Published:Updated:

வாய்க்கால் - வண்ணதாசன்

வாய்க்கால் - வண்ணதாசன்
பிரீமியம் ஸ்டோரி
வாய்க்கால் - வண்ணதாசன்

ஓவியங்கள்: டிராட்ஸ்கி மருது

வாய்க்கால் - வண்ணதாசன்

ஓவியங்கள்: டிராட்ஸ்கி மருது

Published:Updated:
வாய்க்கால் - வண்ணதாசன்
பிரீமியம் ஸ்டோரி
வாய்க்கால் - வண்ணதாசன்

ண்ணீர் கலங்காமல் தெளிந்து ஓடிக்கொண்டிருந்தது. அதிகமாக இன்றைக்கு வெயிலும் இல்லை. சுத்தமாக ஆனி முடிந்து ஆடி மாதம் பிறந்துவிட்டது. போன மாதம் பூராவும் மழையும் இல்லை; சாரலும் இல்லை. காற்று மட்டும் அடிக்கவா செய்தது? இன்றைக்கு என்னவோ மூடாக்குப் போட்டதுபோல இருக்கிறது. காற்றும் இருக்கிறது. எதிர்த்த அரச மரத்தடியில், இடுப்பில் சுற்றினவாக்கில் பெட்டிக் கடைக்காரி ராஜாமணி காயப்போட்டு நிற்கிற மஞ்சள் பூப்போட்ட சேலை லேசான படபடப்புடன் சுவர் மாதிரி. எப்போதும் ஒரு கிழட்டுச் சடைநாயைக் கூட்டிக்கொண்டு வருவாள். முதலில் அதைக் குளிப்பாட்டிவிட்டபிறகுதான் அவளுக்கு மற்றது எல்லாம். மற்றது என்பதில், உச்சிப்படை வெயிலாகிவிட்டால்கூட நுரைக்கிற வாயுடன் பிரஷ் வைத்துப் பல் தேய்ப்பது, யார் இருந்தாலும் போனாலும் மேல் படியில் காலைத் தூக்கிவைத்துக்கொண்டு பாதம் வரை மஞ்சள் தேய்ப்பதும் முக்கியமானது. ரெங்கனுக்கு என்னவோ ராஜாமணியைப் பார்க்கப் பிடிப்பது இல்லை. தண்ணீர் திறந்துவிட்டிருக்கிறார்கள். பாளையங்கால் மடையடியில் பயிர் செய்கிறவர்கள் ஏற்பாடாக இருக்கும். வாழைத்தோப்பு ஒன்றுபோல குலைக்கு வருகிற நேரம். பருவம் தப்பிப் பருவம் தப்பித்தான் எல்லா விவசாயமும் நடக்கிறது.     

வாய்க்கால் - வண்ணதாசன்

சிலுசிலு என்கிற காற்றுக்கும் தண்ணீர் ஓட்டத்துக்கும் நன்றாக இருந்தது. மூடு மூடாக அமலை நகர்ந்துகொண்டு போனது. ரெங்கனின் தொழுவில் பசுதான் நிற்கிறது. தண்டியல் தெருக்காரர்கள் எருமைகளுக்கு நாச்சியார் குளத்தில் மூடைமூடையாக அமலையைத் தீவனத்திற்கு அரித்து எடுத்துக்கொண்டு போவார்கள். ரெங்கனுக்கு அனவிரதம் ஞாபகத்துக்கு வந்தாள். அவளை நாச்சியார் குளத்தில் அல்ல, வெளித்தெப்பக் குளத்தில்தான் முதலில் பார்த்தான். மட்டுக்கு மிச்சமாக அமலைக் குழையை அள்ளிக்கட்டிக்கொண்டு யாராவது சாக்கைத் தலையில் தூக்கிவிட வர மாட்டார்களா என்று திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டு நின்றாள்.

ரெங்கன் பி.வி.எஸ் வைத்தியச் சாலைக்கு வந்திருந்தான். சைக்கிள் பின்சீட்டில் அவன் வீட்டுக்காரியை உட்கார்த்திவைத்து சுளுக்குத் தடவ வந்த இடத்தில் கூட்டம் ஜாஸ்தியாக இருந்தது. அவளை அங்கே இருக்கச் சொல்லிவிட்டு வெளியே வந்திருந்த நேரம் அது. இவனை அனவிரதம் கூப்பிட எல்லாம் இல்லை. தானாகத்தான் போய், “என்ன, தலையில தூக்கிவைக்க ஆள் தேடுதியாக்கும்?” என்று சொல்லிக்கொண்டே தம் பிடித்துத் தூக்கிவைத்தான். எதிர்பார்த்ததைவிடக் கனம் இல்லை. இரண்டு கையையும்  தூக்கித் தாங்கிக்கொண்டு குனிந்த சிரிப்பில் வெட்கம் இருந்தது. அப்படிக் கையை உசத்தியதற்கு மட்டுமில்லை. சற்றுச் சிரமப்பட்டுதான் அவள் சேலைத் தலைப்பால் மூடிக்கொள்ள வேண்டியது இருந்தது. ‘பெருமாக்காவுக்கு என்ன செய்து?’ என்று கேட்டுக்கொண்டே படியேறினாள். பெருமாளைத் தெரிந்திருந்ததில் ரெங்கனுக்கு ஆச்சர்யம். “அவளை எப்படித் தெரியும்?” என்று கேட்கையில் கடைசி மேல்படியில் அவள் லம்பி, இவன் முதுகில் கையை ஊன்றி நிதானித்து மேலே ஏறினாள்.  “பாப்புலர் டாக்கீஸ்ல தரை டிக்கட் கிழிக்கிறவர் சம்சாரம்னு சொன்னால் தெரியும்” என்றாள்.

“பேரு ஊருல்லாம் கிடையாதாக்கும்” என்று கேட்டவனிடம், தெப்பக்குளம் பக்கம் கையைக் காட்டி, “தொரட்டியை எடுக்கவிட்டுப் போச்சு” என்றாள். ரெங்கனுக்கு அவள் சிரிப்பதில் நெறுநெறு என்று மணலில் நடப்பதுபோல இருந்தது. ஒன்றும் சொல்லாமல் படி இறங்கிப்போய், மூங்கில் பட்டையில் செய்திருந்த துரட்டியை அதன் வீசு கயிற்றோடு சுற்றி எடுத்துவந்து, சாக்கோடு சாக்காக இருந்த இடதுகையில் செருகிவிட்டான். “சரிதானா?” என்றான்.

 எங்கு முதலில் இருந்தே அவன் கவனம் போய்க்கொண்டு இருந்ததோ, இப்போதும் அப்படியே பார்த்தான். “பேரை வெச்சி என்ன பண்ணப் போறிய?” என்று நகர்ந்தவள், “அவகிட்டேயே கேட்டுக்கிடுங்க, சொல்லுவா” என்று நகர்ந்தாள். ஈரச் சாக்கிலிருந்து சொட்டிய தண்ணீர் தரையில் புழுதி உண்ணிபோல உருண்டது.

“வீட்டுக்குப்போய் வென்னி வெச்சு ஊத்தணும்” என்று முக்கிக்கொண்டு கேரியலில் ஏறி உட்கார்ந்தவளிடம் உடனே ரெங்கன்,  “பெருமா... உன்னைத் தெரியும்னு இங்க ஒருத்தி எங்கிட்ட சொல்லிட்டுப் போறா?” என்று நடந்ததைச் சொன்னான். “செத்த மூதி. உங்கிட்டேயும் ஆரம்பிச்சுட்டாளா அவ வழக்கமான கதையை?” என்றாள். பெருமாள் ஒன்றும் ஒளிக்கவில்லை. அவள் எப்படி இருந்தாள் என்பதைச் சொல்லும்போது ரெங்கன் குரலில் ஒரு சரசம் இருந்தது. பெருமாள் சிரித்தபடியே கேட்டுக்கொண்டு வந்தவள், “கூடிய சீக்கிரம் அவ மாப்பிளை கையால வாரியப் பூசை கிடைக்கப்போகுதது  மட்டும் நிச்சயம்” என்று சொல்லிவிட்டு அனவிரதம் என்ற பெயரையும் சொன்னாள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வாய்க்கால் - வண்ணதாசன்“ஆம்பிளைப் பேரு மாதிரி இருக்கு?” என்றவனிடம் “இவ்வளவு நேரம் அப்படி இருக்கு இப்படி இருக்குனு சொன்னது எல்லாம் யாருக்கு இருந்துது? ஆம்பிளைக்கா, பொம்பிளைக்கா?” என்று ரெங்கனின் முதுகில் ஓங்கி அடித்தாள். வீட்டுக்கு வருகிறது வரை சைக்கிளை ஓட்டிக்கொண்டு வந்த தூரமே அன்றைக்குத் தெரியவில்லை.

ரெங்கன் ரொம்ப நேரமாகத் தண்ணீரையே பார்த்துக்கொண்டிருந்தான். அனேகமாகக் குப்பம் குப்பமாகப் போன அமலையின் நகர்வு நின்றுபோயிருந்தது. மத்தியில் வந்தது எல்லாம் பச்சைக் குழையும் நீலப் பூவுமாகத் தன்னைத் திருப்பியபடி வாய்க்கால் ஓரமாகச் சேர்ந்து கரையிட்டிருந்தது.

மறுபடியும் ரெங்கன் முன்னால், தெளிவாகக் கண்ணாடி மாதிரி ஓட ஆரம்பித்திருந்த தண்ணீரை ரெங்கன் இரண்டு கைகளிலும் அள்ளி முகர்ந்து பார்த்தான். பாசிபோல ஒரு வாடையை எதிர்பார்த்திருந்தவனுக்கு, களிமண் வாடைபோல ஒன்று தட்டுப்பட்டது. இன்னும் கைகளில் தண்ணீரை ஏந்தியபடியே இருந்த அவன், மறுபடியும் அதை ஓடு தண்ணீரோடு விட்டுவிட்டு, தண்ணீருக்குள் இருந்து தண்ணீரைத் தோண்டி ஊற்றெடுப்பதுபோல இரண்டு கைகளிலும் அள்ளினான். உற்றுப் பார்த்தான், தேங்காய் நாருடன் இளநீர்போல இருந்த அதைக் கண்களின் குழியின் மேல் வழியும்படித் தாரையாக விட்டான். சம்பந்தமே இல்லாமல் இப்போது பிரசவ வீட்டுத் தூப்புக் குழியின் பக்கத்தில் இருக்கிற உணர்வில் ரெங்கன், இறந்துபோய்ப் பிறந்த அந்தப் பெண்குழந்தையை நினைத்தான். கருகருத்த தலைமுடியும் நீள நீள விரல்களுமாக இருந்த அந்தச் சிசு இப்போது அவன் எதிரில் தண்ணீரில் மிதந்து செல்வது போலத் தண்ணீரைப் பார்த்துக் கும்பிட்டான்.

நிழலுக்காகத் தந்தி போஸ்ட்டில் கட்டிப்போட்டுவிட்டு வந்திருந்த கன்றுக்குட்டி கூப்பிட்டது. குரலில் ஒரு பதற்றம் இருந்தது. கயிற்றை இழுத்துத் தந்திக்கம்பத்தை இசகுபிசகாகச் சுற்றிவந்தது. ரெங்கன் வாய்க்காலுக்குள் நின்றபடியே “ஏய், என்ன?” என்றான். அப்படிக் கேட்கும்போதே, மேட்டுத்தெருவிலிருந்து திரும்பித் தொட்டிப்பாலம் வழியாக யானை வந்துகொண்டிருக்கும் மணிச்சத்தம் கேட்க ஆரம்பித்தது. “இதானா விஷயம்?” என்று  ரெங்கன் இரண்டு மூன்று வீச்சாக நீந்திக் கரையில் ஏறினான். யானை முன்னைவிட நன்றாகத் தெரிந்தது. மணி முன்னைவிடப் பக்கத்தில் கேட்டது.

கயிற்றை அவிழ்ப்பதற்கு முன்பே இழுத்துத் தள்ளியது, போன ஈத்துக் கன்றுக்குட்டி. ஒரு வயதுக்கு மேலே இருக்கும். ரெங்கன் நல்ல ஊட்டமாக வளர்த்திருந்தான். ஒன்றேகால் வயதுக்குரிய களை வர ஆரம்பித்திருந்தது. பசுவின் சாந்தமான பார்வை வந்துவிட்டது. அகலக்கண்களின் நீலம் மாறிக் கன்றுக்குட்டியின் தோற்றம் விலகியிருப்பது ரெங்கனுக்குத் தெரிந்தது. அடிவயிற்றில் இளஞ்சிவப்புக் காம்புகள் மடு கட்ட ஆரம்பித்திருப்பதில் அவனுக்கு சந்தோஷம். அதனுடைய அம்மைக்கும் அம்மை காலத்திலிருந்து மேலத் தொழுவில் பிறந்தவைதான் இது உட்பட. சங்கரக்கோனார் எருதுப்பறையில்தான் அடங்கவிட்டுச் சினைப்படுகிறது,

கயிறு விறைப்பின் பின்னால் இழுபடுகிற மாதிரி ரெங்கன் ஓடினான். அது நேரே எதிர்ப்பக்கம் லாடக்காரர் வீட்டுப் பூவரசமரம் பக்கம் ஓடி, குளம்புகளுக்குக் கீழ் உள்ள தரை உத்தரவு கொடுத்ததுபோல, கால்களை அழுத்தமாக ஊன்றி அங்கேயே நின்றது. விடைத்து உயர்ந்த காதுகளுடன் அது காற்றை முகர்ந்து லேசாக வாலை உயர்த்திச் சொட்டுவிட்டது. யானைச் சத்தம் தெருவில் ரெங்கனின் விலாப்பக்கம் வரும்போது, கல்லால் செய்த பில்லை நிறக் கன்றுபோல அப்படியே நின்றது. முதுகில் நடுச்சுழி மட்டும் சிலிர்த்தது.

ரெங்கன் மிருதுவாகக் கன்றுக்குட்டியைத் தடவிக்கொடுத்துக்கொண்டே ‘பா... பா’ என்று உதடு மடக்கிச் சாந்தப்படுத்தினான். யானை தாண்டிப் போகும்போது யானையின் வாசமும் தாண்டிப் போய்க்கொண்டிருந்தது. அவனுக்கு அதைப் பிடிக்கும். காந்திமதி என்று அதன் பெயரை மனதுக்குள் ஒரு நெருக்கமான பெண்ணை அழைப்பதுபோல அழைத்துக்கொண்டான். எத்தனையோ தடவை அவன் இப்படி அதன் பெயரை மனதுக்குள் சொல்லியிருப்பதுண்டு. ஒரு தடவைகூட சத்தமாக உரக்கச் சொன்னது இல்லை. தும்பிக்கை வளைத்து அவனை அது கட்டிப்பிடித்திருப்பதுபோலவும், பச்சரிசியும் வெல்லமும் தென்னை ஓலையுமான பல் விளக்காத கொச்சையடிக்கும் அதனுடைய மூச்சு மிதமான இச்சையுடன் அவன் மேல் படர்வது போலவுமே இருக்கும் அந்தக் கற்பனையை அவன் விரும்புவான்.

ஒரு தடவை, மூசா பாய் கடையில் வாடகை சைக்கிள் எடுத்துக்கொண்டு, யானையின் பின்னாலேயே பாட்டப்பத்து வாய்க்கால் வரை போய், ஆனை குளிப்பாட்டுவதைப் பார்த்துக்கொண்டே இருந்திருக்கிறான். மாவுத்தன் சொல்லச் சொல்லச் சரிவில் இறங்கி, தோதுவான ஆழம் வந்ததும், அது பக்கவாட்டில் சாய்ந்து படுத்துக்கொள்ளும்விதம் ரெங்கனுக்கு ரொம்பப் பிடிக்கும். தன் அத்தனை பெரிய உடம்பை ஒரு சாம்பல் பூப்போலத் தண்ணீருக்குள் முங்கியும் முங்காமலும் வைத்தபடி, தும்பிக்கையை அதற்குச் சம்பந்தமில்லாத இன்னோர் உறுப்புபோல வீசியிருப்பதை ஒருவிதக் கிளர்ச்சியோடு பார்த்தபடி ரெங்கன் இருப்பான். சின்னப் பையன்கள் யாராவது வேடிக்கை பார்க்க அல்லது அந்த நேரத்தில் குளிக்க வந்தால், “ஆனை குளிப்பாட்டுதாங்க தெரியலையா. போங்க அந்தப் பக்கம்” என்று விரட்டுவான். ஒரு தடாகத்தில் பாறை மாதிரி யானை தண்ணீருக்குள் கிடப்பதைத் தூரத்திலிருந்து பார்க்க அவனுக்குப் பிடித்திருந்தது. பெருமாளைக்கூட ஒரு தடவை சைக்கிளில் ஏற்றிக்கொண்டு பாட்டப்பத்துக்கு வந்து, ஆனை குளிக்கும் இடத்தில் குளிக்கச் சொல்லியிருக்கிறான். அவளுக்கு முதுகு தேய்த்துவிட ஆரம்பிக்கையில் அவள் ரெங்கனைப் பார்த்து, “இன்னைக்கு என்ன இது புதுக்கிறுக்கா இருக்கு?” என்று சிரித்திருக்கிறாள். அதற்காக ரெங்கனின் கையை அவள் தள்ளிவிட எல்லாம் செய்யவில்லை.   

வாய்க்கால் - வண்ணதாசன்

ரெங்கன் கன்றுக்குட்டியை உடம்போடு சேர்த்து அணைத்தபடியே யானை போவதைப் பார்த்துக்கொண்டே இருந்தான். இந்த வாய்க்கால் மேலும் இருந்த ஒடுக்கமான பாலத்தில் அது சன்னமாக வாலை வீசிப்போய்க்கொண்டிருந்த பின் தோற்றமும், அமுங்கி அமுங்கி உயரும் யானைப் பாகன் தலையும் மறையும்வரை அவனிடம் அசைவே இல்லை. ராஜாமணியின் சடை நாய் பயத்தில் குரைக்கிற சத்தம் கேட்டதும் ரெங்கனுக்குச் சிரிப்பு வந்தது. ராஜாமணிக்குப் பயமே கிடையாது. அவள் உதட்டின் மேல் விரலை வைத்துப் பொத்திக்கொண்டு நிற்பாள். தும்பிக்கையால் தொடுகிறபோது மேலும் இரண்டு தோளையும் ஒடுக்கிக் குனிந்துகொள்வாள். ரெங்கன் ஏற்கெனவே ஒருதடவை அப்படிப் பார்த்திருக்கிறான். “அப்படியே தும்பிக்கையில சுருட்டி நச்சுனு அவளைத் தரையில அடி” என்றுகூட அவன் அப்போது முனகியிருக்கிறான்.

யானை இந்தச் சமயத்தில் வரும் என்று ரெங்கன் எதிர்பார்க்கவில்லை. அவனுக்குச் சந்தோஷமாக இருந்தது. “வா...வா...வா... குளிப்போம். நேரமாயிட்டுது.” கன்றுக்குட்டியை வாய்க்கால் பக்கம் இழுத்தான். யானை போய்விட்டதை உணர்ந்த நிம்மதி அதனிடமும் இருந்தது. அதிக மறுப்பு எதுவும் இல்லாமல், ஒரே ஒரு வாய்த் தண்ணீர் குடிப்பதுபோலக் குனிந்து முகர்ந்து பார்த்துவிட்டு வாய்க்காலுக்குள் முன்கால்களை வைத்தது.

ஓடுகிற தண்ணீரை அதற்கும் பிடித்திருந்தது. தலையை மாத்திரம் உயர்த்திக்கொண்டு அது தன்னை மிதக்கவிட்டுப் பாய்ந்தது. தளர்த்தினாற்போலக் கயிற்றைப் பிடித்துக்கொண்டு அது போகிற இடத்துக்கு ரெங்கனும், அவன் போகிற ஆழத்துக்கு அதுவுமாக வாய்க்காலுக்குள் ஒரு வட்டத்தை வரைந்துகொண்டார்கள். வட்டம் பெரிய வட்டங்களாகி மறைந்துகொண்டிருந்தது. ரெங்கன் விரலைக் கொடுத்துப் பல் துலக்கிக்கொண்டான். திரும்பத் திரும்ப வாய்க் கொப்பளித்தான். பீச்சித் துப்பினான். கன்றுக்குட்டியின் உயர்த்தின தலையில் ஒரு பீச்சலின் வளைவு விழுந்ததும் அதனிடம், “தெரியாமப் பட்டுட்டுது” என்று மன்னிப்புக் கேட்டான். கரைக்குக் கொண்டுபோய்ச் சுரைக்குடுக்கையை வைத்துத் தேய்த்தான். அடிவயிற்றுப் பக்கம் இரண்டு கைகளாலும் கோதிக் கோதி ஊற்றிக் கழுவிவிட்டான். அதற்குப் புரியும் என்பதுபோல, “இன்னும் நாலே நாலு ரவுண்டு. அவ்வளவுதான். போதும். வீட்டுக்குப் போக வேண்டியதுதான்” என்று பேசினான். 

கன்றுக்குட்டி வெயிலில் நிற்பதைப் பார்த்துக்கொண்டே எதிர்த்த கரை வரை போய் நீந்திவிட்டுத் திரும்பினான். பெண்கள் படித்துறையில் சீவலப்பேரியாள் நின்றுகொண்டிருந்தாள். “பெருமா நல்லா இருக்காளா?” என்று அங்கே இருந்தே சத்தமாகக் கேட்டாள். “ரெண்டு பொண்ணும் ஒரு ஆணுமா?” என்று கேட்டதற்கு, ரெங்கன் “ஆமா அத்தை” என்று சத்தம் கொடுத்தான். இடையில் ஒரு பிள்ளை தவறிப் போனதைச் சொல்லவில்லை. அவனுக்கு யாரிடமும் பேச்சுக் கொடுக்காமல் இப்படியே தண்ணீரோடு தண்ணீராகக் கலந்துவிட வேண்டும் என்று இருந்தது.

தண்ணீரில் இப்போது அரச இலைகள் மிதந்துவர ஆரம்பித்திருந்தன. கூட்டமாக இல்லாமல் ஒற்றை ஒற்றையாக மிகுந்த அமைதியாக மிதந்து செல்லும் அந்தப் பழுத்த இலைகளை அவனுக்குப் பிடித்திருந்தது. அதிக நேரம் குளித்து வெளிறிப்போயிருந்த கைகளைக் கூப்பி அவன் பக்கத்தில் வந்து தாண்டிக் கொண்டிருக்கும் ஒரு மஞ்சள் அரசிலையைக் கும்பிட்டான். பெருமாளிடம் அதைக் கொடுக்க வேண்டும் என்று கரையில் ஏறினான்.

வாய்க்கால் - வண்ணதாசன்தூரத்தில் சீவலப்பேரியாள் நீச்சலடித்துக் குளித்துக்கொண்டிருந்தாள். அந்த அத்தைக்கு அறுபது வயதிற்கு மேல் இருக்கும். தொப்பு தொப்பென்று சத்தமே வராது அவள் நீச்சல் அடிக்கும்போது. விரால் மீன் மாதிரித் தண்ணீரை வகிர்ந்து செல்வாள். தண்ணீரை உழுகிறமாதிரி அவளைச் சுற்றித் தண்ணீர் மடிந்துவிழும். இன்றைக்கும் அப்படித்தான் இருந்தது.

பெண்கள் குளிக்கிற இடத்தின் பக்கம்தான் நிறைய அல்லி பூத்துக் கிடக்கும். எல்லாம் செவ்வல்லி. சீவலப்பேரியாள் அந்த அல்லிக்குட்டை வரை நீந்தி நீந்திப் போய் வந்துகொண்டிருந்தாள். ரெங்கனுக்கு என்னவோ அப்படித் தோன்றிற்று. இங்கே இருந்தே சத்தம் கொடுத்தான். “அத்தே. எனக்கு ரெண்டு பூவு வேணும்” சீவலப்பேரியாள் அங்கிருந்தே சிரித்தாள். “என்னத்துக்கு ரெண்டு? மாலை மாத்திக்கிடப் போறேளா மகளும் மருமகனும்” என்று பதில் சத்தம் கொடுத்தாள். ‘இரு, இரு, பறித்து வருகிறேன்’ என்பதுபோலக் கையை அசைத்துச் சம்மதம் சொன்னாள்.

ரெங்கன் துவைத்துப் பிழிந்து உடுத்தின சாரத்தோடு கரையில் நின்றான். ஈரத்துண்டை முறுக்கி பெல்ட்போல இடுப்பில் கட்டியிருந்தான். கன்றுக்குட்டி அனேகமாக வெயிலில் காய்ந்திருந்தது. ஈர முடியெல்லாம் தன் முடியாக உடம்பில் பதிய ஆரம்பித்திருந்தது. அதற்குப் பசி வந்திருந்தது. நாக்கை நீட்டி நீட்டி வாய்க்குமேல் தடவிக்கொண்டிருந்தது. ஒரு பொன்தகடுபோல, ரெங்கனின் கையில் அவன் எடுத்துவைத்திருந்த அரசிலை மினுங்கியது.

தூரத்தில் சீவலப்பேரியாள் படியேறி வந்துகொண்டிருந்தாள். கொஞ்சநேரம் படித்துறையில் இருந்த இசக்கியம்மனைக் கும்பிட்டபடி நின்றாள். ஈரச் சேலையோடு இவனைப் பார்க்க வந்தாள். கையில் இரண்டு அல்ல, மூன்று அல்லிப் பூக்கள் தண்டோடு இருந்தன. மெலிந்து திடமாக இருந்த கரண்டைக் கால்களிலும் பாதங்களிலும் சீலையிலிருந்து தண்ணீர் வடிந்து மண்ணில் கோலம் போட்டது.

சீவலப்பேரியாள் பக்கத்தில் வந்ததும்தான் தெரிந்தது. தண்டும் பூவுமாக இரண்டு இருக்க, ஒன்றை ஒடித்து ஒடித்து நடுவில் செவ்வல்லி தொங்க மாலை செய்திருந்தாள். வெயிலும் ஈரமுமாக ஒரு பொம்மை மாதிரி வரும் அவளைப் பார்த்து ரெங்கன் கும்பிட்டான். அவளும் பதிலுக்குக் கும்பிட்டுக்கொண்டே வந்தாள்.

“மகராசனா இரு அய்யா” என்று ஒன்றன் பின் ஒன்றாக இரண்டு அல்லிகளை ரெங்கன் கையில் கொடுத்தாள். வழவழவென்று குளிர்ந்து கிடக்கும் அவற்றைக் கையில் வாங்கும்போது ரெங்கன், “சாமி” என்று புலம்பினான். அவனுக்குத் தொண்டை அடைத்தது. சீவலப்பேரியாள் இப்போது உச்சிச் சூரியனைப் பார்த்துக் கும்பிட்டிருந்தாள். அவள் கையில் இருந்த அல்லித்தண்டு மாலையை வெயிலுக்குப் படைப்பதுபோல உயர்த்திக் காட்டினாள்.

குனிந்து கன்றுக்குட்டியின் முகத்தைத் தொட்டு முத்தி, “தொழு நிறைஞ்சு, மடி நிறைஞ்சு, குடம் நிறைஞ்சு பெருகணும் என் ராசாத்தி” என்று முதுகு தடவி வாலுக்குக் கீழ் விரல்கள் குவித்து ஒத்தினாள். அதன் கழுத்தில் அந்த மாலையை இட்டாள். மணி கட்டினதுபோல, கழுத்துக்கு அடியில் அல்லிப்பூ தொங்கும்படி சரிசெய்தாள். ரெங்கன் பார்க்கும்போது, சீவலப் பேரியாளின் ஈரத்தலையிலிருந்து வழிகிற தண்ணீர், அவள் காரை எலும்புக் குழியில் விழுந்து, முழுவதும் திறந்திருந்த வலதுபக்கக் காம்பில் இறங்கிக் கொண்டிருந்தது.

பாதத்தின் மேல் பெருகும் ஈரத்தைக் குனிந்து கன்றுக்குட்டி நக்கத் தொடங்கும் போது சீவலப்பேரியாள் கண்களை மூடிக் கும்பிட்டுக்கொண்டிருந்தாள்.