Published:Updated:

தமிழ் நூல்களை டிஜிட்டல் மயமாக்கும் மதுரை தமிழ் ப்ராஜெக்ட்!

தமிழ் நூல்களை டிஜிட்டல் மயமாக்கும் மதுரை தமிழ் ப்ராஜெக்ட்!
தமிழ் நூல்களை டிஜிட்டல் மயமாக்கும் மதுரை தமிழ் ப்ராஜெக்ட்!

"மதுரைத் திட்ட மின்னூல்கள் கணினியில் படிக்கக்கூடிய விதத்தில் உள்ளன. கோப்பு அளவும் படவடிவு நூல்களை விட மிகமிகக் குறைவு, தமிழில் கொஞ்சம் தெரிந்திருந்தாலே போதும் அதைக்கொண்டு இதில் உள்ள சொற்களையோ, வரிகளையோ சுலபமாகத் தேடவும்  விரைவில் அவை எந்த நூலில் எந்தக் காலத்தில் யார் பயன்படுத்தியுள்ளார் என்ற விவரத்தைச் சுலபமாகக் கண்டுபிடிக்கவும் முடியும்."

மொபைல் கைக்கு வந்ததும் வாசிப்புப் பழக்கம் குறைந்துவிட்டது என்ற ஒரு குற்றச்சாட்டு பரவலாக இருக்கிறது. ஆனால், என்னைக்கேட்டால் மொபைல் வந்த பிறகுதான் வாசிப்புப் பழக்கம் அதிகமாகியிருக்கிறது என்று சொல்வேன். காரணம் எல்லாவற்றையும்போல இப்பொழுது வாசிப்பையும் மொபைலிலேயே எளிதாகச் செய்துவிடமுடியும் என்பதுதான். ஆம், இப்பொழுது ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்கள் மொபைலில் படிப்பதற்கு வசதியாக வந்துவிட்டன.

பெரும்பாலான ஆங்கில நூல்கள்தாம் இப்படி டிஜிட்டலாக வாசிக்கக் கிடைக்கின்றன. எதிர்காலத்தில் தமிழ் நூல்களும் பெரிய அளவில் டிஜிட்டலை மையமிட்டு உருவாக்கப்படும். அதற்கு இப்போதே அடிப்படையாக அமைந்தது மதுரை ப்ராஜெக்ட் என்ற இணையதளத்தைச் சொல்லலாம். அதுவும் இலவசமாகப் பலநூறு நூல்கள் தமிழ் நூல்கள் வாசிக்கக் கிடைக்கின்றன. அதன் நிறுவனர்களில் ஒருவரான முனைவர் கு.கல்யாணசுந்தரத்திடம் இது உருவாகிய விதம், அதில் அவர்கள் சந்தித்த சிக்கல்கள் எதிர்காலத்திட்டம் குறித்துப் பேசினேன்.

இவர் சென்னையில் பிறந்து, பள்ளி, கல்லூரி படிப்பு எல்லாவற்றையும் சென்னையிலேயே முடித்தவர். லண்டனில் வேதியியல் துறையில் நோபல் பரிசு பெற்ற பேரா. ஜார்ஜ் போர்டர் கீழ் இருந்தவர். தற்போது வேதியியல் பேராசிரியராக ஸ்விஸ் தேசிய தொழில் நுட்பப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார். கம்ப்யூட்டரில் தற்போது தமிழில் எளிதாக டைப் செய்வதற்கு உதவியாக இருக்கும் தமிழ் font-க்கு அடித்தளம் இவர் போட்டதுதான். இந்த விவரங்களைச் சொல்லிவிட்டு மதுரை ப்ராஜெக்ட் பற்றிப் பேச ஆரம்பித்தார்...

``மதுரைத் திட்டம் ஆரம்பித்ததன் நோக்கம் என்ன?”

``எந்த ஒரு சமுதாயத்துக்கும் இலக்கியம் மற்றும் இயங்கு கலைகள் என்று கூறப்படும் இயல், இசை, நாடகம்தாம் மிகமுக்கியமான இரு கண்கள். இவற்றை ஒவ்வொரு சந்ததியினரும் பாதுகாத்து அடுத்த சந்ததியினரும் பயன்படுத்தும்வகையில் கொண்டுசெல்வது மிக அவசியம். இல்லையென்றால் காலப்போக்கில் இவை அழிந்து காணாமல் போய்விடும். தமிழில் அப்படி அழிந்துபோன நூல்கள் ஏராளம். அது நமக்கு நன்றாகவே தெரியும். தற்போது எங்கும் கணினி, எதிலும் கணினி என்ற நிலை. முழுவதுமாக மின்னுலகை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம் என்றே சொல்லலாம்.  

கல்வி கற்றலிலும் கற்பித்தலிலும் மின்னுலக வகுப்பறையாகவே மாறிவருகின்றது. இவை இன்னும் சிறப்பாகச் செயல்பட அனைத்து இலக்கியம், அகராதி போன்றவை மின்வடிவில் மிகவும் தேவை. இன்று இலக்கியம் என்றாலே நாவல், சிறுகதை, கவிதைகள் என்றே நினைக்கப்படுகிறது. அதனால் பழந்தமிழ் இலக்கியங்கள் ஆய்வுகள் தவிர்த்து வேறு எங்கும் பயன்படுத்தப்படுவதில்லை. அப்படிப் பயன்படுத்தப்படாதவை அழிந்துவிடும். எனவே, மாறிவரும் கல்விச் சூழலுக்கு ஏற்ற மாதிரியும் நூல்கள் இனியும் அழிந்துவிடாமல் இருக்கவும் அவற்றை மின்னூல்களாகப் பாதுகாப்பதே சிறந்தது என்ற எண்ணம் தோன்றியது. அதை நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டபோது அவர்களுக்கும் இது சரி என்று படவே இந்தத் திட்டத்தைத் தொடங்கினோம்.”

``மதுரைத் திட்டத்தில் இவ்வகையான நூல்கள், எப்படிச் சேகரிக்கிறீர்கள். காப்பிரைட் பிரச்னைகளை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?”

``மதுரைத் திட்டத்தில் பழங்கால நூல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டாலும், பக்தி-சமய (சைவ-வைஷ்ணவ, கிருத்துவ, இஸ்லாமிய) நூல்கள், சித்தர் பாடல்கள், இலக்கண நூல்கள், காப்பியங்கள், சரித்திர நூல்கள், சிறுகதைத் தொகுப்புகள், ஆராய்ச்சிக் கட்டுரைகள், மொழி பெயர்க்கப்பட்ட (தமிழ்-ஆங்கிலம், மற்ற மொழி நூல்கள்), நாடகங்கள், பொதுவுடைமையாக்கப்பட்ட பாரதியார், பாரதிதாசன், கல்கி கிருஷ்ணமூர்த்தி, ஜெயகாந்தன், புதுமைப்பித்தன், இராமாமிருதம் போன்றோரின் நூல்கள் என அனைத்தையும் சேகரித்து வருகிறோம்.

அதுமட்டுமன்றி புலம்புலர்ந்து வாழும் இலங்கைத் தமிழ் ஆசிரியர் நூல்கள் பலவும் சேர்க்கப்பட்டுள்ளன. அப்புறம் இப்போதுவரை நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களைத்தான் பதிவிட்டு வருகிறோம். அதுமட்டுமல்லாமல் சிலர் தங்களது நூல்களை யார் வேண்டுமானாலும் பதிவிடலாம் என்று அறிவித்துவிட்டனர். அப்படி அறிவித்தவர்களின் நூல்களையும், தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் இணையப் பக்கத்திலிருந்தும் அழிந்துபோகும் நிலையில் இருக்கும் நூலக நூல்களையும் மட்டுமே பதிவிடுகிறோம் என்பதால் காப்பிரைட் பிரச்னைகள் எல்லாம் வருவதில்லை.”

``தமிழ் நூல்கள் அதுவும் இலக்கிய நூல்கள் எல்லாம் பெரிய நூல்களாக இருக்குமே. அவற்றையெல்லாம் எப்படி மின் பதிப்புகளாக மாற்றுகிறீர்கள்?”

``மின்னூலாக மாற்ற வேண்டிய நூல்கள் ஜெராக்ஸ் பிரதிகள் எடுக்கப்பட்டு இணையதளத்தில் சேர்த்துவைக்கப்படும். அப்படிச் சேர்த்து வைக்கப்பட்டவற்றை மின்னூலாக மாற்றச் சில தன்னார்வலர்கள் எங்களோடு இணைந்து செயல்பட்டுவருகிறார்கள். அப்படித் தன்னார்வலர்களாக இருப்பவர்கள் இணையத் தொடர்புமூலம் உலகின் எந்த இடத்திலிருந்தும் ஒரு நேரத்தில் ஒரு பக்கம் என்ற முறைப்படி கணினியில் டைப் செய்து கொடுப்பார்கள். அந்தப் பக்கத்தை ஒருவர் பிழை திருத்திச் சேமிப்பார். எல்லாப் பக்கங்களும் இப்படி டைப் செய்யப்பட்டுப் பிழை திருத்தப்பட்டு, பிறகு ஒன்று சேர்க்கப்பட்டு இணையப் பக்கங்களாக மாற்றப்பட்டும்.

இப்படித்தான் ஒரு முழுநூல் தயார் செய்யப்பட்டு இணையத்தில் வெளியிடுகிறோம். இப்படித்தான் இதிலிருக்கும் ஒவ்வொரு நூலும் கூட்டுமுயற்சியாகத் தயாரிக்கப்படுகின்றன. ஆர்வமுள்ள எவரும் உலகில் எந்த நாட்டிலிருந்தும் அவரவர் வீட்டில் இருந்தபடியே மின்னூல்கள் தயாரிப்பில் பங்கு கொள்ளமுடியும். சொன்னதுபோல இவை எல்லாம் பெரிய பெரிய நூல்கள்தாம். ஆனால், அவற்றைச் சேமிக்க எளிமையாக மாற்றித்தான் பதிவேற்றுகிறோம். மொத்தமிருக்கும் 500-க்கும் மேற்பட்ட நூல்கள் அதிகபட்சம் 400 எம்.பி--க்கு மேல் இருக்காது. எனவே, இதை டவுன்லோடு செய்து சேமித்து வைக்க அதிக இடம் தேவைப்படாது. பயன்படுத்துவதும் எளிது.”

``மதுரைத் திட்டம்  செயல்படுத்துவதில் கடந்த 20 ஆண்டுகளில் என்னவிதமான பிரச்னைகளைச் சந்தித்தீர்கள்?”

``நூல்கள் வெளியிட நினைப்போரிடம் நூல்கள் இருப்பதில்லை. இருப்பவர்கள் வெளியிட நினைப்பதில்லை. அல்லது அதற்கு அவர்களுக்குத் தயாரிப்பதற்கான நேரமில்லை. பல்கலைக்கழக நூலகங்களோ, தனி நபர்களோ தங்களிடமிருக்கும் நூல்களை மற்றவரிடம் கடன் கொடுக்க விருப்பமில்லை. அதனால் அந்த நூல்களையெல்லாம் சேகரிப்பதில் பெரிய சிக்கல் இருந்தது. எனவே, ஆரம்பகாலத்தில் கடைகளில் கிடைக்கும் நூல்களை விலை கொடுத்து வாங்கியே பயன்படுத்தினோம். இரண்டாவது பிரச்னை தமிழுக்கென சரியான ஃபான்ட்கள் இல்லாதது. இப்பொழுது இருப்பதுபோன்று ஆரம்பத்தில் தமிழை இணையதளத்தில் பயன்படுத்த முடியவில்லை. அதற்குக் காரணம் சரியான ஃபான்ட் இல்லாததே. இந்த இரண்டு பிரச்னைகள்தாம் ஆரம்பத்தில் இருந்தன. இப்பொழுது பெரிதாகச் சொல்லிக்கொள்ளும் அளவில் பிரச்னைகள் ஏதுமில்லை.”

``இதன் சிறப்பு, எதிர்காலத் திட்டம் எல்லாம் என்ன?”

``மதுரைத் திட்ட மின்னூல்கள் கணினியில் படிக்கக்கூடிய விதத்தில் உள்ளன. கோப்பு அளவும் படவடிவு நூல்களை விட மிகமிகக் குறைவு, தமிழில் கொஞ்சம் தெரிந்திருந்தாலே போதும் அதைக்கொண்டு இதில் உள்ள சொற்களையோ, வரிகளையோ சுலபமாகத் தேடவும்  விரைவில் அவை எந்த நூலில் எந்தக் காலத்தில் யார் பயன்படுத்தியுள்ளார் என்ற விவரத்தைச் சுலபமாகக் கண்டுபிடிக்கவும் முடியும். இது தமிழ் ஆர்வலர்களுக்கும், பத்திரிகை ஆசிரியர்களுக்கும், மொழி வளர்ச்சி ஆய்வில் ஈடுபட்டுள்ள தமிழ் ஆராய்ச்சியாளர்களுக்கும் மிகவும் உதவியாக உள்ளது. இப்போது வெறும் இலக்கிய நூல்கள் மட்டுமே பதிவேற்றி வருகின்றோம். எதிர்காலத்தில் படைப்பிலக்கியங்களான கவிதைகள், நாவல்கள், சிறுகதைகள் முதற்கொண்டு ஆய்வு நூல்களையும் சேர்த்துப் பதிவேற்ற வேண்டும்.”

அடுத்த கட்டுரைக்கு