Published:Updated:

எழுதி வாங்கும் வேலைதான் பாக்கி!

எழுதி வாங்கும் வேலைதான் பாக்கி!
பிரீமியம் ஸ்டோரி
எழுதி வாங்கும் வேலைதான் பாக்கி!

கார்த்தி சிதம்பரம் மீது இறுகும் சி.பி.ஐ பிடி

எழுதி வாங்கும் வேலைதான் பாக்கி!

கார்த்தி சிதம்பரம் மீது இறுகும் சி.பி.ஐ பிடி

Published:Updated:
எழுதி வாங்கும் வேலைதான் பாக்கி!
பிரீமியம் ஸ்டோரி
எழுதி வாங்கும் வேலைதான் பாக்கி!

“எதிர்க்கட்சித் தலைவர்களின் மதிப்பைக் குலைக்க, மாநிலக் கட்சிகளை இரண்டாக உடைக்க, மாநிலங்களில் வேறு கட்சிகள் நடத்தும் ஆட்சிகளைக் கலைக்க... சி.பி.ஐ ரெய்டை ஆயுதமாகப் பயன்படுத்துகிறது பி.ஜே.பி” - இது சி.பி.ஐ ரெய்டுக்கு உள்ளானவர்களின் குற்றச்சாட்டு. “தவறே செய்யாதவர்கள் என்றால், சி.பி.ஐ விசாரணையை தைரியமாக எதிர்கொள்ள வேண்டியதுதானே?” என்று எதிர்க்கேள்வி எழுப்புகிறது பி.ஜே.பி. இந்த இரு குற்றச்சாட்டுகளிலும் அர்த்தம் இருக்கிறது என்பதை நிரூபிக்கிறது கார்த்தி சிதம்பரம் விவகாரம்.  

“கார்த்தி சிதம்பரத்துக்குச் சொந்தமானது ‘அட்வான்டேஜ் ஸ்ட்ராடெஜிக் கன்சல்டிங் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனம். இது, ஐ.என்.எக்ஸ் மீடியா என்ற மும்பை நிறுவனத்துக்குக் கட்டணம் வாங்கிக்கொண்டு ஆலோசனைகள் வழங்கி வந்தது. இந்த நிலையில், ஐ.என்.எக்ஸ் நிறுவனம், ‘வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரிய’த்தின் (Foreign Investment Promotion Board - FIPB) விதிமுறைகளை மீறி 305 கோடி ரூபாய்க்கும் மேலாக வெளிநாட்டு முதலீடுகளைப் பெற்றது எனக் குற்றச்சாட்டு எழுந்தது. அந்தக் குற்றச்சாட்டு குறித்து FIPB அமைப்பு, ஐ.என்.எக்ஸ் மீடியாவிடம் விளக்கம் கேட்டது. அதில், கார்த்தி சிதம்பரம் தலையிட்டுச் சில ஆலோசனைகளை ஐ.என்.எக்ஸ் மீடியாவுக்கு வழங்கினார். அதோடு, அந்தக் காலகட்டத்தில் நிதியமைச்சராக இருந்த தன் தந்தை ப.சிதம்பரத்தின் உதவியோடு, நிதி அமைச்சகத்தின் விதிமுறைகளையும் மீறி, ஐ.என்.எக்ஸ் மீடியாவை வெளிநாட்டு முதலீட்டு விவகாரத்திலிருந்து காப்பாற்றினார். அதற்குக் கைமாறாக, பெரும் தொகை ஒன்றைக் கட்டணமாகப் பெற்றார்” என்பது சி.பி.ஐ-யின் குற்றச்சாட்டு.

எழுதி வாங்கும் வேலைதான் பாக்கி!

இதற்கான ஆதாரங்கள் கடந்த மே மாதம் கார்த்தி சிதம்பரத்தின் வீடு மற்றும் அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் சி.பி.ஐ சொல்கிறது. இதைக் கடுமையாக மறுக்கும் சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம், ``இது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை. எங்கள் குடும்பத்தை இழிவுபடுத்த மத்திய பி.ஜே.பி அரசு, சி.பி.ஐ-யைக் கருவியாகப் பயன்படுத்துகிறது” என்று எதிர் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த நிலையில், கார்த்தி சிதம்பரத்தின்மீது இந்திய தண்டனைச் சட்டம் 120பி (கூட்டுச் சதி), 420 (ஏமாற்றுதல்), ஊழல் தடுப்புச் சட்டம் 13(2), 13(1) ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சம்மன் அனுப்பப்பட்டும், அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. எனவே, கார்த்தி சிதம்பரத்தைத் தேடப்படும் நபராக அறிவித்து, அனைத்து விமான நிலையங்களுக்கும் ‘லுக் அவுட்’ சர்க்குலர் அனுப்பியது மத்திய உள்துறை அமைச்சகம். இதை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மத்திய உள்துறையின் நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்தது. அதன்பிறகு, மத்திய உள்துறை சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவை ஆகஸ்ட் 17-ம் தேதி விசாரித்த நீதிபதிகள் ஜெ.எஸ்.கேஹர், டி.ஒய்.சந்திராசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு, “கார்த்தி சிதம்பரம் விசாரணைக்கு ஆஜராவதில் என்ன சிக்கல்? அவர் தவறு எதுவும் செய்யவில்லை என்றால், விசாரணைக்கு ஆஜராக வேண்டியதுதானே? இந்த விவகாரத்தில் கார்த்தி சிதம்பரத்திடம் முழு விசாரணை நடத்த சி.பி.ஐ-க்கு நீதிமன்றம் முழு சுதந்திரம் அளிக்கிறது. தேவைப்பட்டால் கார்த்தி சிதம்பரத்தைக் கைது செய்யவும் சி.பி.ஐ-க்கு அனுமதி கொடுக்கப்படுகிறது” என்று உத்தரவிட்டனர்.

இதையடுத்து, கார்த்தி சிதம்பரம் டெல்லியில் உள்ள சி.பி.ஐ அலுவலகத்தில், கடந்த 23-ம் தேதியும், 28-ம் தேதியும் ஆஜரானார். இரண்டு நாள்களும் தலா எட்டு மணி நேரத்துக்கு மேலாக அவரிடம் விசாரணை நடைபெற்றது. ஆனால், கார்த்தி சிதம்பரத்திடமிருந்து பெறுவதற்கு சி.பி.ஐ-க்கு எந்த விஷயமும் பாக்கி இல்லை. ஏனென்றால், அதற்கு முன்பு சி.பி.ஐ விசாரணைக்கு வந்த ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவன இயக்குநர்கள் இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி ஆகியோர் அனைத்து விவகாரங்களையும் ஒப்பித்துவிட்டனர். அவர்கள் சொன்ன விவரங்களை கார்த்தி சிதம்பரத்திடம் எழுதிவாங்கும் வேலைதான் இந்த சி.பி.ஐ விசாரணை. போதாக்குறைக்கு ‘அட்வான்டேஜ் ஸ்ட்ராடெஜிக்’ நிறுவனத்தின் பொறுப்பில் உள்ளவர்களின் உயில்கள், அவை கார்த்தி சிதம்பரத்தின் மகள் பெயருக்கு மாற்றி எழுதப்பட்ட விவகாரம், அந்த நிறுவனத்தின் மெயில் ஐ.டி-க்கு ஐ.என்.எக்ஸ் மீடியாவிலிருந்து வந்த மெயில்கள் என அனைத்து விவரங்களும் சி.பி.ஐ வசம் ஏற்கெனவே உள்ளன.

பெரும்பாடுபட்டு ஏர்செல்-மேக்ஸிஸ் வழக்கில் விடுதலையான கார்த்தி சிதம்பரம், இந்த விவகாரத்திலிருந்து தப்புவதற்கான வழிகள் குறைவு என்கிறது டெல்லி சி.பி.ஐ வட்டாரம். இப்போதைக்கு அவர் தேடப்படும் நபராகவும், வெளிநாட்டுப் பணப் பரிவர்த்தனை ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவராகவும் தொடர்கிறார்.

‘பி.ஜே.பி செய்வது தவறு’ என்று ப.சிதம்பரமும், ‘ப.சிதம்பரம் சொல்வது தவறு’ பி.ஜே.பி-யும் சொல்லி வருகிறார்கள்.

- ஜோ.ஸ்டாலின்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism