Published:Updated:

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 8

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 8
பிரீமியம் ஸ்டோரி
News
கிறுக்கு ராஜாக்களின் கதை! - 8

முகில்

மக்கள்தொகையை பாதியாகக் குறைத்த மகாராணி!

ண்ட்ரியாமிஹாஜா. துடிப்பான தளபதி. மன்னர் முதலாம் ரடாமாவின் இறப்புக்குப் பிறகான குழப்பத்தில், ராணி ரனவலோனாவுக்குப் பக்கபலமாக நின்று அவளை அரியணை ஏற்றியதில் இவர் பங்கு அதிகம். ஆகவே, அவரைத் தன் நெஞ்சத்திலும் மஞ்சத்திலும் ஏற்றினாள் ராணி. இருவருக்கும் கி.பி. 1829, செப்டம்பர் 23-ல் பிறந்த பையனுக்கு ‘ரகோடோ’ அலைஸ் ‘இரண்டாம் ரடாமா’ என்று பெயர் வைக்கப்பட்டது.

இரண்டாம் ரடாமாவா? ஆம், அவர்களது மரபுப்படி மன்னர் இறந்த பிறகு, அதிகாரபூர்வ ராணி, வேறு யாருடைய கூட்டுத்தயாரிப்பிலும் குழந்தை பெற்றுக்கொள்ளலாம். அதற்கு ராஜ வாரிசு என்ற அங்கீகாரம் உண்டு. அந்த லாஜிக்கின்படி, இரண்டாம் ரடாமாவின் பயாலஜிக்கல் ஃபாதர் அண்ட்ரியாமிஹாஜா, அஃபிஷியல் ஃபாதர் முதலாம் ரடாமா.

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 8

‘ராணியின் காதலன்’ என்ற செல்வாக்குடன் திரிந்த அண்ட்ரியாமிஹாஜா மீது சக தளபதிகளுக்குப் பொறாமை. ஆகவே, அண்ட்ரியாமிஹாஜாவுக்கு அரியணை மீது ஆசை என்றும், அவருக்கு இன்னொரு காதலி இருக்கிறாள் என்றும் ராணியிடம் மூட்டிவிட்டார்கள். போதையேறிய பொழுதொன்றில் ரனவலோனா சீறினாள். ‘‘இவனை டேங்குவேனா விசாரணைக்கு உட்படுத்துங்கள்!’’ (அதென்ன விசாரணை என்பது சில பத்திகள் தள்ளி...) அண்ட்ரியாமிஹாஜா அதற்கு உடன்படாததால், உடனே மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு, உடல் புதைக்கப்பட்டது. அதன்பின் ராணியால் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை. ‘அவன் உயிர்த்தெழுந்து வந்து என்னைக் கொன்றுவிட்டால்?’ உடனே, ‘‘அவன் உடலைத் தோண்டியெடுத்து தலையை அறுத்து கால் பகுதியில் போடுங்கள். தலைக்குப் பதிலாக கறுப்பு நாய் ஒன்றின் தலையை வெட்டி வையுங்கள்!’’ எனக் கட்டளையிட்டாள்.

அப்படியே செய்தார்கள். ராணியின் கனவுகளில் நாய்த்தலை மனிதன் குரைத்தான். மீண்டும் பதறிக் கட்டளையிட்டாள். ‘‘அவன் உடலின் மிச்சங்களை எரியுங்கள். எலும்புகளையும் சாம்பலாக்குங்கள்!’’ அதன்படி சாம்பலையும் காற்றில் கரைத்தனர். இருந்தும் ராணிக்குப் பயம் போகவில்லை. அண்ட்ரியாமிஹாஜாவின் குடும்பத்தினர் சிலரையும் கொன்ற பிறகே நிம்மதியடைந்தாள்.

இருந்தாலும் அவளது நிம்மதியை நிரந்தரமாகக் கெடுக்கும் சக்திகளாகப் பிரிட்டிஷாரும் பிரெஞ்சுக்காரர்களும் அம்மண்ணில் வேரூன்றியிருந்தனர். அடுத்து அவள் பார்வை கிறிஸ்தவ மதம் மீது திரும்பியது. கிறிஸ்தவப் பள்ளிகளையும் தேவாலயங்களையும் மூடினாள். ‘‘எல்லோரும் இங்கிருந்து ஓட வேண்டும். இல்லையேல் குழிதோண்டிப் புதைக்கப்படுவீர்கள்’’ எனக் கர்ஜித்தாள். இத்தனைக் கட்டுப்பாடுகளை மீறியும் தன்னுடைய மலகாஸி மைந்தர்கள் மதம் மாறி ஜெபிப்பதை அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை. கி.பி. 1836. பதினான்கு பேர், ரனவலோனா முன்பாகவே மரண பயமின்றி ஸ்தோத்திரம் சொல்ல, ஆத்திரம் பொங்கியது அவளுக்கு. அவர்களது குருதியால் பூமி சிவந்தது.

‘மிஷன் மிஷனரி’ ஆரம்பமானது. ஐரோப்பியக் கிறிஸ்தவர்களும், மதம் மாறிய மலகாஸிக்களும் கருணையின்றிக் குறிவைக்கப்பட்டனர். பிடிபட்டவர்கள் ‘டேங்குவேனா’ (tanguena) என்ற பாரம்பர்ய முறை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். கொஞ்சம் சோறு, கோழியின் தோல் மூன்று துண்டு, டேங்குவேனா என்ற விஷ விதை ஆகியவை வாயில் திணிக்கப்படும். பிறகு நீரைக் குடித்து வாந்தியெடுக்க வேண்டும். மூன்று துண்டு கோழித் தோலும் சேதாரமின்றி வெளியே வந்துவிட்டால், அவன்/அவள் குற்றமற்றவன்/ள். விடுதலை. ஒரு துண்டு தோல் சேதாரமடைந்திருந்தாலும் உயிர் காலி. ஆனால், அந்த விஷ விதையைத் தின்ற எவருமே பிழைத்ததில்லை என்பதே நிஜம்.

கொல்வதற்குப் பயன்படுத்தப்பட்ட இன்னொரு முறை... விரல்களை, கைகளை, அல்லது கால்களை வெட்டி ஆளை வெயிலில் போட்டு விடுவார்கள். குருதியின் வழியே உயிரும் சொட்டுச் சொட்டாக வெளியேறும். எப்படியெல்லாம் கிரியேட்டிவாகக் கொல்லலாம் என்று ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி ‘கொலை மேளா’ நடத்தினாள் ரனவலோனா.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கிறுக்கு ராஜாக்களின் கதை! - 8

தண்ணீரில் மூழ்கடிப்பது, வெந்நீரில் வேக வைப்பது, கழுத்தை நெரிப்பது, கோணிப்பையில் கட்டுவது, கல்லால் அடிப்பது, உயிருடன் கொள்ளி, மலையுச்சியிலிருந்து தள்ளி, காலில் கயிற்றைக் கட்டி அந்தரத்தில் தொங்கவிட்டுப் பின் கயிற்றை அறுப்பது, சிலுவையில் அறைவது.

சில சமயங்களில் ராணி, ‘‘வந்து என் பாதத்தில் முத்தமிடு. மன்னிக்கிறேன்’’ என்பாள். அந்த அப்பாவியும் தரையில் விழுந்து பாதத்தில் முத்தமிடுவான். ‘‘ஓடிப் போ’’ என்பாள். ஓட ஆரம்பிப்பவன், சிறிது தூரத்திலேயே வாயில் நுரை தள்ள கீழே விழுந்து இறப்பான். ஆம், ரனவலோனாவின் பாதங்கள் விஷத்தில் தோய்க்கப்பட்டிருக்கும்.

இவற்றைவிடவும் கொடூரக் காட்சிகள் இருக்கின்றன. வேண்டாம். கடந்துவிடுவோம்.

மடகாஸ்கரைச் சுற்றி சிறு சிறு தீவுகளில் ஆதிக்கம் செலுத்திய பிரான்ஸுக்கு, மடகாஸ்கரையே தன் காலனி ஆக்க வேண்டுமென்ற வெறி இருந்தது. இந்தியா செல்லும் பிரிட்டிஷ் கப்பல்களின் பயணத்துக்கு உதவியாக மடகாஸ்கரில் ஒரு தளம் பிரிட்டனுக்குத் தேவைப்பட்டது. ஆகவே, ரனவலோனாவை அடக்க பிரான்ஸும் பிரிட்டனும் கைகோத்துப் படையெடுத்தன (கி.பி.1849). படுதோல்வி. கொல்லப்பட்ட ஐரோப்பியர்களின் தலைகளை மட்டும் குச்சியில் செருகி கடற்கரையில் வரிசையாக வைக்கச் சொன்னாள் ரனவலோனா. ‘‘இதைப் பார்த்து இனி எவனும் இங்கே வாலாட்ட வரக்கூடாது.’’ 

இப்படி ஐரோப்பியர்கள் மீது அளவற்ற வெறுப்பு கொண்டிருந்தாலும், ரனவலோனாவுக்கு நெருக்கமான விசுவாசியாக இருந்தது ஒரு பிரெஞ்சுக்காரரே. ஜீன் லபார்ட் (Jean Laborde). கி.பி.1831-ல் கப்பல் உடைந்துபோக, நீந்தி மடகாஸ்கரில் கரையேறியவர். பின் ராணியின் ஆலோசகராக, காதலர்களுள் ஒருவராக ஆனவர். பொறியியல், உலோகவியல், வெடிமருந்து, ஆயுதத் தயாரிப்பில் அனுபவம் கொண்ட லபார்ட், மடகாஸ்கரின் பலத்தைப் பெருக்கினார். சோப், பீங்கான், பட்டுத் தயாரிப்பில் தொழில்வாய்ப்புகளை உருவாக்கினார். ராணிக்கு மரத்தால் ஆன மிகப்பெரிய அரண்மனை ஒன்றையும் கட்டிக்கொடுத்தார். லபார்டின் பழக்கத்தால் ரனவலோனா பிரெஞ்சு பாணி உடையணிந்தாள். நடை பழகினாள். கலை பயின்று, பியானோ வாசித்தபடி, மென்மையாகப் புன்னகை செய்தாள். இருந்தாலும் வயதாக வயதாக ரனவலோனாவின் மூர்க்கம் அதிகரித்தது. கிறுக்குத்தனங்கள் எல்லை மீறின. அரியணைக் கனவில் காத்திருந்த இளவரசர் ரடாமா பொறுமையிழந்தார்.

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 8

ரடாமாவின் தவிப்பைப் புரிந்துகொண்ட பிரெஞ்சுக்காரர்கள், ஓர் ஒப்பந்தத்துடன் வந்தனர் (கி.பி.1855). ‘‘ராணியை வீழ்த்தி உங்களை மன்னன் ஆக்குகிறோம்” என்று ஆசை காட்டினர். ரடாமாவுக்கு பிரெஞ்சு தெரியாது. ‘நான் மன்னரான பின், மடகாஸ்கரை பிரான்ஸின் காலனி ஆக்கவும், நீங்கள் இங்குள்ள வளங்களை அளவின்றிச் சுரண்டவும் சம்மதிக்கிறேன்’ என்னும் ஒப்பந்தத்தின் சாரம் தெரியாமல் அதில் கையெழுத்திட்டார். ரகசியம் காக்கச் சொல்லி பைபிள் மீது சத்தியம் வாங்கினர்.

ரடாமா மற்றும் லபார்ட் ஆசியுடன், லம்பெர்ட் என்ற பிரெஞ்சுக்காரரின் தலைமையில் ராணியைக் கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்டது. எமகாதக ராணியிடம் நடக்குமா? அவள் சதியை முறியடித்தாள். ‘பாலூட்டி வளர்த்த கடாவே...’ என்று நெஞ்சைப் பிடித்து அழுவாச்சி சீன் போடாமல், மகனை மண்டையில் தட்டி ஓரமாக உட்கார வைத்தாள். லம்பெர்ட் உள்ளிட்ட மற்ற சதிகாரர்களை உடனே கொல்லாமல், விதவிதமாக மரண பயம் காட்டினாள். பிறகு, மலேரியா கொசுக்கள் நிறைந்த காட்டுக்குள் துரத்திவிட்டாள். அங்கிருந்து பிழைத்து வெளியே வருவது சாத்தியமற்ற ஒன்று. பெரும்பாலோனோர் இறந்துபோக, லபார்ட் எப்படியோ தப்பித்து வெளியேறினார். (ரனவலோனாவின் ஆட்சிக்குப் பிறகு மன்னர் இரண்டாம் ரடாமாவின் ஆலோசகராக லபார்ட்டே வந்தது தனிக்கதை.)

சரி, எருமை வேட்டைக்கு வருவோம். திடீரென்று ஒருநாள், ‘‘நான் எருமை வேட்டை ஆடப்போகிறேன். ஏற்பாடு செய்யுங்கள்’’ என்று அறிவித்தாள் ராணி. ஏற்பாடு என்றால் சாதாரணமானதல்ல. ‘நான் போகும் வழியெல்லாம் புதிய சாலைகள் போடுங்கள். நான் தங்குவதற்கு மாளிகைகள் கட்டுங்கள்.’ இந்த வேலைகளுக்காக பல்லாயிரக்கணக்கான மக்கள், கொத்தடிமைகளாக்கப்பட்டனர். அவர்களுக்கு உணவு, நீர், ஓய்வு எதுவும் கிடையாது. ஓர் அடிமை செத்து விழுந்தால், பிணத்தை ஓரமாகத் தூக்கிப் போட்டுவிட்டு வேலையைத் தொடர்ந்தார்கள். இப்படி 16 வாரங்கள், தன் சுற்றம் சூழ சொகுசாக எருமை வேட்டை என்ற பெயரில் வலம்வந்த ரனவலோனா, ஓர் எருமையைக் கூட வேட்டையாடியதாகத் தெரியவில்லை. ஆனால், இதற்கான ஏற்பாட்டில் அவள் வேட்டையாடிய மனித உயிர்களின் எண்ணிக்கை சுமார் பத்தாயிரம்.

இப்படி அவ்வப்போது ராணி, நாட்டை வலம் வரக் கிளம்புவாள். போகும் இடமெல்லாம் உயிர்ச் சேதாரம் அதிகம். ரனவலோனாவின் ஆட்சியில் மெரினா இனத்தவர்களே இன்பங்களை அனுபவிக்க, மற்ற இனத்தவர்களுக்கு மரணம் சகஜமான விஷயமாகிப் போனது. அவள் தன் படையினருக்குச் சம்பளம் வழங்கவில்லை. பதிலாக, ‘தேவைப்பட்டால் எங்காவது புகுந்து இஷ்டம்போல கொள்ளையடித்துக் கொள்ளுங்கள்’ என்ற உரிமையை வழங்கியிருந்தாள். கிறிஸ்தவர்களை வேட்டையாடுவது, சொந்த மக்களையே கொத்தடிமையாக்கிக் கொல்வது, டேங்குவானா விசாரணைக் கொலைகள் என்று ரனவலோனாவின் ஆட்சியில், 1833-1839க்கு இடைப்பட்ட காலத்தில், மடகாஸ்கரின் மக்கள் தொகை 50 லட்சத்திலிருந்து 25 லட்சமாகக் குறைந்து போனது என்கிறது ஒரு புள்ளிவிவரம்.

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 8

தம் தெய்வங்களின் சிலை வழிபாட்டில் அதிகப்பற்று வைத்திருந்த ரனவலோனா, தன்னையும் மக்களின் தெய்வமாகவே கருதினாள். மெரினா இன புத்தாண்டு அன்று, தேசத்தின் எல்லா பகுதிகளிலிருந்தும் மக்கள் கூட்டம் கூட்டமாகக் கிளம்பி வந்து அரண்மனை முன் குவிவார்கள். ராணி, மாடத்தில் தோன்றுவாள். மக்கள் முன்னிலையில் ‘ராஜ குளியல்’ மேற்கொள்வாள். பின்பு, தான் குளித்த நீரை மக்கள் மீது தெளிப்பாள். பாவாத்மாவின் புண்ணிய தீர்த்தம் அது.

கி.பி.1861-ல் ரனவலோனாவின் கடைசி ராஜ குளியல் நடந்தது. அந்த ஆகஸ்ட் 16-ல் இறந்துபோனாள். அவள் பெருமையைச் சொல்லும்விதமாக பன்னிரண்டாயிரம் எருமைகள் பலி கொடுக்கப்பட்டு, அவற்றின் இறைச்சி எல்லோருக்கும் விநியோகிக்கப்பட்டது. அவள் சகல மரியாதைகளுடனும் புதைக்கப்பட்டபோது, பெரிய வெடிவிபத்து நேர்ந்தது. அப்போதும் சிலரைத் தன்னுடன் துணைக்கழைத்துச் சென்றாள் ரனவலோனா.

32 ஆண்டுகள் ஐரோப்பிய ஆதிக்கத்துக்கு ஆட்டம் காட்டியவள் என்ற விதத்தில் ரனவலோனா தனித்துவமானவளே. 1896-ல் மடகாஸ்கர், பிரான்ஸின் காலனியானது.

(வருவார்கள்)