Published:Updated:

“மருத்துவப் பாடத்திட்டத்தை 20 ஆண்டுகளாக மாற்றாதவர்கள்தான் தமிழகத்தைக் குறை சொல்கிறார்கள்!’’

“மருத்துவப் பாடத்திட்டத்தை  20 ஆண்டுகளாக மாற்றாதவர்கள்தான்  தமிழகத்தைக் குறை சொல்கிறார்கள்!’’
பிரீமியம் ஸ்டோரி
News
“மருத்துவப் பாடத்திட்டத்தை 20 ஆண்டுகளாக மாற்றாதவர்கள்தான் தமிழகத்தைக் குறை சொல்கிறார்கள்!’’

“மருத்துவப் பாடத்திட்டத்தை 20 ஆண்டுகளாக மாற்றாதவர்கள்தான் தமிழகத்தைக் குறை சொல்கிறார்கள்!’’

‘‘20 ஆண்டுகளாக இந்தியாவில் மருத்துவப் பாடத்திட்டத்தை மாற்றாத இவர்கள் தான், ‘நீட் தரமான மருத்துவக்கல்வி தரும்’ என்கிறார்கள்’’ எனக் கொதிக்கிறார் முகமது காதர் மீரான். திருச்சியைச் சேர்ந்த இவர், மகாராஷ்ட்ரா மாநிலம், சேவாகிராமில் உள்ள மகாத்மா காந்தி இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிக்கிறார். அவரிடம் பேசினோம்.

“மருத்துவப் பாடத்திட்டத்தை  20 ஆண்டுகளாக மாற்றாதவர்கள்தான்  தமிழகத்தைக் குறை சொல்கிறார்கள்!’’

‘‘கடந்த 2007-ம் ஆண்டு தமிழக அரசு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் பொது நுழைவுத்தேர்வுக்கு விலக்களித்து சட்டம் இயற்றியது. மத்திய அரசு கடந்த வருடம் ‘அகில இந்திய மருத்துவக் கவுன்சில் திருத்தச் சட்டம்’ கொண்டு வந்தது. கல்வி பொதுப் பட்டியலில் உள்ளதால், தமிழக அரசு ஏற்கெனவே இயற்றிய சட்டம் செல்லாமல் போனது. இந்தியா முழுமைக்கும் நீட் கட்டாயமாக்கப்பட்டதற்கு இந்த திருத்தம்தான் காரணம்.

நீட் தேர்வு தொடர்பான வழக்கு 2013-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்துக்குப் போனது. அப்போதைய தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர் தலைமையிலான மூன்று பேர் கொண்ட அமர்வு, ‘மருத்துவக் கவுன்சில் சட்டப்படி, நீட் தேர்வை நடத்துவதற்கு அகில இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை’ எனத் தீர்ப்பு வழங்கியது. இதை மறுசீராய்வு செய்ய மத்திய அரசு மனு தாக்கல் செய்தது. அந்த மனு மீதான விசாரணையில் நீதிபதி அனில் ஆர்.தவே, ‘உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைத் திரும்பப் பெறுவதாக’ கடந்த ஆண்டு தீர்ப்பளித்தார். அதில், ‘நீட் தேர்வை நடத்திக் கொள்ளலாம்’ எனக் கூறவில்லை. ஆனால், சங்கல்ப் அறக்கட்டளை எனும் அமைப்பு ‘நீட் தேர்வை இந்த ஆண்டே நடத்த உத்தரவிட வேண்டும்’ என வழக்குth தொடர்ந்தது.

அதனையடுத்து, ‘வழக்கின் இறுதித் தீர்ப்பு வரும் வரை நீட் தேர்வை நடத்தலாம்’ என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், பல மாநிலங்கள் விலக்குக் கோரின. எனவே, நீட் தேர்விலிருந்து கடந்த ஓராண்டுக்கு மட்டும் விலக்களிக்கும் அவசரச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. அந்த அவசர சட்டத்தை நாடாளுமன்றத்தில் முறைப்படி சட்டமாக இயற்ற நீதிபதிகள் அறிவுறுத்தினார்கள். ஆனால், மத்திய அரசு அதற்கு மாறாக முடிவெடுத்தது. நீட் தேர்வு நடத்திட இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு அதிகாரமளித்தும், இந்தியா முழுக்க நீட் தேர்வைக் கட்டாயமாக்கியும், ‘அகில இந்திய மருத்துவக் கவுன்சில்-2016 சட்டத்திருத்தம்’ நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
“மருத்துவப் பாடத்திட்டத்தை  20 ஆண்டுகளாக மாற்றாதவர்கள்தான்  தமிழகத்தைக் குறை சொல்கிறார்கள்!’’

இதைத் தமிழக அரசு முறையான சட்டவழிகளில் எதிர்கொள்ளவில்லை. இதனால்தான் தமிழகத்துக்குப் பின்னடைவு ஏற்பட்டது. 92-வது நாடாளுமன்ற நிலைக்குழு, மருத்துவக்கல்வி குறித்து பல ஆய்வுகளை மேற்கொண்டது. இறுதியில், ‘இந்திய மருத்துவக் கவுன்சிலின் நடவடிக்கைகள் சரியில்லை. அந்த அமைப்பை மாற்றி அமைக்க வேண்டும். மருத்துவக் கல்வியில் சேர்வதற்கு நீட் தேர்வு போன்ற ஒரு பொதுத்தேர்வு தேவை. இதில் எந்த மாநிலமாவது விலக்குக் கேட்டால் கொடுக்கலாம்’ என அறிக்கை வழங்கியது. அந்த அறிக்கையை ஏற்று, அகில இந்திய மருத்துவக் கவுன்சிலைக் கலைத்துவிட்டு ‘தேசிய மருத்துவ ஆணையம்’ எனும் புதிய அமைப்பை ஏற்படுத்தும் முயற்சிகளில் இறங்கியிருக்கும் மத்திய அரசு, அதே அறிக்கையில் கூறப்பட்டுள்ள, ‘நீட் தேர்வுக்கு விலக்களிப்பது’ என்பதை மட்டும் ஏற்றுக்கொள்ள மறுப்பது ஏன்?

மருத்துவக்கல்வி தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பல தகவல்களை நான் கேட்டிருந்தேன். ஆனால், ‘தனியார் மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் அதிக கட்டணங்கள் குறித்தும், நன்கொடைகள் குறித்தும் மாநில அரசுகளுக்குத்தான் தெரியும். எங்களிடம் எந்தப் புள்ளிவிபரமும் இல்லை’ என்று அகில இந்திய மருத்துவக் கவுன்சிலும், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகமும் எனக்குப் பதிலளித்துள்ளன. 

“மருத்துவப் பாடத்திட்டத்தை  20 ஆண்டுகளாக மாற்றாதவர்கள்தான்  தமிழகத்தைக் குறை சொல்கிறார்கள்!’’

இந்தியா முழுக்க 576 அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் எம்.பி.பி.எஸ் படிப்புக்கு ஒரே பாடத்திட்டம் இல்லை. ஒவ்வொரு மாநிலத்துக்கும் மாறுபடுகிறது. ‘இந்தப் பாடத்திட்டங்கள் குறித்த முழு தகவல்கள் எங்களிடம் இல்லை’ என இந்திய மருத்துவக் கவுன்சிலே ஒப்புக்கொள்கிறது.

மேலும், கடந்த 20 ஆண்டுகளாக மருத்துவக்கல்வி யில் ஒரே பாடத்திட்டம்தான் நடைமுறையில் உள்ளது. ‘இன்றைய காலத்துக்கு ஏற்ப மருத்துவப் படிப்பில் மாற்றம் வேண்டும்’ எனக் கடந்த 2013-ம் ஆண்டு இந்திய மருத்துவக் கவுன்சில் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்தது. அதை மத்திய அரசு இதுவரை கண்டுகொள்ளவில்லை. தமிழகப் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தைக் கடந்த 12 வருடங்களாக மாற்றவில்லை எனக் குற்றம் சாட்டும் மத்திய அரசுதான், கடந்த 20 வருடங்களாக மருத்துவக்கல்விக்கான பாடத்திட்டத்தை மாற்றாமல் உள்ளது.

நீட் தேர்வு, மருத்துவக்கல்வியில் நன்கொடைக் கொள்ளையைத் தடுக்கும் என்பதும், தரமான மருத்துவர்களை உருவாக்கும் என்பதும் வெற்று வாய்ச் சவடால்கள்தான். உண்மையில் நீட் தேர்வு, கிராமப்புற மாணவர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும். அனிதா அதற்கு முதல் பலி’’ என்றார் முகமது காதர் மீரான்.

- சி.ய.ஆனந்தகுமார்
படங்கள்: என்.ஜி.மணிகண்டன், கே.குணசீலன்