Published:Updated:

அனிதா... பெண்களின் குரல்!

அனிதா... பெண்களின் குரல்!
பிரீமியம் ஸ்டோரி
News
அனிதா... பெண்களின் குரல்!

அனிதா... பெண்களின் குரல்!

டந்த வாரம் வரை அனிதாவை யாருக்கும் அடையாளம் தெரியாது. ஆனால், இந்த வாரத்தில் அழ வைக்கும் பெயராக மாற்றி விட்டார். ஸ்டெதஸ்கோப் தொங்க வேண்டிய கழுத்தில் கனவுகள் கருகிய வலியையும், ஆற்றாமையையும் தாங்க முடியாமல் தூக்குக் கயிற்றில் தொங்கியதால் தமிழகம் முழுவதையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது அனிதாவின் மரணம். அந்த மரணம் ஏற்படுத்திய மனவலிகளின் பதிவுகள் இவை:

அனிதா... பெண்களின் குரல்!

அனிதாக்களுக்கு லட்சியங்கள் உண்டு, லட்சங்கள் இல்லை!

சரியான நேரத்தில் மருத்துவ சேவை கிடைக்காததால் மரணித்த தன் அம்மாவின் நிலை வேறு யாருக்கும் வரக்கூடாது என்ற எண்ணம்தான் அனிதாவை மருத்துவம் படிக்க உந்தித் தள்ளியது. அதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, வறுமைக்கும் வலிகளுக்கும் இடையில் படித்து 1176 மதிப்பெண்கள் பெற்றார். அனிதா பெற்றவை, மதிப்பெண்கள் அல்ல. அது அவருடைய கனவுகளைத் திறக்கத் தகுந்த திறவுகோல். படிப்புதான் வாழ்க்கையை முன்னேற்றும் என்று எண்ணக்கூடிய சராசரி குடும்பங்களின் எதிர்பார்ப்புகள் மீது ஓர் இடியாக இறங்கியிருக்கிறது நீட் தேர்வு.

நம்முடைய தேர்வு முறையையும் பாடத்திட்டத்தையும் போட்டித் தேர்வுகளுக்கு ஏற்றபடி மாற்றி அமைத்தால், மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த பிள்ளைகளும் வெற்றிபெற முடியும். ஆனால், பயிற்சி யார் கொடுப்பது? வகை வகையான பயிற்சி முறைகள் இன்று இந்தக் கல்விச் சந்தையில் உண்டு. லட்சங்களில் காசு நம்மிடம் புரள வேண்டும். தேர்வு முடிவுகள் வந்த அடுத்த நாள், நம் செய்தித்தாள்களில் முழுப்பக்க விளம்பரங்களில் வெற்றிபெற்ற மாணவர்கள் பூங்கொத்துகளோடு சிரிப்பார்கள். பயிற்சி மையம் அடுத்த உற்பத்திக்குத் தயாராகும். அந்த மாணவர்களின் உழைப்பை நாம் யாரும் குறை கூறமுடியாது. ஆனால், எவ்விதப் பின்புலமும் இல்லாத ஒரு மாணவனின் உழைப்பைக் குறைத்து மதிப்பிடுவது ஆதிக்க மனப்பான்மையின் வெளிப்பாடு.

இவ்வளவு நாளாகியும் என் இயற்பியல் புத்தகங்கள், ஏன் ஹிக்ஸ் போசானைப் பற்றிப் பேசவே இல்லை? அத்தனை வரலாற்றையும் அடுக்கும் என் சமூக அறிவியல் புத்தகங்கள், ஏன் ஒருபோதும் எனக்கு மொழிப்போரைப் பற்றியும், நெருக்கடி நிலையைப் பற்றியும் சொல்லிக்கொடுக்கத் துணியவில்லை? எல்லாவற்றிலும் இருக்கிறது பிழை. 

‘எங்க ஊர்லயே நான்தான் முதல் டாக்டர்...’ இந்தச் சொற்றொடருக்குள் இருக்கும் அந்தக் காத்திரமான உழைப்பின் ருசியை இனி வரும் தலைமுறைகளில் நாம் உணர்வது அரிதாகிவிடக் கூடாது. தகுதியுள்ளவர்களின் உழைப்பு கண்டுகொள்ளப்படாமல் போவது போன்ற ரணத்தை, ஆள்பவர்கள் நம் பிள்ளைகளுக்குக் கொடுக்கக்கூடாது.

- சிவ.உறுதிமொழி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
அனிதா... பெண்களின் குரல்!

கழுத்தை நெறித்தது கயமை அரசியல்!

அனிதாவின் மரணம் தற்கொலை அல்ல, திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை. இந்தக் கொலையின் பின்னணியும் அரசியலும் மிகவும் அதிர்ச்சி தருபவை. அனிதா 1176 மதிப்பெண் எடுத்தார். 1200-க்கு 24 மதிப்பெண்கள்தான் குறைவு. ‘நீ நிச்சயம் டாக்டர் ஆகிவிடுவாய்’ என்று நம்பிக்கை ஊட்டினார்கள். டாக்டர் ஆகிவிட்டதாகவே அவரும் நினைத்தார். நீட் குறுக்கே வந்தது.

‘புதிதாக ஒரு தேர்வு எழுத வேண்டும்’ என்பதைவிட, ‘தான் இதுவரை எழுதிய தேர்வும் வாங்கிய மதிப்பெண்ணும் வீண்தானா’ என்பதே அவரது வேதனை. ‘இந்த ஆண்டு நீட் இருக்காது. ப்ளஸ் 2 தேர்வில் வாங்கிய மதிப்பெண்களின் அடிப்படையில்தான் மருத்துவக் கல்லூரி இடங்கள் நிரப்பப்படும்’ என்று மாநில அரசு ஏமாற்றியது. ‘இந்த ஓராண்டுக்கு விலக்கு தரப்போகிறோம்’ என்று மத்திய அரசு ஏமாற்றியது. இரண்டையும் அனிதா நம்பினார். இந்த நம்பிக்கை மோசடிதான் அனிதாவைக் கொலை செய்தது.

அனிதா விஷயத்தில் மத்திய அரசு இழைத்ததுதான் பெருங்குற்றம். மாநில அரசின் பாடத்திட்டத்தில் படித்த மாணவி அனிதா. ஆனால் நீங்கள் அனிதாவிடம் நீட் தேர்வில் கேட்டது சி.பி.எஸ்.இ மத்தியப் பாடத்திட்டத்தில் அமைந்த கேள்விகளை. இந்தக் கொலைக்கு உங்கள் கொள்கையும் காரணம் இல்லையா? அணிகள் சேர்வது, பொதுச் செயலாளர் தேர்வு இதற்கெல்லாம் தமிழக முதலமைச்சருக்கு ஆலோசனை வழங்கும் அம்மாவின் ஆன்மா, நீட் தேர்வு விஷயத்தில் எதுவும் கூறவில்லையா... நீட் தேர்வை பொதுமேடையில் எதிர்த்தவர் ஜெயலலிதா. அம்மாவின் ஆணைக்கிணங்க என்று கூற உங்களுக்கு வெட்கமாயில்லையா?

அனிதாவின்  கழுத்தைச் சுருக்கியது கயிறு அல்ல. மத்திய, மாநில அரசுகளின் கயமை அரசியல்!

- நந்தினி சுப்பிரமணி

அனிதாக்களிடம் மருத்துவம் பெறுவதே சரியானது!

அனிதாவின் மரணத்துக்குப் பிறகு தமிழ்நாடு குறித்தும், தமிழ்நாட்டின் கல்வித் தரம் குறித்தும் பல்வேறு விவாதங்கள் எழுந்திருக்கின்றன. ஏதோ தமிழ்நாடு சோமாலியாவாக இருப்பதாகவும், நீட் வந்தால்தான் இது அறிவாளிகள் நிறைந்த நாடாக மாறி விடும் என்பது போலவும் பேசுகிறார்கள்.

பெண் கல்வி விகிதமும், கிராமப்புற ஏழை மாணவர்களின் கல்வி விகிதமும் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழகத்தில் அதிகம். தமிழகம் சுகாதாரத்திலும் முன்னணி மாநிலமாக இருக்கிறது. அதற்கு மிக முக்கியக் காரணம், இங்கு பின்பற்றப்படும் சமூக நீதிக்கொள்கை. அதனை முற்றிலும் அழிக்க வந்திருக்கிறது நீட்.

நீட் தேர்வில் தமிழக அளவில் டாப் இடங்களில் ஒன்றைப் பிடித்த மாணவர் ஒருவர், சி.பி.எஸ்.இ வழியில் காஸ்ட்லி பள்ளியில் பணம் கொட்டிப் படித்த, செல்வந்தர் வீட்டுப்பிள்ளை. அவரின் அப்பா ஒரு தொழிலதிபர்; குடும்பத்தில் பலர் மருத்துவர்கள். ஒரு வருடத் தயாரிப்புக்குப் பிறகு நீட்டில் தேர்ச்சி அடைந்திருக்கிறார். பல லட்சங்கள் சி.பி.எஸ்.இ பள்ளியில் கொட்டி, அதன்பின் பல ஆயிரங்களைப் பயிற்சி வகுப்புகளில் கொட்டிய பின் இந்த இடம் கிடைத்தது. எனக்குத் தெரிந்த இன்னொரு மாணவர், சி.பி.எஸ்.இ பள்ளியில் படித்து, அதன் பின் வேறொரு கல்லூரியில் இணைந்து படித்துக்கொண்டே, நீட் எழுதி தேர்வாகியும் இடம் கிடைக்காததால், சீனா சென்று மருத்துவம் படிக்கிறார். இப்படி ஒரு வருடம் ‘பிரேக்’ எடுக்கவோ, பயிற்சி மையங்களில் சென்று பணத்தைக் கொட்டவோ, சீனா சென்று படிக்கவோ, பாவம் அனிதா போன்றவர்களுக்குக் ‘கொடுப்பினை’ இல்லை.

அனிதா தனி ஒருவள் கிடையாது. அவள் இங்கு இருக்கும் அனைத்து கிராமப்புற, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, ஏழை, நடுத்தர வர்க்க மாணவர்களின் குரல். ஊர்களில் வாயைக் கட்டி, வயிற்றைக்கட்டி, வட்டிக்குக் கடன் வாங்கி, ‘எம்புள்ள இங்கிலீசு படிக்கட்டும்’ என்று ஆங்கில வழியில் படிக்க வைக்கும் ஏழை, நடுத்தர வர்க்க பெற்றோரின், அடுத்த தலைமுறை நம்பிக்கை. அதுதான் இன்று சிதைந்திருக்கிறது. நீட் வேண்டும் என்று சொல்பவர்கள், ‘அனிதா போல வருபவர்களிடம் சிகிச்சை எடுக்க பயமாக இருக்கிறது’ என்கிறார்கள். கல்வியை முதலீடாக்கி, பணத்தைக் கொட்டி மருத்துவராகி வருபவர்களை விட, இதைத் தன்னுடைய வாழ்க்கையாக நினைத்து மருத்துவராகும் அனிதாக்களிடம் சிகிச்சை பெறுவதுதான் உங்களைப் பாதுகாக்கும்.

- ரமணி மோகனகிருஷ்ணன்

அனிதா... பெண்களின் குரல்!

அரசாங்கமும் கார்ப்பரேட் கம்பெனிதானே!

கிராமப்புறக் கல்விக்கும், நகர்ப்புறக் கல்விக்கும் மலையளவு பாகுபாடு உண்டு. அதனால் ஏற்படுகின்ற புறக்கணிப்பு, இன்றுவரை நமது கல்வி நிலையங்களிலும், பல்கலைக்கழகங்களிலும் புரையோடிப் போன புண்ணாகத்தான் இருக்கின்றது. இது இந்த அரசாங்கத்துக்குத் தெரியாதா என்ன? இந்தப் புறக்கணிப்பால் எத்தனை உயிர்கள் போனாலும் அவர்களுக்குக் கவலை இல்லை. எல்லோருக்கும் சம வாய்ப்பு தரும் கல்விக் கொள்கையை, மாணவர்களின் மனநிலைக்கு ஏற்ற பாடத்திட்டத்தை உருவாக்காமல் போனது யாருடைய தவறு? அவர்கள் எப்படிச் செய்வார்கள்! கார்ப்பரேட்  கம்பெனிகளுக்கான கல்வியைத்தான் இந்த அரசாங்கம் உயர்த்திப் பிடித்துக்கொண்டிருக்கிறது. இந்த அரசாங்கமும் ஒரு கார்ப்பரேட் கம்பெனிதானே!

கிராமப்புறங்களில் தமிழ்வழிக் கல்வியில் படித்து விட்டு உயர்கல்விக்கு வரும் மாணவர்களின் மனநிலை மிரட்சியானது. விடுதிகளின் ஜன்னல் கம்பிகளுக்கு நடுவே சிக்கிக்கொண்ட நாள்களில் அவர்களைத் தேற்ற ஏதேனும் ஒரு அரவணைப்பு இருக்கும். அந்த அரவணைப்பின் மொழியாகத்தான் இன்று அனிதாக்களின் கனவுகளைப் பற்றிப் பலரும் சமூக வலைதளங்களில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

அனைவருமே வாழ்வில் ஏதோ ஒரு நெருக்கடியான நேரத்தைக் கடந்துதான் சாதனைகளைத் தொட்டுக் கொண்டிருப்பார்கள். அந்த நெருக்கடியான நேரத்தில் அவர்களுக்குக் கிடைத்த அரவணைப்பு போல, அனிதாவுக்கும் கிடைத்திருந்தால், அந்த ஒரு கணத்திலிருந்து மீண்டிருக்கக் கூடும். எளிய மனிதர்களுக்கு அரவணைப்பு தரும் கரங்களே காலத்தின் தேவை.

- கே.புவனேஸ்வரி

தகனம் செய்தது அனிதாவை மட்டுமல்ல...

வாழ்க்கையின் விளிம்புநிலையில், ஒடுக்கப்படுவதற்கான அத்தனை காரணங்களும் சுற்றி நின்று விழுங்கக் காத்திருந்த வேளையில், நான் பற்றிக் கொண்ட கயிறு... கல்வி. தொண்டைக்குழியில் இறங்கிய ஒவ்வொரு கவளம் உணவும், ‘நான் மருத்துவராக வேண்டும்’ என்பதை நினைவுபடுத்திக் கொண்டே இருந்தது. என் மருத்துவக் கல்விக் கனவு வெறும் துறை மீதான ஆர்வம் சார்ந்தது மட்டுமல்ல. என்னைக் காத்துக்கொள்ள, என் குடும்பத்தைக் காத்துக்கொள்ள, என் பொருளாதாரத்தைக் காத்துக்கொள்ள, என் சுதந்திரத்தைக் காத்துக்கொள்ள, என் சிந்தனையைக் காத்துக்கொள்ள, என் சுயத்தைக் காத்துக்கொள்ளக் நான் போராடிப் பெற்ற ஆயுதம் என் கல்வி.

இன்று நான் எதிர்கொள்ளும் ஒவ்வொரு போராட்டத்திலும், எனக்கே எனக்கான துணை... என் பெயருக்கு முன்னால் இருக்கும் ‘டாக்டர்’ என்னும் அந்த அடையாளம். அது இல்லாத எழில்மதியை என் சுற்றமும் சமூகமும் என்றோ மழுங்கச் செய்து உயிருள்ள மற்றுமொரு பிணமாக்கியிருக்கும். அனிதாவின் கனவு எத்தகையது என்பதை நிஜத்தில் உணர்ந்தவளாகச் சொல்கிறேன்... ஒவ்வொரு ஒடுக்குமுறையின் கரங்களும் ஈவு இரக்கமின்றிக் குரல்வளையை அழுத்தி, அனிதாவின் கனவுகளைக் கொன்று அவளைப் பிணமாக்கியிருக்கிறது.

தகனம் செய்தது அனிதாவை மட்டுமல்ல. கொன்றது அனிதாவை மட்டுமல்ல. ஒரு குடும்பத்தை; ஒரு தலைமுறையை; ஒரு சமூகத்தை; இந்த அனைத்தின் போராட்டத்தை!

ஒரு முதல் தலைமுறை பட்டதாரிப் பெண்ணாகச் சொல்கிறேன். கல்வி எங்கள் கனவு மட்டுமல்ல... எங்கள் உரிமை. எங்கள் உடமை. எங்கள் பிழைப்பு. எங்கள் புரட்சி. எங்கள் தவம். எங்கள் உழைப்பு. எங்கள் அத்தியாவசியம். எங்கள் ஆயுதம். கொன்று குவித்தது இந்த அனைத்தையும்தான்!

- எழில்மதி பாலசுப்பிரமணியம்

சந்ததியின் உரிமை பறிக்கப்பட்டுள்ளது!

‘இரட்டை நாக்கு பாம்புகளுக்கு மட்டுமேயானது’ என்று நம்பிக்கொண்டிருந்ததுதான் மரணித்த அனிதாவும் அவளைப் போன்ற எளிமையான பின்னணியில் இருந்த வந்த மாணவர்களும் செய்த குற்றம். தமிழகத்தின் அறியப்படாத குழுமூர் என்னும் குக்கிராமத்தில், கழிப்பறை வசதி கூட இல்லாத வீட்டிலிருந்து வந்த 17 வயது பெண், டாக்டர் கனவுகளை எட்ட 1176 மதிப்பெண் எடுத்ததும் போதாது; 196.5 கட் ஆஃப் எடுத்ததும் போதாது. மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த அவளை, பகுத்தறிவு சிறிதும் இல்லாமல் ’நீட்’ என்னும் பெயரில் தேசிய அளவிலான தேர்வினை வைத்து ‘‘நீ தோல்வியடைந்துவிட்டாய்!” எனத் திருப்பி அனுப்புகிறது அரசு.

சேவைத்துறையான மருத்துவத்தை கார்ப்பரேட்களிடம் கூவி விற்றுக் கொண்டிருக்கும் அதிகாரத்தின் பணவெறி அரசியலிடம் தோற்றுவிட்டோமே என்று உளைச்சலில் உயிர் விடுகிறாள் அனிதா. தற்கொலைக்குத் தூண்டியவர்களுக்கு இந்திய தண்டனைச் சட்டத்தின் 306-வது பிரிவு, 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை என்கிறது. தன் பணவெறிக்கும் அதிகாரப் பசிக்கும் சிறு பெண்ணின் கனவையும் அவளையும் சேர்த்து பலிகொடுத்த ஒரு கொடூர அரசை எந்தச் சட்டம் தண்டிக்கப்போகிறது?

‘ஒரு ஆணுக்கான கல்வி வாய்ப்பு அவனுக்கு மட்டுமேயானது. ஆனால், ஒரு பெண்ணுக்குத் தரப்படும் கல்வி வாய்ப்பு அவள் சந்ததிக்கானது’ - 19-ம் நூற்றாண்டின் மிகச் சிறந்த கல்வியாளர் எனக் கருதப்பட்ட ஜேம்ஸ் இம்மானுவேல் அக்ரேயின் வரிகள் இவை. அனிதாவுக்குக் கல்வியை மறுத்ததன் மூலம், இந்த ஜனநாயக அரசு ஒரு சந்ததிக்கான உரிமையைக் களவாடியிருக்கிறது. மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனி உண்டோ?

- ஐஸ்வர்யா

‘அனிதா’ நம் வீடுகளிலும்கூட இருக்கலாம்!

நம் மாணவர்களுக்கு நல்ல கல்வியை அரசு வழங்குகிறதா? அவர்கள் பின்னாளில் நல்ல பொறியாளராகவோ, மருத்துவராகவோ, ஆசிரியராகவோ, அல்லது வேறு எந்தத் துறையில் நிபுணர்களாகவோ உருவாவதற்குச் சரியான அடித்தளத்தை அமைத்துத் தருகிறதா? தனியார் பள்ளிகள் அனைத்தும் ‘நீட் தேர்வு அறிவிக்கப்பட இருக்கிறது’ என்றதும் ‘நீட் தேர்வுக்கென தனிப்பயிற்சியும் இங்கு வழங்கப்படும்’ என விளம்பரத் தாள்களை அச்சிடத் தொடங்கி விட்டன. வசதியுள்ள பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அப்படிப்பட்ட பள்ளிகளில் கேட்கும் தொகையைச் செலுத்தி சேர்த்து விட்டாயிற்று. கிராமப்புற அடித்தட்டுப் பிள்ளைகளின் நிலை என்ன?

இன்று அனிதாவின் குடும்பத்துக்கு ஏழு லட்ச ரூபாய் வழங்குகிறது தமிழக அரசு. ஒவ்வொரு நாட்டிலும் மருத்துவமும் கல்வியும் அரசாங்கத்தின் கையில் இருக்க வேண்டும், ஆனால், இங்கு நிலைமை தலைகீழ். அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு எழும் போராட்டங்கள் நீட் தேர்வுக்கு விலக்கு வாங்குவதோடு நின்று விடக்கூடாது. அதிகார வர்க்கம் நம் பிள்ளைகளின் கழுத்தைப் பிடித்தது போதும். நாம் இந்த அரசின் கழுத்தைப் பிடிக்கலாம், ‘எங்கள் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியையும், திறமையான ஆசிரியர்களையும் தா’ என்று. இப்போதும் நாம் பிள்ளைகளின் கல்விக்காக எந்த முயற்சியையும் எடுக்கவில்லை எனில், அடுத்த ‘அனிதா’ நம் வீடுகளிலும்கூட இருக்கலாம்!

- நா.ஜோஸலின் மரிய ப்ரின்சி

ஒரே பாடத்திட்டம் இல்லாதபோது ஒரே தேர்வு எப்படி?

மருத்துவச் சுற்றுலாவுக்குப் பெயர் பெற்ற தமிழ்நாட்டில் இருந்து, மாநிலப் பாடத்திட்டத்தில் படித்து மருத்துவம் பயின்ற பலரும் இன்று பல்வேறு இடங்களில் மிகச்சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கையில், இந்த நீட் நுழைவுத் தேர்வு அவசியம் இல்லாத ஒன்றாகவே தோன்றுகிறது. மாநிலப் பாடத் திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு நீட் வேண்டும் என்றால், அவர்கள் படித்த பாடத்திட்டத்தின்படியே தேர்வு வைக்க வேண்டும். இந்தியா முழுதும் ஒரே பாடத்திட்டம் இல்லாத நிலையில், ஒரே நுழைவுத் தேர்வு என்பது சாத்தியம் இல்லையே.

- லோகேஸ்வரி

அனிதா... பெண்களின் குரல்!

மோடிக்குக் கவலை எல்லாம் ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் பற்றித்தானா?

 மோடியின் ‘தூய்மை இந்தியா’ திட்டம் குழுமூர் கிராமத்தைச் சென்று சேராததால், அனிதாவின் வீட்டில் கழிப்பறை கிடையாது. நம்பிக்கையும் படிப்பும் மட்டும்தான் அனிதாவுக்கு இருந்த சொத்துக்கள். ‘தகுதி இருந்தும் மருத்துவர் ஆக முடியவில்லையே’ என்ற விரக்தி. அதனுடன் இணைந்துகொண்ட மன அழுத்தம். ‘நியாயம் வெல்லும்’ என்ற நம்பிக்கையோடு டெல்லி உச்ச நீதிமன்றத்துக்கு விமானத்தில் பயணப்பட்டபோது இருந்த மன உறுதி முற்றிலும் உருக்குலைந்து போயிருக்க வேண்டும். அதனால் ஏற்பட்ட வெறுமையைக் கண்களில் சுமந்தபடியே தூக்குக் கயிற்றை நாடிவிட்டார்.

நம்பிக்கை வார்த்தைகளை நாள்தோறும் பேசி, அவர் கனவைப் பறித்தவர்களுக்கு என்ன தண்டனை கிடைக்கப் போகிறது? தேசிய ஊடகங்கள் வரை செய்தி பரவி விட்டது. கமல் கவலைப்படுகிறார்... ரஜினி வேதனைப்படுகிறார்... கடந்த நான்கு நாள்களாக திரும்பிய திசையெல்லாம் நீட் பற்றிய விவாதங்கள்தான். ஆனால், பாரதப் பிரதமரின் காதுகளுக்கு மட்டும் அனிதாவின் அழுகுரல் சென்று சேரவில்லை.

ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் இணைப்பு குறித்து ட்வீட் தட்டிய பிரதமருக்கு, அனிதா விவகாரம் என்ன அவ்வளவு பெரிதா?

- அஸ்வினி சிவலிங்கம்

அவர்களைக் கைவிட்டு விடாதீர்கள்!

உயிரைக் காக்க வேண்டிய மருத்துவப் பணி ஒரு உயிரை மாய்த்துள்ளது. இதில் அனிதாவின் தவறு எதுவும் இல்லை. இறந்து போராடுகிறாள் அனிதா. அவள் இருந்து போராடி இருக்க வேண்டும். இவரைப் போன்றவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது, உங்கள் உயிர் விலைமதிப்பற்றது. மருத்துவம் படிக்க நினைக்கும் உங்களுக்கு அதன் மதிப்பு தெரியும். அரசுக்கு இந்த இறப்பு மக்கள்தொகையில் ஒரு எண்ணிக்கைக் குறைவு. ஆனால் உங்களை நம்பி குடும்பம் உள்ளது. அவர்களை அரசைப் போல கைவிட்டு விடாதீர்கள்!

-   தாரணி

படம் : ஜெ.வேங்கடராஜ்