Published:Updated:

“இலக்கியம் என்பது காலத்தின்மீது எறிகிற கல்!” - சு.வெங்கடேசன்

“இலக்கியம் என்பது காலத்தின்மீது எறிகிற கல்!” - சு.வெங்கடேசன்
பிரீமியம் ஸ்டோரி
“இலக்கியம் என்பது காலத்தின்மீது எறிகிற கல்!” - சு.வெங்கடேசன்

சந்திப்பு: வெய்யில் - படங்கள்: க.பாலாஜி - வீ.சதிஷ்குமார்

“இலக்கியம் என்பது காலத்தின்மீது எறிகிற கல்!” - சு.வெங்கடேசன்

சந்திப்பு: வெய்யில் - படங்கள்: க.பாலாஜி - வீ.சதிஷ்குமார்

Published:Updated:
“இலக்கியம் என்பது காலத்தின்மீது எறிகிற கல்!” - சு.வெங்கடேசன்
பிரீமியம் ஸ்டோரி
“இலக்கியம் என்பது காலத்தின்மீது எறிகிற கல்!” - சு.வெங்கடேசன்

‘காவல்கோட்டம்’ நாவலுக்காக ‘சாகித்ய அகாடமி’ விருது பெற்றவர். தனது வரலாற்றுத் தேடல்களால், தமிழகத்தின் பெரும்பாலான கிராமங்களில், அதன் தெருக்களில் ஓய்வற்றுச் சுற்றித் திரிபவர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க மாநிலப் பொதுச்செயலாளர். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியர். ‘ஆனந்த விகடன்’ இதழில் வெளியாகி வரும் ‘வேள்பாரி’ தொடர் வழியாகப் பரவலான வாசகப் பரப்பில் கவனம் பெற்றிருப்பவர். மழையும் வெயிலும் மாறி மாறி வீசியடித்த ஒரு நாளில் மதுரையில் நிகழ்ந்தது சந்திப்பு. தென்பரங்குன்றம், கீழக்குயில்குடி, உசிலம்பட்டி, கருமாத்தூர், தொட்டப்ப நாயக்கனூர் எனப் பயணித்தபடியே ஆங்காங்கே வீற்றிருக்கும் நாட்டார் தெய்வக் கோயில் மரங்களின் நிழலில் உரையாடியதிலிருந்து...

“இலக்கியம் என்பது காலத்தின்மீது எறிகிற கல்!” - சு.வெங்கடேசன்

“உங்களது குடும்பப் பின்னணி குறித்துச் சொல்லுங்கள்...”

“நூறு ஆண்டுகளுக்கு முன் தேனி மாவட்டத்தின் வறண்ட பகுதியைச் சேர்ந்த ராசகோபாலன்பட்டி எனும் சிற்றூரிலிருந்து, தன் குடும்பத்துடன் பஞ்சம் பிழைக்க மதுரைக்கு வந்து சேர்ந்தவர் என் தாத்தா. தென்தமிழகத்தின் மிகப்பெரிய பஞ்சாலையான ஹார்வி மில், மதுரையில் உருவாக்கப்பட்டிருந்த நேரம் அது. ஆண்களும் பெண்களுமாக சுமார் 30,000 தொழிலாளர்கள் அந்த ஆலையில் வந்து இணைந்தார்கள். போன நூற்றாண்டின் தொடக்கத்தில் தென்மாவட்டத்தில் நடந்த மிகப் பெரிய இடப்பெயர்வு அது. மானாவாரி விவசாயிகளாகவும் விவசாயக் கூலிகளாகவும் காலங்காலமாயிருந்த மக்கள் கூட்டம், ஆலைத் தொழிலாளிகளாக மாறிய பண்பாட்டுச் சுழற்சி நிகழ்ந்த காலம் அது. அந்தக் காலத்தில்தான் விவசாயத் தொப்புள்கொடியை அறுத்துவிட்டு, ஆலையின் கரிமூட்டப் புகைக்குள் என் தாத்தாவும் பாட்டியும் நுழைந்துள்ளனர்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“இலக்கியம் என்பது காலத்தின்மீது எறிகிற கல்!” - சு.வெங்கடேசன்

அவ்வாலையில் 1940-ம் ஆண்டின் தொடக்கத்தில் பெரும் வேலைநிறுத்தப் போராட்டம் ஒன்று நடைபெற்றது. அதன் விளைவாக, ஆலைத் தொழிலாளிகளுக்கு ஒரு குடியிருப்பு உருவாக்கப்பட்டது. ஹார்விபட்டி என்று பெயரிடப்பட்ட அந்தத் தொழிலாளர் குடியிருப்பில்தான் என் தந்தை பிறந்தார். அவர் கல்லூரி வரை படித்தார். மில் வேலை பார்க்க விருப்பமின்றி விவசாயத்தில் ஈடுபடத் தொடங்கினார். காலம் மீண்டும் சுழன்றுவந்து மண்ணோடு எங்கள் குடும்பத்தைப் பிணைத்தது. மில் வேலையிலிருந்து ஓய்வு பெற்ற தாத்தாவும் பாட்டியும் மீண்டும் விவசாய நிலம் நோக்கிப்  போய் வேலையைத் தொடங்கினர். கமலைச் சக்கரங்கள் உருளும் சத்தம் கேட்கத் தொடங்கியது.

அடுத்த தலைமுறையைச் சேர்ந்த நாங்கள் தொழிலாளிகளின் குடியிருப்பில், விவசாயக் குடும்பத்தின் குழந்தைகளாகப் பிறந்தோம். ஆலை நிர்வாகம் உருவாக்கிய ஹார்விபட்டி என்ற குடியிருப்பு மிக முக்கியமானது. அந்தக் குடியிருப்பில் மிகச் சிறந்த பூங்காவும் பள்ளிக்கூடமும் உண்டு. நூலகம், ரேடியோ அறை, குடிநீர்த் தொட்டி, பாதாளச் சாக்கடை என மிக நவீன வடிவமைப்போடு, 1945-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட குடியிருப்பு. ஆனால், உள்ளே ஒரு கோயில்கூட அமைக்கப் படவில்லை. எந்தவொரு தெருவும் எந்தவொரு சாதிக்கான தெருவாகவும் இல்லை. தொழிலாளர் அடையாளம் மட்டுமே மையப்படுத்தப்பட்ட குடியிருப்பு. ஆண்டு முழுவதும் தொழிலாளர் குடியிருப்பில் இருந்துவிட்டு, விடுமுறை நாள்களில் பூர்வீகக் கிராமத்துக்குப் போனால், முற்றிலுமாக அங்கு வேறொரு சூழல் இருக்கும். கோயிலை மையப்படுத்தியே கட்டமைக்கப்பட்ட கிராமம். சாதிவாரியான தெருக்கள். ஒவ்வொரு தெரு முக்கிற்கும் ஒரு சாமி. ஆனால், எல்லா தெருக்களிலும் நடக்கமுடியாதபடி நடுவில் ஓடிக்கொண்டிருக்கும் சாக்கடை. எந்த வீட்டிலும் கழிப்பறை வசதி இல்லை. ஆணும் பெண்ணும் இரவானதும் ஊருக்கு ஒதுக்குப்புறமாகத்தான் போக வேண்டும். முக்கியமாக, இவ்வளவு சாமிகள் இருக்கும் அந்த ஊரில்தான் இரவு எந்தப் பக்கம் போனாலும் ‘இருட்டில் போகாதே. அங்கே அந்தப் பேய் இருக்கும். இங்கு முனி இருக்கும். இந்தக் கெணத்துப் பக்கம் அழுகிற சத்தம் கேட்டுக்கிட்டே இருக்கும்’ என்று திரும்பும் திசையெல்லாம் பேயின் அடையாளங்கள் நிரம்பி வழிந்தன. ஆனால், ஒரு கோயில்கூட இல்லாத எங்களது குடியிருப்பில் எந்தப் பக்கமும் பேய் இருப்பதைப் பற்றிய எந்தக் கதையையும் நான் கேள்விப்பட்டதில்லை. ‘பேயை விரட்ட ஒரே வழி, சாமியை விரட்டுவது
தானா?’ என்று பின்னால் எனக்குள் எழுந்த கேள்விக்கு, இந்த எனது வாழ்க்கைப் பின்னணியே முதற் காரணம். இப்படியாக இரண்டுவிதமான சூழல்களில், முற்றிலும் இருவேறு பண்பாட்டுப் பின்னணியில்தான் எனது இளமைக் காலம் அமைந்தது.   

“இலக்கியம் என்பது காலத்தின்மீது எறிகிற கல்!” - சு.வெங்கடேசன்

இதுபோலவே, இரு வேறுபட்ட ஆளுமைகள் எனது இளமைக்காலத்தில் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தினார்கள். அவர்கள் என் இரு பாட்டிமார்கள். ஒருவர், எந்நேரமும் ஆண்டாள் பாசுரங்களை முணுமுணுத்தபடியிருக்கும் வைணவப் பின்னணியைக்கொண்டவர். மற்றொருவர், சிறுவயதிலேயே கணவனை இழந்து, தனியாகவே நின்று விவசாயம் செய்து நான்கு பிள்ளைகளை வளர்த்து எடுத்தவர். கடவுளுக்கு நேரெதிராகவும் ஆணுக்கு நேரெதிராகவும் நின்று பேசும் ஆறடி ஆளுமை அவர். ‘சாமி, பூதம் எல்லாத்தையும் புல்லைப் புடுங்கிப் போடுற மாதிரி புடுங்கிப் போடணும்டா’ என்பார். இவர்கள் இருவரின் சொற்களும் கனவுகளுமே எனது அடியுரம் என நினைக்கிறேன்.”

“இலக்கியத்துக்கும் உங்களுக்குமான தொடர்பு எப்படி ஏற்பட்டது?”

“8-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை எனது பள்ளியின் தமிழாசிரியராக இருந்தவர் புலவர் இரா.இளங்குமரனார். 1,000 புத்தகங்களுக்கும் மேல் எழுதியிருப்பார் என்று நினைக்கிறேன். அவரைப் போன்ற பேரறிஞர்கள் எல்லாம் பள்ளி ஆசிரியராக வேலை பார்த்த பொற்காலம் ஒன்று தமிழகத்திலே இருந்தது. அவருடைய தமிழ் வகுப்பைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம். அவரைப்பற்றி நான் கேட்ட அந்த ஆச்சர்யமான முதல் செய்தி இன்று வரை ஆச்சர்யமாகவே நீடிக்கிறது. 

அந்தக் காலத்தில் அதிகம் படித்தால், கண் கெட்டுப்போகும் என்ற நம்பிக்கை கிராமப்புறத்தில் ஆழமாக இருந்தது. எனவே, ஓரளவுக்கு மேல் படிக்கவிட மாட்டார்கள். இளங்குமரனார் வீட்டிலும் அதையே சொல்லியிருக்கிறார்கள். ஒருவேளை நிறையப் படித்தால் கண்பார்வை பாதித்து எதிர்காலத்தில் எழுத முடியாமல் போய்விட்டால் என்ன செய்வது என யோசித்தவர், கண்ணே தெரியாமல் போய்விட்டாலும் கூட, தான் எழுத வேண்டும் என்பதற்காக, இரவில் விளக்கை அணைத்துவிட்டு நோட்டுப் புத்தகத்தில் எழுதிப் பழகியிருக்கிறார். இன்றைக்கும்கூட வெளிச்சத்தில் எழுதும்போது எவ்வளவு வேகமும் நேர்த்தியுமாக எழுத்து வருமோ, அதே வேகத்துடனும் நேர்த்தியுடனும் இருட்டிலும் அவரால் எழுத முடியும்.

தமிழ் மீதான, எழுத்து மீதான இந்த ஆர்வமும் ஈடுபாடும் என்னுள் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தின. தனித் தமிழ் இயக்கத்தின் அடையாளமாக இன்றுவரை தீவிரமாக இயங்கிக்கொண்டு வருகிறார். காக்கைப்பாடினியத்தைத் தமிழுக்கு மீட்டுருவாக்கம் செய்துகொடுத்தவர். எனது மொழி சார்ந்த திறப்பின் வாசல் அவர் உச்சரித்த வார்த்தைகள்தான்.”

“நவீன இலக்கியத்துக்குள் எப்படி வந்து சேர்ந்தீர்கள்?”

“பள்ளி வாழ்க்கை முடிவடைந்த நேரத்தில் திருப்பரங்குன்றத்தில் இலக்கியச் செயற்பாட்டில் தீவிரமாக இருந்த தமிழ்க்கூத்தனாரின் நட்பு கிடைத்தது. அவர் ஒரு வியத்தகு ஆளுமை. ஹார்வி மில் பஞ்சாலையில் வேலை பார்த்துக்கொண்டே புலவர் பட்டமும் அஞ்சல்வழிக் கல்வியில் பயின்று தமிழில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். செவ்வியல் இலக்கியத்தின் பேராசானான இரா.இளங்குமரனாரின் எழுத்துகளை ஆய்வுசெய்தார். மொழிப்போராளியான இளங்குமரனார், பொதுவுடைமைப் போராளியான தமிழ்க்கூத்தன் என்னும் இரண்டு சுவாரஸ்யமான முரண்களுக்குள் போய் என்னைச் செருகியது. 

“இலக்கியம் என்பது காலத்தின்மீது எறிகிற கல்!” - சு.வெங்கடேசன்

 ‘காலுக்குச் செருப்பில்லை; கால்வயிற்றுக் கூழுமில்லை; பாழுக்கு உழைத்தோமடா தோழா, பசையற்றுப் போனோமடா’ என்ற ஜீவாவின் துடிப்புமிக்க ஆலைத் தமிழோடு தன்னை அடையாளப் படுத்திக்கொண்ட தமிழ்க்கூத்தன், நிகண்டுகளின் சொல் ஆராய்ச்சிக்குள் போய்ச் சிக்கினார். இளங்குமரனாரின் வீட்டிலிருந்து விழி பிதுங்கி வெளியில் வருவார். மொழி என்னவெல்லாம் செய்யும் என்பதைத் தமிழ்க்கூத்தனின் வழியில் நான் பார்த்தேன். ஒரு வகையில் இருவரும் எனது ஆசான்கள். ஆனால், இரு எல்லைகளின் அடையாளங்கள். 40,000 நூல்கள் இருந்த இளங்குமரனாரின் நூலகம், மொழியின் மீதான வியப்பை ஆசையோடு அண்ணாந்து பார்க்கவைத்தது. நானூறுக்கும் குறைவான நூல்கள் இருந்த தமிழ்க்கூத்தனின் நூலகம் எனது நூலை எழுதச் சொல்லி தனக்குள்வைத்து அழகு பார்த்தது. பாண்டித்தியத்தின் செருக்கையும் பஞ்சாலைத் திமிரையும் தமிழாய் உணரும் வாய்ப்புக் கிட்டியது.

இதன் தொடர்சியாகத்தான் கவிஞர் மீராவின் அறிமுகம் கிடைத்தது. எழுதும் இளைஞர்களை வாஞ்சையோடு அள்ளி அணைத்துக்கொள்ளும் அபூர்வ மனிதர். அவரது அன்னம் பதிப்பகத்தின் புத்தகக் கடை மதுரையில் தொடங்கப்பட்டது. இளங்குமரனார் தொடங்கி தமிழ்க்கூத்தன் வழியாக மீராவை அடைந்தபோது, ஆத்மாநாமோடு அன்னத்தின் கதவு திறந்தது. ஜி.நாகராஜனைப் படித்து முடிக்க, கோரிப்பாளையம் சந்துக்குள் விரட்டியது புத்தகம். கனவில் ‘நித்தியகன்னி’யையும் காற்றில் ‘நீலகண்டப் பறவை’யையும் தேடித் திரியும் வாழ்வு தொடங்கியது.”

“தொடக்கத்தில் என்ன வாசித்தீர்கள்?”


“பள்ளிக்காலத்தில் புதுக்கவிதை வாசிப்புத் தொடங்கியது. பன்னிரண்டாம் வகுப்பு விடுமுறையில் எனது முதல் கவிதை  நூலான ‘ஓட்டையிடாத புல்லாங்குழல்’ வெளிவந்தது. கவிதையே எனது உலகம் என வாசிப்பும் எழுத்தும் தொடர்ந்தன. பின்னர் சங்க இலக்கியம், சித்தர் இலக்கியம் என வாசிப்பின் பரப்பு விரிந்தது. இரண்டு ஆசான்கள் அதற்குக் காரணம். வணிகவியல் படித்தாலும் கல்லூரியின் முதலாமாண்டில் மாமூலனாரைப் பற்றி 120 பக்க ஆய்வுக் கட்டுரை எழுதும் அளவிற்கு, கண்மூடித் தனமான துணிச்சலோடு சங்க இலக்கியப் பரப்பில் அலைந்து கொண்டிருந்தேன். பின்னர், அன்னத்தின் தூவி பட்டு வாசிப்பின் திசைவழி மாறியது. அதுநாள்வரை நாவல் இலக்கியத்தின் மீதான ஈர்ப்பு உருவாகவில்லை. அதனை உடைத்தவை, சோவியத் நாவல்கள். மார்க்ஸிம் கார்க்கியின் ‘தாய்’, ‘வீரம் விளைந்தது’, ‘ஜமீலா’, ‘கண்தெரியாத இசைஞன்’, ‘மண்கட்டியைக் காற்றடித்துப் போகாது’, ‘டான் நதி அமைதியாக ஓடுகிறது’, ‘புத்துயிர்ப்பு’, ‘அன்னா கரீனினா’, ‘போரும் வாழ்வும்’ என வாசிப்புத் தொடர்ந்தது. ‘மதகுரு’, ‘அவமானச் சின்னம்’, ‘நிலவளம்’, ‘தாசியும் தவசியும்’, ‘அன்புவழி’, ‘தேவமலர்’ என மொழிபெயர்ப்பு நாவல்களின் பேருலகுக்குள் நுழைந்து தமிழ் நாவல்களுக்குள் வந்துசேர்ந்தேன். ‘ஒரு புளியமரத்தின் கதை’, ‘கோபல்ல கிராமம்’,   ‘மோகமுள்’, ‘ஜே.ஜே சில குறிப்புகள்’, ‘தாகம்’, ‘தேனீர்’, ‘பிறகு’, ‘கரிசல்’, ‘வானம் வசப்படும்’ எனத் தொடர்ந்தது வாசிப்பு.”   

“இலக்கியம் என்பது காலத்தின்மீது எறிகிற கல்!” - சு.வெங்கடேசன்

“கவிதையில் எழுத்துலகப் பயணத்தைத் தொடங்கிய நீங்கள், ஏன் இப்போதெல்லாம் கவிதைகள் எழுதுவதில்லை?”

“1998-ம் ஆண்டு எனது நான்காவது கவிதைத் தொகுப்பான ‘ஆதிப்புதிர்’ வெளிவந்தது. அடுத்த ஆண்டு முதல்  ‘காவல்கோட்ட’த்துக்கான பணியில் இறங்கினேன். அதனை எழுதி முடிக்கும் வரை வேறு படைப்புகளில் ஈடுபடக் கூடாது என முடிவுசெய்தேன். ‘காவல்கோட்டம்’ பத்தாண்டு காலப் பரப்பை எடுத்துக்கொண்டது. தன் முடிவு, கவிதையிலிருந்து தள்ளிக்கொண்டு வந்துவிட்டது என நினைக்கிறேன். ஆனாலும், ஏராளமான கவித்துவமான தருணங்களை, கவிதைக்கான கட்டமைப்பை நாவல் பரப்பில் தொடர்ந்து முயற்சி செய்துவருகிறேன். கவிதையில் செய்துகொண்ட பயிற்சியும், உழைப்பும், நுட்பமும் நாவல் எழுதுவதில் பேருதவி புரிகின்றன. வானத்தை ‘நீலக்கடல்’ என்று எத்தனை தடவை சொல்வது, அதையே ‘காற்றின் கடல்’ என்று சொன்னால், அந்தப் படிமமே மாறிவிடுகிறது அல்லவா? சொற்களும் படிமங்களும் உவமைகளும்தான் உரைநடையாளனின் கைக்கருவிகள். இக்கருவிகளைக் கவிதைகளே கூர்முனையாக்குகின்றன.” 

“இலக்கிய மாணவராக இருந்த நீங்கள், இடதுசாரிக் கருத்தியலுக்குள் எப்படி வந்தீர்கள்?”


 “இயல்பாகவே தொழிலாளர் குடியிருப்பின் சூழல், செங்கொடியின் வாசத்தை எளிதில் நுகரச் செய்யும். எனது கல்லூரிக் காலத்தில் திருப்பரங்குன்றத்தில் த.மு.எ.ச தீவிரமாக இயங்கிவந்தது. அதன் வழியாக மார்க்ஸிய இலக்கியங்கள், கோட்பாடுகள் அறிமுகமாகின. நுகர்வுக் கலாசாரத்தின் பிடி இன்றைக்குப்போல கழுத்தை இறுக்கிப் பிடிக்கும் காலமல்ல அது. அந்தக் காலத்தில் வாசகசாலைகளும் படிப்பகங்களும் உயிர்ப்போடு செயல்பட்டு வந்தன. கம்யூனிஸ்ட்டுகள் நடத்திய உடற்பயிற்சிக் கூடத்தில் காங்கிரஸ் காரர்களும்,  காங்கிரஸ்காரர்கள் நடத்திய சிலம்பாட்டப் பள்ளியில் கம்யூனிஸ்ட்டுகளும் பயிற்சி எடுத்துக்கொண்டு, தி.மு.க. படிப்பகத்தில் இருந்த கிணற்றில் குளித்துவிட்டு வீடு திரும்புதல் அன்றாடம் நடந்தன.    

“இலக்கியம் என்பது காலத்தின்மீது எறிகிற கல்!” - சு.வெங்கடேசன்

மாற்று அரசியல் தரப்போடு விவாதிக்கும் பொதுமொழி ஒன்று எளிய மனிதர்களால் பக்குவப்படுத்தப்பட்டிருந்த காலம் அது. தன்னை முன்னிறுத்தாமல் தனது தரப்பை முன்னிறுத்தும் உரையாடல்கள் நாள்தோறும் நிகழ்ந்துகொண்டிருந்தன. அந்த உரையாடல்களும் பொதுவெளியில் நடந்த அரசியல் போராட்டங்களும் மார்க்ஸியத்தை நோக்கி என்னை நகர்த்தின.”

“ ‘காவல்கோட்டம்’ உருவான புள்ளி எது?”

“கலாசாரத்தின் அரசியல்’ என்று ஒரு புத்தகம் எழுதினேன். குற்றப்பரம்பரைக்கும் கல்விக்கும் இருக்கின்ற உறவைப் பற்றிய புத்தகம் அது. அப்புத்தகத்திற்கான குறிப்புகளை சென்னை ஆவணக் காப்பகத்தில் தேடியபோது, அரசாணை ஒன்று கிடைத்தது. ‘கிராமக் காவல் முறை இப்போதும் உயிரோடிருக்கிறதா? எந்த அளவிற்கு அது  வலுவானதாக /நிறுவனத்தன்மையோடு இருக்கிறது?’ என்று, சென்னை மாகாணம் முழுக்க இருந்த கலெக்டர்களிடமும்  எஸ்.பி-க்களிடமும் அறிக்கை கேட்கிறார் சென்னை கவர்னர். அதற்கு, மதுரை எஸ்.பி. ஒரு ரிப்போர்ட் கொடுக்கிறார், ‘நான் இந்த ஊருக்கு நான்கு மாதங்களுக்கு முன்புதான் மாற்றலாகி வந்தேன். நான் வந்து பொறுப்பேற்றதும் ஒரு காவல்காரன் வந்து என்னிடம் காவல் பணம் கேட்டான். எனக்குப் புரியவில்லை. பணியாளர்களிடம் கேட்டேன்; ‘காவல் பணம் கொடுத்துவிட்டால், நமக்கு எதுவும் தொந்தரவு இருக்காது’ என்று சொன்னார்கள். எனவே, நான் சொல்வதற்கு வெட்கப்படுகிறேன், அவனுக்குக் காவல் பணம் கொடுத்தேன். இன்று வரை எனக்கு எந்தத் தொந்தரவும் இல்லை. எனவே, காவல் முறை இன்னும் இருக்கிறது’ என்று ஓர் அறிக்கை கொடுக்கிறார்.

‘வரி கொடுக்க மாட்டேன்’ என்று சொன்னதால், கட்டபொம்மனைத் தூக்கில் போடுகிறான் பிரிட்டிஷ்காரன். தூக்கில் போட்டு 100 வருடங்கள் கழித்து உள்ளூர் காவல்காரனுக்கு அதே பிரிட்டிஷ் எஸ்.பி. காவல் வரி கட்டிக்கொண்டிருந்திருக்கிறான். இது என்ன மாதிரியான வரலாற்று இடம்? விடுதலைப் போராட்டம், அரசர்களின் போர்க்களத்தோடும் பாளையக்காரர்களின் எழுச்சியோடும் முடிந்துவிடவில்லை. அதற்கு அடுத்த தட்டிலிருந்த மக்கள் குழுவுக்கும் காலனிய ஆட்சிக்கும் நடந்த மோதல்கள் எத்தனையெத்தனையோ! இனக்குழுக்கள், பழங்குடி மக்கள், உள்ளூர் சமூகங்கள் எனச் சமூகத்தின் பல தரப்பினரும் பிரிட்டிஷ் அரசோடு மோதியிருக்கிறார்கள். எவ்வளவு பெரிய வரலாறு இது. இதனை ஏன் எழுதக் கூடாது என்று எழுந்த கேள்வியே ‘காவல்கோட்ட’த்தின் தொடக்கப் புள்ளி.”

“வரலாற்றுப் புனைவுகள் அதிகமாக எழுதப்படுவதற்கான காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள்?”


“வரலாற்றின் சுவை மனிதனுக்கு ஒருபோதும் தீரப்போவதே இல்லை. வரலாற்றை நோக்கி அவனது கனவுகளும் கற்பனைகளும் ஊறிக்கொண்டேதான் இருக்கின்றன. அதுவும் தமிழ்ச் சமூகம் போன்ற நீண்ட வரலாற்று வேர்களைக்கொண்ட சமூகத்தில் ஆராய, கண்டறிய, எழுத எவ்வளவோ இருக்கின்றன. வரலாற்றுப் புனைவுகள் இன்னும் அதிகமாக வந்துகொண்டேதான் இருக்கப்போகின்றன. குழந்தைகள் ஏன் ஒளிந்து விளையாட ஆசைப்படுகின்றனர்? அவர்களின் உளவியல் என்ன? மறைவதும், மறைந்ததைக் கண்டடைவதும்தான் ஆதிமனிதன் எண்ணிலடங்கா ஆண்டுகள் செய்த அன்றாடச் செயல். இத்தனை லட்சம் ஆண்டுகளான பின்னும் வரலாற்றின் அந்த ஆரம்பகட்டத்தைக்கூட நம்மால் துண்டித்துக்கொள்ள முடியவில்லை. அன்றிலிருந்து இன்றுவரை நீடிக்கும் வரலாற்றில் ஒளிந்துகொள்ளவும் கண்டறியவும் எவ்வளவோ இருக்கின்றன. இந்த அனுபவத்தை எப்படி இழப்பான் மனிதன்? வரலாறு அவனை எப்போதும் அழைத்துக்கொண்டே இருக்கும். அவனைத் துன்பப்படுத்தும், விடுதலை செய்யும், அணைத்துக்கொள்ளும். ஏனென்றால், அது மனிதனின் உறைவிடம்.”   

“இலக்கியம் என்பது காலத்தின்மீது எறிகிற கல்!” - சு.வெங்கடேசன்

“இந்திய, தமிழ் வரலாறு மிகக்குறைவாகவே எழுத்தில் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. அப்படியிருக்க, ஆய்வுகளின் வழியாகத் திரட்டப்படும் தகவல்களைக்கொண்டு வரலாற்றுப் பதிவுகளை எழுதுவதைத் தவிர்த்து, அவற்றைப் புனைவாக எழுதுவது ஏன்?”

“ஓர் எழுத்தாளனின் வேலை வரலாற்றாளனின் வேலை அல்ல, அதனைவிட வலிமை வாய்ந்தது. இலக்கியத்தின் வீச்சும் வலிமையும் வேறு எந்த வடிவத்துடனும் ஒப்பிட முடியாதது. இந்திய-பாகிஸ்தான் பிரிவினை என்னும் கொடுந்துயரைப் புரிந்துகொள்ள, ஆயிரம் பக்க வரலாற்று நூலைவிட மண்ட்டோவின் பத்து பக்கத்துக் கதை பேருதவி செய்யும். வரலாறு எப்போதுமே சார்பானது. அதன் காரணமாகவே அதனால் முழுமையை எட்ட முடியாது. புனைவின் வழியாகத்தான் வரலாற்றின் முழுமையை ஓரளவாவது வரைந்துகாட்ட முடியும். அதனால்தான், வரலாற்றுக்குப் பெரும்பங்களிப்பாளனாக எழுத்தாளன் திகழ்கிறான்.”

“வரலாறு சார்புடையது என்று சொன்னீர்கள். இலக்கியமும் சார்புடையதுதான் அல்லவா?”

 “இலக்கியமும் எழுத்தாளரின் சார்புடையதுதான். ஆனால், அடிப்படையில் இலக்கியத்தின் நோக்கமும் வரலாற்றின் நோக்கமும் வெவ்வேறானவை. வரலாறு என்பது, தான் நம்புவதை உண்மை என்று நிறுவப் பார்க்கும். இலக்கியமோ, நிறுவப்பட்ட உண்மைகளை உடைத்துப் பார்க்கும். வரலாறு, காலத்தில் கரைந்து போகாமல் நிலைகொள்ள வேண்டும் என உருவாக்கப்படுகிற கல். இலக்கியம் என்பது காலத்தின் மீது எறியப்படுகிற கல். கல்லெறியக் காலமும் கலங்கும்; கலங்கியிருக்கிறது.”    

“இலக்கியம் என்பது காலத்தின்மீது எறிகிற கல்!” - சு.வெங்கடேசன்

“ஓர்  எழுத்தாளன்  எந்த அளவிற்கு வரலாற்றைப் பற்றி நிற்க வேண்டும்?”

“வரலாற்றுப் புனைவுகள் ஆழமான ஆய்வினைக்கொண்டதாக இருக்க வேண்டும். எழுத்தாளன் ஆய்வாளனாக இருக்க வேண்டும் என்பது அடிப்படை. நூற்றுக்கணக்கான தகவல்களின் வழிதான் வாழ்வின் ஒவ்வொரு பகுதியையும் அவன் செதுக்கியெடுக்க முடியும். கற்பனை வழியாக மட்டுமே வெகுதொலைவிற்குப் பறந்து பயணிக்க முடியாது. அவனுக்குக் காலூன்றித் தாவிச் செல்ல ஆங்காங்கே வரலாற்று உண்மைகள் வேண்டும். உண்மைகளைக் கொண்டுதான் புனைவைச் சமைக்க முடியும். ஏனென்றால், புனைவு என்பது உண்மையின் ஒளிபொருந்திய பகுதி அல்லது உக்கிரமேறிய பகுதி.”

“மையநீரோட்ட (Mainstream) வரலாறு  ஒருபக்கம் என்றால் நாட்டார், மக்கள் வரலாறு மற்றொரு பக்கம். இவை இரண்டுக்கும் எவ்வளவு  முரண்பாடுள்ளது?”

“இரண்டுமே முற்றிலும் எதிரெதிரானவை. ஆள்வோரின் வரலாறும் ஆளப்படுகிறவர்களின் வரலாறும் எப்படி ஒன்றாக இருக்க முடியும். அரசியல், பண்பாடு, சமயம் என அனைத்துத் தளங்களிலும் இந்த இரண்டும் நேரெதிரானவை. மதுரையில் திருமலை மன்னன் அரண்மனை கட்டினான். அது கட்டடக் கலையின் சாதனைகளில் ஒன்று என்றும், அதை வடிவமைத்துக் கொடுத்தவன் இத்தாலியைச் சேர்ந்த கட்டடக் கலைஞன் என்றும் ஆள்வோர்களின் வரலாறு சொல்லும். “என்ன கட்டி என்னப்பா? தலவாசல்ல தண்ணி போறாப்புலதான் அரண்மனையக் கட்டி வெச்சிருக்கான்” என்று ஆளப்பட்ட மக்களின் வரலாறு சொல்லும்.

ஆள்வோர்களின் சமய வரலாறு, மாற்று மதத்தினரைக் கழுவேற்றிக் கொன்று, அதனைச் சிற்பத்திலும் சித்திரத்திலும் வரைந்துவைத்தது மட்டுமின்றி, கழுவேற்றுத் திருவிழாவாக இன்றைக்கு வரை பெருமையுடன் கொண்டாடும். ஆளப்பட்ட மக்களின் வரலாறோ, கழுவிலேற்றிக் கொல்லப்பட்டவனைக் கழுவன் என்று இன்றும் வணங்கி நினைவுகொள்ளும். இரண்டும் இரண்டு  முரண்பட்டப் பண்பாடுகளின் அடையாளங்கள்.”  

“இலக்கியம் என்பது காலத்தின்மீது எறிகிற கல்!” - சு.வெங்கடேசன்

“வாய்மொழி வரலாறு, மக்களின் நினைவாற்றைலை மட்டுமே அடித்தளமாகக் கொண்டது. அது எந்த அளவு நம்பகத்தன்மை வாய்ந்தது?”

“நினைவுதான் ஆயுதம் என்கிறபோது, மக்கள் ஒருபோதும் நினைவை உதிரவிட மாட்டார்கள். நூற்றாண்டு நினைவுகள் தனிமனித சேகரத்தில் எவ்வளவுத் துல்லியமாக இருக்கின்றன என்பதற்கு இரண்டு உதாரணங்களைச் சொல்கிறேன்.

யூசுப்கான் என்ற மருதநாயகம் தூக்கிலிட்டுக் கொல்லப்பட்ட இடத்தைப் பார்க்க, திருநெல்வேலியிலிருந்து மதுரை வருகிறார் கால்டுவெல். அந்த இடத்தில் ஓர் இஸ்லாமியப் பெரியவர் உட்காந்திருக்கிறார். அவரிடம் பேச்சு கொடுத்து, ‘யூசுப்கான் பற்றி ஏதாவது தெரியுமா?’ என்று கேட்கிறார். அதற்கு அந்தப் பெரியவர், யூசுப்கான் எப்படி ஆட்சி புரிந்தான்; போர் எப்படி நடத்தினான்; அந்தப் போரில் வந்த குழப்பம் என்ன; அந்தக் குழப்பத்திற்குப் பிறகு அவன் எப்படிக் காட்டிக்கொடுக்கப் பட்டான்; எந்த நேரத்தில் எப்படிக் கைது செய்யப்பட்டான்; எப்படிக் கொல்லப்பட்டான் என்று இடைவெளி இல்லாத வரலாற்றுத் தகவல்களைச் சொல்கிறார். கால்டுவெல் ஆடிப்போகிறார்.  ஏனென்றால், அந்தச் சம்பவம் நடந்து 100 வருடங்களாகிறது. ‘சென்னையில் அரசுத் தலைமையகத்திலிருந்து நான் படித்துச் சேகரித்துவந்த அனைத்துக் குறிப்புகளையும் படிப்பறிவற்ற அந்தப் பெரியவர் ஒன்றுவிடாமல் சொன்னார்’ என்று எழுதியிருக்கிறார் கால்டுவெல்.

எனது அனுபவம் ஒன்று. 1905-ல் ‘பண்டுக் கலவரம்’ என்று ஒரு கலவரம் நடந்தது. பிரிட்டிஷ் நிர்வாகத்தையே ஓர் உலுக்கு உலுக்கிய கலவரம் அது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பக்கத்தில் உசிலம்பட்டி என்று ஓர் ஊர் உள்ளது. அதுதான் இந்தக் கலவரம் தொடங்கிய இடம். அங்கு தொடங்கி மதுரை, பெரியகுளம் வரை 600-லிருந்து 700 கிராமங்கள் வரை பரவியிருக்கிறது. இந்தக் கலவரம் பற்றி ஆய்வுசெய்ய, நானும் என் நண்பர் மானுடவியல் பேராசிரியர் ஆனந்த பாண்டியனும் 2000-ம் ஆண்டுவாக்கில் அந்தப் பகுதிகளுக்குப் பயணம் செய்தோம். 100 வருடங்களுக்கு முன்பு நடந்த இந்தக் கலவரத்தைப்பற்றி யாரிடம் கேட்டும் விவரம் தெரியவில்லை. கிளம்பலாம் என்று நினைத்தபோது, ஒரு வீட்டைச் சுட்டிக்காட்டி, ‘அந்த வீட்டுப் பெரியவருக்குத் தெரியும்’ என்றார்கள். போய்ப் பார்த்தோம். அவ்வளவு துல்லியமாக விவரித்தார். அந்தக் கலவரம் எப்படித் தொடங்கியது; எப்படியெல்லாம் பரவியது; எந்தெந்த இடங்களில் யார் யார் கொல்லப்பட்டார்கள்; எங்கு துப்பாக்கிச் சூடு நடந்தது என விவரித்துக்கொண்டே செல்ல, எங்கள் சேகரிப்பில் இருந்த தகவல்களோடு அப்படியே ஒத்துப்போனது. ஆச்சர்யமாக இருந்தது. அந்தக் கலவரத்தில் குற்றவாளியாக்கிக் கொல்லப்பட்ட ஆறு பேரும் அந்த ஊரில் நடுகற்களாக நின்றுகொண்டிருக்கிறார்கள். கதைகளின் வழியாக நினைவில் வரலாறு தொடர்ந்து பயணித்து வந்திருக்கிறது. மக்கள்திரள் தனது நினைவைச் சொற்களின் வழியே மட்டும் தேக்கி வைப்பதில்லை. அதனைத் தொன்மமாகவும், படிமமாகவும், சடங்காகவும் உருத்திரட்டி வைத்துக்கொள்ளும். நீரைப் பனிக்கட்டியாக்கி உறைநிலை கொள்ளச்செய்யும் வித்தை, மக்கள் சமூகத்துக்குக் கைவந்த கலை.”   

“இலக்கியம் என்பது காலத்தின்மீது எறிகிற கல்!” - சு.வெங்கடேசன்

“தொடர்ந்து கள ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறீர்கள். புதுப்புதுத் தகவல்கள் கிடைத்தவண்ணம் இருக்கும். இதையெல்லாம் ‘காவல்கோட்ட’த்தில் எழுதாமல் விட்டுவிட்டோமே என்று நினைக்கும் விஷயமிருக்கிறதா?”

“நிறைய இருக்கின்றன. குறிப்பாக, தென்னிந்தியாவில் ஐந்து இடங்களில் பிரிட்டிஷ் அரசால் கட்டாயக் குடியேற்ற முகாம்கள் (Compulsary settelement Camp) உருவாக்கப்பட்டன. குற்றப்பழங்குடியினர் சட்டத்தின்கீழ் கடுமையான குற்றவாளிகளாகக் கருதப்பட்டவர்களை அம்முகாம்களில் அடைத்தனர்.  இரண்டாவது உலகப் போரில் ஹிட்லர் உருவாக்கிய சித்ரவதை முகாமின் முன்வடிவங்கள் அவை. இந்த மண்ணில்தான் அந்தச் சித்ரவதை முகாம்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தன. அதன் கதை எழுதித் தீராதது. அதைப்பற்றி எண்ணற்ற ஆவணங்கள் என்னிடம் இருக்கின்றன. அந்தப் பகுதியை விரிவாக எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால், காவல்கோட்டத்தின் இறுதிப் பகுதியை என்னால் எழுதவே முடியவில்லை. கடைசி 100 பக்கத்தை ஒரு வார காலத்திற்குள் எழுதி முடித்தேன். ஒருகட்டத்தில் எழுதி முடித்து வெளியேறி விட்டால் போதும் என்றிருந்தது. அவ்வளவு மனஅழுத்தமும் துயரமும் நிறைந்த பகுதி அது. எனவே, கட்டாயக் குடியேற்ற முகாம்கள் பற்றி அதில் என்னால் விரிவாக எழுத முடியாமல் போயிற்று.”

“ஒவ்வொரு இனக்குழுவும் தங்களுடைய வரலாற்றுப்  புனைவுகளை எழுதிக்கொள்ளும்போது அதில், சாதியப் பெருமிதங்கள் உருவாக வாய்ப்புள்ளதா? இதனால், சாதிய முரண்கள் இன்னும் வலுவடையாதா?”

“எழுத்தாளனின் அரசியலே இதனைத் தீர்மானிக்கிறது. யாராக இருந்து, எதற்காக எழுதுகிறோம் என்பதைப் பொறுத்தே அந்த எழுத்தின் குரல் அமையும். எதையும் எழுதலாம். ஆனால், எதற்காக எழுதுகிறோம் என்பதைப் பொறுத்ததே எல்லாமும்.”

“சாதியப் பிரச்னையில் குறைந்த கவனம் செலுத்திவந்த கம்யூனிஸ்ட் கட்சி, முன்பைவிட இந்தப் பிரச்னைகளில் கூடுதல் கவனம் செலுத்துவதன் காரணம் என்ன? இந்த மாற்றம் எப்படி நடந்தது?”

“தமிழ் மண்ணில், நிலவுடமையின் வலிமை மிகுந்த பிடிக்குள்ளிருந்தது காவிரிப்படுகை. சனாதனமும் அதனைப் பேணும் மடங்களும் கணக்கில்லாத கோயில்களும் எல்லை காண முடியாத மானிய நிலங்களும் நிறைந்த பகுதி அது. அதனாலேயே சாதியக் கொடுமையும், அடிமைத்தனமும், தீண்டாமையும் உச்சம்கொண்ட நிலம். தமிழகத்தைக் காவிரிப்படுகைப் பகுதி என ஒரு பாகமாகவும் பிற பகுதி முழுவதையும் மற்றொரு பாகமாகவும் பிரியுங்கள். பிற பகுதியில் அதாவது, காவிரிப்படுகை நீங்கலாக மொத்தத் தமிழகத்தில் இருக்கும் கோயில்களின் எண்ணிக்கையைவிட காவிரிப்படுகையில் இருக்கும் கோயில்களின் எண்ணிக்கை அதிகம். அதேபோல, பிற பகுதியில் இருக்கும் மடங்களின் எண்ணிக்கையைவிட காவிரிப்பகுதியில் உள்ள மடங்களின் எண்ணிக்கை அதிகம். கோயில்களுக்கும், மடங்களுக்கும், பிராமணர்களுக்கும் தமிழகத்தின் பிற பகுதியிலிருந்த மானிய நிலங்களைவிட காவிரிப் படுகையில் இருந்த மானிய நிலம் அதிகம். இதன் காரணமாகவே, தமிழகத்தின் பிற பகுதிகளைவிட ஒப்பிடவே முடியாத அளவு தீண்டாமையும் சாதிய அடக்கு முறையும் உச்சத்தில் இருந்த பகுதியாக அது இருந்தது.

ஆனால், இன்றைய நாளில் வட தமிழகத்தைவிட, தென் தமிழகத்தைவிட சாதியக் கொடுமையும் தீண்டாமைக் கொடுமையும் ஒப்பீட்டளவில் குறைந்த பகுதியாக இருப்பது காவிரிப்படுகை. எப்படி நிகழ்ந்தது இந்த மாற்றம்? ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நிலைநிறுத்தப் பட்டிருந்த நிலவுடமை உறவுகளை, ஆதிக்கக் கட்டமைப்புகளைக் கால் நூற்றாண்டு காலச் செங்கொடி இயக்கப் போராட்டச் செயல்பாடுகள் தலைகீழாக மாற்றவில்லையா? தஞ்சை மண்ணில் நடந்தது பொருளாதார நீதிக்கான போராட்டம்தான். ஆனால், அது தன்விளைவாகவும் இணைவாகவும் சமூக அடிமைத்தனங்களை நொறுக்கியது என்பது மறுக்க முடியாத உண்மை. தமிழ் நிலப்பரப்பில் சாதியத்தின் இறுகிய பிடியின் மைய முடிச்சில் வலிமைமிகுந்த தாக்குதலைத் தொடுத்தவர்கள் கம்யூனிஸ்ட்டுகள்.

இந்த உண்மையைப் பேசுகிற அதேநேரத்தில், இதற்கு அடுத்த காலகட்டத்தில் நிலவிய அரசியல் தத்துவப் புரிதலும், அது ஏற்படுத்திய தாக்கமும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒன்று. அதாவது, பொருளாதார ஏற்றத்தாழ்வுக்கு எதிரான போராட்டமே, சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கும் முரண்பாடு களுக்குமான தீர்வை உள்ளடக்கியதுதான் என்ற சூத்திரத்துக்குள் போய் மாட்டிக்கொண்டது. மார்க்ஸியம் அந்தந்த மண்ணின் தன்மைக்கு ஏற்ப புரிந்து கொள்ளவும் பொருத்திப்பார்க்கவும் வேண்டிய தத்துவம். இந்திய வரலாற்றில் அரசியல் அதிகாரம் காலம் முழுவதும் மாறி வந்திருக்கிறது. ஆனால், 1,500 ஆண்டுகளுக்கும் மேலாகச் சமூக அதிகாரம் குறிப்பிட்ட தத்துவத்தின், சாதியின் கைகளிலிருந்து மாறவே இல்லை. எனவே, இந்திய சாதிய அமைப்பும் சின்னஞ்சிறு அளவில்கூட மாற்றம் காணாமல் இறுகி நிலைபெற்றுவிட்டது. இதன் கோரவிளைவுகள் எளிதில் அளவிட  முடியாதவை. மனிதனின் ஆழ்மனம்வரை நிலைநிறுத்தப்பட்டுள்ள, நம்பவைக்கப்பட்டுள்ள, ஒப்புக்கொள்ளப்பட்டுள்ள கருத்தாக்கங்கள் இவை. இவற்றினை எதிர்த்த போர் என்பது பெரும் வலிமையோடு நடத்தப்பட வேண்டிய ஒன்று.  பொருளாதாரமல்லாத ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் பற்றி மார்க்ஸ் கூறுகிறார். இந்தியாவைப் பொறுத்தவரை அந்தப் போராட்டத்தின் மையப்புள்ளி சாதியம்தான். இதனை மையப்படுத்திய எங்களின் போராட்ட வெளிப்பாடுகள்தான் இன்றைய முன்னெடுப்புகளும் இயக்கங்களும்.”

“இலக்கியம் என்பது காலத்தின்மீது எறிகிற கல்!” - சு.வெங்கடேசன்“மத்திய அரசின் ஒற்றைமயப்போக்குக்கு எதிராக நமது மொழி, உணவு, பண்பாடு, நம்பிக்கைகள் போன்றவற்றின் மீதான விமர்சனங்களுக்குப் பதில் தருவதாக, தொன்மையான தமிழ்ப் பெருமைகளை, தனித்துவத்தை மீட்டெடுப்பது, நிலைநாட்டுவது  ஒருபுறம் அவசியமாகிறது. இதுபோன்ற தருணங்களில் தமிழ்த் தேசியம், தனித் தமிழ்நாடு போன்ற குரல்களும் மேலும் கூர்மையடைகின்றன. இந்த விஷயத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“வரலாற்றுரீதியாக உருவாகியுள்ள இந்திய தேசியத்தை ஏற்றுக்கொண்டு, அதில் தேசிய இனங்களின் சமத்துவத்தை நிலைநிறுத்தப் போராடுவதும் இந்திய தேசியத்தை ஏற்றுக்கொள்ள மறுத்து, தேசிய இனங்களின் விடுதலையைப் பேசுவதும் இரு வேறுபட்ட அரசியல் நிலைப்பாடுகள். இவை இரண்டுக்கும் பொதுவான கருத்து என்று ஒன்று இருக்க முடியாது. நியாயமான பெருமைகளை மீட்டெடுப்பது என்பது தனித் தமிழ்நாடு என்பதில்தான் போய் முடிய வேண்டும் என்று அவசியம் இல்லை. இன்னும் சொல்லப்போனால், இந்த மீட்டெடுப்புக்கே எதிரானதாகத்தான் அது வந்து நிற்கும். அதாவது, ஒற்றைப் பண்பாட்டை நிலைநிறுத்தி பிற அனைத்துப் பண்பாடுகளையும் அழித்தொழிக்க நினைக்கிற கூட்டம், நம்மைப் பிரிவினைச் சக்திகள் என்று முத்திரை குத்தி எளிதாகத் தங்களின் நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ளும் வாய்ப்பாக அது அமையும். அது மட்டுமல்ல, இன்றைய பிரச்னை தமிழகத்துக்கு மட்டுமானதல்ல. இந்தியாவில் உள்ள அனைத்துத் தேசிய இனங்களுக்குமான பிரச்னை. இந்தியா பல தேசிய இனங்களின் ஒன்றியம் என்பதையே ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு எதிரான போராட்டம் இது. இதில், நமது அணிச்சேர்க்கையும் அணுகுமுறையும் பரந்துபட்டதாக இருத்தல் தேவை.

 வரலாறு எதிரிகளுக்கு மட்டுமல்ல, நமக்கும் நல்லதொரு வாய்ப்பினை உருவாக்கியுள்ளது. இந்தி அல்லாத பிற மொழிகளின்பால் இவர்கள் தொடுக்கின்ற தாக்குதல், தேசிய இனங்களுக்கான சம உரிமைக் குரலை எல்லா மாநிலங்களிலும் வலுப்படுத்துகிறது. கர்நாடகத்தில் வலிமையாகக் குரல் ஒலிப்பதைக் கேட்கிறோம். இந்தித் திணிப்பு என்பது இந்தியாவின் மூன்றில் இரு பங்கு மக்களுக்கு எதிரான போர்; இதில் ஆட்சியாளர்களால் ஒருபோதும் வெற்றிபெற முடியாது. தேசிய இனங்களின் உரிமைகளை நிலைநாட்டவும், சமத்துவத்தைப் பேணவும், ஒற்றைப் பண்பாட்டு ஆதிக்கத்தை முறியடிக்கவும் இன்றைய காலம் சவால் மிகுந்தது மட்டுமல்ல, சரியானதும்கூட.”

“ஒரு தேசியக் கட்சியான மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மாநிலம் சார்ந்த பிரச்னைகளில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு கருத்தைக்கொண்டிருக்கிறது என்று வைக்கப்படும் விமர்சனத்தை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்?”

“அசமத்துவ அணுகுமுறையும், சமச்சீரற்ற தன்மையும், பொதுநிலைப்பாடுகள் முழுமையாகக் கைவிடப்பட்ட அரசியல் சூழலும்தான் இன்று நிலவிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், மாநிலத்தின் நலனுக்கும் தேவைக்கும் ஏற்ப நிலைப்பாடு எடுப்பது தவிர்க்க முடியாதது மட்டுமல்ல, தேவையானதும்கூட. உதாரணமாக, ஏழு அரசு மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே இருக்கிற கேரளா, நீட் தேர்வில் எடுக்கும் முடிவும் 24 அரசு மருத்துவக் கல்லூரிகள் இருக்கும் தமிழகம் நீட் தேர்வு குறித்து எடுக்கும் முடிவும் எப்படி ஒன்றாக இருக்க முடியும்? 2,000 இடங்களை இழக்கப்போகின்றவர்களின் கதறலும் இழக்க எதுவுமற்றவர்களின் குரலும் எப்படி ஒன்றுபோல ஒலிக்கும்?” 
 
“இந்திய கம்யூனிஸ இயக்கங்களின் இன்றைய அணுகுமுறை என்னவாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?”


“இது சோசலிசத்துக்கான காலம் அல்ல. இருக்கும் நாடாளுமன்ற ஜனநாயகமும் ஆபத்தில் நிற்கிறது. மதச் சார்பற்ற கோட்பாடுகளும் மாநில சுயாட்சியும் தேசிய இனங்களின் உரிமைகளும் வெறிகொண்டு பறிக்கப்படுகின்றன. அடுத்த திருப்பத்தில் இந்திய வரலாற்றின் காட்சிகளே மாறும் அபாயம் நிலைகொள்ளத் தொடங்கிவிட்டது. இதனையெல்லாம் கணக்கில்கொண்டு செயல்பாடுகளை முன்னெடுத்தல் அவசியம்.

1930-களின் நடுவில் எழுந்துவந்த  பாசிச அபாயத்தை, உலக கம்யூனிச இயக்கங்கள் குறைத்து மதிப்பிட்டதின் விளைவை உலகம் சந்தித்தது. நாம் அன்றே ஐக்கிய முன்னணியைக் கட்டியிருக்க வேண்டும் என்று பேரழிவுக்குப் பின் சிந்தித்தன உலக கம்யூனிஸ இயக்கங்கள். இவ்வனுபவங்களில் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கங்கள் கற்றுக்கொள்ள நிறைய இருக்கின்றன.”

“மார்க்ஸியம் ஒரு கடவுள் மறுப்புத் தத்துவம். ஆனால், சிறுதெய்வ வழிபாட்டிற்கு ஆதரவாகவும் அதன் சடங்குகளில் ஒன்றான ஆடு, கோழி பலி தடைக்கு எதிராகவும் இயங்குவதை எப்படிப் புரிந்துகொள்வது?”

“பொருளாதாரத் தளத்தில் மட்டும் நடப்பதல்ல வர்க்கப் போராட்டம். சமூகத்தின் எல்லா தளங்களிலும் வர்க்கப் போராட்டம் நடந்துவருகிறது. பெருமத நிறுவனங்கள், தமக்கு வெளியிலிருக்கும் குலங்களின் நம்பிக்கைகளையும் வழிபாடுகளையும் உள்வாங்கிச் செரித்து அவற்றைத் தனித்து இல்லாமலாக்குவது தொடர்ந்து நடந்துவரும் ஒன்றுதான். இந்த அடையாள அழிப்பைப் புரிந்து கொள்ளவதும் அதற்கு எதிர்வினை ஆற்றுவதும் பண்பாட்டு ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியே. அதாவது, ஒற்றைப் பண்பாட்டு ஆதிக்கத்திற்கு எதிராகப் பண்பாட்டுப் பன்மையைக் காக்கும் முயற்சியின் பகுதியே.”    

“இலக்கியம் என்பது காலத்தின்மீது எறிகிற கல்!” - சு.வெங்கடேசன்

“நாட்டார் தெய்வ வழிபாடும்கூட இந்து மதத்தின் ஓர் அடுக்குதான் என்று சொல்கிறார் ஜெயமோகன். அதைப்பற்றிய உங்கள் கருத்து?”

“வைதீக மதத்திற்கு வெளியிலிருக்கிற பல நூற்றுக்கணக்கான இனக்குழுக்களை, அவர்களது வழிபாட்டு முறைகளை வைதீக மதத்திற்குள் இழுத்து விழுங்குகிற வேலை பல நூற்றாண்டுகளாக நடந்துவருகிறது. வேத மதத்திற்கு எதிர்மரபுகொண்டவர்கள், வேத மதங்களிலிருந்து விலகிச் சென்றவர்கள், வேத மதத்தை எதிர்த்தவர்கள் எல்லோருமே வேத மதத்தின் ஒரு பகுதிதான் என்று சொல்வது மோசடி. நாட்டார் வழிபாடுகள் வேத மத மரபுகளுக்கு முற்றிலும் எதிரானவை. இன்னும் சொல்லப்போனால், மதங்களின் அருளாசியால் மாசுபடாத முன்னோர் வழிபாட்டின் வழிமுறை அது. அடிப்படையிலேயே முன்னது மனிதனை மறுதலிப்பது; பின்னது மனிதனை மையப்படுத்துவது.”

“இந்தத் தலைமுறையிடம் அனைத்தையும் வேடிக்கையாகப் பகடிசெய்து கடந்துபோகிற ஒரு தன்மை இருக்கிறது. மார்க்ஸியம் போன்ற லட்சியவாத அரசியல் கருத்தை இவர்களிடம் எடுத்துச் செல்வதற்கான வழிமுறைகளென என்ன வைத்திருக்கிறீர்கள்?”

“தத்துவங்களையும் கோட்பாடுகளையும் இன்றைய இளைஞர்களிடம் பேசுதல் பெரும் சவால்தான். இன்னொரு பார்வையில் யோசித்தால், எல்லா காலங்களிலுமே இந்தச் சவால் இருந்துகொண்டேதான் இருக்கிறது. ஆயினும், 90-களுக்குப் பிறகான உலகமயச் சூழலில், அரசியல் நீக்கப்பட்ட பொதுச் சந்தையாக மனித சமூகத்தை உருவாக்குகிற முயற்சி மிகத் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. ஆசைகளை இடைவிடாதுக் கிளறிவிடும் நுகர்வியத்தின் கிடங்காக மனிதமனம் கட்டமைக்கப் படுகிறது. ஆனாலும், வாழ்வின் மீதான கனவை மனிதன் ஒருபோதும் இழந்துவிட மாட்டான். அந்தக் கனவு இருக்கும்வரை லட்சியவாத அரசியலும் மார்க்ஸியமும் தேவைப்பட்டுக்கொண்டுதான் இருக்கும்.”

“கண்டனக் கூட்டங்கள், உண்ணாவிரதங்கள் எனப் போராட்ட வடிவங்கள் பழமையடைந்து விட்டனவா? அரசைக் கவனம்கொள்ளவைக்க புதிய  போராட்ட   வடிவங்கள்  தேவைப்படுகின்றனவா?”

“வடிவமல்ல பிரச்னை. போராட்டத்தின் மீதான நம்பிக்கையை உருவாக்குவதுதான் இன்றைய சவால். மக்களைக் கட்டுக்குள்ளும் ஒழுங்குக்குள்ளும் வைத்திருக்க அரசு நிறுவனம் எல்லாவகையிலும் தன்னை நவீனப்படுத்தித் தகவமைத்துக் கொண்டுள்ளது. ஆனால், அரசை எதிர்க்க மக்கள் சமூகம் கைக்கொள்ள வேண்டிய உத்தியை, அதன் அரசியல் திறனே தீர்மானிக்கிறது. அரசியல் திறனை வலிமைப்படுத்தாமல் வடிவ மாற்றத்தால் சாகசம் செய்துவிட முடியாது.”
 
“கம்யூனிஸ்ட் கட்சியில் இயங்குகிற படைப்பாளிகள் சுதந்திரமாக இயங்க முடியாது என்று ஒரு கருத்து உண்டு.  அது உண்மைதானா?”

“கம்யூனிஸ்ட் கட்சியைப் பற்றி, அதன் நடைமுறைகளைப் பற்றித் தெரியாதவர்களின் அப்பாவித்தனமான கண்டுபிடிப்பு இது. இங்கு யாரும் யாருடைய பேனாவையும் பிடுங்கிவைத்துக்கொள்வதில்லை. எதை எழுத வேண்டும், எழுதக் கூடாது என்று உத்தரவிடுவதும் இல்லை. கம்யூனிஸ்ட் கட்சியில் அரசியல் கொள்கை மாறுபாடு காரணமாக, எத்தனையோ படைப்பாளிகள் வெளியேறியிருக்கிறார்கள். அப்படி வெளியேறியவர்கள்கூட இங்கே கருத்துச் சுதந்திரம் இல்லை என்று சொல்லியது இல்லை. உள்ளே வராதவர்களின் கண்டுபிடிப்பு இது, அல்லது அவர்களின் உள்பயம்.”    

“இலக்கியம் என்பது காலத்தின்மீது எறிகிற கல்!” - சு.வெங்கடேசன்

“சமகால வாழ்வை நாவலாக எழுதாமல், காவல்கோட்டத்தில் மாலிக்காபூர் படையெடுப்பிலிருந்து பிரிட்டிஷ் ஆட்சி வரையிலான வாழ்வை எழுதினீர்கள். சந்திரஹாசத்தில் அதற்கு முந்தைய பிற்காலப் பாண்டியர் வாழ்வை எழுதினீர்கள். தற்போது வேள்பாரியில் சங்க கால வாழ்வை எழுதுகிறீர்கள். சமகால வாழ்விலிருந்து விலகி, பின்நோக்கிப் பயணிப்பதன் நோக்கம்  என்ன?”

“இது வாழ்விலிருந்து விலகிய பயணம் அல்ல; வாழ்வின் முழுமையை அறிந்துகொள்கிற பயணம். மனிதன், வரலாற்றின் குழந்தை. அவனது ஒவ்வொரு செயலுக்கும் சிந்தனைக்கும் நெடிய வரலாற்றுத் தொடர்ச்சி இருக்கிறது. வரலாற்றைப் புரிந்துகொள்வது என்பது மனித வாழ்வின் சாரத்தைப் புரிந்துகொள்ளுதலே. நிகழ்கால வாழ்விலும் கடந்தகால வாழ்விலும் நாம் எழுத வேண்டிய எவ்வளவோ பாடுபொருள்கள் இருக்கின்றன. ஆனால், மனம் எதில் தோய்ந்து, துலங்கிக்கிடக்கிறதோ அதுவே மேலெழும்பி வரும். நாவல் போன்ற பேரிலக்கிய வடிவத்தைக் கையாள்கையில் அதன் கனபரிமானத்திற்கு காலத்தின் சட்டகமே இயல்பாக ஈடுகொடுத்து உட்காரும். காலத்தைக் கடந்தகாலம், எதிர்காலம் எனப் பிரித்து விலக்குவது நிகழ்காலத்தை உற்றுப் பார்க்கத்தான்; கிணற்றுக்குள் உற்றுப் பார்த்தால் அடிமண்ணும் தெரியும், ஆகாயமும் தெரியுமல்லவா? அப்படித்தான் காலமும்.”

“பாரி வள்ளலைப் பற்றிய கதைக்கு வீரயுக நாயகன் வேள்பாரி எனப் பெயரிட்டது ஏன்?”

சமூக வளர்ச்சியின் தொடக்க காலத்தில் குலச் சமூகங்கள் ஒன்றோடு ஒன்று மோதி, அழிந்து, வென்று நிலைகொண்ட காலத்தை வீரயுகக் காலம் என வரலாற்றாளர்கள் குறிக்கின்றனர். வாய்மொழிப் பாடல்களின் மூலம் வீரமும் வீரம்சார் விழுமியங்களுமே மீண்டும் மீண்டும் பாடப்பட்டு நிலைநிறுத்தப்பட்ட காலம் அது. கிறிஸ்து பிறப்பதற்கு 3,000 ஆண்டுகளுக்கு முந்தியது சுமேரியர்களின் வீரயுகக் காலம். அதற்கு அடுத்தது கிரேக்கர்களின் வீரயுகக் காலம். அதற்கு அடுத்தது பழந்தமிழரது வீரயுகக் காலம் என வரையறுக்கிறார் க.கைலாசபதி. உலகின் பல பகுதியில் வீரயுகப் பாடல்கள், கிறிஸ்து பிறந்து பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர்தான் கிடைத்துள்ளன. கால வரிசைப்படி சுமேரிய, கிரேக்க வீரயுகத்தோடு இணையாக வைக்கக்கூடியவை சங்கப் பாடல்களே. இப்பாடல்கள் பலநூறு குலங்கள் ஒன்றோடு ஒன்று மோதி, அழிந்து, வென்று வேந்தர்கள் மூவர் மேலெழுவதைக் குறிக்கும் காலத்தைச் சேர்ந்தது. அப்படி நிலைநின்ற வேந்தர்கள் மூவரும் சின்னஞ்சிறு குறுநில மன்னனான பாரியோடு தனித்தனியாகப் போரிட்டுத் தோல்வியைத் தழுவுகின்றனர். மூவரும் இணைந்து போரிட்டும் தோல்வியைத் தழுவுகின்றனர். சங்க காலத்திலும் சரி, அதற்குப் பின்னரும் சரி, மூவேந்தர்களும் ஒருசேரத் தோல்வியைத் தழுவிய நிகழ்வென்பது அது ஒன்று மட்டுமே. இன்றைக்கும் உலகம் கொண்டாடும் கிரேக்க காவியத்தின் நாயகர்கள் எல்லாம் வீரயுகக் காலத்தில் பாடப்பட்ட மனிதர்களே. தமிழ் வீரயுகக் காலத்தில் பாடப்பட்ட வள்ளல் பாரியே தமிழ்ப் பேரிலக்கியத்துக்கான மாவீரன்.”  

“இலக்கியம் என்பது காலத்தின்மீது எறிகிற கல்!” - சு.வெங்கடேசன்

“சங்க கால வாழ்வைப் பின்புலமாகக்கொண்டு வேள்பாரியை எழுதுகிறீர்கள். இதிலுள்ள முக்கியமான சவால்கள் என்ன?”

“ ‘சவால்கள்’ என்ற சொல்லிலிருந்தே தொடங்கலாம். இந்தச் சொல் தமிழ்ச்சொல் அல்ல; வடசொல். இதற்கு இணையான தமிழ்ச்சொல் `வெல்விளி’. இந்தச் சொல்லைப் பயன்படுத்தினால், கீழே விளக்கக் குறிப்புத் தர வேண்டும். அப்படித் தந்தால், அது இலக்கியமாக இருக்காது. ஆய்வுக் கட்டுரையாகத்தான் இருக்கும். கேள்வி, அறைகூவல் என்ற சொல்லைப் போட்டாலும் ‘சவால்’ என்ற சொல் கொடுக்கும் அழுத்தத்தை எழுத்தில் கொண்டுவர முடியாது. சவாலைச் சந்திப்பதே இவ்வளவு சவால் என்றால், நிலைமை எவ்வளவு சவால் நிறைந்தது என்பதை யோசித்துக்கொள்ளுங்கள். இலக்கிய இன்பத்தையும் வாசிப்புச் சுகத்தையும் கொன்றுவிட்டுப் படைப்பை உருவாக்க முடியாது. அதற்காகப் பிற்காலத்துச் சொல்லை சங்க காலத்துக்குள் வைத்துப் பேசுதல் அறமாகாது. இந்த இடர்பாட்டுக்குள் நுழைந்து வெளிவந்தாக வேண்டியுள்ளது. கருத்துச் செறிவாலும் தனித்தமிழ் சொற்களாலும் மட்டும் ஒரு படைப்பு இலக்கியமாகிவிடாது.

சங்க கால வாழ்வைச் சமகால வாசகனுக்குச் சொல்ல முனையும்போது, எதைச் சொல்வது என்பதில் தொடங்கி, எப்படிச் சொல்வது என்பதுவரை எல்லாவற்றிலும் கடுமையான உழைப்பு தேவை. வீரயுகக் காலத்தைப் பற்றி இவ்வளவு விரிவான இலக்கியப் பதிவு வேறெந்த இந்திய மொழியிலும் இல்லை என்பதை நாம் அறிவோம். குறிப்பாகச் சொல்வதாக இருந்தால், இயற்கையைப் பற்றிய பேரறிவின் தொகுப்பு சங்க இலக்கியம். இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தியைப் பாடுதலும் அதற்கான சடங்குகளைப் பாடுதலுமே வேத இலக்கியத்தின் முதன்மைப் பாடுபொருள். ஆனால், சங்க இலக்கியம் இயற்கையே முதன்மை எனக்கொண்டு பாடுகிறது. அதனைப் புரிந்துகொள்ள இடைவிடாது சிந்தித்து வலிமையான சிந்தனை மரபை உருவாக்குகிறது. மூச்சுக்காற்றால் நிலைகுழையும் அனிச்ச மலரில் தொடங்கி, சிறுகண் யானை வரை நுண்ணறிவின் நூல்பிடித்து நடந்த நூலோர்கள் நம் முன்னோர்கள். வாகைப்பூ, மயிலின் குடும்பியைப் போலிருக்கும்; புன்னை அரும்பு, பல்லியின் முட்டையைப் போலிருக்கும்; அவரைப்பூ, கிளிமூக்கு போன்றது; நொச்சி இலை, மயிலின் காலடித்தடம் போன்றது என எத்தனை எத்தனை உவமைகள். தவழும் காற்றுக்கும் தாக்கும் காற்றுக்கும் உள்ள வேறுபாடு என்ன? மலர்வதற்கும் துவள்வதற்கும் இடையிலுள்ள காலமென்ன? மணமற்ற பீர்க்கைப் பூவையும் மிகுமணங்கொண்ட இரும்பைப் பூவையும் நாம் நுகராமலேயே உணரச் செய்யும் வார்த்தை வளமென்ன? புலியின் விரல்கள் பிஞ்சு வாழைக்காயைப் போலிருக்கும் என்று பாடிய ஒருவனின் கால்தொட்டு வணங்குதலன்றி வேறென்ன செய்ய முடியும் நம்மால். இப்பெரும் அறிவுலகத்துக்குள் வாழ்ந்த வரலாற்று மனிதர்களைப் பற்றி எழுதுதல் என்பது நினைத்தாலே நடுக்கம் கொள்ளச் செய்யும் ஒரு செயல். ஆனாலும், நம்பிக்கையோடு பயணிப்பதற்குக் காரணம், வளமான சங்க இலக்கியம் கையில் இருக்கிறது என்பதும் வளமிக்க குறிஞ்சி நிலத்தின் மனிதர்களை இறுகப்பற்றி நிற்பதும்தான்.”

“ ‘வேள்பாரி’ தொடரில் வானியற் செய்திகள் பல இடம்பெற்றுள்ளன. குறிப்பாகக் கார்த்திகைக்குப் புதிய விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றிற்கான அறிவியல் விளக்கம் என்ன? அந்த வானியற் செய்திகள் பழந்தமிழ் இலக்கியங்களிலும் எந்த அளவு பதிவாகியுள்ளது? இவற்றின் உண்மைத்தன்மை என்ன?”


“சங்க கால சமூகத்தில் வானியல் பெரும் அறிவுத்துறையாக வளர்த்தெடுக்கப்பட்டு இருக்கிறது. அதற்கான எண்ணற்ற ஆதாரங்களைச் சங்க இலக்கியத்தில் நாம் பார்க்க முடியும். ஆனால், இதைப்பற்றி நவீன கால ஆய்வு மிக மிகக் குறைவு. நமது பல்கலைக்கழகங்களுக்குச் சங்க இலக்கியத்தில் பல்லி கத்தியதை ஆய்வு செய்யவே நேரம் போதுமானதாக இருக்கிறது. அந்தக் கொடுமை ஒருபுறம் இருக்கட்டும். வானியல்பற்றி எனக்குள் எழுந்த கேள்விகளுக்கு, நான் விடை தேட முயன்றுள்ளேன். குறிப்பாகத் தமிழர்கள் ஒரு நாளை 60 நாழிகைகளாகவும் காலச் சுழற்சியை 60 ஆண்டுகளாகவும் பகுத்துள்ளனர். 60 ஆண்டுகளுக்கும் சமஸ்கிருதப் பெயர்சூட்டல் என்பது பின்னால் நிகழ்ந்த ஒன்றாக இருந்திருக்க வேண்டும்.  யவனர்களோ ஒரு நாளை 24 கூறுகளாகப் பகுக்கின்றனர். காலச் சுழற்சியின் வட்டத்தை 12 ஆக வரையறுக்கின்றனர். இதன் காரணத்தைச் சிந்திக்கையில், நாம் காலச் சுழற்சியைக் காரிக்கோள் அதாவது, சனிக்கோளினை மையமாக வைத்து யோசித்திருக்கலாம். சனிக்கோள் முழுமையாக ஒரு சுற்றை முடித்து நிலவோடும் பிற கோள்களோடும் ஒரே நேர்கோட்டுக்கு வந்து சேர 30 ஆண்டுகள் ஆகின்றன. அதன் அடிப்படையில் பகலினை 30, இரவினை 30 எனப் பகுத்திருக்கலாம். இதன் அடிப்படையாக ஒரு நாளினை 60 நாழிகைகளாகவும், கால வட்டத்தை 60 ஆண்டுகளாகவும் தீர்மானித்திருக்கலாம்.

யவனர்களோ, வியாழக் கோளினை மையப்படுத்தி காலவட்டத்தை அமைத்திருக்கலாம். வியாழக் கோள், நிலவோடும் பிற கோள்களோடும் ஒரே நேர்க்கோட்டுக்கு வந்துசேர 12 ஆண்டுகள் ஆகின்றன. எனவே, அவர்கள் பகலைப் 12, இரவினை 12 எனப் பகுத்திருக்கலாம். அதனடிப்படையில் காலச் சுழற்சியையும் 12 என்று முடிவு செய்திருக்கலாம் எனக் கருதுகிறேன்.   

“இலக்கியம் என்பது காலத்தின்மீது எறிகிற கல்!” - சு.வெங்கடேசன்

திங்கள், செவ்வாய், புதன் என்று வாரத்தின் ஏழு நாள்களின் பெயரையும் சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி என்று 12 மாதங்களின் பெயரையும் முறையே நாள் மீன்களின் கோள் மீன்களின் பெயரைச் சூட்டியுள்ளதென்பது தற்செயல் அல்ல. இது காலமெனும் பெருஞ்சுழற்சியின் பகுதியே, மனித வாழ்வெனப் பார்த்த தத்துவக் கண்னோட்டத்தின் நீட்சி. காலத்தைப் புரிந்துகொள்ளவும் அளவிடவுமான மனிதப் பெருமுயற்சிகளின் சான்று. காலத்தை வெல்ல நினைத்த மனித சக்தியின் தொடக்கம் எனக் கருதுகிறேன். கார்த்திகைப்பற்றி யோசித்தால், எண்ணற்ற கேள்விகள் மேலெழுந்த வண்ணம் இருக்கும். குறிப்பாக, ஆறு என்ற எண் தமிழ்ச் சிந்தனை மரபில் மிக முக்கியமான இடத்தினை வகுக்கிறது. அதனால்தான் ஓர் ஆண்டு ஆறு பெரும் பொழுதாகவும், ஒரு நாள் ஆறு சிறு பொழுதாகவும் பகுக்கப்பட்டுள்ளன. 60 நாழிகைகளாக ஒரு நாளினையும் 60 ஆண்டுகளாகக் காலச்சுழற்சியைப் பகுத்தது,  உயிர் எழுத்தை 12 ஆகவும் மெய்யெழுத்தைப் 18 ஆகவும் வகுத்தது என எல்லாம் ஆறின் மடங்குகளாக இருப்பது தற்செயல் அல்ல.

இந்த ஆறு என்ற எண்ணுக்கும் காலமாற்றக் கணக்குகளுக்கும் கார்த்திகைக் கோளுக்கும் உள்ள உறவினைப் பற்றி வேள்பாரியில் மிக முக்கியமான விவாதங்களை முன்வைத்துள்ளேன். ஒரு படைப்பாளியாக எனது தரப்பு இது. பல்வேறு தரப்பினரின் உரையாடலின் வழியே நாம் உண்மையை நெருங்க முடியும் என நினைக்கிறேன்.”

“ ‘வேள்பாரி’ தொடரில் ஏழிலைப் பாலை, அசுணமா, தனைமயக்கி  மூலிகை, காக்காவிரிச்சிப் பறவை, அத்தாப்பொருத்தி, கொல்லிக்காட்டு விதை எனத் தாவரங்கள், பறவைகள், மருந்துகள் குறித்த செய்திகள் பல வருகின்றன. இதில் எவ்வளவு உண்மைத்தன்மை உள்ளன?”

“சங்க இலக்கியத்திலும் நமது மருத்துவம்சார் நூல்களிலும் இருக்கிற செய்திகளைத்தான் வேள்பாரியில் எழுதியிருக்கிறேன். ஒரு தாவரத்தை, அதிலிருந்து உருவாகும் மருந்தை நான் புனைவாக எழுதவில்லை. ஆனால், அதைக்கொண்டு நிகழும் கதையோட்டமே புனைவு. உதாரணமாக, ‘அசுணமா’வை எடுத்துக்கொள்வோம். சங்க இலக்கியத்தில் பாடப்பட்டுள்ள இசைக்கு மயங்கும் உயிரினம் அது. அந்த உயிரினம் பறவை என்றும் விலங்கு என்றும் இருவேறு கருத்துகள் ஆய்வாளர்களிடம் உண்டு. நான் பறவை என்று எடுத்துக்கொள்கிறேன். விலங்கைவிட பறவை இசைக்கு மயங்குவது என்பது கூடுதல் இயல்பாக இருக்கும் என்று நினைத்தேன். இந்தப் பறவையைக் கதைக்குள் எப்படிப் பயன்படுத்துவது என்பது என்னுடைய புனைவுலகம் சார்ந்தது. ‘ஏழிலைப் பாலை’ பெண்ணின் அணுக்கத்தில் மலரும் மரம் என்று இலக்கியத்தில் ஒரு குறிப்பு உள்ளது. ‘என்ன ஒரு புனைவின் உச்சம்’ என்று தோன்றுகிறது. இன்னொரு கோணத்தில் சிந்தித்தால், மனிதன் நெருங்கினால் சுருங்கிக்கொள்ளும் தாவரங்கள் இருக்கையில், மனிதரின் அணுக்கத்தால் மலரும் தாவரம் இருக்காதா என்ன? இயற்கையைப் பாடப்பாட கற்பனை சுரக்கும் என்பதல்ல; கற்பனைக்கும் எட்டாத அளவில் இயற்கை மலர்ந்து மணம் வீசும்.”  

“இலக்கியம் என்பது காலத்தின்மீது எறிகிற கல்!” - சு.வெங்கடேசன்

“உயிரியல், சூழலியல் சார்ந்த தகவல்களில் அதிகப் புனைவு கலந்து எழுதுவது தவறான சூழலியல் புரிதலுக்கு இட்டுச் செல்லும் என்று சூழலியல்வாதிகள் கவலைப்படுகிறார்கள். அதை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“பொத்தாம் பொதுவாக இதனைப் பேச முடியாது என நினைக்கிறேன். அசுணமாவும் அன்னமும் சக்கரவாகப் பறவையும் உண்மையா, அறிவியல்பூர்வமாக இருந்திருக்க முடியுமா என்று ஆய்வு செய்வது என்னுடைய வேலையல்ல; இலக்கியத்தின் வேலையும் அல்ல. அவை மனிதனுக்கு மிகச்சிறந்த அனுபவத்தை, நெறியை, பண்பை, கனவைப் பகிர்ந்துகொள்ளும் குறியீடுகள். நெருப்பில் எரியூட்டப்பட்ட பின்னும் ஃபீனிக்ஸ் பறவை உயிர்த்தெழும் என்று சொல்வதை அறிவியல்பூர்வமற்றது என்று நீங்கள் சொன்னால், உங்களைப் பார்த்துச் சிரிப்பதைத் தவிர வேறென்ன நான் செய்ய முடியும். எந்தவோர் அழிவிலிருந்தும் மனிதனால் மீள முடியும் என்ற நம்பிக்கையை ஃபீனிக்ஸ், காலங்காலமாக உருவாக்கிக்கொண்டே இருக்கிறது. அறிவியலின் எந்தக் குறியீடு இதனை உருவாக்கும்? மரத்தைக் கோடாரியால் வெட்டினால் அதற்கு வலிக்காதா, கண்ணீர் வராதா? எனப் பாட்டி குழந்தைகளுக்குக் கதை சொன்னால், அதனை அறிவியல்பூர்வமற்ற கதை என்றா சொல்வீர்கள். மரத்தை வெட்டக் கூடாது என்று பாட்டி சொல்வதாகத் தோன்றும். ஆனால், உண்மையில் அவள் மரத்தை குழந்தைக்குள் நட்டுக்கொண்டிருக்கிறாள். கதைகள் என்ன செய்யும் என்பதையே தவறாகப் புரிந்துகொள்வது அறிவியல் அல்ல.”

“ ‘வேள்பாரி’ தொடர் முழுக்கவே சங்ககாலக் காதல் ஒரு நதிபோல பிரவாகமெடுத்து ஓடுகிறது. இன்றைய நவீன வாழ்வில் காதல் என்கிற உணர்வு எவ்வளவு மாற்றமடைந்திருக்கிறது?”


“மார்க்ஸ், பணத்தைப்பற்றிச் சொல்லும்போது, ‘பணம் மதிப்புமிக்க எல்லாவற்றையும் கிழித்து எறியும். மனித மாண்புகளைச் சிதைக்கும். மேதமைகளையும் மகத்துவங்களையும் கடைச்சரக்காக்கும்’ என்பார். இன்று நுகர்வுக் கலாசாரம் உச்சத்திலிருக்கிறது. இந்த உலகத்தில், பணத்தைத் தவிர வேறு எதுவும்  உயர்ந்தது அல்ல எனப் பெரும்பான்மையோர் நம்புகிற காலகட்டத்திலிருக்கிறோம். இந்த நுகர்வுக் கலாசாரம் எல்லாவற்றையும் பாதித்ததைப் போலவே காதலையும் பாதித்திருக்கிறது. ஆனாலும், ‘நின் பிரிவினும் சுடுமோ பெருங்காடு’ என்று ஏங்குகிற மனம் இருந்துகொண்டேதானே இருக்கும். கலங்குகிற கண்களுக்குக் காரணம் சொல்ல முடியாமல் திணறும் வாழ்வு எளிதில் முடிந்துவிடப்போவதில்லை.  

“இலக்கியம் என்பது காலத்தின்மீது எறிகிற கல்!” - சு.வெங்கடேசன்

“வள்ளி திருமணம் நாடகத்திலும், புராணத்திலும் வரும் முருகன் வள்ளி கதையிலிருந்து, ‘வேள்பாரி’யில் வரும் முருகன் வள்ளி கதை மிகவும் வேறுபட்டு, ஏறத்தாழ வேதிய மரபு மறுப்புக் கதையாடலாக இருக்கிறதே. இந்த மறுவாசிப்பின் வழியாகச் சமூகத்திற்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?”

“இந்துத்துவா, அரசியலரங்கில் மேலாக்கம் பெற்றுள்ள இந்தக் காலத்தில்தான், நவீனத் தமிழ் இலக்கியத்தில் ‘வைதீக வகைமை’ எழுத்துகளும் தீவிரமாகப் படைக்கப்பட்டு வருகின்றன. வைதீகச் சிந்தனைக்கு மாற்றான சிந்தனை முறைமைகளையும் அடையாளங்களையும் தன்வயப்படுத்தும் போக்கு காலங்காலமாக நடந்தேறி வருகிறது. இன்றையச் சூழலில் அது வலிமையோடு இயங்குகிறது. வைதீக மதத்தின் ஆள்விழுங்கும் ஆக்டோபஸ் அரசியலின் பெரும் சான்றாகத் திகழ்வது முருக வழிபாடு. சங்க இலக்கியத்தில் கொற்றவை மகனாக மட்டுமே சுட்டப்பட்ட முருகன், காதலின் அடையாளமாகவும் காதல் தெய்வமாகவுமே கொண்டாடப்படுகிறான். காதல் கடவுள் என்ற அடையாளம் முருகனிடமிருந்து இந்திரனுக்கு மாற்றப்பட்டதும் பின்னர் இந்திரனிடமிருந்து கிருஷ்ணனுக்கு மாற்றப்பட்டதும் மிக முக்கியமான பண்பாட்டு அரசியலாகும். இவற்றை அறிதல் என்பது இந்திய நிலப்பரப்பில் காதல் வரலாற்றையும் காதலுக்கு எதிராக சாதி மற்றும் மத நிறுவனங்கள் நடத்திவரும் கொடூர அடையாள அழிப்பின் வரலாற்றையும் புரிந்துகொள்ள உதவும்.

ஆதியில் குலச்சமூகத்தில் உருவாக்கப்பட்ட தெய்வமான முருகனை, பின்னர் வந்த சைவம் சிவனின் மகனாகவும் வைணவம் மால்மருமகனாகவும் உரிமை கோரின. அரச அதிகாரத்தைக் கைப்பற்றிய சைவம் சொன்னதே பின்னர் பொதுப்புத்தியில் படிந்தது. சங்க இலக்கியத்தில் கடம்பமரத்தில் இருப்பவனாக வணங்கப்படுகிறான் முருகன். அதனால், அவனுக்குக் கடம்பன் என்று பெயர். ஆனால், சைவமதம் உருவாக்கிக்கொண்ட அறுபடை வீட்டில், ஒன்றின் ஸ்தல விருட்சமாகக்கூட கடம்ப மரம் இல்லை. குறிஞ்சி நிலத்தில் குல முன்னோராக, ஆதித் தமிழ்ச் சமூகத்தின் கூட்டுநினைவாக இருந்த முருகனை வைதீக மதம் தன்வயப்படுத்த தொடர்ந்து முயல்கிறது. ஆனாலும், முருகன் விழுங்கப்பட்டதன் அடையாளமாக அல்லாமல், விழுங்க முடியாததன் அடையாளமாகவே எனது பார்வைக்குத் தெரிகிறான். அவ்வடையாளத்தையே நானும் நினைவூட்டுகிறேன்.”

 “இது வரை நான் வாசித்ததில் ‘வேள்பாரி’யின் ஆன்மாவாக நான் கருதுவது, பறம்பு மலையை, தோற்கடிக்கப்பட்ட பல்வேறு இன மக்கள் வாழ்கிற மலையாகக் காட்டியிருப்பது. கிட்டத்தட்ட அகதிகள் முகாம்போல. இது எவ்வளவு தூரம் உண்மை?”

“தமிழகத்திலிருந்த பல நூற்றுக்கணக்கான இனக் குழுக்களை அழித்துதான் மூவேந்தர்களும் தங்களை நிலைநிறுத்திக்கொண்டிருக்கின்றனர்.   

“இலக்கியம் என்பது காலத்தின்மீது எறிகிற கல்!” - சு.வெங்கடேசன்

‘வேந்தர்களும் வேளிர்களும்’ என்று ஒரு சொற்றொடர் பயன்படுத்தப்படுகிறது. ஆக, வேந்தர்களுக்கு இணையாக வேளிர்கள் ஒருகாலத்தில் இருந்தார்கள் என்று பொருளாகிறது. பின், வேளிர்குலங்கள் அழிக்கப்பட்டு சேர சோழ பாண்டியர்கள் என மூவேந்தர்களும் தம்மை நிலைநிறுத்தியிருக்கிறார்கள். இந்த Transformation நடந்த இடத்தைத்தான் நாவல் பேசுகிறது. இது ஒரேநாளில் நிகழ்ந்திருக்காது. குறிப்பாக, மேற்குத் தொடர்ச்சி மலை முழுக்க வேளிர் கூட்டம் வாழ்ந்திருக்கிறது.  குமரிமுனையில் தொடங்கி நன்னன் காடான கொங்கணம் வரை அவர்கள் பரவி வாழ்ந்திருக்கிறார்கள். 18 வகையான வேளிர் கூட்டம் இருந்ததாகப் படிக்கிறோம். ஆக, இவர்களை எல்லாம் ஒரே சமயத்தில் அழித்திருக்க வாய்ப்பில்லை. அழிக்கப்பட்டவர்களில் சிலர் மிச்சமிருந்திருக்கலாம். அவர்கள் பின் சேர்ந்திருக்கலாம். அவர்களெல்லாம் சேர்ந்து இந்தப் போரை நடத்தியிருக்கலாம் என்று நினைக்கிறேன். தோற்கடிக்கப்பட்ட எல்லா இனக்குழுக்களும் பாரியின் பக்கமும்,  மூவேந்தர்கள் எதிர்ப்பக்கமும் நிற்கும் ஒரு வரலாற்றை எழுதும்போது, அது உருவாக்கும் விரிவு அளவிட முடியாதது. 600 ஆண்டு கால சங்க கால அரசியலைப் பேசும் குறியீடாகத் தன்னியல்பிலேயே அது மேலெழுந்து நிற்கிறது. ஒரு குடும்பத்தின் இரு பிரிவினர்கள் மோதிக்கொள்ளும் போராக நிறுத்தாமல், நிலத்தில் உள்ள அத்தனை அரசர்களையும் இருவருக்கும் பின்னால் கொண்டுவந்து நிறுத்தினானே படைப்பாளி, அதுதானே குருஷேத்திரத்தின் ரத்தத்தை எல்லா நிலத்திலும் சிந்தப்பட்ட ரத்தமாக மாற்றுகிறது. முக்கியமான போர்த் தந்திரம் என்பது போருக்குள் செய்வதல்ல, போரின் மூலம் செய்வது.”

“சங்ககால ‘வேள்பாரி’யைப் பற்றி பேசுவது, சமகாலத்தில் என்ன பொருத்தப்பாடுடையது?”


“இயற்கைக்கும் மனிதனின் பேராசைக்கும் இடையில் நடந்த போராட்டத்தின் கதைதான் வேள்பாரியின் கதை. அதுதானே இன்றைய காலத்தின் கதையும். பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராக, கொடூரமான அரசுகளுக்கு எதிராக இயற்கையை இறுகப் பற்றிக்கொண்டு கதறும் மனிதக் கதறல் நிலமெங்கும் கேட்டுக்கொண்டே தானே இருக்கிறது. பற்றிப் படர முல்லைக்குத் தேர் ஈந்தவனின் மீது, மூவேந்தர்களின் போராயுதங்கள் நீண்டதே... அது என்ன கடந்த காலத்தின் கதையா? எளியவர்களின் கண்ணீரை வெட்டும் வாள், வலியவனின் கையில் காலம் முழுவதும் இருந்திருக்கிறது. அதுபோலத்தான் வலியவனால் அழிக்க முடியாத எளியவனின் குரல், காலம் கடந்து ஒலிக்கிறது. அதுதான் மானுடத்தை உய்விக்கும் அறத்தின் குரல். அது அறுபடப்போவதில்லை. அதனால்தான், ஈராயிரம் ஆண்டுகளாக வேள்பாரியின் கதையைத் தமிழ்ச் சமூகம் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக் கொண்டே வருகிறது. இப்போதும் வீரயுக நாயகன் வேள்பாரியின் மூலமும் அது தன்னை நினைவு படுத்திக்கொள்கிறது.”

“இதுவரை தமிழகத்தில் நடத்தப்பட்ட அகழாய்வுகளில் ‘கீழடி’ எந்த விதத்தில் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது?”

“சங்க காலத்தில் நம்மிடம் ஒரு முழுமையான நகர நாகரிகம் இருந்ததற்கான சான்று இதுவரை நமக்குக் கிடைக்கவில்லை. தமிழகத்தில், இதுவரை தொல்லியல் ஆய்வுகள் நடந்த பெரும்பான்மையான இடங்களில் இடுகாடுகள்தான் கண்டறியப்
பட்டன. அதிலிருந்து முதுமக்கள் தாழி, சடங்கு சார்ந்த தொல்லியல் பொருள்கள் கிடைத்தன. அத்தோடு, ஒரு நகர நாகரிகத்தின் சின்னச் சின்ன அடையாளங்கள் மட்டுமே கிடைத்தன. எனவே, சங்க கால வாழ்வென்பது ஒரு அரைப்பழங்குடி நாகரிகமாக இருந்திருக்கத்தான் வாய்ப்புள்ளது. ஹரப்பா, மொகஞ்சதாரோ போல ஒரு முழுமையான நகர நாகரிகம் இருந்திருக்க வாய்ப்பில்லை என்றே தொல்லியல் அறிஞர்களால் நம்பப்பட்டு வந்தது. ஆனால், கீழடியில் முதன்முறையாக ஒரு சங்ககால நகரம் முழுமையாகக் கண்டறியப்பட்டிருக்கிறது. அதன் கட்டட முறை, கால்வாய் அமைப்பு, (திறந்த வடிகால், மூடிய வடிகால், குழாய்வடிவ வடிகால்) தொழிற்சாலைகள், வீடுகளில் புழங்கிய பொருள்கள் எனப் பல ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. சங்க இலக்கியம் பாடுகிற வாழ்க்கை கற்பனை அன்று, அது வரலாற்றுப்பூர்வமான உண்மை என்று சான்றளிக்கும் புதையலே கீழடி அகழாய்வு முடிவுகள். மட்டுமில்லாமல், இரும்புக் காலம் தொடங்கி வரலாற்றுக் காலம் வரை தொடர்ச்சியாக ஆதாரங்கள் கிடைக்கும் இடமாக கீழடி இருக்கிறது. இது பல உண்மைகளுக்கான வாசல்களைத் திறந்துவைக்கும்.”  

“இலக்கியம் என்பது காலத்தின்மீது எறிகிற கல்!” - சு.வெங்கடேசன்

“ ‘கதைகள்தான் நல்ல மனிதர்களின் கடைசி நம்பிக்கை’ என்று  ஓரிடத்தில்  எழுதியிருக்கிறீர்கள்? கதைகள் ஒரு சமூகத்துக்கு எவ்வளவு முக்கியம்? ஒரு சமூகத்தைக் கதைகள் எவ்வளவு பாதிக்கின்றன?”

“மனிதன் தனது உடல் உறுப்புகள் அனைத்தின் செயல்பாடுகளையும் கண்டறியவும் சரிசெய்யவும் கருவிகளை உருவாக்கிவிட்டான். ஒரு ஸ்கேன் எடுத்தால் போதும்; உடலின் ஒவ்வோர் உறுப்பின் செயல்பாடும் கண்டறியப்பட்டுவிடும். ஆனால், மனித மனத்தின் செயல்பாட்டைக் கண்டறிய மனிதனிடம் இருக்கும் ஒரே கருவி, இலக்கியம் மட்டும்தான். அதன் வழியேதான் மனதுக்குள் கிடக்கும் குப்பைகளை அகற்றவும் மனதை வென்றெடுக்கவும் செழுமைப்படுத்தவும் முடியும். அதனால்தான், இத்தனை ஆயிரம் ஆண்டுகளாகக் கதைகள் சலிக்காமல் தேவைப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. அதனை நம்புவதைத் தவிர, நமக்கு வேறு நம்பிக்கை இல்லை.”

“2,000 வருடங்களுக்கும் மேலான தொன்மையான தமிழை, தமிழ் இலக்கியத்தை, தமிழ்ப் படைப்பாளிகள் சரியான திசையில்தான் இழுத்துச் சென்றுகொண்டிருக்கிறார்களா?”

“படைப்பை வழங்குவதே ஒரு மொழிக்கான மிக முக்கியமான பங்களிப்புதான். அதேநேரம், காலத்தின் தேவைக்கேற்ப பல பகுதிகளை நாம் எழுதத் தவறிவிட்டோம் என்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக இவ்வளவு பல்கலைக்கழகங்கள், பேராசிரியர்கள், கல்வியியல் அறிஞர்கள் போன்றவர்களெல்லாம் இந்த மொழிக்குப் பங்களித்ததை விட, வாழ்க்கைப் போராட்டத்தினூடே தமிழ் எழுத்தாளன் செய்த பங்களிப்பு மிக முக்கியமானது என்பதில் சந்தேகமே இல்லை. ஜி.நாகராஜனிலிருந்து முதல் தொகுப்போடு உள்நுழைந்துள்ள அ.கரீம் வரை மொழியை உயிரெனப் பிடித்துக்கொண்டு தொங்குகிறான் அல்லவா? மந்திரம்போல சொல் வேண்டும் என்கிற கனவை யாரும் கைவிடவில்லையே. படைப்பாளிகள் தமிழ் மொழியின் சுடரை ஒளிகூட்டத் தொடர்ந்து முயல்கிறார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.”

 “இன்றைய நாவல்வெளி எப்படி இருக்கிறது?”

“கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் நாவல் வெளி, ஒரு பெரும்பரப்பைப் புதுப்பாய்ச்சலில் அடைந்திருக்கிறது.  ‘கொரில்லா’, ‘ஆழிசூல் உலகு’, ‘சோளகர் தொட்டி’, ‘கூள மாதாரி’, ‘கூகை’, ‘கீதாரி’, ‘அஞ்சலை’, ‘காவல்கோட்டம்’, ‘தாண்டவராயன் கதை’, ‘அஞ்ஞாடி’, ‘கருப்பர் நகரம்’, ‘காலகண்டம்’, ‘BOX கதைப் புத்தகம்’, ‘ஆதிரை’, ‘பார்த்தீனியம்’, ‘கசகறணம்’, ‘வெல்லிங்டன்’ எனப் பதினைந்துக்கும் மேற்பட்ட நாவல்களைச் சொல்லலாம். இவை இதுவரை தமிழில் பேசப்படாத புதிய நிலப்பரப்பை, வாழ்வியலை, போரின் பேரழிவைத் தன்னுள் கொண்டுள்ளன. தமிழிலக்கியத்தின் சாதனைகள் நாவல்களிலேதான் நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன.”

“ஒரு நாவலுக்கு எடிட்டர் மிகவும் அவசியமா?”

“கண்டிப்பாக. தமிழில் பிரதி மேம்படுத்துநர்கள் இல்லாதது பெரிய குறை என்பதை ஓர் எழுத்தாளனாகக் கவலையுடன் பகிர்ந்துகொள்கிறேன். படைப்புக்கு உள்ளிருந்து விரிய வேண்டிய கிளைகளை எழுத்தாளன் எப்படி அடைத்துக்கொண்டு நிற்கிறான் என்பதையும், திரும்ப வேண்டிய இடம் தெரியாமல் வெட்டியாக அலைந்து திரிந்திருக்கிறான் என்பதையும், எடிட்டரின் சிறிய கேள்வியால் படைப்பாளி கண்டறிந்து விடுவான். ஒரு நாவலைப் படிக்கும்போது எடிட்டரின் பங்களிப்பு இல்லாததை எளிதில் கண்டறிந்துவிடலாம்.  எடிட்டரின் பங்களிப்போடு உருவாக்கப்பட்ட நாவலில் எடிட்டரைக் கண்டறிய முடியாது. அந்த அளவுக்கு அவன் படைப்பாளிக்குள் மறைந்து கொள்ளக் கூடியவன்.”

“தமிழில் விமர்சனத் துறை ஏன் வளராமல் போயிற்று?”


“கல்விப்புலத்தின் தகுதியின்மை, சூழலில் ஏற்படுத்தும் வீழ்ச்சியை விமர்சனத்துறையின் மூலம் தெளிவாகப் பார்க்கலாம். நவீனத் தமிழ் இலக்கியங்களைப் பரிசீலிக்கத் திறன்படைத்த கல்வியாளர்கள் ஏறக்குறைய இல்லாமலே போய்விட்டார்கள். ‘ஒரு தலைக்கட்டே அழிஞ்சு போச்சப்பா” என்று ஆற்றாமையைத்தான் வெளிப்படுத்த வேண்டியுள்ளது. எழுத்தாளர்கள் அறிமுகப்படுத்தும் படைப்பும், நட்பின் பொருட்டு எழுதப்படும் நூல் அறிமுகங்களும், பதிப்பகம்சார் மதிப்புரைகளும்தான் வெளிவருகின்றன. ந.முருகேசபாண்டியன், மணிமாறன் போன்ற மிகமிகச் சில விதிவிலக்குகள் மட்டுமே உண்டு. இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது எழுத்தாளர் ஜெயமோகனை. நேரெதிர் அரசியல் நிலைபாடுகளைக் கொண்டிருந்தாலும் படைப்பின் அழகியல், ரசனை, கட்டமைப்பு பற்றி அவர் எழுதி வருதல் விமர்சனத் துறைக்கான மிக முக்கியப் பங்களிப்பு என்று நினைக்கிறேன்.”   

“இலக்கியம் என்பது காலத்தின்மீது எறிகிற கல்!” - சு.வெங்கடேசன்

“ ‘காவல்கோட்டம்’ நாவல் குறித்து எஸ்.ராமகிருஷ்ணன் ஒரு விமர்சனம் எழுதியிருந்தார். அந்த விமர்சனம் குறித்த உங்களது மனப்பதிவு என்ன?”

“ ‘பாட்டா கடைக்கு முன்னால் தொங்குகிற பெரிய சைஸ் செருப்பு போன்றது இந்தப் புத்தகம்’ என்று ஓர் எழுத்தாளன், ஓர் இலக்கியத்தைப்பற்றி எழுதியதை விமர்சனம் என்று எப்படிச் சொல்வீர்கள். அது விமர்சனம் அல்ல; வசை. மிகுந்த வலியை ஏற்படுத்தியது. ஆனாலும், காலத்தின் வழியாக அதைக் கடந்து வந்துவிட்டேன். இதற்கு மேல் அதைப்பற்றிப் பேச விரும்பவில்லை.” 

“உங்களுடைய  எழுத்துப்  பணிக்காக நீங்கள் பெற்ற முக்கியமான அங்கீகாரம் என்று எதைக் கருதுகிறீர்கள்?”

“பெரும்வாசகப் பரப்பு. இன்றளவும் சில நூறு பிரதிகள் விற்பனையைத் தாண்டாமல்தான் நவீன இலக்கியத்தின் நிலமை இருக்கிறது. ஆனால், ‘காவல்கோட்ட’த்தின் விற்பனை லட்சம் பிரதிகளைத் தொட்டு நிற்கிறது. தமிழ்ச்சூழலில் இது அசாதாரணமான ஒன்று. அது ஏற்படுத்திய வாசகப் பரப்பும் அதனுடன் நிகழ்ந்துகொண்டிருக்கும் தொடர் உரையாடலும்தான் ‘வேள்பாரி’யை அதைக் கடந்த பரப்பிற்கு எடுத்துச் சென்றிருக்கிறது. ஓர் எழுத்தாளனுக்கு இதைவிடப் பெரும் அங்கீகாரம் என்னவாக இருக்க முடியும்?”

“இவ்வளவு பணிகளுக்கு மத்தியில் எப்படிப் படைப்புப் பணியில் தொடர்ந்து ஈடுபடுகிறீர்கள்?”


“முட்டையிடும் காலம் நெருங்கியதும் சுள்ளி தேடி, கூடமைத்து, பொருத்தமான நேரத்தில் வந்து வாகாக உட்கார்ந்து முட்டையிடும் பறவைகள் உண்டு. வேள்பாரியில் எழுதியுள்ள பகிரி போன்ற பறவையும் உண்டு. அது பறக்கும்போதே முட்டையிட்டுச் செல்லும். அதற்கு என்ன அவசரமோ, எங்கே எந்தக் கூட்டத்துக்குப் போகணுமோ, எந்தப் பிரச்னைக்கு முகங்கொடுக்கணுமோ யார் அறிவார்? ஒரே ஆறுதல், பகிரியிடும் முட்டைகள் உள்ளுக்குள் அன்றி வெளிப்புறத்தால் உடைக்க முடியாத கூடமைப்பைக் கொண்டது. எனவே, ஒருபோதும் உடைந்து வீணாகாது, உயிர்கொண்டே தீரும்.”