Published:Updated:

வாசிப்பெனும் பேராயுதம்..! `மீசை’ நாவலுக்கு ஆதரவாக வைரலான குறுங்கதை

உன் எழுத்துத் திறமையின் முழு சக்திப் பிரயோகத்துடன் ஒரு காகிதத்தில் நெருப்பு என்று எழுதினால், அங்கு பொசுங்குகிற நெடி வரவேண்டும்.’

வாசிப்பெனும் பேராயுதம்..! `மீசை’ நாவலுக்கு ஆதரவாக வைரலான குறுங்கதை
வாசிப்பெனும் பேராயுதம்..! `மீசை’ நாவலுக்கு ஆதரவாக வைரலான குறுங்கதை

`எழுத்தாளர் தொடர்ந்து எழுத மறுக்கிறார். இதனால், இத்துடன் தொடர் நிறுத்தப்படுகிறது'. சமீபத்தில் `மாத்ரூமி' இதழில் வெளிவந்த இந்த வரிகள் கேரள வாசகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எழுத்தாளர் ஹரீஷ் எழுதிய `மீசை' தொடர்கதை நிறுத்தப்பட்டதற்கான அறிவிப்பு அது. இலக்கியச் செறிவு மிக்க மண்ணில் நாவல் ஒன்று அடித்துக் கொலை செய்யப்பட்டதாக மாத்ருபூமி ஆசிரியர் கூறினார்.  

அதன்பிறகு ஹரீஷ் தான் எழுதிய `மீசை' தொடரைப் புத்தகமாக வெளியிட்ட போதும் அதற்குக் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. ஹரீஸுக்கு எழுத்தாளர்களும், கேரள முதல்வரும்கூட ஆதரவுக்கரம் நீட்டினர். உச்ச நீதிமன்றம் அந்தப் புத்தகத்துக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டது. இத்தனை சம்பவத்துக்குப் பிறகும் அந்தப் புத்தகத்தை எரிப்பதற்காகவும் ஒரு கூட்டம் தவிக்கிறது. ஏன் இவ்வளவு வன்மம், எழுத்து அப்படி என்ன செய்யும். 

`உன் எழுத்துத் திறமையின் முழு சக்திப் பிரயோகத்துடன் ஒரு காகிதத்தில் நெருப்பு என்று எழுதினால், அங்கு பொசுங்குகிற நெடி வரவேண்டும்.’’ - லா.ச.ராமாமிர்தம். 

எழுத்துகள் மிகவும் வலிமை வாய்ந்தவை. அவை நம்மை அழ வைக்கும். மனிதர்களை நேசிக்க வைக்கும். தனிமையில் முறிந்து விழப்போகும் நம் மனதின் சிறகுகளை தாங்கிப்பிடித்துத் தேற்றும். வாழ்வின் நெடும்பயணத்துக்கான நம்பிக்கை வெளிச்சமாக நம்மோடு பயணிக்கும். உலகில் பல்வேறு மக்களின் விடுதலைக்கு எழுத்துகள் முக்கியப் பங்குவகித்துள்ளன. பல தலைவர்களும், அறிவியல் அறிஞர்களும் தாம் கண்டறிந்த கொள்ளைகளை, அறிவியல் கூறுகளை பல்லாயிரம் பக்கங்களில் எழுதி நிரப்பியுள்ளனர். அவை மனித குலத்துக்குப் பயனளிக்கும் பொருட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன.

கற்றலின் மூலம் அறிவார்ந்த சமூகமாக வளர எழுத்தாளர்களுக்கும், அவர்களின் எழுத்துகளுக்கும் பெரும் பங்குண்டு. எழுத்துகளின் இந்த பலத்தின் காரணமாக தொடர்ந்து எழுத்தாளர்கள் தாக்கப்படுகிறார்கள். பல எழுத்தாளர்களின் புத்தகங்கள் தடை செய்யப்பட்டிருக்கின்றன. பத்திரிகைகளில் எழுதியதற்காகப் பலர் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். கருத்து சார்ந்த விவாதங்களுக்குப் பதில், எதிர்கருத்து உடையவர்களைக் கொலை செய்வதும் தாக்குவதும் ஜனநாயக நாட்டில் ஆரோக்கியமானதல்ல. 

எழுத்தாளர் ஹரீஸுக்கு ஆதவாகவும், அவரது எதிர்ப்பாளர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் வி.ஷினிலால் ஒரு குறுங்கதை எழுதியுள்ளார். தனது நுட்பமான கதை சொல்லலின் வழியே எழுத்தாளருக்கு ஆதரவளித்துள்ளார். அந்தக் குறுங்கதை இதுதான். 

சிறுகதை: 
மீசை - வி.ஷினிலால். 

`பத்து மீசை வேணும்'

`பத்தா, எதுக்கு?'
 `எரிப்பதற்கு' வேட்டியை மடித்துக் கட்டி கண்களில் கோபம் கொந்தளிக்க நின்றான். 
`ஷெல்பில் இருக்கிறது,
எடுத்துக்குங்க', என்றார் புத்தக நிலைய ஊழியர். 
`இவ்வளவு புத்தகங்கள் வெச்சிருக்கீங்க, எப்படி தேடி எடுக்க'
`பொறுமையா தேடிப் பாருங்க' என்று சொல்லிவிட்டு ஊழியர் ஏற்கெனவே ஈடுபட்டிருந்த வேலையில் மூழ்கினார். 

நாலாபக்கமும் புத்தகங்களால் நிறைந்த அந்த நீளமான அறையில் பிரமிப்புடன் நின்ற அவனுக்கு வியர்க்கத் தொடங்கியது. வாழ்க்கையில் இதற்குமுன் ஒரு புத்தகக் கடைக்குள் நுழைந்ததில்லை. புதிய தாள்களின் வாசம் அங்கே நிறைந்திருந்தது. 

ஆயிரக்கணக்கான புத்தகங்களுக்கு இடையே இந்த `மீசை’யை எங்கு தேட. ஒரு மணி நேரத்துக்குள் மீசையை எரித்தாக வேண்டும். முதல் ஷெல்பிலிருந்து ஒரு புத்தகத்தை இழுத்தெடுத்தான். ஆஹா... குமாரனாசானின் பால(ர்)கவிதைகள். முதல் பக்கத்தைப் புரட்டியதும் அவன் திடீரென ஒரு சிறுவனாக மாறினான். 

`இந்த வல்லியிலிருந்து செம்மே 
பூக்கள் போகிறது பறந்து அம்மே'

அவன் ஒரு மழலைக்குரிய ஈணத்தில் வாசித்தான். 

மறுகணமே தான் யாரென்று சுதாரித்துக்கொண்டு சுற்றுமுற்றும் பார்த்து, தன்னை யாரும் கவனிக்கவில்லை என்பதை உறுதிசெய்தான். அந்தப் புத்தகத்தை கையிலேயே வைத்துக்கொண்டான், மகளுக்குக் கொடுக்கலாம். மறுபடியும் புத்தகங்களுக்கிடையே தேடினான் மீசையை. கையில் கிடைத்த புத்தகத்தின் அட்டையைப் பார்த்தான்

`ஓடையில் இருந்து', பப்புவின் கதை. அப்பாவின் அலமாரியில் இருந்த புத்தகம். அப்பா அதை வாசித்து விட்டு அழுதது அவனின் நினைவுக்கு வந்தது. இதை இப்போதாவது வாசிக்கணும், அப்பா அழுததன் காரணத்தைத் தெரிஞ்சுக்கணும். தான் இதுவரையிலும் ஒரு புத்தகம் கூட வாசித்ததில்லை என்பதை அப்போதுதான் உணர்ந்தான். அந்தப் புத்தகத்தையும் கையில் வைத்துக் கொண்டான். 

என்ன மாதிரி உலகமிது. அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. 
மனிதர்களை சிரிக்கவும் அழவும் செய்கின்ற புத்தகங்கள். சிரிக்கவும் அழவும் செய்கிறதென்றால் புத்தகமும் மனிதன்தானே. அப்ப அதற்குக் உயிருண்டுமா, இருக்குமென்றுதான் தோணுது. மறுபடியும் தேடினான். இந்தமுறை கிடைத்தது ஒரு `கேரளப் பாடநூல்' தொகுப்பு. 

பாடம் ஒன்று 

`அம்மாவிடம் சொல்ல'.
அம்மாதான் என்னைக் குளிப்பாட்ட வேண்டும்,
பொட்டு வைத்து விட வேண்டும்.....

அந்த நொடியில் அவன் ஒரு சிறுவனாக மாறினான். அவனுக்கு நிறைய கதைகள் கேட்க வேண்டும் என்று தோன்றியது. புத்தக நிலையத்துக்குள் மிகுந்த ஆர்வத்துடன் அங்குமிங்கும் ஓடி புத்தகங்களைத் தேர்வு செய்து பைக்குள் போட்டான்.

பஷீர், எம்.டி., எஸ்.கெ., தகழி, காரூர்.....

பில் போடும்போது ஊழியர் கேட்டார்... `மீசை கிடைக்கலியா?'.
`இல்லை'
`இன்று பத்தாயிரம் காப்பிகள்தான் வந்தன. நாளைக்கு ஒரு லட்சம் வருது. நாளைக்கு வந்திருங்க. கிடைக்கும்'. 
`காலையிலேயே வந்திடுறேன்'. 
`காலையே மீசை வர வாய்ப்பு குறைவு'.

`பரவாயில்லை'. 
`அப்ப உங்களுக்கு எரிப்பதற்கு மீசை?'
`அது பரவாயில்லை. எங்க தலைவருதான் பெரிய மீசை வச்சிருக்காரே. அதை வச்சு சமாளிச்சுக்கிறோம்'.


எளியவர்களைத் தொடர்ச்சியாகத் தாக்கும், அடக்குமுறையை மட்டுமே தீர்வாகக் கொண்டு, மீசை முறுக்க நினைப்பவர்களின் மீசைகள் நிச்சயம் காலத்தால் நறுக்கப்படும்!