Published:Updated:

டிரைவிங் லைசென்ஸ்... போலீஸ் சைலென்ஸ்!

டிரைவிங் லைசென்ஸ்... போலீஸ் சைலென்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
டிரைவிங் லைசென்ஸ்... போலீஸ் சைலென்ஸ்!

டிஜிலாக் ஆப் செல்லாது... ஆதார் லிங்க் கிடையாது

‘அசல் ஓட்டுநர் உரிமம் கையில் வைத்திருப்பது கட்டாயம்’ ஆனதற்குப் பிறகு தமிழகத்தில் ‘ஆட்டோ சவாரி’ முடங்கிக்கிடக்கிறது. ‘டிஜிலாக் என்ற செயலி மூலம் ஓட்டுநர் உரிமத்தைப் பதிவிறக்கம் செய்து  காட்டினாலே போதும்... அசல் உரிமத்தைக் கையில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை!’ - இப்படியொரு தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த நிலையில், வாகனத் தணிக்கையில் ஈடுபடும் போலீஸாரிடம், ‘டிஜிலாக்’ பற்றிய விவரம் தெரிந்தவர்கள் வாக்குவாதம் செய்கின்றனர். போலீஸாரோ, ‘எங்களுக்கு அப்படி எந்த உத்தரவுமில்லை. உங்கள் அசல் உரிமத்தைக் காட்டுங்கள்’ எனக் கறாராகப் பேசுகிறார்கள். 

டிரைவிங் லைசென்ஸ்... போலீஸ் சைலென்ஸ்!

இது குறித்து சென்னைப் போக்குவரத்து கூடுதல் கமிஷனர் பெரியய்யாவிடம் கேட்டோம். “அதிவேகமாக வாகனத்தை ஓட்டுதல், போக்குவரத்து சிக்னல் மதியாமை, செல்போனில் பேசியபடி  ஓட்டுதல், குடிபோதையில் ஓட்டுதல், அதிக பாரம் ஏற்றிச் செல்லுதல், சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றிச் செல்லுதல் போன்ற  ஆறுவகையான விதி மீறல்களே உயிரிழப்புகளுக்குக் கூடுதல் காரணங்கள் என்று சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதல் குழு கூறுகிறது. இந்த விவகாரம் கோர்ட்டுக்குப் போனபோது, ‘வாகன ஓட்டிகள் அசல் உரிமத்தைக் கையில் வைத்திருப்பது கட்டாயம்’ என கோர்ட் உறுதியாகச் சொல்லி விட்டது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
டிரைவிங் லைசென்ஸ்... போலீஸ் சைலென்ஸ்!

டிஜிலாக் முறையில் ஓட்டுநர்கள் மட்டுமல்ல, அனைவரும் தங்களுடைய அனைத்து ஆவணங்களையும் சேமித்து வைத்துக் கொள்ளலாம். அவ்வளவே. டிஜிலாக் என்பது ஒரு ‘ஆப்’தான். இதை ஏற்பதா வேண்டாமா என்பது குறித்து மோட்டார் வாகனச் சட்டத்தில்தான் திருத்தம் கொண்டு வரவேண்டும். இதை ஏற்பது தொடர்பாக எங்களுக்கு எந்த அறிவுறுத்தலும் வரவில்லை. வாகன ஓட்டி ஒருவர், டிஜிலாக் செயலியை செல்போனில் டவுன்லோடு செய்து வைத்துக்கொண்டு எங்களிடம் காட்டுகிறார்... நாங்கள் அதைச் சரிபார்க்க ஆர்.டி.ஓ தரப்புக்கு அனுப்புகிறோம் என்று வைத்துக் கொள்வோம். ஆர்.டி.ஓ அலுவலகத்தில் இருக்கிற சிஸ்டத்தோடு இந்தச் செயலி மேட்ச் ஆக வேண்டும். அதற்கான சாத்தியக்கூறு இருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும்.

குடிபோதையிலும், அதிக வேகத்திலும், சிக்னலை மதிக்காமலும் வாகனத்தை ஓட்டுகிறவர்களிடம் நாங்கள் கைப்பற்றும் உரிமத்தை, ஆய்வுக்காக ஆர்.டி.ஓ-வுக்கு அனுப்புவோம். இப்படியான குற்றங்களுக்கு, அந்த உரிமத்தை தற்காலிகமாக குறிப்பிட்ட காலத்துக்கு முடக்கி வைக்க முடியும். 1.45 லட்சம் பேரை விதிமீறலுக்காக பிடித்தால், அதில் அசல் உரிமம் வைத்திருந்தவர்கள் 5,700 பேர் மட்டும்தான். அசல் உரிமத்தைக் காட்டச் சொல்வது பலர் திருந்தவும் வழிவகுக்கும்” என்றார் பெரியய்யா.

சென்னையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் சிலரிடம் பேசினோம். மைக்கேல், “ஒரிஜினல் லைசென்ஸை வாங்கி வைத்துக்கொண்டுதான் முதலாளிகள், ஆட்டோவைக் கொடுக்கிறார்கள். ஜெராக்ஸைக் வைத்துக்கொண்டு ஆட்டோவை ஓட்ட முடியாது என்பதால் ஆட்டோ ஓட்டமுடியவில்லை” என்றார்.

டிரைவிங் லைசென்ஸ்... போலீஸ் சைலென்ஸ்!

செந்தில்குமார், “ஒரிஜினல் லைசென்ஸைக் கையில் வைத்திருக்க நான் தயார். மழை, புயல் போன்ற ஏதோ ஒரு காரணத்தால் ஒரிஜினல் லைசென்ஸ் தொலைந்துவிட்டால், ஒரே நாளில் அதை ஆர்.டி.ஓ ஆபீஸில் வாங்கிவிட முடியுமா? போலீஸ் ஸ்டேஷன், ஆர்.டி.ஓ. ஆபீஸ் என இரண்டு வாரமாவது அலைய வேண்டியிருக்கும். அதுவரை என் வீட்டில் அடுப்பு எரியாது. படிப்பறிவு குறைந்தவர்களே பெரும்பாலும் இந்தத் தொழிலில் உள்ளனர். தவறு செய்த சிலர், தங்களைத்  திருத்திக்கொண்டு ஆட்டோ தொழிலுக்கு வந்துள்ளனர்” என்றார்.

சந்துருபாண்டியன், “ஒரிஜினல் லைசென்ஸ் முன்பு தொலைந்து போனால் அதை உடனே வாங்க நூறு ரூபாய் செலவாகும். இப்போது ஐயாயிரம் ரூபாய் ஆகிறது. ஆட்டோ ஓட்டுநர்கள் பலர் தின வாடகையைக்கூட ஒழுங்காகக் கட்ட மாட்டார்கள், எங்களின் பிடி அவர்களிடம் இருக்கவேண்டுமே என்பதற்காகத்தான் ஒரிஜினல் லைசென்ஸை முதலாளிகள் கேட்கிறார்கள்” என்றார்.

ட்ரெயிலர் டிரான்ஸ்போர்ட் அதிபர் வி.ரமேஷ், “டிரான்ஸ்போர்ட் தொழிலில் 30 ஆண்டுகளாக இருக்கிறேன். என்னிடம் நூற்றுக்கணக்கில் டிரைவர்கள் இருக்கிறார்கள். அவர்களில் பலர் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களின் பின்னணி எனக்குத் தெரியாது. என்னிடம் இருக்கும் ஒரே பிடி, அவர்களின் லைசென்ஸ். அவர்களிடம் டிரைவிங் லைசென்ஸின் நகலை வாங்கிக் கொண்டு, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள லாரியை எந்த நம்பிக்கையில் கொடுத்து அனுப்ப முடியும்? அந்த லாரியில் ஏற்றப்படும் பொருள்களும் பல லட்சம் மதிப்புள்ளவை. டிரைவர்களுக்கான உத்தரவாதத்தை நாங்கள் கொடுக்கிறோம் என அரசு சொன்னால், நாங்கள் ஒரிஜினல் லைசென்ஸைக் கேட்காமல் லாரியைக் கொடுத்து அனுப்புகிறோம்” என்றார்.

டிரைவிங் லைசென்ஸ்... போலீஸ் சைலென்ஸ்!

ஹாத்தீம்பேக், “எல்லா ஆவணங்களையும், ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று அரசு சொல்கிறது. அப்படியென்றால், டிரைவிங் லைசென்ஸையும் இணைத்துவிட வேண்டியதுதானே. போக்குவரத்து விதிகளை மீறுபவரின் ஆதார் கார்டை வாங்கி அவர் ஜாதகத்தையே எடுத்து விடலாமே? போலீஸாரிடம்  ஒரிஜினல் லைசென்ஸ் மாட்டிக்கொண்டால், அதைத் திரும்ப வாங்க முடியுமா? அதற்குப் பதில், ஒரு புது லைசென்ஸையே வாங்கி விடலாம்” என்றார்.

ஒரிஜினல் லைசென்ஸ் ஏன் தேவை என்பதை போலீஸும், கோர்ட்டு விளக்கியிருக்கிறது. ஆனாலும் வாகன ஓட்டிகள், வாகன உரிமையாளர்கள் என இரு தரப்பினரும் எழுப்புகிற சந்தேகங்களை யாரும் கண்டுகொள்ளவில்லை.

 - ந.பா.சேதுராமன்
 படங்கள்: தி.குமரகுருபரன், வீ.ஸ்ரீனிவாசலு

டிரைவிங் லைசென்ஸ்... போலீஸ் சைலென்ஸ்!

“அப்டேட் செய்யும் வசதியுமில்லை!”

மு
ன்பு வங்கிகளும் டாஸ்மாக் கடைகளும் க்யூக்களால் திணறின. இப்போது போக்குவரத்து அலுவலகங்கள். பார்க்கும்போதே, ‘இவ்வளவு பேர் இத்தனை நாள்களாக லைசென்ஸ் இல்லாமல்தான் வாகனம் ஓட்டினார்களா?’ என நமக்கு அச்சம் வருகிறது. சென்னை பூந்தமல்லி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சி.நெடுமாறன், “விபத்துகளை ஏற்படுத்தும் வாகன ஓட்டிகள் பலரிடம் ஒரிஜினல் லைசென்ஸே இல்லை. சாலை விதிகளை மீறினால், அபராதத்தைச் செலுத்திவிட்டு மறுநாளே வாகனத்தை ஓட்ட ஆரம்பித்துவிடுகிறார்கள். கையில் இருக்கும் லைசென்ஸின் நகலை ஆர்.டி.ஓ அல்லது போலீஸிடம் ஒப்படைத்துவிட்டு, இன்னொரு நகலை வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுகிறார்கள். இனி, அப்படி நடக்க வாய்ப்பில்லை. ஜெராக்ஸ் லைசென்ஸ் விவரத்தை வைத்து கணினி மூலம் முந்தைய விபத்துகளை ‘அப்டேட்’ செய்யும் வசதியுமில்லை. புதுப்பித்தல், பழகுநர் உரிமம் (எல்.எல்.ஆர்), ஓட்டுநர் உரிமம் மற்றும் பல ஆண்டுகள் காலாவதியான உரிமத்தைப் புதுப்பித்தல் ஆகியவற்றுக்கு இப்போது அவசியம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏராளமான மக்கள் ஆர்.டி.ஓ அலுவலகங்களில் குவிகிறார்கள். ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இனி, புதிய மோட்டார் வாகனங்களையும் வாங்க முடியாத நிலை உறுதிசெய்யப்பட்டுள்ளது. கூட்டத்தைச் சமாளிக்க  கூடுதல் கவுன்ட்டர்களைத் திறந்திருக்கிறோம்.” என்றார்

இன்டர்நெட் ஸ்பீடு? லைசென்ஸ் லேட்டு!

ஆர்
.டி.ஓ அலுவலகங்களில் பி.எஸ்.என்.எல் இணையதள சேவை உள்ளது. பணிகளை விரைந்து முடிக்கும் அளவுக்கு இணையதள சேவையில் அதிவேகம் தரப்படவில்லை. ஒருவரை புகைப்படம் எடுத்ததும், கணினி பிளேட்டில் அவர் போடுகிற கையெழுத்து ஸ்க்ரீனில் அப்டேட் ஆவதற்கு 20 நிமிடங்கள் வரை ஆகின்றன. இப்படியாக, ஒருவரின் லைசென்ஸுக்கான முதற்கட்டப் பணிக்கே 40 நிமிடங்கள் தேவை. ஒருவருக்கு 40 நிமிடங்கள் என்றால், ஒரு நாளில் அதிகபட்சமாக 15 பேருக்குத்தான் சேவை செய்யவே முடியும். இதுபோன்ற பிரச்னைகளைச் சரிசெய்யாமல், அசல் உரிமம் கையில் வைத்திருக்க வேண்டும் என்று சொல்வது அறிவார்ந்த செயல் அல்ல.