Published:Updated:

அனிதாவை எரித்த நெருப்பு! - கவிதை

விகடன் விமர்சனக்குழு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அனிதாவை எரித்த நெருப்பு! - கவிதை
அனிதாவை எரித்த நெருப்பு! - கவிதை

மனுஷ்ய புத்திரன் - படம்: ஜெ.வேங்கடராஜ்

பிரீமியம் ஸ்டோரி

நீதிகேட்கும் பயணத்தில்
மற்றவர்களுக்கு என்ன நடந்ததோ
அதுதான் அனிதாவுக்கும் நடந்தது
நீண்ட காயம்பட்ட இரவுகளுக்குப் பின்
கழுத்து அறுபட்ட பறவையாக
பாதி திறந்த கண்களுடன்
தூக்கில் தொங்கிக்கொண்டிருக்கிறாள்

அனிதா ஒரு மூட்டை தூக்குபவரின்
மகளாக இருந்தாள்
தங்கள் மேல் சுமத்தப்பட்ட
வரலாற்றுச் சுமையை
இறக்கிவைக்க விரும்பினாள்
நூற்றாண்டுகளாக
மூட்டை தூக்குபவர்கள்
தங்கள் விதியின் சுமையினால்
முதுகு வளைந்தவர்களாக இருந்தார்கள்
அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளும்
முதுகு வளைந்தே பிறந்தார்கள்
அவர்கள் எப்போதும்
ஒரு கடைமட்ட வேலையின்
நுகத்தடியில் பிணைக்கப்பட்டார்கள்

அனிதாவை எரித்த நெருப்பு! - கவிதை

வரலாற்றின் இந்த நோய்க்குத்தான்
அனிதா சிகிச்சையளிக்க விரும்பினாள்
அவளுக்கு வளைந்த முதுகுடன்
தாழ்ந்த கண்களுடன் நடந்துபோக விருப்பமில்லை
ஒரு மருத்துவராகி
அந்த நோய்க்குச் சிகிச்சையளிக்க விரும்பினாள்

மூட்டை தூக்குபவர்களின் பரம்பரையில்
எவரும் சுமந்திராத
அத்தனை கனத்த கனவை
சுமந்துகொண்டாள் அனிதா
நீங்கள் அவளை
எவ்வளவு எளிதாக அந்தரத்தில்
தொங்கவிட்டுவிட்டீர்கள்

சமமற்ற குதிரைகளுக்கிடையே
நீங்கள் நடத்திய
சமமற்ற ஒரு போலி பந்தயத்தில்
தோற்ற குதிரையைச் சுட்டுக்கொல்வதுபோல
அனிதாவை நீங்கள் கொலை செய்திருக்கிறீர்கள்
அவளுக்கு வைக்கப்பட்ட
எல்லா சவால்களிலும்
அனிதா வெற்றி பெற்றாள்
அவள் உயர்தரமான நவீன வகுப்பறைகளில்
படிக்கவில்லை
காற்றோட்டமான வீடுகளிலோ
அவளுக்கென்று தனி அறைகளிலோ
அவள் வசிக்கவில்லை
ஷாப்பிங் மால்களிலும்
திரையரங்குகளிலும்
கேளிக்கை விடுதிகளிலும்
தங்கள் மாணவ பருவத்தைக் கொண்டாடுபவர்களில்
அவள் ஒருத்தி அல்ல
ஊட்டச்சத்து குறைந்த உணவுடன்
மங்கலான வெளிச்சத்தில்
இரவெல்லாம் கண் விழித்து
சிறுகச் சிறுக உருவாக்கிய
கனவு அது
ஒரு எறும்பு ரகசியமாக இழுத்துச்சென்ற
இனிப்பு மலை அது

ஒரு காகிதத்தை
கசக்குவதுபோல
அந்தக் கனவை கசக்கினீர்கள்
அவள் ஏறிச்சென்ற
ஒரு சிகரத்தின் விளிம்பிலிருந்து
அவள் எதிர்பாராத ஒரு தருணத்தில்
அவளைத் தலைகுப்புறக் கீழே தள்ளினீர்கள்
மூட்டை தூக்குபவர்களின் மகன்கள்
மூட்டை தூக்குபவர்களாகவே இருக்க வேண்டும்
வீட்டுவேலை செய்பவர்களின் மகள்கள்
வீட்டு வேலைக்காரிகளாகத்தான் இருக்க வேண்டும்
அதை மீற முயல்கிறவர்கள்
தூக்கில் தொங்க வேண்டும்

அனிதா அவளது
அறையில் தூக்கிட்டுக்கொள்ளவில்லை
நீதிமன்றத்தின் முற்றத்தில்
அதிகாரத்தின் தூக்குமேடைக்கு
தேசமே பார்க்கும்படி
நீங்ககள்தான் அவளை
அழைத்துச் சென்றீர்கள்

இந்தத் தேசத்தில்
பொது நுழைவுத்தேர்வு என்ற பெயரால் நடத்தப்பட்ட
மாபெரும் துரோகத்தின் சூதாட்டம் அது
சாவை நோக்கி
அத்தனை உறுதியாக
அனிதாவை வழிநடத்தினீர்கள்
ரோஹித் வெமூலாவை எப்படி வழி நடத்தினீர்களோ
அதேபோல

வாடிவாசல் திறக்கத் தெருக்களில்
கூடியவர்கள்
ஒரு வரலாற்று அநீதியின் வழியே
சாவுக்களத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட
தங்கள் மகள்களுக்கு
தங்கள் மகன்களுக்கு
தூக்கில் தொங்கும் அனிதாக்களுக்கு
நீதி கேட்க மறுத்து ஏன் மெளனம் காக்கிறார்கள்?
ஏன் தங்கள் முகங்களை
திருப்பிக்கொள்கிறார்கள்?

அனிதாக்களின் சிதையில் எரியும் நெருப்பை
அவர்களின் கனவுகள்மேல் எரியும் நெருப்பை
அங்கேயே விட்டுவிட்டு
வீடு திரும்பப் போகிறோமா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு