Published:Updated:

“ஒரிஜினல் லைசென்ஸ் கேட்பது இதற்காகத்தான்!”

“ஒரிஜினல் லைசென்ஸ் கேட்பது இதற்காகத்தான்!”
பிரீமியம் ஸ்டோரி
“ஒரிஜினல் லைசென்ஸ் கேட்பது இதற்காகத்தான்!”

காரணம் சொல்லும் கூடுதல் கமிஷனர்

“ஒரிஜினல் லைசென்ஸ் கேட்பது இதற்காகத்தான்!”

காரணம் சொல்லும் கூடுதல் கமிஷனர்

Published:Updated:
“ஒரிஜினல் லைசென்ஸ் கேட்பது இதற்காகத்தான்!”
பிரீமியம் ஸ்டோரி
“ஒரிஜினல் லைசென்ஸ் கேட்பது இதற்காகத்தான்!”

‘‘உங்க பாக்கெட்ல லைசென்ஸ் இருக்கா?’’ - கடந்த 1-ம் தேதியிலிருந்து தமிழக டிராஃபிக் போலீஸாரின் வைரல் வார்த்தைகளாக மாறிய டயலாக் இது. மற்ற எல்லா போக்குவரத்துக் குற்றங்களைவிடவும் மிக மோசமான குற்றமாக இன்றைய தேதியில் கருதப்படுவது இதுதான். ‘வாகனங்களை ஓட்டும்போது அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும். செப்டம்பர் 1-ம் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது’ என்ற தமிழக அரசின் உத்தரவு, டூ-வீலர் ஓட்டும் எளிய மக்களிடம் மட்டுமின்றி, ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்களிடமும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அரசின் உத்தரவைத் தொடர்ந்து சென்னை போக்குவரத்து போலீஸார் வெளியிட்ட அறிக்கையில், ‘உரிய ஓட்டுநர் உரிமம் இல்லாமல் மோட்டார் வாகனங்களை ஓட்டக் கூடாது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சீருடையில் உள்ள போலீஸாரிடம், ஓட்டுநர்கள் தங்களின் அசல் ஓட்டுநர் உரிமங்களைக் கட்டாயமாகக் காட்ட வேண்டும். தவறினால், மூன்று மாதங்கள் சிறைத் தண்டனை அல்லது ஐந்நூறு ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இவ்விரண்டும் சேர்த்துக்கூட தண்டனையாக விதிக்கப் படலாம்’ என்று கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன மாநிலத் தலைவர் ஆர்.சுகுமாரிடம் கேட்டோம். அவர், ‘‘இது ஒரு மோசமான உத்தரவு. இந்த உத்தரவால் லஞ்சம் அதிகரிக்கும். தமிழ்நாட்டில் பல ஆயிரம் கிலோமீட்டர் நெடுஞ்சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன. அதனால்தான் அதிக விபத்துகள் நிகழ்கின்றன. இந்த நிலையில், ஒரிஜினல் லைசென்ஸைக் கையில் வைத்திருந்தால் விபத்து களிலிருந்து தப்பித்துவிட முடியுமா? லைசென்ஸ் நம்பரை வைத்துக்கொண்டு ஒரே நிமிடத்தில், சம்பந்தப்பட்டவரின் புகைப்படத்துடன் அந்த ஓட்டுநரின் அனைத்து விவரங்களையும் கணினியில் அறிந்துகொள்ள முடியும். பல மாநிலங்களில் இந்த வசதி உள்ளது. இது தமிழ்நாட்டில் இல்லை. அரசு முதலில் செய்ய வேண்டியது இதைத்தான். இப்படி ஆயிரம் குறைகளை வைத்துக்கொண்டு ஒரிஜினல் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது நியாயமல்ல” என்றார்.

“ஒரிஜினல் லைசென்ஸ் கேட்பது இதற்காகத்தான்!”

இதுகுறித்து, ஆட்டோ தொழிலாளர் சம்மேளன (சி.ஐ.டி.யு) மாநிலப் பொதுச்செயலாளர் மு.சிவாஜி யிடம் கேட்டபோது, “ஓட்டுநர்களின் வாழ்வுரிமை யைப் பறிக்கும் உத்தரவு இது. ஒட்டுமொத்த மோட்டார் தொழிலையும் சாதாரண மக்களிடமிருந்து பிடுங்கி, கார்ப்பரேட்களிடம் ஒப்படைப்பதற்காக மோட்டார் வாகனச் சட்டத்தில் மோசமான பல திருத்தங்களை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இச்சட்டம் நாடாளுமன்றத்தில் இன்னும் நிறைவேற்றப்படாத நிலையிலேயே, அதன் பல மோசமான அம்சங்கள் அமலாக ஆரம்பித்துள்ளன. அதன் ஒரு பகுதிதான், ‘அசல் உரிமங்களைக் கையில் வைத்திருக்க வேண்டும்’ என்ற உத்தரவு. இத்துடன், ‘அனைத்து ஆவணங்களின் ஒரிஜினலையும் எப்போதும் கையில் வைத்திருக்க வேண்டும்’ என்றும் சொல்கிறார்கள். பலரும் கடனில் தான் வண்டி வாங்குகிறார்கள். வாகனங்களின் ஒரிஜினல் ஆவணங்கள் பெரும்பாலும் ஃபைனான்ஸ் நிறுவனங்களில்தான் உள்ளன. இந்த நிலையில், இந்த உத்தரவு கடும் சிக்கலை உருவாக்கும். கந்துவட்டி நிறுவனங்களாகச் செயல்படும் ஃபைனான்ஸ் நிறுவனங்களால் ஆட்டோ தொழிலாளர்களும், கால் டாக்ஸி ஓட்டுநர்களும் கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கப் படுவார்கள். சொந்த வாகனங்களை இழக்கும் சூழலுக்கும் தள்ளப்படுவார்கள். எனவே, இந்த உத்தரவைத் திரும்பப்பெற்று, பழைய நடைமுறையையே கடைப்பிடிக்க வேண்டும்” என்றார்.

“தனியார் கால் டாக்ஸி நிறுவனங்களில் பணியாற்றும் ஓட்டுநர்கள், தங்களின் அசல் ஓட்டுநர் உரிமங்களை நிறுவனங்களிடம் கொடுத்து விட்டு, உரிமத்தின் கலர் ஜெராக்ஸை மட்டுமே கையில் வைத்துக்கொண்டு கார் ஓட்டுகிறார்கள். அந்தவகையில் ஒரு லட்சம் கார் ஓட்டுநர்கள் சென்னையில் மட்டுமே இருக்கிறார்கள். அப்படியிருக்கும்போது, அசல் உரிமங்களை வைத்திருக்க வேண்டும் என்பது சரியா?” என்று போக்குவரத்துத் துறை இணை ஆணையர் வீரபாண்டியனிடம் நாம் கேட்டதற்கு, “செப்டம்பர் 1 முதல் இந்தச் சட்டம் நடைமுறைக்கு வருகிறது. மேல் விவரங்களை நீங்கள் போலீஸ் கமிஷனரைக் கேட்டுக்கொள்ளுங்கள். அவர்தான் இதை நடைமுறைப்படுத்துகிறவர்” என முடித்துக் கொண்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“ஒரிஜினல் லைசென்ஸ் கேட்பது இதற்காகத்தான்!”

சென்னை போக்குவரத்துக் கூடுதல் போலீஸ் கமிஷனர் பெரியய்யாவிடம் கேட்டோம். “அசல் உரிமத்தை வாகன ஓட்டிகள் கையில் வைத்திருக்க வேண்டும் என்பது ஏற்கெனவே சட்டத்தில் உள்ளது. அது புதிதல்ல. அதிக வேகம், சிக்னலை மதிக்காதது, ஹெல்மெட் இல்லாத பயணம், சீட் பெல்ட் போடாதது, குடிபோதையில் வாகனத்தை இயக்குதல், அதிகச் சுமைகளுடன் வாகனத்தை இயக்குதல் போன்ற விதிமீறல்கள் எப்போதும் போலவே கண்காணிக்கப்படும். அப்போது, அசல் உரிமம் கேட்க வேண்டிய சூழ்நிலை வரும். மோட்டார் வாகன ஓட்டிகள் செய்கிற முக்கியமான ஆறு குற்றங்கள்மீது நடவடிக்கை மேற்கொள்ள உச்ச நீதிமன்றக் கமிட்டி அறிவுறுத்தியுள்ளது. இப்படியான குற்றங்களைச் செய்து எங்களிடம் பிடிபட்ட ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேரில், வெறும் ஐயாயிரம் பேர்தான் அசல் உரிமங்களை வைத்திருந்தனர். சாலைகளில் நடந்துபோகும் மக்களின் உயிரைக்காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது. அதற்காகத்தான் இந்த அசல் உரிமம்” என்றார்.

‘சாலையில் நடந்துபோக ஆதார் கார்டு வேண்டும்’ என்றும் இனியொரு விதி வருமோ?!

- ந.பா.சேதுராமன்
படம்: வீ.சதீஷ்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism