Published:Updated:

உயிர் மீண்ட குழந்தையோடு வலுக்கட்டாய போஸ்

உயிர் மீண்ட குழந்தையோடு வலுக்கட்டாய போஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
உயிர் மீண்ட குழந்தையோடு வலுக்கட்டாய போஸ்

வெல்லமண்டி நடராஜன் பாலிடிக்ஸ்

வுலிவாக்கம் அடுக்குமாடிக் கட்டடம் நொறுங்கி விழுந்த துயர நினைவுகள், கடந்த 3-ம் தேதி திருச்சி மக்களின் மனதில் ஓடின. அன்று அதிகாலை... திருச்சி மலைக்கோட்டை அருகிலுள்ள தஞ்சாவூர் குளத்தெருவில் 3 மாடிக் கட்டடம் ஒன்று இடிந்து தரைமட்டமானது.

கண்ணப்பன் என்பவருக்குச் சொந்தமான வீடு அது. இடிந்த கட்டடத்துக்குள் அழுகுரலும் மரண ஓலமும் கேட்கவே, அப்பகுதியில் பதற்றம் கூடியது. விபத்தால் மின்சாரமும் துண்டிக்கப்பட, இருளில் மீட்புப்பணியை மேற்கொள்ள முடியாமல் மீட்புக்குழுவினர் தவித்தனர். தொடர்ந்து நடந்த மீட்புப்பணியில், இரண்டாவது தளத்தில் குடியிருந்த கார்த்திக், அவரின் 4 வயது மகன் ஹரிஸ் ஆகியோர் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டனர். கார்த்திக்கின் மனைவி கார்த்திகா உயிருக்குப் போராடிய நிலையில் மீட்கப்பட்டார்.

சம்பவ இடத்தை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், கலெக்டர் ராசாமணி, குமார் எம்.பி ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது, இடிபாடுகளுக்கிடையில் ஒன்றரை வயது குழந்தை அங்காளபரமேஸ்வரி மீட்கப்பட்டாள். அவரை தீயணைப்பு வீரர்கள் மீட்டு வெளியே தூக்கிவந்தனர். சட்டென அந்தக் குழந்தையை வாங்கிய அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், போட்டோவுக்குப் போஸ் கொடுத்தார். ‘முதலுதவி தர வேண்டுமே’ எனப் பதறிய மருத்துவர்கள், குழந்தையை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். எட்டு மணி நேரம் போராடி குழந்தையை உயிரோடு மீட்ட சந்தோஷம், அடுத்த அரை மணி நேரத்தில் கரைந்தது. குழந்தை பரமேஸ்வரியின் தாய் ராசாத்தியும், தந்தை பழனியும் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டனர். இந்தத் தம்பதிக்கு நான்கு வருடங்களாகக் குழந்தையில்லாமல் தவமாய் தவமிருந்து பிறந்தவர் அங்காளபரமேஸ்வரி. இப்போது பெற்றோரை இழந்து நிற்கிறார்.

உயிர் மீண்ட குழந்தையோடு வலுக்கட்டாய போஸ்

இதில் குடியிருந்த ரகமத் பீ, நடந்த சம்பவத்தை விளக்கினார். ‘‘சரியாக 3.45 இருக்கும். வீட்டுக்குள் மண் கொட்டியது. பயந்துபோன நான், எங்கள் குடும்பத்தார் ஆறு பேரை எழுப்பி வீட்டுக்கு வெளியே அழைத்து வந்தேன். அடுத்து வேகமாக ஓடி பாட்டி சுந்தரவள்ளி உள்ளிட்டோரை எழுப்பி வீட்டை விட்டு வெளியேற்றினேன். கீழ் வீட்டில் குடியிருந்த கிருஷ்ணவேணியும், அவங்க அம்மாவும் வெளியூர் போயிருந்தாங்க. அடுத்து மேல்மாடியில் உள்ளவர்களுக்குத் தகவல் கொடுக்க சத்தம் போட்டேன். அதற்குள் எல்லாம் முடிஞ்சிடுச்சு. கண் இமைக்கும் நேரத்தில் வீடு தரைமட்டமானது. வீட்டில் இருந்த பலரும் அன்னைக்கு ஊருக்குப் போயிருந்தாங்க. எல்லோரும் இருந்திருந்தால் பலி கூடியிருக்கும்” என்றார் சோகமாக.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

விபத்தில் சிக்கிப் பலியான கார்த்திக்கும், உயிர் பிழைத்த கார்த்திகாவும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். கடந்த மூன்று மாதத்துக்கு முன்புதான், இந்த வீட்டுக்குக் குடி வந்தனர். மருத்துவமனையில் கார்த்திகாவைச் சந்தித்தோம். ‘‘தூங்கிக்கொண்டிருந்தபோது சத்தம் கேட்டது. அடுத்து ஒரே இருட்டு. எதுவும் தெரியல. ‘எங்களைக் காப்பாத்துங்க’ன்னு மூன்று பேரும் கதறினோம். ஆனால், வெளியில் இருப்பவர்களுக்கு அது கேட்கலை போல. உயிரைக் காப்பாற்றிக்கொள்ள போராடினோம். கண்முன்னே, புருஷனும் பிள்ளையும் மூச்சடைத்து சாகறதைப் பார்த்த பாவி நான். அவங்க போன பிறகு நான் வாழ்ந்து என்ன பண்ணப்போறேன்?” எனத் தலையிலடித்தபடி கதறறுகிறார்.

உயிர் மீண்ட குழந்தையோடு வலுக்கட்டாய போஸ்

‘‘அது பழைய வீடு. வீட்டின் மேல் விதிகளை மீறி, பில்லர் போடப்பட்டு கட்டடங்கள் எழுப்பினார்கள். இடிந்த வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள வீட்டை வாங்கியவர், பழைய சுவரைச் சுரண்டிவிட்டு புதிய கட்டடம் கட்டத் துவங்கினார். ‘அடுத்தடுத்த தினங்களில் பெய்த மழையில் சுவர் ஊறிப்போனதால், விபத்து நேர்ந்தது’ என்கிறார்கள் அதிகாரிகள். திருச்சி மலைக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான பழைய வீடுகள், பொது சுவரோடுதான் உள்ளன. சுவரின் ஒரு பக்க வீட்டை இடித்துப் புதுப்பித்தால், அருகில் உள்ள வீடும் இடிந்துவிடும். இதைப் புனரமைக்க கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால், யாரும் விதிமுறைகளைப் பின்பற்றுவதில்லை. இதேபோன்று கடந்த 2015-ல் திருச்சி நத்தர்ஷா பள்ளி வாசல் அருகேயும், ஸ்ரீரங்கத்திலும் பழைய கட்டடங்கள் விழுந்து பலர் இறந்தார்கள். விபத்து நடக்கும்போது மட்டும் அரசு அதிகாரிகள் அக்கறையோடு செயல்படுவார்கள். பிறகு மறந்துவிடுவார்கள். சட்டம் எளியவர்கள் மீது மட்டும் பாய்கிறது. பணக்காரர்களுக்கு வளைந்து கொடுக்கிறது’’ என்கிறார் ராக்போர்ட் வெல்ஃபேர் அசோசியேஷனைச் சேர்ந்த கணேசன்,

அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், ‘‘மலைக்கோட்டையைச் சுற்றியுள்ள பகுதிகளில், பழமையான கட்டடங்கள் குறித்த தகவல்களைச் சேகரிக்கவும், அவற்றை அப்புறப்படுத்தவும் கலெக்டர் நடவடிக்கை மேற்கொள்வார்” என்றார். பலியான குடும்பங்களுக்கு லட்சங்களை இழப்பீடாக வழங்க உத்தரவிட்டுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அரசு அதிகாரிகள் அலட்சியமாக இருந்தால், இழப்பீடுகளை வாரி வழங்கி என்ன பயன்?

-  சி.ய.ஆனந்தகுமார், ப.தினேஷ்குமார்
படங்கள்: என்.ஜி.மணிகண்டன்,  கோ.ராகவேந்திரகுமார்