Published:Updated:

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 9

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 9
பிரீமியம் ஸ்டோரி
News
கிறுக்கு ராஜாக்களின் கதை! - 9

முகில்

ஓர் இளவரசனின் கதை!

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 9

அவசிய முன்குறிப்பு: இந்த வரலாறு கொரிய மண்ணில் நிகழ்ந்ததென்பதால், இதில் வரும் பெயர்களை வாசிப்பது உங்கள் நாக்கெலும்பு முறிவுக்கு வழிவகுக்கும் என்ற முன்னெச்சரிக்கையை இங்கே வைத்துவிட்டுத் தொடர்கிறேன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கொரிய மண்ணில் ஜோஸியான் பரம்பரை தோற்றுவிக்கப்பட்டது கி.பி. 1392-ல். அதில் 21-வது மன்னராக அரியணை ஏறியவர் இயோங்ஜோ (கி.பி.1724). அந்த இடத்துக்கு அவர் வந்து சேர்ந்தது பூப்பாதையில் அல்ல, முரட்டுத்தனமான முள்பாதையில்தான்.

அப்போது சோரோன், நோரோன் என்று இரண்டு பிரிவினர் அங்கே வலுவாக அரசியல் செய்து கொண்டிருந்தனர். இந்த இரண்டில் ஏதாவது ஒரு பிரிவினர் மூர்க்கத்தனமாக முட்டுக்கொடுத்தால் மட்டுமே ஒருவர் மன்னராக முடியும். 19-வது மன்னர் சுக்ஜோங் இறந்த பிறகு, அவரின் மகனான கியோங்ஜோங், சோரோன் பிரிவினரது அமோக ஆதரவோடு 20-வது மன்னராக முடிசூடினார். இவர், இயோங்ஜோவின் ஒன்றுவிட்ட சகோதரர். அந்தச் சூழலில் இயோங்ஜோ சில பகுதிகளை நிர்வகிக்கும் தளபதியாக வலம் வந்தார். அந்த கொரிய கொக்கு, உரிய தருணத்துக்காக, அரியணைக் கனவுடன் காத்திருந்தது.

கியோங்ஜோங்குக்கு அடிக்கடி உடல் நலமில்லாமல் போனது. தவிர, அவருக்கு வாரிசும் கிடையாது. அடுத்த ராஜ வாரிசாக இயோங்ஜோவை அறிவிக்க வேண்டுமென நோரோன் பிரிவினர் அழுத்தம் கொடுத்தனர். இது சோரோன் பிரிவினருக்குப் பிடிக்கவில்லை. நோரோன் பிரிவின் பெருந்தலைகள் சிலர் கொல்லப்பட்டனர். இயோங்ஜோவைக் கொல்லவும் முயற்சிகள் நடந்தன. அவர், சோரோனின் சதிகளுக்குத் தப்பினார். ‘விதியோடு விளையாட நான் விரும்பவில்லை. ஒதுங்குகிறேன். ஏதோ ஒரு மூலையில் சாதாரணனாக வாழ்ந்து கொள்கிறேன்’ என மன்னருக்கு வெள்ளைக்கொடி செய்தி அனுப்பினார். அப்போதைக்குச் சலசலப்புகள் அடங்கின.

அந்தக் கோடையில் ஒரு பகல் பொழுதில் நண்டுக்குழம்பு உண்டார் கியோங்ஜோங். வயிறு பாதிக்கப்பட்டது. உடல் நலம் மேலும் மோசமாகி மோட்சத்துக்குப் பயணச்சீட்டு வாங்கினார். #RIP. இதில் இன்னொரு வெர்ஷன் உண்டு. கியோங்ஜோங்கின் உடல் நலம் தேறுவதற்கென, வாழ்த்துச் செய்தியோடு நண்டையும் அனுப்பி வைத்ததே பாசக்கார இயோங்ஜோதான். அந்த பாசக்குழம்பே பாசக்கயிறானது என்றும் சொல்கிறார்கள். மொத்தத்தில் நண்டு உண்டு சென்று சேர்ந்தார் கியோங்ஜோங். நன்று என்று மன்னராக நிமிர்ந்தார் இயோங்ஜோ, நோரோன்களின் பேராதரவோடு.

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 9

இப்படிப் பல குட்டிக்கரணங்கள் அடித்து, தன் 31-வது வயதில் ஆட்சிக்கு வந்த இயோங்ஜோ, அதிகார போதையில் ஆடலாம் என்றோ, வருமானத்துக்கு மீறி சொத்து சேர்க்கலாம் என்றோ, ஆடம்பரத்தில் மூழ்கித் திளைக்கலாம் என்றோ, மலைநாட்டில் எஸ்டேட் வாங்கி திராட்சைத் தோட்டம் போடலாம் என்றோ கிஞ்சித்தும் எண்ணவில்லை. தனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஜோஸியான் பரம்பரையின் ஆகச்சிறந்த மன்னராக ஆட்சி செய்ய வேண்டும் என்றே மனதார விரும்பினார். உரியவர்கள் ஆலோசனைகளுடன் உன்னத ஆட்சி நடத்தினார். நீதி, நிர்வாகம், பொருளாதாரம் சிறக்க, மாதம் மும்மாரியும், அதிலொன்று பனிமாரியும் பெய்தது. ஷேமம்!

திருவள்ளுவர் தனது ‘ஒழுக்கமுடைமை’ அதிகாரத்தையே மன்னருக்கு அர்ப்பணிக்கலாம். இயோங்ஜோவின் ஒழுக்க விதிகள் அப்பேர்ப்பட்டவை. நேர்த்தியாக உடையணிவார். நேரந்தவறாமை மிக முக்கியம். தினமும் 15 மணி நேரம் நிர்வாகப் பணிகளை மேற்கொள்வார். அதுவும், முதுகுத் தண்டு வளையாமல், நேராக உட்கார்ந்து, சோர்வின்றி. எந்தக் கோப்பும் அவர் பார்வைக்குப் பிறகே நகரும். நேரத்துக்கு உணவு. கன்னாபின்னா மெனுவெல்லாம் கிடையாது. காய்கறிகள் மட்டும். தேவையற்ற வார்த்தைகளைக்கூட பேச மாட்டார். நல்ல காரியங்களுக்குச் செல்ல ஒரு வாசல், கெட்ட காரியங்களுக்குச் செல்ல ஒரு வாசல் என்று வழிவகுத்து வாழ்ந்தார். (அந்தப்புரம் தவிர்த்து) சுய ஒழுக்கத்தின் சூப்பர் ஸ்டாராகத் திகழ்ந்த இயோங்ஜோ, சுற்றியிருப்பவர்களும் தன்னைப் போலவே இருந்து தொலைக்க வேண்டுமென எதிர்பார்த்தார். ஆகவே, எதிலும் கடுமை காட்டினார். தன் மகனிடம்கூட.      

இயோங்ஜோவின் அதிகாரபூர்வ ராணிக்குக் குழந்தையில்லை. அவருடைய துணைவிக்குப் பிறந்த மகன் ஒருவன், தனது ஒன்பதாவது வயதில் இறந்துபோனான். பிற துணைவிகளுக்குப் பிறந்ததெல்லாம் பெண் பிள்ளைகள். ‘எனக்கு இன்னொரு மகன் பிறப்பானா? எனக்குப் பின் இந்த ராஜ்ஜியத்தை ஆள்வானா?’ ஏங்கிக் கிடந்த இயோங்ஜோவின் விடாமுயற்சி விஸ்வரூப வெற்றியானது. அவரது 41-வது வயதில், ஸியோன்ஹி என்ற துணைவிக்கு ஒரு மகன் பிறந்தான் (கி.பி.1735). யி ஸன் என்று பெயரிட்டு மகிழ்ந்தார்.

ஜோஸியான் மன்னர் பரம்பரையில் ஆண் குழந்தை பிறந்தால், உரிய தகுதிகளுடன் வளர்ந்த பிறகே, ‘ராஜ வாரிசாக’ அறிவிக்கும் பழக்கம் இருந்தது. ஆனால், இளவரசர் யி ஸன் பிறந்த சில நாள்களிலேயே ‘ராஜ வாரிசாக’ அறிவிக்கப்பட்டார். பரம்பரையின் அடுத்த சூரியன் கிழக்கிலிருந்துதான் உதித்து, பிரகாசமாக உருவாகி வரவேண்டும் என்ற எண்ணத்தில், பிறந்த நூறாவது நாளிலேயே இளவரசனை, அரண்மனையின் ‘கிழக்கு மாளிகைக்கு’ அனுப்பினார்.

அது இளவசரனுக்குரிய மாளிகையானது. வளர்ப்புப் பெற்றோர் நியமிக்கப்பட்டனர். அவர்கள், முன்னாள் மன்னர் கியோங்ஜோங்கின் விசுவாச வேலைக்காரர்கள். இயோங்ஜோதான் கியோங்ஜோங்கைக் கொன்றதாக நம்பினார்கள். ஆகவே, வளர்ப்புப் பெற்றோர் பாத்திரத்தில் டபுள் கேம் ஆடினார்கள். இயோங்ஜோவின் கட்டளைகளுக்கு இம்மி பிசகாமல் அடிபணிந்தே இளவரசரை வளர்ப்பதாகக் காட்டிக் கொண்டார்கள். ஆனால், மன்னரது விருப்பத்துக்கு மாறான விஷயங்களை இளவரசனுக்குக் கற்றுக் கொடுத்தார்கள்.  ‘இதான உனக்குப் பிடிச்சிருக்கு. செய். ஆனா, மன்னருக்குத் தெரியாம பண்ணு. தெரிஞ்சா உங்க அப்பா கொன்னுருவாரு’ - என்று இளவரசனுக்குள் மன்னர் மீது அதீத பயத்தை தொடர்ந்து விதைத்தனர்.

‘மன்னரே, நீங்கள் தூங்கும் நேரம் வந்துவிட்டது’ என்று பணியாள் நினைவூட்ட, இயோங்ஜோவோ ராப்பகலாக உட்கார்ந்து புத்தகம் ஒன்றை எழுதிக் கொண்டிருந்தார். அது, ‘இளவரசன் எப்படியெல்லாம் நிர்வாகம் செய்ய வேண்டும்’ என்று கற்றுக்கொடுக்கும் புத்தகம். எல்லாவற்றையும் தியரியாகப் பார்த்த மன்னர், பிராக்டிகலாக தன் மகன் மீது அன்பும் அக்கறையும் செலுத்த வேண்டும் என்று யோசிக்கவே இல்லை.

தாயும் தன் மகன் மீது வெளிப்படையாகப் பாசம் காட்டவில்லை. ‘தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை. அதன்படி நடந்தால்தான் நீ என் பிள்ளை’ என்று கடுமையே காட்டினாள். பாசத்துக்கு ஏங்கிய இளவரசன், பயத்தினால் தன் தாயிடமிருந்தும் தந்தையிடமிருந்தும் விலகினான்.

எட்டு வயதில் இளவரசன் விரும்பும் விதத்தில் ஒருத்தி நெருங்கி வந்தாள். பால்ய சுயம்வரம். பல்வேறுகட்ட சோதனைகளுக்குப் பிறகு, ஹையெஜியோங் என்ற சிறுமி இளவரசியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டாள். கோலாகலத் திருமணம்.

அதற்கு அடுத்த ஆண்டில் இளவரசனுக்கு உடல் நலம் சரியின்றிப் போனது. பிழைத்ததே பெரிய விஷயம். ஆனால், பக்க விளைவுகளாக சில விநோத மனநலக் கோளாறுகளும் தொற்றிக் கொண்டன. ‘ஏன் இப்படியெல்லாம் செய்கிறான்’ என்று புரியாத புதிராக இளவரசன் நடந்து கொண்டான். எப்போதும் இல்லை. எப்போதாவது. ஆனால், கடும் காய்ச்சல், தட்டம்மை, இன்னபிற நோய்கள் அடுத்தடுத்து தாக்கியதில் சற்றே மூளை பாதிப்பு ஏற்பட்டது உண்மையே.

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 9

நோய் பாதித்த காலங்களிலும் தந்தையின் அன்பான கவனிப்பு கிடைக்காதது இளவரசனுக்கு மன பாதிப்பைத் தந்தது. அந்தச் சமயங்களில் இளவரசியையும் விலக்கிவைத்திருந்தார்கள். மற்றபடி இளவரசி ஹையெஜியோங், இளவரசனுக்கு நல்லதொரு விளையாட்டுத் தோழியாக இருந்தாள். பொழுதுபோக்க, அப்பா - அம்மா விளையாட்டு விளையாடினார்கள். இளவரசன், நிஜமாகவே அப்பா - அம்மா விளையாட்டுக்குத் தயாராகிவிட்டான் என்று அவனது பதினான்காவது வயதில் ஒரு விழா எடுத்தனர். ஏற்கெனவே வில்வித்தை, வாள்வித்தை, தற்காப்புக் கலை, ஓவியம் மற்றும் கல்வியில் தேர்ச்சி பெற்றிருந்த இளவரசர், கலவியிலும் சாதித்தார். 

அடுத்த வருடமே ஹையெஜியோங் ஒரு குழந்தைக்குத் தாயானாள். குழந்தை நிலைக்கவில்லை. மீண்டும் ஓர் ஆண் குழந்தை. ஜியோன்ஜோ என்று பெயரிட்டனர். ‘ராஜ பேரன்’ என்ற அங்கீகாரம் அந்தப் பிஞ்சுக்குக் கிடைத்தது. ஆனால், மகனை எந்தவிதத்திலும் அங்கீகரிக்கும் மனசு மட்டும் மன்னருக்கு வாய்க்கவே இல்லை.

இளவரசர், மன்னரைத் தினமும் மூன்று வேளையும் மரியாதை நிமித்தமாகச் சந்திக்க வேண்டும். சந்திக்கும் பொழுதுகளெல்லாமே சம்பிரதாயமாகவே நகர்ந்தன. தந்தை தன் அருகில் உட்கார வைத்து தலைகோதி கனிவுடன் பேச மாட்டாரா என்ற ஏக்கம் இளவரசருக்குள் குறையவே இல்லை.

15 வயது இளவரசருக்கு, மன்னர் சில பொறுப்புகளைக் கொடுத்தார். ஆனால், அனுபவமற்ற இளவரசரிடம் அசாத்தியமான நிர்வாகத் திறமையை எதிர்பார்த்தார். அவர் கேட்கும் எந்தக் கேள்விக்கும் இளவரசரால் பதில்கூட சொல்ல முடியவில்லை. எப்போதும் அனிச்சையாக மேல் அண்ணத்துடன் நாக்கு ஒட்டிக்கொண்டது. மன்னரின் ஆத்திர அணைக்கட்டு உடைவது வாடிக்கையானது.

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 9

சில சமயங்களில் இளவரசர், ‘மன்னரே, இதனை இப்படிக் கையாளலாமா?’ என்று தயக்கத்துடன் ஆலோசனை கேட்பார். மன்னர் அனல் துப்புவார். ‘சின்ன பிரச்னையைக்கூட சரி பண்ண முடியல. நீயெல்லாம் இளவரசன்னு சொல்லிக்க அருகதையே இல்ல. என் பார்வைல இருந்து ஓடிப்போயிரு!’

இன்னொரு சமயம் இளவரசர் சற்றே தெம்புடன் வருவார். ‘இன்றைக்கு நானே அந்தப் பிரச்னைக்குத் தீர்வு கண்டுட்டேன் மன்னரே’ என்று மகிழ்வுடன் சொல்வார். அப்போதும் மன்னர் கனல் கக்குவார். ‘நீ எதுக்குப் பண்ணுன? அப்ப, மன்னன் நான் எதுக்கு இருக்குறேன்?’

ஒவ்வொரு முறையும் மன்னரின் கோப வார்த்தைகள் இளவரசரைப் பொசுக்கின. அதுவும் அடுத்தவர்கள், வேலையாள்கள், அடிமைகள் முன்பெல்லாம் தந்தை தன்னைக் கணக்கு வழக்கின்றி அவமானப்படுத்துகிறாரே என்ற எண்ணம் தீவிர மன அழுத்தத்தைத் தந்தது. இளவரசரோ, மன்னரிடம் தந்தைப் பாசத்தைத் தேடி ஏமாந்தார். மன்னரோ, தன் மகனை வருங்காலத்தில் தகுதியுள்ள ஓர் ஆட்சியாளனாக வரமாட்டோனோ என்ற ஏமாற்றமும் கோபமுமாக இருந்தார். வேதியியல் கொஞ்சம்கூட ஒத்துப்போகவில்லை. இருவரது உணர்வுகளிலும் அடர் அமிலம் பரவியது. அது பெரும் விளைவுகளை உண்டாக்கியது.

(அடுத்த இதழில் இளவரசர் வருவார்...)