Published:Updated:

சேலத்தை மாற்ற என்னமோ திட்டம் இருக்கு! - ரகசியம் காக்கும் ரோகிணி

சேலத்தை மாற்ற என்னமோ திட்டம் இருக்கு! - ரகசியம் காக்கும் ரோகிணி
பிரீமியம் ஸ்டோரி
News
சேலத்தை மாற்ற என்னமோ திட்டம் இருக்கு! - ரகசியம் காக்கும் ரோகிணி

சேலத்தை மாற்ற என்னமோ திட்டம் இருக்கு! - ரகசியம் காக்கும் ரோகிணி

சேலம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரமாகப் பரவி, அதனால் தினமும் மரணங்கள் நிகழும் சூழலில், புதிய கலெக்டராகப் பொறுப்பேற்றுள்ளார், ரோகிணி ராம்தாஸ் பாஜிபக்கரே. உடனடியாக களத்தில் இறங்கிய அவர், டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த அரசு ஊழியர்கள், பொதுமக்கள், தன்னார்வத் தொண்டர்கள் என ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேரைக் களத்தில் இறக்கி, போர்க்கால அடிப்படையில் தூய்மைப்பணியை மேற்கொண்டுள்ளார். டெங்கு காய்ச்சல் தொடர்பாகப் பொதுமக்கள் தகவல் தெரிவிக்க 8098160003 என்ற வாட்ஸ்அப் எண்ணையும் அவர் அறிவித்துள்ளார். இது நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அவரின் சொந்த மாவட்டத்துக்கு ஒரு நல்ல அதிகாரி வேண்டும் என்று இவரை நியமித்ததாகச் சொல்கிறார்கள். ரோகிணியிடம் பேசினோம்.

சேலத்தை மாற்ற என்னமோ திட்டம் இருக்கு! - ரகசியம் காக்கும் ரோகிணி

‘‘உங்களைப் பற்றி...?’’

‘‘மகாராஷ்ட்ரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டம், உப்பிலாடி கிராமத்தில், சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தேன். அரசுப் பள்ளியில் படித்தேன். பொறியியல் பட்டமும் அரசுக் கல்லூரியில்தான். 2008-ல் ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றிபெற்று திண்டிவனம், திருநெல்வேலி, மதுரை மாவட்டங்களில் பணியாற்றினேன். இப்போது இங்கு வந்துள்ளேன். என் கணவர் விஜேந்திர பிதாரி ஓர் ஐ.பி.எஸ் அதிகாரி. பெங்களூரில் பணியாற்றுகிறார். எங்களுக்கு அபிஜெய் என்ற ஆறு வயது மகன் இருக்கிறான்.’’

‘‘சேலம் மாவட்டத்தில் உங்கள் கவனத்துக்கு வந்துள்ள பிரச்னைகளை எப்படித் தீர்க்கப்போகிறீர்கள்?’’

‘‘இங்கு, சுகாதாரம்தான் மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. டெங்கு கொசுக்களை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளைத் தீவிரப் படுத்தியுள்ளோம். மழைநீரைச் சேகரிப்பதற்காக, நீர்நிலைகளைத் தூர்வாரும் நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ள உள்ளோம். சேலம் அரசு மருத்துவமனை, ஆறு மாவட்டங்களுக்கு உயர் சிகிச்சை அளிக்கும் மையமாக உள்ளது. எனவே, அங்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இங்கு மருத்துவர் பற்றாக்குறை இருப்பது பற்றி புகார் வந்ததும், சென்னையிலிருந்து 10 மருத்துவர்கள் கூடுதலாக வரவழைக்கப்பட்டுள்ளனர். தேவைப்பட்டால், இன்னும் கூடுதலான மருத்துவர்கள் வரவழைக்கப்படுவார்கள்.’’

‘‘சிறப்புத் திட்டம் ஏதாவது நிறைவேற்றத் திட்டம் உள்ளதா?’’

‘‘நிச்சயமாக. முழுமையாக நிறைவேற்றிய பிறகே அதை வெளிப்படுத்துவேன். பொதுமக்களின் நலனைக் கருத்தில்கொண்டே திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. மதுரையில் திறந்தவெளிக் கழிப்பிடங்கள் இல்லாமல் செய்ததைப் போல, சேலம் மாவட்டத்திலும் செய்வேன். பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பிரச்னைகளுக்கும், விவசாயம் சார்ந்த பிரச்னைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும்.’’

‘‘நீங்கள் இங்கு வந்தவுடன் அரசு அதிகாரிகளுக்கு என்ன மாதிரியான அறிவுரைகளை வழங்கினீர்கள்?’’

‘‘அதிகாரிகளுக்காகப் பொதுமக்கள் காத்திருக்கக் கூடாது; பொதுமக்களுக்காகத்தான் அதிகாரிகள் காத்திருக்க வேண்டும் என்று முதல் நாளே மீட்டிங் போட்டு அறிவுறுத்தினேன். ஒவ்வோர் அதிகாரியும் காலை 10 மணிக்கு அலுவலகம் வந்த பிறகு, எத்தனை பேரைச் சந்தித்து, அவர்களின் பிரச்னைகளைத் தீர்த்திருக்கிறார் என்பதைக் கண்காணிக்கிறேன். புகார் வந்தால், கடுமையான நடவடிக்கைகள் எடுப்பேன்.”

‘‘நீங்கள் எதைச் செய்தாலும் சமூக வலைதளங்களில் மிகப் பெரிய அளவில் பேசப்படுகிறதே?’’

‘‘அப்படியா? (சிரிக்கிறார்). என் கடமையை நான் செய்கிறேன். அது சோஷியல் மீடியாவில் வரும்போது, பொதுமக்கள் மத்தியில் விழிப்பு உணர்வை ஏற்படுத்தலாம். அதோடு, மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகவும் இருக்க லாம் இல்லையா?’’’

‘‘இது, முதல்வரின் சொந்த மாவட்டம். இங்கிருக்கும் மக்கள் பிரதிநிதிகள் உங்கள் முயற்சிகளுக்கு எந்தளவுக்குத் துணையாக இருக்கிறார்கள்?’’

‘‘மக்கள் பிரதிநிதிகளும், அரசு அதிகாரிகளும் மக்களுக்குச் சேவை செய்வதற்காகவே வந்திருக்கிறோம். அப்படியிருக்கும்போது நிச்சயம் எல்லோருமே எனக்கு உறுதுணையாகத்தான் இருப்பார்கள்.’’

‘‘பொதுமக்களுக்கும், பள்ளிக் குழந்தைகளுக்கும் நீங்கள் சொல்ல விரும்புவது?’’

‘‘பொதுமக்கள் அரசின் நலத்திட்ட  உதவிகளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். சேலம் மாவட்டம் ஒரு முன்மாதிரி மாவட்டமாக உருவாக அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். அரசுப் பள்ளிக் குழந்தைகள் தெளிவான மனநிலையில் இருப்பார்கள். அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தகுதிவாய்ந்தவர்கள். ஆனால், தனியார் பள்ளி ஆசிரியர்கள் தகுதி வாய்ந்தவர்கள் என்று சொல்லமுடியாது. இந்த நிலை மாற வேண்டும். எந்த வேற்றுமையும் இல்லாமல், பெரிய கனவுகளோடும் நம்பிக்கையோடும் குழந்தைகள் வளர வேண்டும்.’’

- வீ.கே.ரமேஷ்
படம்: எம்.விஜயகுமார்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz