Published:Updated:

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 7

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 7
பிரீமியம் ஸ்டோரி
கிறுக்கு ராஜாக்களின் கதை! - 7

முகில்

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 7

முகில்

Published:Updated:
கிறுக்கு ராஜாக்களின் கதை! - 7
பிரீமியம் ஸ்டோரி
கிறுக்கு ராஜாக்களின் கதை! - 7
கிறுக்கு ராஜாக்களின் கதை! - 7

ரணகள ரனவலோனா!

டகாஸ்கர். உலகின் நான்காவது பெரிய தீவு. ஆப்பிரிக்கக் கண்டத்தின் தென்கிழக்கில் அமைந்துள்ள, இயற்கையின் சகல அழகும் கொட்டிக் கிடக்கும் திமிரெடுத்த தீவு. உலகில் வேறெங்குமே காண இயலாத அபூர்வத் தாவர வகைகளும், அரிய விலங்கினங்களும் இங்கே அதிகம். அதேபோலொரு அபூர்வப்பிறவியாக, அரிய குணங்கள் கொண்ட ராணியாக, ‘இப்படியும் ஒருத்தி வாழ்ந்திருக்க முடியுமா’ என்ற பதைபதைப்பைக் கிளப்பும் ஒருத்தி இந்த மடகாஸ்கரை ஆண்டு, அழுத்தமாகத் தன் முத்திரையைப் பதித்துவிட்டுச் சென்றிருக்கிறாள்.

(‘என்னது, கிறுக்கு ராஜாக்களின் கதையில் ராணியா’ எனக் கேள்வி எழலாம். சிறு விளக்கம். தலைப்பிலுள்ள ‘ராஜா’ என்பது ஒரு குறியீடு. அதற்குள் ராஜா, ராணி தொடங்கி அறமற்ற ஆட்சியாளர்கள், சர்வதேச சர்வாதிகாரிகள், தற்கால தற்குறி அதிபர்கள் வரை சகலரும் அடக்கம்!)

கி.பி. 1869-ல்தான் சூயஸ் கால்வாய் திறக்கப்பட்டது. அதற்கு முன்பெல்லாம் ஐரோப்பியர்கள் கடல் மார்க்கமாக இந்தியாவை அடைய வேண்டும் என்றால், ஆப்பிரிக்கக் கண்டத்தை முழுமையாகச் சுற்றித்தான் வரவேண்டும். அப்படிச் சுற்றி வந்த ஐரோப்பியர்கள், பதினாறாம் நூற்றாண்டில் மடகாஸ்கரைக் கண்டுகொண்டனர். ‘அட... ஓய்வெடுத்துச் செல்ல மிக அருமையான தீவு’ என்று குதூகலித்தனர். பதினேழாம் நூற்றாண்டில் பிரெஞ்சுக்காரர்கள் இங்கே காலனி அமைக்க வந்தனர். பிரிட்டிஷாரும் மோப்பம் பிடித்து வந்து சேர்ந்தனர். மடகாஸ்கரில் பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயராலே ஆமென் உரத்து ஒலிக்கத் தொடங்கியது.

அண்ட்ரியெனாம்போய்னிமெரினா - என்னவென்று யோசிக்க வேண்டாம். கி.பி. 1787-ல் மடகாஸ்கரின் மன்னராகப் பொறுப்பேற்றவரின் திருநாமம். அங்கும் ‘மெரினா’தான் பிரதானம். சமாதி உள்ள இடமல்ல. மன்னர் சார்ந்த இனத்தின் பெயர். பிளவுபட்டுக் கிடந்த தம் மெரினா இன மக்களை ‘தர்ம யுத்தம்’ நடத்தி ஒன்றாக்கி, மடகாஸ்கரில் மெரினா இனத்தின் ராஜ்ஜியத்தை உருவாக்கிய பிக்பாஸ் இவரே. அப்படி தர்மயுத்தம் நிகழ்த்திக் கொண்டிருந்தபோது, இவரைக் கொல்ல பகைவர்கள் சதிவலை பின்னியிருந்தனர். அன்பரது விசுவாசி ஒருவர் உரிய நேரத்தில் தகவல் சொல்லிக் காப்பாற்றினார். பகைவர்களுக்குப் பால் ஊற்றப்பட்டது.

பின்னர், அன்பர் மன்னராகப் பதவியேற்ற பின், விசுவாசியை அழைத்தார். ‘நான் இன்றைக்கு மன்னனாக இருப்பதற்கே இவன்தான் காரணம். இவனுக்கு ஆகப்பெரிய கௌரவத்தைத் தர வேண்டும்!’ அவரது நெஞ்சம் விம்மியது. ‘‘உன் மகளை நான் என் மகளாகத் தத்தெடுத்துக் கொள்கிறேன்.’’ விசுவாசியின் கண்கள் பனித்தன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 7

விசுவாசியின் மகளுடைய இயற்பெயர், ரமவோ. மெரினா இனத்தைச் சேர்ந்தவளே. மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்தவளுக்கு மன்னரின் கனிவால் இளவரசியாகும் வாய்ப்பு கனிந்தது. அவளுக்கு ‘ரனவலோனா’ என்ற புதிய பெயர் சூட்டப்பட்டது. மன்னர் அத்துடன் நிறுத்தவில்லை. மகளாக அறிவித்தவளை, உரிய வயதில் தன் மகன் இளவரசன் ரடாமாவுக்குத் திருமணம் செய்துவைத்து மருமகள் ஆக்கினார். இளவரசனுக்குப் பன்னிரண்டு பெண்டாட்டிகள். அதில் ரனவலோனாவே ‘அதிகாரபூர்வ முதல் பெண்டாட்டி’ என்று அறிவித்தார் அருமை மன்னர். அதாவது ‘ரடாமாவுக்கும் ரனவலோனாவுக்கும் ஆண் குழந்தை பிறந்தால், அதுவே ரடாமாவுக்கு அடுத்த ராஜ வாரிசு’ என்று அர்த்தம்.

என்ன காரணத்தாலோ, ரடாமாவுக்கு ரனவலோனா மேல், பிரியமோ, பியாரோ, பிரேமமோ பிறக்கவில்லை. ஆகவே அவர்களுக்குப் பிள்ளைகளும் பிறக்கவில்லை. 1810-ம் ஆண்டில் மன்னர் அண்ட்ரியெனாம்போய்னிமெரினா இறந்துபோனார். மடகாஸ்கரின் மன்னர் ‘முதலாம் ரடாமா’வாக இளவரசர் பதவியேற்றார். அவர் அரியணையைத் தக்க வைத்துக்கொள்ள சில பல தலைகளைக் காவு கொடுக்க வேண்டியதிருந்தது. அதில் ரனவலோனாவுக்கு நெருக்கமானவர்களும் அடக்கம்.

‘மடகாஸ்கரை முன்னேற்ற வேண்டும். அதற்கு ஐரோப்பியர்களின் உதவி தேவை’ என்பதே ரடாமாவின் எண்ணமாக இருந்தது. பிரெஞ்சுக்காரர்களும் பிரிட்டிஷ்காரர்களும் மடகாஸ்காரைத் தங்கள் காலனியாக வளைத்துப் போடும் வஞ்சக எண்ணத்துடன், ரடாமாவுக்கு ஆஃபர்களை அள்ளி வழங்கினர். அதில் ரடாமா, பிரிட்டிஷார் பக்கம் சாய்ந்தார். அவர்களுடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு கதவுகளைத் திறந்து விட்டார். மடகாஸ்கரில் பள்ளிகள் முளைத்தன. அவர்கள் மொழிக்கென்று எழுத்துரு உருவானது. கூடவே கிறிஸ்துவ மிஷினரிகளும் தேவாலயங்களும் பெருகின. மலகாஸி மொழி பேசும் மைந்தர்கள் மாற்று மதக் கடவுளை வணங்கிக்கொண்டு திரிவது ரனவலோனாவுக்குக் கடும் எரிச்சலைத் தந்தது. மலகாஸி மக்கள் தங்கள் தெய்வங்களை, கலாசாரத்தை, சடங்குகளை முற்றிலுமாகப் புறக்கணித்துவிடுவார்களோ என்று அஞ்சினாள். ஆனால், தன் கணவரே அதற்கு உறுதுணையாக இருக்கிறார் என்னும் நிஜமும் கசந்தது.
பால்வினை நோயால் பாதிக்கப்பட்ட மன்னர் முதலாம் ரடாமா, 1828, ஜூலை 27ல் இறந்து போனார். அவருக்கும் ரனவலோனாவுக்கும் மட்டுமல்ல, அவருக்கும் மற்ற எந்த மனைவிக்குமே வாரிசுகள் கிடையாது. ஆக, அவர்களது மரபுப்படி, ரடாமாவின் சகோதரி மகன் ரகோடோப் என்ற இளவரசனே அடுத்த மன்னராகப் பதவியேற்கத் தகுதியுடையவனாக இருந்தான். அவன் கிறிஸ்தவப் பள்ளியில் பாடம் பயின்றவன். தகுதியும் திறமையும் உடையவன். கிறிஸ்துவ மதத்தைத் தழுவியதால் அவனுக்கு ஐரோப்பியர்களின் ஆதரவு இருந்தது என்றும் ஒரு செய்தி உண்டு. அப்பேர்ப்பட்டவன் அரியணை ஏறுவதை, ராணி ரனவலோனா அவ்வளவு சீக்கிரம் அனுமதிப்பாளா என்ன? ரத்த ஆறு ஓடி ஓய்ந்த பிறகே அரியணை யாருக்கு என்பது முடிவுக்கு வரும் என்னும் பதற்றமான சூழ்நிலை. மன்னரோடு இறுதி நொடியில் இருந்த இரண்டு அதிகாரிகள், இறப்புச் செய்தியை வெளிப்படையாக அறிவிக்க முடியாமல் தவித்தனர். பிரேக்கிங் நியூஸைத் தவிர்த்தனர். ஆம், அப்போலோவில் மட்டுமல்ல... அன்றைக்கு அங்கேயும் தலைமை இறந்தபோது அதே நிலைதான்.

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 7

இருந்தாலும் ரனவலோனாவுக்குச் செய்தி கசிந்தது. மன்னர் இறந்ததைவிட, ‘இனி நாம் மடகாஸ்கரின் ராணியாகத் தொடர முடியாது’ என்பதே அவளுக்கு அதிகம் அதிர்ச்சி தந்தது.

‘இளவரசன் ரகோடோப் நம்மைக் கொல்வதற்கு சதி செய்வான். அதிலிருந்து பிழைத்தால் மட்டும் போதாது. அவனையே தீர்த்துக்கட்ட வேண்டும். அதற்கு நமக்கென்று ஒரு கூட்டத்தைச் சேர்க்க வேண்டும். அப்போதுதான் ஆட்டம் காட்டி அரியணையைக் கைப்பற்ற முடியும்.’ ரனவலோனா களமாடினாள். ‘கிறிஸ்துவத்தை மடகாஸ்கர் மண்ணிலிருந்து அடித்து விரட்டுவதே என் லட்சியம்’ என்று சூளுரைத்தாள். மலகாஸி பூசாரிகளின் அமோக ஆதரவு ராணிக்குக் கிடைத்தது. பழைமை விரும்பிகளும், கிறிஸ்துவத்தை எதிர்ப்பவர்களும், ரடாமாவின் பிரிட்டிஷ் ஜிங்ஜக் நடவடிக்கைகளால் மனக்கசப்பில் இருந்தவர்களும், ‘ராணியம்மா வாழ்க!’ என்று கொடி பிடித்துக்கொண்டு திரண்டனர். முக்கியமான அதிகாரிகள் சிலர், ராணியை ரகசிய இடத்தில் வைத்துப் பாதுகாத்தனர்.

ஆகஸ்ட் 11 அன்று வெளியே வந்த ரனவலோனா, ஆதரவுப் படை வீரர்களுடன் அரண்மனை நோக்கிச் சென்றாள். அரண்மனையையும் அதிகாரத்தையும் கைப்பற்றினாள். மக்கள் மத்தியில் பேசினாள். இன்றைக்கு ‘அம்மாவின் ஆன்மா’ போல, அன்றைக்கு தெய்வம்.

‘என் கனவில் நம் தெய்வங்கள் வந்தன. நானே மடகாஸ்கரின் அடுத்த ஆட்சியாளராக வேண்டுமென்று தெய்வங்கள் ஆணையிட்டன. நான் என் மலகாஸி மக்களின் நலனுக்காகவும், எனது பெயரை மகிமைப்படுத்தும் விதமாகவும் இந்த மண்ணை ஆளுவேன். நான் வணங்கும் என் முன்னோர்கள் என்னை வழிநடத்துவர். சுற்றிலும் இருக்கும் கடலே என் ராஜ்ஜியத்தின் எல்லை. அதில் ஒரு மயிரளவுகூட எதிரிகளுக்கு விட்டுக்கொடுக்க மாட்டேன்!’

ரனவலோனாவின் வார்த்தைகளில் மக்கள் மதி மயங்கி, நிலம் அதிர வாழ்த்தினர். மனதார அவளை ஆட்சியாளராக ஏற்றுக்கொண்டனர். சில தினங்களில் இளவரசன் ரகோடோப் பிடித்து வரப்பட்டான். அவன் கண் முன்னேயே அவனுக்குக் குழி தோண்டப்பட்டது. உடலெங்கும் ஈட்டிகள் பாய்ந்தன. புதைக்கப்பட்டான். ரடாமாவின் சகோதரி உள்ளிட்ட குடும்பத்தினரும் ஆதரவாளர்களும், இன்னபிற எதிரிகளும் விதவிதமாகத் தீர்த்துக் கட்டப்பட்டனர்.

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 7

அடுத்த காரியமாக தன் அருமைக் கணவனின் பூத உடலை வைத்து அனுதாப அரசியல் செய்ய ஆரம்பித்தாள் ரனவலோனா. அதை உடனே புதைக்கவில்லை. எல்லோரும் பார்வையிடக் கிடத்தினாள். உடலை ஈக்கள், பூச்சிகள் மொய்க்காமல் விசிறுவதற்கென்றே 24*7 அடிமைகள் நியமிக்கப்பட்டனர். துக்கம் அனுஷ்டிக்கும் விதமாக ஆண்கள் ஒவ்வொருவருமே மொட்டை அடிக்க வேண்டும் என்று கட்டளை பிறப்பித்தாள். (தலைமைக்காக, தொண்டர்கள் பச்சை குத்துவது, மொட்டை அடிப்பது எல்லாம் பாரம்பர்ய வழக்கம்தான்.) ‘இவை துக்க நாள்கள். ஆகவே, யாரும் குளிக்கக்கூடாது. கண்ணாடியில் முகம் பார்க்கக்கூடாது. நடனம் ஆடக்கூடாது. சிரிக்கக் கூடாது. இசைக்கக் கூடாது. கைதட்டக் கூடாது. தூங்கலாம். ஆனால், பாய் விரிக்கக்கூடாது. இவற்றை மீறினால் கடும் தண்டனைக்கு ஆளாக நேரிடும்; அல்லது வாழ்நாள் அடிமையாக்கப்படுவீர்கள்.’

இப்படி மக்களைக் கதற வைத்து, பல நாள்கள் துக்கத்தை அனுஷ்டித்துத் தொலைத்து மன்னரது உடலை ஒருவழியாகப் புதைத்தாள் ரனவலோனா. அதுவும் சாதாரணமாக அல்ல. சிவப்புப் பட்டுத்துணியாலான லம்பாவால் (அம்மக்களின் பாரம்பர்ய சால்வை) உடலைச் சுற்றி, வெள்ளியாலான சவப்பெட்டியில் வைத்துப் புதைத்தாள். மன்னருடன் புதைக்கப்பட்ட பிற பொருள்களின் பட்டியல்... அரிய ஐரோப்பிய ஓவியங்கள், ஆயிரக்கணக்கான நாணயங்கள், கல்லறைக்குள் அன்னாரின் ஆவி அணிந்து திரிய 80 செட் உடைகள், நகைகள், தங்கப் பாத்திரங்கள், மேசை, நாற்காலி, படுக்கை, கண்ணாடி, தண்ணீர்க்குடுவை, குவளை, கத்தி, வாள் உள்ளிட்ட ஆயுதங்கள், அப்புறம் ரம்.

மன்னர் இறந்து ஒரு வருடம் கழித்து, கண்ணுக்கெட்டிய தொலைவில் உள்ளூர் எதிரிகளே இல்லை என்று உறுதியான பிறகே மடகாஸ்கரின் மாண்புமிகு ராணியாக அரியணையில் அமர்ந்தாள் ரனவலோனா
(கி.பி.1828, ஆகஸ்ட் 12). அடுத்தது என்ன?

‘நான் ஒரு பிள்ளை பெற்றுக்கொள்ள வேண்டும்.’

(அடுத்த இதழிலும் ரனவலோனாவே வருவாள்...)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism