் இவன்.

 “சமாதான காலத்தில் வெளிநாட்டிலிருந்து வன்னிக்குள் வந்த ஆட்களில், பத்மா கிழவியின் பிள்ளைகளும் அடங்குவர். இரண்டு மகள்மாரும் கனடாவில இருந்து ஒண்டாய் வந்து நின்றவே. மூத்தமகளோட பிள்ளைக்குப் பிறந்தநாள் வீட்டுக்குப் போயிருந்தனான். பத்மா கிழவிக்குச் சொந்த ஊர் வல்வெட்டித்துறை என்றால் சொல்லவா வேணும். கிழவியின்ர கழுத்தில, கையில கிடந்த நகைகள் எப்பிடியும் ஒரு கிலோ வரும். பிறந்தநாள் முடிஞ்சு அடுத்த நாளும் கிழவியின் வீட்டுக்குப் போயிருந்தேன். கிழவியின் கழுத்தில் வைர அட்டியல் இருந்தது. கிழவியின் இரண்டு பிள்ளைகளும் ஒரு மாதம் கழிய கனடாவிற்குத் திரும்பும் நாளில் என்னை அழைத்து, அம்மாவை நன்றாகப் பார்த்துக்கொள்ளும்படிச் சொன்னார்கள். இதற்கு முன்னும் கிழவிக்கு நான் உதவியாகத்தான் இருந்தேன். கிழவியின் பிள்ளைகள் வெளிநாட்டில் இவ்வளவு வசதியாக இருப்பார்கள் என நான் நினைத்திருக்கவில்லை. அவ்வளவு ஏன், கிழவிகூட அதைப்பற்றி என்னோடு எதுவும் கதைப்பதில்லை. ஆரம்பகாலங்களில் இயக்கத்திற்குச் செய்த உதவிகளை வாய்நோகாமல் சொல்லிக் கொண்டிருக்கும் பத்மா கிழவிக்குத் தலைவரிலிருந்து நிறைய பேரை தெரிந்திருந்தது. இரண்டாயிரத்து ஆறாம் ஆண்டு பாதை பூட்டின அண்டைக்குக் கிழவி மனம் குழம்பியிருந்தாள். தனக்கு ஒண்டானால் பிள்ளையள் வந்து பார்க்க முடியாது எனக் கவலைப்பட்டாள். கோயிலுக்குப் போக வேண்டும் என்று என்னைப் பின்நேரம் வரச் சொன்னாள். அவளை சைக்கிளில் ஏத்தி காட்டாமணக்கு பிள்ளையார் கோயிலுக்குக் கூட்டிச் சென்றேன். அவள் தேவாரம் படிப்பதைப் பார்த்தால் அவளிடமிருந்து திருடுவதற்கு மனம் வராது என நான் கோயிலுக்கு வெளியே வந்து நின்றேன். மாசச் சம்பளமாக எனக்குத் தருகிற ஐயாயிரம் ரூபாயைக் கோயிலிலிருந்து வீட்டுக்கு வந்ததும் சில்லறைகளாகத் தந்தாள். ‘என்னிடம் காசே இல்லை, உனக்குப் பொறுக்கித் தர வேண்டியதாய் போய்விட்டது’ என்றாள். ‘வேண்டுமென்றால் இதை உங்கள் செலவுக்கு வைத்திருங்கள், அடுத்த மாசம் சேர்த்துத் தாருங்கள்’ என்றேன். சிறிய புன்னகைக்குப் பிறகு, அவள் எனது கைகளில் காசை வைத்தாள். பத்மா கிழவியின் ‘காசில்லை’ என்கிற சுத்தப் பொய்யை நம்பியவன்போல முகத்தை வைத்துக்கொண்டேயிருந்தேன்.

இரண்டு அறைகள் உள்ள பத்மா கிழவியின் வீட்டில், ஓர் அறை மட்டும் எப்போதும் பூட்டியே கிடக்கும். அந்த அறையின் திறப்பை எங்கோ மறைத்து வைத்திருந்தாள். பூட்டிக்கிடக்கும் அறையின் திறப்பைக் கண்டுபிடித்து விட்டால், வைர அட்டியலைக் களவெடுத்துவிடலாம் என்று நினைத்திருந்தேன். ‘முகமாலையிலிருந்து முன்னேறிக்கொண்டிருந்த இயக்கம், ஆசைப்பிள்ளை ஏத்தம் வரைக்கும் போயுட்டுது’ என்று கதைக்கத் தொடங்கினார்கள். அடுத்தநாள் செஞ்சோலைக்குக் கிபிர் அடித்தது. மக்களுக்குக் கூக்குரல் எழுப்பும் சக்திகூட இல்லாமலிருந்தது. ரத்தவெள்ளத்தில் சூரியன் மின்னியது. அந்த மைதானத்திற்குள் நிரம்பிக்கிடந்த ரத்தம், பார்க்கப் போனவர்களின் கால்களைப் பற்றி அவர்களின் உயிரிலோர் இடம் கேட்டது.காய்ந்துபோன ரத்தத்தின் பொருக்குகளிலும் சூரியன் நின்றது. இந்தச் சம்பவம் பத்மா கிழவியினுடைய எலும்புகளின் கணுக்களில் பதிந்தழுந்தியது. அன்றையிலிருந்து அவளுடல் பொலபொலவென நடுங்கி உதிரத் தொடங்கியிருந்தது. தோல் சுருக்கங்களில் அருவருக்கும் படை படரத் தொடங்கியிருந்தது. சமைப்பதற்குப் பிடிக்கவில்லை என்று ஒரு மாதம் தொடர்ச்சியாகக் கடையில் வாங்கியே சாப்பிட்டாள். இரண்டு பிள்ளைகளும் கனடாவிலிருந்து வாரத்தில் சனிக்கிழமை போன் எடுப்பார்கள். வன்னியன் தொடர்பகத்திற்குக் கூட்டிச் செல்வதற்காக வீட்டுக்குப் போயிருந்தும், கிழவி வெளிக்கிடாமல் இருந்தாள். சனிக்கிழமை என்பதை அவள் மறந்திருந்தாள். புத்தி பேதலித்து அடங்கிப்போயிருந்த பத்மா கிழவியைப் பார்த்து நான் பயந்துபோய் விட்டேன். எழுந்துபோய்த் தனது கைப்பையில் கிடந்த முந்நூறு ரூபாயை எடுத்துக்கொண்டு ``வா போன் கடைக்குப் போகலாம்’’ என்று அவள் கூப்பிடும்வரை அவள் உயிரோடில்லை என்று தீர்மானமாகியிருந்தேன். மகள்மாரோடு கனக்க நேரம், போனில் கதைத்தாள். கண்ணீர் புடைத்து வெளியேறிய கண்களைத் துடைத்துக்கொண்டே வீடு வரைக்கும் வந்தாள். நான் அவளோடு கதைக்க விரும்பவில்லை. சைக்கிளிலிருந்து கீழே இறங்கியதும், ‘இன்றிரவு வீட்டில்வந்து எனக்குத் துணையாக படு மோனே.  சொல்ல முடியாத பயத்தின் கூவல் சத்தம் என் காதுகளுக்குக் கேட்கிறது. என்னை ஏன் இந்த யுத்தம் தனிமைப்படுத்திப் புராதனமாக அழச் செய்கிறது. சாவுக்குப் பயந்து நான் மட்டும்தான் இங்கே அழுகிறேன்’ என்றாள்.அந்தத் துளிக் கண்ணீர் என்னைத் திகைக்கவைத்தது. சைக்கிளை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்துவிட்டேன். கிழவியின் வைர அட்டியலை இரவே களவெடுக்க வேண்டும் என்று அப்போதுதான் முடிவுக்கு வந்தேன். பூட்டிய அறையை உடைத்தாவது எடுத்துவிட வேண்டும். பிடிபட்டுவிடக் கூடாது. பத்மா கிழவியை நானொரு துருப்பிடித்த கோடாரி கொண்டு கொத்தியாவது அந்த அறையின் திறப்பைப் பெற்றுவிட வேண்டும் என்றிருந்தேன்.    

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இவன் - அகரமுதல்வன்

இரவில் எனக்குத் துணையாக நாதனை இந்தத் திட்டத்தில் சேர்த்திருந்தேன். நானும் பத்மா கிழவியும் நித்திரையிலிருக்கும் வேளையில், நாதன்  வீட்டிற்குள் நுழைந்துவிடும் வகையில் நான் கதவைத் திறந்துவைத்துப் படுத்திருந்தேன். பத்மா கிழவி அறைக்குள் படுத்திருந்தாள். இந்தத் திட்டத்தைப் பற்றி நாதனிடம் சொன்னேன். திட்டத்தைக் கேட்டதும் ‘இயக்கத்தில்  இருந்திருந்தால் பால்ராஜ் அண்ணைக்குப் பிறகு நீதான் பெரிய சண்டைக்காரனாய் வந்திருப்பாய்’ என்று நாதன் சொன்னான். இந்த நடவடிக்கைக்கு ‘ஒப்பிரேசன் இரவு’ என்று அவன் வைத்த பெயரை நான்  ‘ஒப்பிரேசன் வைர அட்டியல்’ என மாத்தினேன்.”

இவனின் காதுகளைப் பொத்தி ஜோர்ஜ் அண்ணையின் கைகள் இரண்டும் ஒரே நேரத்தில் ஒரே வேகத்தில் இரும்புத் தட்டுப்போல பாய்ந்தன. இரண்டு காதுகளிலிருந்தும் சிவந்த குட்டிப் பாம்புகளாய் துடித்து வெளியேறிக் கொண்டிருந்த ரத்தத்தைப் பார்த்து இவன் பயப்படவில்லை. “நானோ குற்றங்களை ஒப்புக்கொண்டவன். ஆனாலும், என்னை நீங்கள் செவிடனாக்குகிறீர்கள், என் காதுகளை குறிவைத்துத் தாக்கும் இந்தக் கொடூரமான குற்றத்தை நீங்கள் செய்யாதிருங்கள். குண்டுகள் விழுந்தால் வீழ்ந்துபடுக்கும் வாழ்க்கையில் நான் செவிடனாக இருப்பதை விரும்பவில்லை” என்றான்.

“டேய் நாயே, வயசு போன கிழவியின்ர நகையைக் களவெடுக்கத் திட்டம் போட்டிட்டு, பால்ராஜ் அண்ணைக்கு அடுத்த ஆள் என்றெல்லாம் கதைச்சிருக்கிறியள். இதிலவேற  ‘ஒப்பிரேசன் வைர அட்டியல்’... உங்களுக்கெல்லாம் பச்சைப் பனைமட்டையால அடிச்சால்தான் சரி” என்றார் ஜோர்ஜ் அண்ணை.

இவன் தண்ணீர் வேண்டுமென்று கேட்டான். ஒரு பூகம்பம் ஏற்பட்டதைப்போல தாகம் அவனை உலுக்கியது. ஜோர்ஜ் அண்ணை குடுத்த போத்தலில் தண்ணியை வாங்கிக் குடித்தான். இவனின் காதுகளிலிருந்து சிவந்த கால்களற்ற பூச்சிகள் மிக மெதுவாக இறங்கிக்கொண்டிருப் பதைப்போல ரத்தம் விட்டுவிட்டு வந்தது. குற்றவாளியின் கண்ணீரை ஜோர்ஜ் அண்ணை மதிப்பதில்லை. தண்ணீரைக் குடித்து முடித்ததும் இவனின்  மூக்கிலிருந்து பெருமூச்சு வீசியது. ஆர்ப்பரிப்பாகக் குற்றத்தைச் சொல்லத் தொடங்கலாம் என்று முடிவு செய்தான் இவன்.      

இவன் - அகரமுதல்வன்

``நாதன், வீட்டிற்குள் வந்ததும் கதவை இறுக்கிப் பூட்டினேன். பத்மா கிழவி படுத்திருந்த அறைக்கதவை மிக லேசாகச் சாத்தினேன். பூட்டியிருக்கும் கதவை உடைத்து அறைக்குள் இருக்கும் நகைகளைக் களவெடுப்பதற்கான முதல் வேலையை நானும் நாதனும் செய்தோம். கதவின் பூட்டை உடைப்பதற்கு நாதன் மிகவும் சிரமப்படவில்லை. அதை உடைப்பதற்கான ஆயுதங்களை அவன் கொண்டுவந்திருந்தான். கதவைத் திறந்து அறைக்குள்ளே போனோம். இருட்டின் விளைச்சலில் இருவரும் குருட்டுக் குருவிகளைப்போல ஒரு தடத்திலேயே நடந்து போனோம். எனது கையில் கிடந்த டோர்ச் லையிற்றை அடித்து அலுமாரியைத் தேடினோம். அறைச் சுவரெங்கும் எழுதப்பட்ட காகிதங்கள் ஒட்டப்பட்டுக் கிடந்தன. அந்த அறையில் காகிதங்களைத் தவிர எதுவுமில்லாமல்  இருந்தது. டோர்ச் லையிற்றின் வெளிச்சத்தில் சில காகிதங்களில் எழுதப்பட்டிருப்பதை வாசித்தேன். பத்மா கிழவி தனது இரண்டு மகள்மாருக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் எழுதிய கடிதங்கள் அவை. ‘வைர அட்டியலை எங்கேதான் ஒளித்து வைத்திருக்கிறாள் வேஷைக்கிழவி’ என்று நாதன் பேசத் தொடங்கினான். துருப்பிடித்தக் கோடாரியால் கிழவியை வெருட்டி, வைர அட்டியலைப் பறித்துக்கொண்டு ஓடிவிடலாம் என்ற யோசிப்பு என்னை ஆக்கிரமித்தது. இருவரின் முகங்களையும் பழைய துணியால் மூடிக் கட்டிக்கொண்டு, கிழவி படுத்திருந்த அறைக்குள் சென்றோம். அவள் நித்திரையில் உளறிக்கொண்டிருந்தாள். இத்துப்போன சீலைக்கு இரண்டு கால்கள் இருந்து நீட்டிக்கொண்டு படுத்தால் எப்படி இருக்குமோ அப்படியிருந்தது கிழவி. நான் அலுமாரியை மிக மெதுவாகத் திறந்தேன். அதனுள் உடுப்புகளையும் சில புகைப்படங்களையும் தவிர எதுவும் இல்லை. கிழவியோடு தலைவர் சிரித்துக் கதைக்கும் புகைப்படத்தைப் பார்த்ததும் களவிலிருந்து பின்நோக்கி ஓடிவிடலாம், வைர அட்டியலுக்காக சுடுபட்டுச் சாக முடியாது என நினைத்தேன். ஆனாலும், கிழவியின் கழுத்தில் பளபளத்த வைர அட்டியல்மீது இச்சைகொண்டிருந்தேன். எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் அவளின் தலையணைக்குள் இருக்குமோ என நாதன் கரவுப்பட்டான். அப்போது கிழவியின் வாயை இறுகப் பொத்த, நாதன் தலையணைகளைப் பிய்த்தெறிந்தான். முகத்தைச் சாக்கால் மூடி பத்மா கிழவியின் கைகளையும் வாயையும் கட்டி நிலத்தில் இறக்கிவிட்டேன். அவள் நித்திரையோடு அழத் தொடங்கினாள். அழுதவண்ணமே பற்கள் கிட்டித்து உடல் வியர்த்து விழுந்தாள்.எனக்கு அதிர்ச்சியில்லை. வயோதிகத்தின் தனிமை அவளை அப்படித் துன்புறுத்துகிறது, அவ்வளவே. அவளுக்காகக் கண்ணீர் சிந்தும் இரக்கங்கள் என்னிடமிருந்து கரையேறிவிட்டன. குரூரமான எனது கண்கள் வைர அட்டியலைத் தேடிக்கொண்டிருந்தன. கன்னங்கரேறென்ற இருட்டில் மேகங்கள் பிய்ந்துபோன மாதிரி மெத்தைப் பஞ்சுகள் அறையெங்கும் பரவிக் கிடந்தன. நாதன் கைகளைக் காட்டி எங்குமில்லை என்று சொன்னபோது அறையின் உள்ளே ஜன்னல் வழியாய் காற்று வந்தது. எம்பிப் பறந்த எடையற்ற பஞ்சுகள் பத்மா கிழவியின் உடம்பில் ஒட்டி நின்றன. அப்போது அவளின் உடல் சிலிர்த்தது. தனது கைகளின் கட்டுகளை அவிழ்க்க இடறாது முயற்சித்துக்கொண்டிருந்தாள். எழும்பியவள் தனக்கருகில் நின்ற நாதனை காலால் ஓங்கி உதைத்தாள். இருட்டில் மூர்க்கம்கொண்டு உலாவும் கிழட்டு யானையைப்போல மீண்டும் உதைத்தாள். துருப்பிடித்தக் கோடாரிக் காவு வாங்கும் மாட்சிமையோடு என் கைகளில் இருந்தது. நாதன், ‘அவளின் காலைப் பிடித்து இழுத்து விழுத்தவா?’ என்று சைகையில் கேட்டான்.   ‘பாவம் பிடரியில் அடி விழுந்தால்’, நினைத்துவிட்டு வேண்டாம் என்றேன். நாதனை இன்னொரு தடவை உதைத்தாள். வைர அட்டியல் அவளின் சட்டைக்குள்ளிருந்து கீழே விழுந்தது. பத்மா கிழவி அதற்குப் பிறகு அசையவே இல்லை. வைர அட்டியலை எனது பத்து வயதான மகள் அணிந்துகொண்டு நடக்கும் காட்சி வளர்ந்துகொண்டேயிருந்தது. வைர அட்டியலை எடுத்துக்கொண்டு இருவரும் வீட்டைவிட்டு வெளியேறினோம். வைைர அட்டியல் கிடைத்த பரவசத்தில் எனதுடல்கொண்ட வியப்பின் விதைகள் இரவின் மீதெரிந்த நிலவு வரைக்கும் மரமென உயர்ந்தது. பறந்துபோன பேரின்பப் பட்சிகள் என் பாதைகளில் வந்து சிறகு தட்டின. நான் கள்ளன். என்னை நம்பிய ஒரு முதியவளின் வைர அட்டியலைத் திருடுவதற்காகத் துருப்பிடித்தக் கோடாரியால் அவளைக் கொன்றுவிடவும் கனன்ற இதயம் படைத்தவன். ஓம் ஜோர்ஜ் அண்ணை. நான் இயக்கத்தால் சுட்டுக் கொல்லப்பட வேண்டியவன். என்னைச் சுட்டுக்கொல்லுங்கள். என் மடியில் பத்மா கிழவியின் ரத்தம் தளும்புகிறது. என்னைச் சுட்டுக் கொல்லுங்கள்’’ என்று கதறியழ ஆரம்பித்தான் இவன். அன்றைக்கு விசாரணை இவ்வாறு முடியும் என்று நாம் மூவரும் எதிர்பார்க்கவில்லை.

அடுத்தநாள் காலையில் இவனையும் நாதனையும் இன்னொரு சிறைச்சாலைக்கு மாற்றும்படி ஜோர்ஜ் அண்ணை உத்தரவிட்டார். பெயரைச் சொல்லிக் கூப்பிட்டபோது இவனிடமிருந்து எந்த அசைவுகளும் இல்லாமலிருந்தது. மறுபடியும் கூப்பிட்டேன். எழும்பி வருவதாகத் தெரியவில்லை. இவனருகில் போனதும் என்னை நிமிர்ந்து பார்த்து காதிரெண்டும் கேட்கவில்லை என்று சொன்னான். “கிழவி கோமாவில கிடக்குது, என்ன செய்யலாம்?” என்டு கேட்டேன். நாதனும் இவனும் வாகனத்தில் ஏறினார்கள். தப்பிப்போக முடியாதபடி அவர்களின் கால்கள் விலங்கிடப்பட்டன. இவன் தனக்குக் காதுகள் கேட்கவில்லை என்று சொல்லிக்கொண்டேயிருந்தான். இவனை ஒரு பங்கர் சிறையறையில் அடைத்து வைக்கலாமென்று முடிவு செய்யப்பட்டது.

கைகளை அவிழ்க்காமல் முகத்தை மூடிய சாக்கோடு அப்படியே விட்டிட்டு ஓடியதால் பத்மா கிழவிக்குப் பயக்காய்ச்சல் வந்து மாரடைப்பு வந்திருந்தது. அவள் உயிர் தப்பி வீட்டுக்கு வந்ததும் தனது வைர அட்டியலை வாங்குவதற்காகக் காவல்துறைக்குச் சென்றிருக்கிறாள். “உங்கள் வீட்டிற்குள் புகுந்து களவெடுத்தவர்களைப் பிடித்து அடைத்துவிட்டோம் அம்மா” என்று சொன்னார்கள். பத்மா கிழவி, “அவர்களை விடுதலை செய்யுங்கள், என்னைக் கொல்லாமல் விட்டுவிட்டதற்கு நன்றியாக இருக்கும்” என்று சொன்னாள். ஆனால், ஜோர்ஜ் அண்ணை இதனை மறுத்துவிட்டார். குற்றம் செய்தவன் இருட்டைப் பழகி வெளிச்சத்தை வேண்ட வேண்டும். அவன் தண்டிக்கப்பட வேண்டுமென்று உறுதியாகத் தெரிவித்துவிட்டார்.

இவன் - அகரமுதல்வன்இவன் பங்கர் சிறையில் ஆறு மாதங்கள் அடைத்துவைக்கப்பட்டான். பத்மா கிழவி இயக்கத்திடம் கேட்டுக்கொண்டதற்குப் பிறகு, இன்னோர் ஆறு மாதங்கள் பங்கர் சிறையிலிருந்து வெளியே எடுக்கப்பட்டு வேலைகளின் மூலம் தண்டிக்கப்பட்டான். இவன் விடுதலையாகும்போது ஜோர்ஜ் அண்ணை வீரச்சாவு அடைந்திருந்தார்.

வீட்டிற்குப் போனதும், இவனைப் பார்ப்பதற்கு வந்திருந்தவர்களுக்கு மத்தியில் பத்மா கிழவியும் நின்றிருந்தாள். துருப்பிடித்தக் கோடாரி சாணைக்கல்லில் கூராகி, தன் கழுத்தை அறுக்குமாற் போலிருந்தது. பத்மா கிழவியின் கண்கள் இவனிலேயே நிலைகுத்தி நின்றன. இந்த ஒரு வருடத்தில் இவனின் மகள் பெரிய பிள்ளையாகியிருந்தாள். இவன் எழும்பிச் சென்று அத்தனை சனங்களுக்கு முன்னாலும் பத்மா கிழவியின் கால்களைப் பிடித்து,
“என்னை மன்னிச்சுக்கொள்ளுங்கோனை” என்று கண்ணீரோடு நிலத்தில் கிடந்தான். பத்மா கிழவியின் கால்கள் நடுங்கியபடிக்கே அவனின் கண்ணீரை மிதித்தன. கிழவி தனது கால்களை அவனின் கைகளிலிருந்து உதறி, கொஞ்சம் பின்னுக்குச் சென்று நின்றாள். இவனின் மகள் பள்ளிக்கூட உடையோடு இந்தக் காட்சிக்குள் நுழைந்தாள். இவனின் கண்ணீரை மிதித்துக்கொண்டே வீட்டிற்குள்ளே ஓடியவள், நீலநிறப் பாவாடையோடும் வெள்ளைநிறச் சட்டையோடும் வைர அட்டியல் போட்டுக்கொண்டு வெளியே வந்தாள். இவன் கண்ணீரோடு தனது பிள்ளையின் கழுத்தைப் பார்த்தான். அதே வைர அட்டியல். பார்த்தவுடனேயே அந்த ஊரின் வயல்வெளிகளை, பனைமரங்களை, கொன்றைப் பூக்களை அலறச்செய்யும் வகையில் இவன் பேய்க்கத்தல் கத்தினான்.

“ஜோர்ஜ் அண்ணை என்னை நீங்கள் சுட்டிருக்க வேண்டுமெல்லோ.”

இவனின் இந்த வாக்கியத்திற்குப் பிறகு பத்மா கிழவி எந்த நடுக்கமுமில்லாமல் தனது வீடுநோக்கி நடந்தாள். “குற்றவாளியே உன்னைச் சுடுவதற்கு எனக்கொரு துவக்கு வேண்டும், இல்லாதுபோனால் உனது கையில் கிடந்த துருப்பிடித்தக் கோடாரியாவது தேவை” எதிரே நின்ற தகப்பனைப் பார்த்துச் சொன்னாள் இவனது மகள். அப்போதுதான் எனது கண்கள் ஒளிர்ந்தன. தூரத்தில் இயக்கப் பாடல் ஒலிக்கும் சத்தம் வெளியெங்கும் பரவியது.