Published:Updated:

அற்புத விளக்கு பூதத்தின் UNTOLD STORY!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அற்புத விளக்கு பூதத்தின் UNTOLD STORY!
அற்புத விளக்கு பூதத்தின் UNTOLD STORY!

எட்.விஸ்வநாத் பிரதாப் சிங், ஓவியங்கள்: ரமணன்

பிரீமியம் ஸ்டோரி

மிழரசி மூன்றாம் வகுப்பு பயிலும் மாணவி. சுட்டித்தனமும் உதவும் மனப்பான்மையும் மிக அதிகம்கொண்டவள். தமிழரசியின்அம்மாவுக்குக் கலைப்பொருள்கள் மற்றும் பழைமையான பொருள்களைச் சேகரிப்பதில் ஆர்வம் அதிகம். அன்று மாலை தமிழரசி பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தாள். மாலைச் சிற்றுண்டி சாப்பிடும்போது அலமாரியைக் கவனித்தாள். விநோத வடிவில் ஒரு விளக்கு இருந்தது.

அற்புத விளக்கு பூதத்தின் UNTOLD STORY!

‘‘அம்மா, அது என்ன? பார்க்க ரொம்ப பழசா இருக்கு’’ என்று கேட்டாள்.

‘‘காலையில்தான் வாங்கிட்டு வந்தேன் தமிழ். ரொம்ப பழசுன்னு கடைக்காரர் கம்மி விலைக்குக் கொடுத்தார்’’ என்றார் அம்மா.

தமிழரசிக்கு அந்த விளக்கின் மீது ஓர் ஈர்ப்பு ஏற்பட்டது. அதை எங்கோ பார்த்த ஞாபகம். அம்மா மளிகைச் சாமான்கள் வாங்குவதற்காகக் கடைக்குச் சென்றுவிட்டார். தமிழரசி அந்த விளக்குடன் தனது அறைக்குள் நுழைந்தாள். படுக்கையில் அமர்ந்து அந்த விளக்கைக் கையில் வைத்து சுற்றிச் சுற்றிப் பார்த்தாள். தன் பிஞ்சுக் கைகளால் விளக்கினைத் தேய்த்தாள். அப்படித் தேய்த்ததும், கண்களைக் கவரும் பல வண்ணப் புகை கிளம்பியது. தமிழரசி பயத்துடன் விளக்கைக் கீழே போட்டுவிட்டாள். அதேநேரம் புகைக்கு நடுவே ஒரு பூதம் வெளிப்பட்டது.

‘‘குட்டிப்பாப்பா... பயப்படாதே! நான்தான் அற்புத விளக்கு பூதம். இனி உனக்கு அடிமை. என்ன கேட்டாலும் நிறைவேற்றுவேன்’’ என்றது.

அற்புத விளக்கு பூதத்தின் UNTOLD STORY!

அற்புத விளக்குக் கதையைப் படித்தும் சினிமாவாகப் பார்த்தும் பரவசப்பட்டிருக்கும் தமிழரசி, அதெல்லாம் கதை என்றே நினைத்திருந்தாள். ஆனால், நிஜமாக பூதம் எதிரே நிற்பதைப் பார்த்து ஆச்சர்யமானாள். ‘‘ஆமா! என் அம்மா விளக்கை வாங்கிவந்து அலமாரியில் வைக்கிறதுக்கு முன்னாடி துடைச்சிருப்பாங்களே... அப்போ நீ வெளிப்படலையா?’’ என்று கேட்டாள்.

பூதம் சிரிப்புடன், ‘‘உனக்கு அற்புதமான அறிவாற்றல் தமிழ்! அந்தக் கடையில் என்னை ஜன்னலுக்குப் பக்கத்திலேயே வெச்சிருந்ததாலே, தூசு படிஞ்சு படிஞ்சு விளக்கு ரொம்ப அழுக்காகிடுச்சு. உன் அம்மா துடைச்சாலும், இன்னும் ரெண்டு தேய் தேய்ச்சால் வெளியே வரும் நேரத்தில் நிறுத்திட்டாங்க. இப்போ, உன் கையால் வெளியே வந்திருக்கேன். உனக்கு என்ன வேணும்னு சொல்லு’’ என்றது பூதம்.

‘‘உன்கிட்ட என்ன கேட்கறது... ம்..?’’ என்று உதட்டில் விரல்வைத்து யோசித்த தமிழரசி, ‘‘ஆங்... எனக்கு ஒரு கதை சொல்லேன்’’ என்றாள்.

‘‘கதையா..?’’ என்று தலையைச் சொறிந்தது பூதம்.

‘‘ஆமா... எனக்குக் கதை கேட்கறதுனா ரொம்ப பிடிக்கும். அம்மாகிட்ட, அப்பாகிட்ட, ஊரில் இருக்கிற பாட்டிகிட்ட, தாத்தாகிட்ட, பக்கத்து வீட்டு அத்தைகிட்ட, ஸ்கூல் டீச்சர்கிட்ட என எல்லோர்கிட்டயும் நிறைய கதைகள் கேட்டு முடிச்சுட்டேன். அவங்ககிட்ட இருந்த எல்லா கதைகளும் தீர்ந்துபோச்சு. இப்போவெல்லாம் என்னைப் பார்த்தாலே அவங்க ஓடி ஒளிஞ்சுக்கறாங்க. அதனால், எனக்கு ஒரு கதை சொல்லு’’ என்றாள் தமிழரசி.

‘‘இதுவரைக்கும் எல்லோரும் பொருள்தான் கேட்டிருக்காங்க. என் சக்தியால் வரவெச்சுக் கொடுத்திடுவேன். நீ கதையைக் கேட்கிறியே... அதுக்கு எங்கே போறது?’’ என்று யோசித்தது பூதம்.

‘‘புத்தியால் யோசிச்சுச் சொல்லு. அதுக்கு முன்னாடி நீ சாப்பிடு. ரொம்ப வருஷமா உள்ளே இருந்து பசிக்குமே உனக்கு? நான் போய் பழங்கள் எடுத்து வரேன். அதுக்குள்ளே கதையை யோசிச்சு வை’’ என்று சொல்லிவிட்டுச் சென்றாள் தமிழரசி.

என்ன கதை சொல்வது? கதை என்றால் என்ன? எப்படி ஆரம்பிக்க வேண்டும்? எப்போது முடிக்க வேண்டும்? இப்படிப் பல கேள்விகள் பூதத்தின் மனதில் எழுந்தது.

‘‘என்ன ரெடியா?’’ என்று கேட்டவாறு உள்ளே வந்தாள் தமிழரசி. அவள் கையில் ஒரு தட்டு. அதில் கொய்யாப்பழங்களை நறுக்கிக் கொண்டுவந்திருந்தாள். அதைப் பூதத்துக்குக் கொடுத்தாள். இதை எதிர்பார்க்காத பூதம், ‘‘இப்படியெல்லாம் எந்த மனிதரும் என்கிட்ட பாசம் காட்டினதில்லை தமிழ்’’ என்று கண் கலங்கியது.

‘‘ஐயய்யோ அழாதே... இவ்வளவு பெரிய உருவம் அழறதைப் பார்க்க நல்லாயில்லை. உனக்குக் கற்பனைக் கதை தெரியலைன்னா உன் கதையையே சொல்லு. அதாவது, எல்லோருக்கும் நீ விளக்கை விட்டு வெளியே வந்த பிறகு நடந்த கதைதான் தெரியும். அதுக்கு முன்னாடி நீ எங்கே இருந்தே? உன் குடும்பக் கதை என்ன? அதைச் சொல்லு’’ என்றாள் தமிழரசி.

‘‘அதுவும் சரிதான். என் கதையை நானே சொல்றேன். என் அம்மா, அப்பா எல்லாரும் பூத உலகத்துல சந்தோஷமா வாழ்ந்து வந்தோம். அந்தப் பூதக் கூட்டத்திலேயே எனக்குத்தான் மிகப்பெரிய சக்தி இருந்துச்சு. அது பிறவிலேயே எனக்குக் கிடைச்ச வரம். அதனால், பூதங்கள் உலகில் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல் கவனிப்பு. இது சில பூதங்களுக்குப் பொறாமையை உண்டாக்குச்சு. என்னை விளையாடப் போகலாம்னு சொல்லி ரொம்ப தூரத்துக்குக் கூட்டிட்டு வந்து ஒரு சூனியக்காரன்கிட்டே மாட்டிவிட்டுட்டாங்க.

அந்தச் சூனியக்காரனுக்கு இந்த உலகத்தையே அவனுக்கு அடிமையாக்கி ஆட்சி செய்யணும்னு ஆசை. என் சக்தியால் அதை நிறைவேற்றச் சொன்னான். நான் முடியவே முடியாதுன்னு சொல்லிட்டு, அவனுடைய மந்திரக்கோலை உடைச்சிட்டேன். அவன் கோபமாகி இந்த விளக்குக்குள்ளே அடைச்சிட்டான். அதிலிருந்து யார் விளக்கைத் தேய்ச்சாலும் வெளியே வந்து அவங்களுக்கு அடிமையா சொல்றதைச் செய்யறேன். இதுதான் என் கதை’’ என்றது பூதம்.

இதைக் கேட்ட தமிழரசி, ‘‘இப்படி மத்தவங்க ஆசையை நிறைவேற்றும் உன்னால், உன் விடுதலையையும் நிறைவேற்றிக்க முடியாதா?’’ எனக் கேட்டாள் தமிழரசி.

‘‘ம்ஹூம்... அடுத்தவங்க ஆசையை நிறைவேத்துற மாதிரிதான் என் சக்தி இருக்கு. அதைவெச்சு எனக்காக ஒரு மிட்டாயைக்கூட வரவெச்சுக்க முடியாது. எனக்கு என் அம்மா அப்பாவைப் பார்க்கணும்... பூதங்கள் உலகத்துக்குப் போகணும்னு ஆசை. ஆனால், அது நடக்காதே’’ என்று நொந்துகொண்டது பூதம்.

உடனே தமிழரசி, ‘‘கவலையே படாதே, நீ இப்பவே உன் அப்பா அம்மாவைப் பார்க்கலாம்’’ என்றாள்.

‘‘எப்படி?’’ என ஆவலுடன் கேட்டது பூதம்.

அற்புத விளக்கு பூதத்தின் UNTOLD STORY!

‘‘மத்தவங்க ஆசையை உன்னால் நிறைவேற்ற முடியும்தானே. அப்போ, என் ஆசையை நிறைவேற்று. அதாவது, உன் அப்பா, அம்மாவையும் உன் உலகத்தையும் நான் உன்னோடு சேர்ந்து பார்க்கணும். இதுதான் என் ஆசை’’ என்றாள் தமிழரசி.

‘‘ஆனால், அதில் ஒரு சிக்கல் இருக்கே. நீ அங்கே வந்துட்டால், அதாவது நான் பூதங்கள் உலகத்துக்குப் போய்ட்டால், உன்னைத் திருப்பி அனுப்ப முடியாதே! ஏன்னா, இங்கே இருக்கிற வரைக்கும்தான் என்னால் மத்தவங்க ஆசையை நிறைவேற்ற முடியும். அங்கே போய்ட்டால் என் சக்தி போய்டும். அப்படி ஒரு சாபத்தைக் கொடுத்துதான் அந்த சூனியக்காரன் என்னை விளக்கில் அடைச்சான்’’ என்றது பூதம்.

தமிழரசி சற்று நேரம் அமைதியாக இருந்தாள். பிறகு, ‘‘பரவாயில்லே. மத்தவங்க சந்தோஷத்துக்காக நீ எவ்வளவோ செஞ்சிருக்கே. உனக்காக நான் இதைச் செய்யறேன். என் அம்மா, அப்பா என்னை நினைச்சு அழுவாங்களேனு நினைக்கிறப்போதான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு. ஆனா, நம்ம மகள் நல்லது செஞ்சிருக்கான்னு கொஞ்ச நாளில் மனசைத் தேத்திக்குவாங்க. கொஞ்சம் இரு... அவங்களுக்கு ஒரு லெட்டர் எழுதிவெச்சிட்டு வரேன்’’ என்றாள் தமிழரசி.

அடுத்த ஐந்து நிமிடத்தில் கடிதத்தை எழுதிவிட்டு தமிழரசி தயாரானாள். ‘‘எதுக்கும் இன்னொரு முறை யோசிச்சுக்கோ தமிழ். என்னை மறுபடியும் விளக்கில் அடைச்சிடு. பல நூறு வருஷமா அப்பா, அம்மாவைப் பார்க்காமல் இருந்திட்டேன். இனியும் பார்க்காமல் இருந்திடறேன். அது எனக்குப் பெருசா தெரியாது’’ என்றது பூதம்.

‘‘இல்லே... இல்லே... ஒருத்தருக்கு ஒரு வாக்குக் கொடுத்தா... செய்யணும்னு நினைச்சா யோசிக்காமல் செஞ்சிடணும்னு அம்மா சொல்வாங்க. ஏன்னா, யோசிக்க ஆரம்பிச்சோம்னா மனசு மாறிடுமாம். அதனால், என் ஆசையை உடனே நிறைவேற்று’’ என்றாள் தமிழரசி.

பூதம் மந்திரத்தைச் சொல்ல, அடுத்த நொடி... இருவரும் அந்த இடத்தைவிட்டுக் காணாமல் போனார்கள். பூதங்கள் நிறைந்த ஓர் இடத்தில் இருந்தார்கள். அலாவுதீன் பூதத்தைப் பார்த்த அம்மா பூதமும் அப்பா பூதமும் மகிழ்ச்சியில் துள்ளின. மற்ற பூதங்களும் தூக்கிவைத்து சந்தோஷத்தில் பாடின. தமிழரசிக்கு நன்றி கூறின.

அற்புத விளக்கு பூதத்தின் UNTOLD STORY!

‘‘எல்லாத்துக்கும் காரணம் இந்தத் தமிழரசிதான். ஆனால், இவள்தான் இனிமேல் அந்த உலகத்துக்குப் போக முடியாது’’ என்று வருந்தியது அலாவுதீன் பூதம்.

‘‘ஏன் முடியாது, அசட்டுப் பயலே... சூனியக்காரன் உனக்குத்தானே சாபம் கொடுத்தான். எனக்கு சக்தி இருக்கே. என் சக்தியால் தமிழரசியை அவள் உலகத்துக்கு அனுப்பறேன்’’ என்றது அப்பா பூதம்.

தமிழரசிக்கும் மற்ற பூதங்களுக்கும் மகிழ்ச்சி. அப்பா பூதம் மந்திரத்தைச் சொல்ல, அடுத்த நொடி வீட்டில் இருந்தாள் தமிழரசி. கீழே விழுந்துகிடந்த விளக்கைக் கையில் எடுத்தாள். “இனிமே இது அற்புத விளக்கு இல்லை. தமிழரசியின் விளக்கு” என்று சொல்லி, புன்னகையுடன் அலமாரியில் வைத்தாள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு