Published:Updated:

“சின்னஞ்சிறிய கணத்தில் லயர் பறவையாக இருக்கலாம்தானே!” - ராணிதிலக்

“சின்னஞ்சிறிய கணத்தில் லயர் பறவையாக இருக்கலாம்தானே!” - ராணிதிலக்
பிரீமியம் ஸ்டோரி
“சின்னஞ்சிறிய கணத்தில் லயர் பறவையாக இருக்கலாம்தானே!” - ராணிதிலக்

எனக்குப் பிடித்த 5 கவிதைகள்

“சின்னஞ்சிறிய கணத்தில் லயர் பறவையாக இருக்கலாம்தானே!” - ராணிதிலக்

எனக்குப் பிடித்த 5 கவிதைகள்

Published:Updated:
“சின்னஞ்சிறிய கணத்தில் லயர் பறவையாக இருக்கலாம்தானே!” - ராணிதிலக்
பிரீமியம் ஸ்டோரி
“சின்னஞ்சிறிய கணத்தில் லயர் பறவையாக இருக்கலாம்தானே!” - ராணிதிலக்

லப்பல வருடங்களாகக் கவிதைகள் வாசித்துவருகிறேன். அதே வேகத்தில் கரைந்துகொண்டிருக்கும் மேகங்களைப் போல, உடனுக்குடன் ஞாபகநதியில் பலப்பல கவிதைகள் காணாமல் போகின்றன. இத்தனை வருஷங்களில் குடமுருட்டி ஆற்றை மாலைவேளைகளில் பார்க்கப்போகையில், சில காட்சிகள் மட்டுமே நினைவில் இருக்கின்றன. இப்படித்தான் கவிதைகளும் அமைகின்றன.  எனக்குப் பிடித்த கவிதைகள் என்று சொல்வதைவிட, என்னைப் பீடித்த கவிதைகள் என்று சிலவற்றைச் சொல்லலாம்.  

“சின்னஞ்சிறிய கணத்தில் லயர் பறவையாக இருக்கலாம்தானே!” - ராணிதிலக்

அன்றாட லௌகீகத்துக்கு இடையில் எக்கணமாவது ஏதாவது ஒரு கவிதையை வாசித்து உயிர்கொண்டுவிடுவது உண்டு. அச்சமயம் கொஞ்சம் நான் உணர்வுடன் இருக்கிறேன் என்ற நிச்சயம் கிடைத்து விடுகிறது. எனக்குப் பிடித்துப்போன கவிதைகளைத் தொடர்ந்து வாசிப்பது என்பது, பழகிப்போன தெரு, பழகிப்போன உற்சவம், பழகிப்போன கோயில்களுக்குத் தொடர்ந்து சென்றுகொண்டிருப்பதான தோற்றமே தவிர ஏதுமில்லை.  ஒருவேளை, பழகிப்போன இவையெல்லாம் ஒருகட்டத்தில் புரிபட்டுவிட்டிருந்தால், நான் ஏன் திரும்பத் திரும்ப அங்கு செல்லப்போகிறேன்? நான் ஏன் திரும்ப அக்கவிதையை வாசிக்கப்போகிறேன்? 

சில கவிதைகள் அர்த்தத்தைத் தந்துவிட்டு மறைந்துவிடுகின்றன. சில கவிதைகள், அதை எழுதிய நபருக்கு விருதைத் தந்துவிட்டுக் காணாமல் போகின்றன. சில கவிதைகள் குறைப்பிரசவமாகி அழிந்துவிடுகின்றன.  இவ்வேளையில் சில கவிதைகள் மட்டுமே, ஒரு மனநிழலைப்போல நம்மிடம் தங்கிவிடுகின்றன. அப்படித் தங்கிவிடும் சில கவிதைகள் நமக்குள் ஒரு புரட்சியையோ, கலகத்தையோ, கோபத்தையோ வெளிப்படுத்தாமல்,  ஒரு சத்தியமாக நிலைத்துவிடுகின்றன.  ஒரு கண்ணாடி, ஒரு முகத்தைத் திரும்பத் திரும்பப் பார்த்துக்கொள்வதுபோலத்தான் இது. தனக்குள் எதையும் ஒளித்துவைத்துக் கொள்ளாமல் பிரதிபலிக்கும் கண்ணாடியைப் போலத்தான் பிடித்தமான  கவிதைகள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“சின்னஞ்சிறிய கணத்தில் லயர் பறவையாக இருக்கலாம்தானே!” - ராணிதிலக்நவீனக் கவிதைகள் வாசிப்பில் கிடைத்த அனுபவம், செவ்விலக்கிய வாசிப்பை வேறொன்றாக மாற்றிவிடுகிறது. எத்தனை சங்கக் கவிதைகளைக் கல்வி வழியாக வாசித்திருந்தாலும் அதன் அனுபவம் என்பது பேராசிரியர்களின் கண் வழியாகப் பார்ப்பதாகிறது. உண்மையில் நவீனக் கவிதையின் வழியாக அமைந்த வாசிப்பனுபவத்தின் வழி செவ்விலக்கியங்களைப்  பார்க்கும்போது கால இடைவெளி குறைந்து, மிக அருகில் வாலை ஆட்டிக்கொண்டு நாயைப்போலக் குழைந்து நிற்கின்றன.  மிக அற்புதமான தரிசனத்தைப் பெற்றிட முடிகிறது. அவ்வகையில் அவ்வப்போது வாசிப்புத்தளத்தில் இருக்கும் நூலொன்று, நக்கீரதேவநாயனார் எழுதிய திருஈங்கோய்மலை எழுபது.

திருச்சி மாவட்டம், முசிறிக்கு அருகில் இருக்கும் ஈங்கோய்மலைக்கு ஒரு சுபமுகூர்த்த மாகப் போயிருந்தேன். காவிரியின் வடகரையில் உள்ள, பாடல்பெற்ற 63-வது சிவத்தலம் அது. அகத்திய மாமுனிவர் ஈ வடிவில் வந்து, சிவனை வழிபட்ட தலம் இது. ரத்னாவளியின் சக்திபீடம். இந்தப் பொய்களைத் தயவுசெய்து, ஆண்டாள் என்னும் சிறுபிள்ளையின் பொய்களாகக் கருதி ஒதுக்கிவிடுங்கள்.

கோடைக்காலம். படிக்கட்டுகள் பொன்னைப்போல மிளிர்கின்றன. செங்குத்தான மலையேற்றத்தில் மூச்சு மேலும்கீழுமாக வாங்குகிறது. கால்கள் தளர்ந்துவிடுகின்றன. கீழிருந்து காண, சிவலிங்கம் எப்போதும் மேலேயேதான் வீற்றிருக்கிறது. ஒதுங்கி நிழல்பெற ஒரு மரமும் இல்லை. நான் சூரியனுக்குக் கீழேதான் நிற்கிறேன், சகலத்தையும்போல்.  லிங்கம்போல் உயர்ந்திருக்கும் மலை முழுவதும் பொட்டல்காடு அசைகிறது.  அல்லது அசைவதுபோல காட்சி அசைகிறது.  பொட்டல் மலை. யானைகளோ, குரங்குகளோ, ஏன் மேகங்களோ அற்ற மலை இது.  இதை மலை என்பதைவிட, கற்குன்று என்றே  சொல்லிவிடலாம்.   மரகதலிங்கத்தைத் தரிசித்துவிட்டு, சில காலம் கழித்து,  ‘திருஈங்கோய்மலை  எழுபது’ வாசிக்கும்போது, கொஞ்சம் மிகையாகச் சொன்னால் பேரானந்தத்தில் மிதந்துவிட்டேன்.

`அது கோடைக்காலம். வெயில் சுட்டெரிக்கிறது. ஒரு மரக்கிளையில், மந்தி (பெண்குரங்கு) தாகத்தால் ஏங்குகிறது.  இதைக்கண்ட கடுவன் (ஆண்குரங்கு) சூரியனைப் பார்க்கிறது. வானில் கடந்துசெல்லும் கருமேகங்களைப் பார்க்கிறது. சட்டெனப் பாய்கிறது. தன் நகத்தால் மேகத்தைக் கிழிக்கிறது; மழை பெய்கிறது; அந்த மழைத்துளிகளை மந்தி பருகுகிறது. தாகம் தீர்கிறது. கடுவனை அகமகிழ்ந்து அணைக்கிறது’.  இது ஈங்கோய்ப் பாடல்களில் ஒன்று.

உண்மையில் திருஈங்கோய்மலையில் காடோ, யானையோ, நரியோ, ஒரு சிறு காகமோ, ஏன் ஒரு நாய்கூட இல்லை.  மரங்கள் எல்லாம் புதர்கள் அளவே வளர்ந்திருக்கின்றன. ஒரு கல்லாய் சமைந்திருக்கும் மரகதமே, திருஈங்கோய்மலை.  ஆனால், நக்கீர தேவநாயனார் (இந்தப் பொய்யையும் ஏற்றுக்கொள்ளுங்கள்) கற்பனைப் பரப்பில் எல்லாவற்றையும் சிருஷ்டித்திருக்கிறார். யானைகளும், நரிகளும், தேனீக்களும் அடர்ந்த வளமிக்க மலையாக மாற்றியிருக்கிறார்.  எல்லாவற்றுக்கும் உயிர் தந்திருக்கிறார்.  அதற்கும் மேலாக மாபெரும் அன்பை, காதலை,  அவற்றின்  மூலம்  போதித்திருக்கிறார். ராமன், குகன்மீது வைத்திருக்கும் காதலைவிட மேலான காதலை, இன்றைய தொழிற்நுட்பவாழ்வில் நாம் இழந்துவிட்ட காதலை நக்கீர தேவநாயனார் படைத்திருக்கிறார்.

ஓர் உயிர் இன்னொரு உயிருக்காகக் கொள்ளும் நெகிழ்ச்சி, காதல், அன்புக்குக் கற்பனை இடம் கொடுக்கிறது என்பதாலேயே ஈங்கோய்மலை எழுபதில், ஆயிரம் ஆண்டுகளாக வாழும் யானையொன்று, தன் மனைவிக்காக, தன் காதை விசிறியாக்கிச் சாமரம் வீசுகிறது. ஆயிரம் ஆண்டுகள் கடந்து இன்னும் வீசும் மேலைக்காற்று அது. கற்பனைக் காற்று அது.

எப்போதெல்லாம் என்னிடத்தில் ஈரம் குறைகிறதோ, எப்போதெல்லாம் கற்பனை ஊற்று அடங்குகிறதோ, அப்போதெல்லாம் நான் வாசிக்கும் முதல் கவிதையாக அமைந்திருப்பது, திருஈங்கோய்மலை எழுபதின் குரங்கின் அன்பு மட்டுமே. இது முதல் கவிதை.

எந்தவொரு கவிஞனும் வாசகனும் ஆத்மாநாமைத் தொடாமல் கடந்துவிட முடியாது என்பேன். ஆத்மாநாம் இந்த நூற்றாண்டின் மனசாட்சி. சாஹித்தியத்தின் சத்யம். எழுத்தின் பெரும் இறுக்கத்தில் வாழ்ந்திருந்த என்னை, நெகிழ்வுபடுத்தியவர் ஆத்மாநாம்.  சிறுகதைக்கு அசோகமித்திரன் என்றால், கவிதைக்கு ஆத்மாநாம். ஒரு வாசகனுக்கு, ஓர் எழுத்தாளனுக்கான திறவுகோல் அவரிடம் எப்போதும் இருக்கிறது. இந்த இருண்ட உலகத்தைப் புரிந்துகொள்ள ஆத்மாநாம் என்னும் சாவி போதுமானதாகவே இருக்கிறது. எப்பேர்ப்பட்ட காலத்தைச் சேர்ந்த பூட்டென்றாலும் திறந்துவிடும் சாவிகள்தான், அவரின் கவிதைகள். அந்தச் சாவியைக்கொண்டு அவ்வப்போது என் எழுத்தின், வாழ்வின் கதவைத் திறந்தது உண்டு.    

“சின்னஞ்சிறிய கணத்தில் லயர் பறவையாக இருக்கலாம்தானே!” - ராணிதிலக்

“என்னைத் தனிமைப்படுத்த இயலும்
தேவையின்றி எனக்காய்
புதிய எஜமானர்களைத் தோற்றுவிக்க இயலும்
எனக்கு மட்டும்
மூன்றுவேளை
உணவு உத்தரவாதப்படுத்த முடியும்
உலகமே காசை உண்கையில்
நான் மட்டும் எவ்விதம் வேறாக முடியும்
வேலையைச் செய்
வைப்பு நிதி சேர்
இசை நாட்டியம் நாடகம் இலக்கியம்
எல்லாம் உன் பொழுதுபோக்கு
உண்மை
ஆயினும்
என் பேனா
என் காகிதம்
என் கவிதை”

ஆத்மாநாமின் ‘செய் அல்லது செத்துமடி’ என்ற இந்தக் கவிதையை அவ்வப்போது வாசித்து வருகிறேன். ஒரு கவிஞனின் இரண்டுபட்ட வாழ்வைத் தெள்ளத் தெளிவாகப் பறைசாற்றும் கவிதை இது. லௌகீக வாழ்வுக்கும் படைப்பு
வாழ்வுக்குமான மெல்லிய கோட்டை, கடைசியாய் வரும் நான்கு வரிகள் ஊர்ஜிதம் செய்கின்றன, ஒரு லௌகீகன் எப்படிக் கவிஞனாக மாறவேண்டும் என்று. இந்தக் கவிதையில் வரும் ‘உன்’ என்னும் சொல்லை நாம் ‘என்’, ‘நம்’ என்று மாற்றி வாசித்தால்  இந்தக் கவிதையின் அர்த்தம் புரியும். என் சராசரி மனித வாழ்வை என் பேனா, என் காகிதம், என் கவிதை என்ற வரிகளே அவ்வப்போது உயிர்ப்புடன் வைத்து விடுகின்றன.  `ஆம் நான் லௌகீகன்! ஆம் நான் ஒரு கவிஞன்!’ என்ற குரல்களைக் கண்டுபிடித்தவர் அவர். இது இரண்டாவது கவிதை.

ஆனால், அவ்வப்போது, லௌகீக மனம் கோணல்மாணலாகிவிடுகிறது. இந்தச் சலிப்பான, மொன்னையான, வழக்கமான, திரும்பத் திரும்ப அமையும் வாழ்கணங்கள் அலுப்பூட்டும்போது, கோணல்மாணலாக என்னை நான் மாற்றிக்கொள்ளக் காரணமாக அமைந்திருப்பது நானா? அல்லது சமூகமா? என்ற குழப்பம் நிலவுகிறது. அப்போதெல்லாம் ஓசிப் மெண்டல்ஷ்டாம் சிரிப்பார்.

“----என்ன தெரு இது?
----மெண்டல்ஷ்டாம் தெரு.
----என்ன நாசமாய்ப் போன பெயர் அது?
எந்தப் பக்கம் திருப்பினாலும்கூட
இது கோணல்மாணலாகவே வருகிறது.
--அவரும்கூட நேரான ஆள் இல்லை துல்லியமான வகையில்.
அவரது அறநெறிகள் லில்லி மலரை ஒத்திருக்கவில்லை.
மேலும் அக்காரணத்தினால்தான்  இந்தத் தெருவுக்கு
(மாறாக, நேர்மையாகச் சொல்வதானால், இந்தச் சாக்கடைக்கு)
மெண்டல்ஷ்டாம் என்று பெயர்  தரப்பட்டிருக்கிறது”

இது ஓசிப்பின் 303-வது கவிதை. அல்லது என் மூன்றாவது கவிதை. இந்தக் கவிதையை நான் வாசிக்கும்போதெல்லாம், என் அறநெறிகள் லில்லி மலரை ஒப்புக்கொண்டிருக்க வேண்டியதில்லை என்றே நம்புகிறேன்.  புத்தரின் கரங்களில் மலர்கள் காணாமல் போகும்போது, கரமே மலராகக் காட்சிதருவதுபோல், நான் ஏன் கோணல்மாணலாக இருக்கக் கூடாது? நாம் ஏன் கோணல்மாணலாக இருக்கக் கூடாது? நீண்ட தூரத்தைக் கடப்பதற்கு  நாம் ஏன் கோணல்மாணலான, குறுகலான வழியைத் தேர்ந்தெடுக்கிறோம்? ஏன் என் புத்தி கோணல்மாணலாக இருக்கிறது?  இருந்தால்தான் என்ன?      

“சின்னஞ்சிறிய கணத்தில் லயர் பறவையாக இருக்கலாம்தானே!” - ராணிதிலக்

ஒரு கவிதை எவ்வாறாக எழுதப்படக் கூடாது? ஒரு கவிதை எவ்வாறு எழுதப்பட வேண்டும்? என்ற பாதையைக் குறித்து 90-களிலேயே சொல்லப்பட்டுவிட்டது. சொன்னவர்கள் வேறு யாருமில்லை மலைச்சாமியும், சமயவேலும், சத்யனும்தான்.  நீங்கள் ஒரு கவிஞனாக இருக்கும்பட்சத்தில், நீங்கள் ஒரு வாசகனாக இருக்கும்பட்சத்தில், நீங்கள் இந்த வாழ்வை, இந்த உலகைப் புரிந்துகொண்டு எழுதிய, வாசித்த ஒரேயோர் கவிதையை அடையாளம் காட்டினால் போதும்.  அந்த சாஸ்வதமான கவிதை உண்மையெனில், போர்ஹேயின் கவிதையில் நூற்றாண்டுகளாக வாழும் ஒரு புலியைப்போன்று அது வாழ்ந்து கொண்டிருக்கும். சாகாவரம் பெற்ற கவிதையான ‘எண்பதுகளில் நகரம்’ இப்போதைக்குமானதே.

“உன் சௌந்தர்யத்தையும் இளம் பெண்களின்
பொன்னிறக் கால்களின் வனப்பையும் கண்டு
அயர்ந்துபோனேன் முதலில்.
நீலநிற நியான் கண்கள்,
சோடியம் விளக்குகள்
மிளிரும் வண்ணப்புன்னகையின் பொய்
இரும்பும் கல்லும் தசைகளாகக்கொண்டு
புயலையும் முறியடிக்கும்
கம்பீரக் கட்டடங்கள்
இவற்றைப் பார்த்துக் குழப்பம்.
சலிக்கின்றது ஆற்றுநீரும்
பச்சை வயல்களும்
இழந்த வாழ்க்கை.
வியர்வையும் வாசனையும் அற்ற மார்பகங்கள்.
தாய்முலைகள் இங்கில்லை.
மென்மையான வார்த்தைகளுக்குப் பஞ்சம்.
இயற்கை உதடுகள் யாருக்கும் இல்லை.
அறிவின் தீனி
அரிது காண்பது புத்தகங்கள்.
இரவுகள் நீண்டு தூக்கமற்றுக் கழிகின்றன.
மினுக்கும் விளக்குகளும்
அமைதியைக் கிழிக்கும்.
கார் ஓலங்கள் நம்மைத் துன்புறுத்தும்.
பணத்தைத் துரத்தும்
விஞ்ஞான அடிமைகள் நாம் சலிப்பதில்லை.”

ஏறத்தாழ 30 வருடங்களுக்கு முன்பாக, சத்யன் என்ற கவிஞரால் எழுதப்பட்ட கவிதை இது. சாஸ்வதமான இக்கவிதையை எப்போதெல்லாம் வாசிக்கிறேனோ, அப்போதெல்லாம் ஒரு சாஸ்வதமிக்க எழுத்தை எழுத முயன்று தோற்பேன் நான்.  இப்போது வயல்களை, நிலங்களை நாம் இழந்துவிட்டோம். தாய்முலைகளைப் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரைவார்த்துவிட்டோம். இந்தக் கவிதையை எக்காலத்திலும் வாசிக்கலாம்.  வாசிக்கப்படும் காலத்துக்கான கவிதையாக, இக்கவிதை தன்னை உருமாற்றிக் கொண்டுவிடும். நாம் இழந்துவிட்டதின் மனசாட்சியாக நம் கவிதை அமைந்தால் போதும். சாஸ்வதம் என்பதே கவிதையின் லட்சணம்.  இது நான்காவது கவிதை.    

“சின்னஞ்சிறிய கணத்தில் லயர் பறவையாக இருக்கலாம்தானே!” - ராணிதிலக்

நான் கவிஞனான இருக்கிறேன். இல்லை இல்லை... நான் ஆசிரியனாக இருக்கிறேன். நான் கொஞ்சம் சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட கவிஞனாக, லௌகீகனாக இருக்கிறேன்.  இருந்தால் என்ன? ஆத்மாநாம் சொல்வதுபோல், ‘என் பேனா. என் காகிதம். என் கவிதை’ என்று வெளியில் ஆசிரியனாக, உள்ளே கவிஞனாக இருக்கிறேன். ழாக் ப்ரெவர் இந்த வித்தையைக் கற்றுக் கொடுக்கிறார். எனக்குப் பிடித்த ஐந்தாவது கவிதை ‘வீட்டுப்பாடம்’.

“இரண்டும் இரண்டும் நாலு
நாலும் நாலும் எட்டு
எட்டும் எட்டும் பதினாறு ஆகும்.
சொல்லுங்கள், என்றார் ஆசிரியர்
இரண்டும் இரண்டும் நாலு
நாலு நாலும் எட்டு
எட்டும் எட்டும் பதினாறு ஆகும்.
ஆனால், அதோ ஒரு லயர் பறவை
பறக்கிறது ஆகாயத்தில்
குழந்தை அதைப் பார்க்கிறான்
குழந்தை அதைக் கேட்கிறான்
குழந்தை அதை அழைக்கிறான்
என்னைக் காப்பாற்று
என்னுடன் விளையாடு
பறவையே!
ஆக, இறங்கி வருகிறது பறவை
குழந்தையுடன் விளையாடுகிறது
இரண்டும் இரண்டும் நாலு...
சொல்லுங்கள், என்றார் ஆசிரியர்
குழந்தையோ விளையாடுகிறது
பறவை அதனுடன் விளையாடுகிறது.
நாலும் நாலும் எட்டு
எட்டும் எட்டும் பதினாறு ஆகும்
பதினாறும் பதினாறும் என்ன ஆகும்?
பதினாறும் பதினாறும் ஒன்றும் ஆகாது
நிச்சயமாக முப்பத்திரண்டு ஆகாது
எப்படிப் பார்த்தாலும் ஆகாது
அவை அங்கிருந்தே போய்விடும்   
தன் பள்ளி மேசைக்கடியில்
குழந்தை, பறவையை
ஒளித்துவைக்க
எல்லாக் குழந்தைகளுமே
அந்த இசையைக் கேட்கின்றன
எட்டும் எட்டும் தங்கள் முறைக்குப்
போய்விடுகின்றன
பிறகு நாலும் நாலும் இரண்டும் இரண்டும்
அதனதன் முறையில் அங்கிருந்தே
ஓடிவிடுகின்றன
ஒன்றும் ஒன்றும் ஒன்றாகவும் ஆவதில்லை
இரண்டாகவும் ஆவதில்லை
ஒன்றும் ஒன்றும்கூடப் போய்விடுகின்றன
குழந்தையும் பாடுகிறது
ஆசிரியர் கத்துகிறார்
கோமாளித்தனத்தை நிறுத்துகிறீர்களா?
ஆனால், மற்ற குழந்தைகளெல்லாம்
இசையைக் கேட்கின்றன
பள்ளியறையின் சுவர்களெல்லாம்
அமைதியாகச் சரிகின்றன.
கண்ணாடிச் சன்னல்கள் மணலாக ஆகின்றன
எழுதும் மை நீராக
பள்ளி மேசைகள் மரங்களாக
சாக்குக்கட்டி மலைமுகடாக
பேனாக்கூடு பறவையாக.”


நண்பர்களே, லயர் பறவையைப் பார்த் திருக்கிறீர்களா? பள்ளி அறைச் சுவர்களுக்குள் நீங்கள் பெற்ற கஷ்டங்களைப் பகிர முடியுமா? உங்கள் ஆசிரியர் ஏன் மிடுக்காக இருக்கிறார்? நான் ஏன் மிடுக்காக இல்லை? நான் லௌகீகன் இல்லை. நான் கவிஞன். நான் ஆசிரியன்.

பள்ளி அறையில் எனக்கும் மாணவர்களுக்கும் ஒரு சிறிய வித்தியாசம் மட்டுமே. அவர்கள் அமர்ந்தபடி அழுகிறார்கள். நான் நின்றபடி அழவைக்கிறேன். நாங்கள் அறைக் கைதிகள். பாடத்திட்டம், பாடம், தேர்வு, மதிப்பீடு, தேர்ச்சி, தோல்வி என்கிற மாபெரும் கற்களால் உருவாக்கப்பட்டதே பள்ளிச் சுவர். சர்க்கஸ் கூடாரத்தில் நான் ஒரு மாஸ்டர். கல்வி எனும் சாட்டையால் குழந்தைகளைக் கரணம்போடவைத்துக் கொண்டிருக்கும் கவிஞன் நான். எவ்வளவு கேவலம் இது?

ஆகஸ்ட் மாதம் 2000-ல் ழாக் ப்ரெவர், பிரெஞ்ச் தேசத்திலிருந்து, என் புத்தக அலமாரிக்கு வந்து சேர்ந்தார். அவருடனே வந்துவிட்டது லயர். எனக்குக் குருவாக அமைந்த இந்தக் கவிதையை வாசித்தபோது, நான் ஆசிரியனாக இல்லை.  நான் கவிஞனாக, ஒரு பள்ளி அறைக்குள் நின்றுகொண்டிருந்தபோது அறைக்கு வெளியே, வெட்டாற்றுக் கரையிலிருந்து வந்த ஒரு மயில் தன் தோகையை விரித்து ஆடும்போது, மாணவர்கள் வெளியே பார்க்கத் தொடங்கினர். யாவர் கண்ணிலும் மயில் ஆடத் தொடங்கியது. அதன் அகவல், பள்ளியைத் திரும்பவைத்தது. மழைக்காலம் என்பதால், மேகங்கள் திரண்டு வலசை போகின்றன. மயில் அதன் திசையை நோக்கித் தோகையை விரித்து ஆடும்போது, மாணவர்கள் ஆனந்தத்தில் கூக்குரலிட்டனர். அந்தக் கணம் என் வகுப்பறை சரிந்து, வயல்வெளியாகிவிட்டதை மாணவர்கள் மயிலை நோக்கி ஓடுவதைப் பார்க்க முடிந்தது. மனதில் ஓர் அமைதி.

ழாக் ப்ரெவரின் பல கவிதைகள் பள்ளியின் ஒழுங்கமைவைச் சர்வ நாசமாக்குகின்றன. பாடத்தை மிகுந்த தண்டனையாகவே பார்க்கிறார். நான் கொஞ்சம் ஒழுங்கமைவிலிருந்து, கோணல் மாணலாகிக்கொள்ள லயர் பறவை உதவிவருகிறது.  இப்போது கூடியமட்டிலும் வகுப்பறையை மரத்தடியில், காகங்களின் கரைதலுடன், மாடுகளின் அணிவகுப்புடன், சாணத்தின் நறுமணத்துடன் பாடம் நடத்துகிறேன். பாடம் நடத்திக்கொண்டு இருக்கும்போது ஒரு குருவியோ, ஒரு காகமோ, ஒரு பருந்தோ திரியும்போது, அதைக் காண்பதற்காகவே பாடத்தை நிறுத்திவிடுகிறேன். ழாக் ப்ரெவரின் ‘மக்குப் பையன்’ போன்று, ‘மக்கு ஆசிரியன்’ என நான் என்னை மாற்றிக்கொண்டு வருகிறேன்.

எனக்குப் பிடித்த ஐந்து கவிதைகள் குறித்து எழுதிவிட்டேன். எனக்குப் பிடித்த ஆறாவது கவிதையும் ஒன்று உண்டு. அதைப் பிறகு சொல்கிறேன். அதுவரை நான் சின்னஞ்சிறிய கணத்தில், லயர் பறவையாக இருக்கலாம்தானே!