Published:Updated:

சிவகங்கை ஆஸ்பத்திரிக்கு சர்ஜரி தேவை!

சிவகங்கை ஆஸ்பத்திரிக்கு சர்ஜரி தேவை!
பிரீமியம் ஸ்டோரி
News
சிவகங்கை ஆஸ்பத்திரிக்கு சர்ஜரி தேவை!

கண்டுகொள்ளாத அமைச்சர் பாஸ்கரன் - வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்

“சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில ரொம்ப அநியாயம் நடக்குதுங்க. மனைவியின் ஆபரேஷனுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்குறாங்க” என்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் கொந்தளித்தார் ஒருவர். அதனால் பதற்றமடைந்த அதிகாரிகள், “டீனிடம் விசாரிக்கிறோம்” எனச் சமாதானப்படுத்தி அவரை அனுப்பிவைத்தனர்.

சிவகங்கை ஆஸ்பத்திரிக்கு சர்ஜரி தேவை!

நாம், அந்த நபரை அழைத்து விசாரித்தோம். “என் பெயர் கமால்முகமது. என்  மனைவி உம்மசெல்லி. மாடியிலிருந்து தவறிவிழுந்துட்டார். ரெண்டு கால்களிலும் எலும்புமுறிவு. சிவகங்கை மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரியில் சேர்த்தோம். வெறும் மருந்து, மாத்திரைகளை மட்டுமே கொடுத்திட்டிருந்தாங்க. ‘எப்பதான் ஆபரேஷன் பண்ணுவீங்க’னு கேட்டதுக்கு, ‘ஒரு மாசம் ஆகும்’னு டாக்டர்கள் சொன்னாங்க. ‘அப்படீன்னா, டிஸ்சார்ஜ் பண்ணுங்க’னு டூட்டி டாக்டர் கார்த்திகேயன்கிட்ட கேட்டோம். ‘வெளியே போனா ஒரு லட்சம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
சிவகங்கை ஆஸ்பத்திரிக்கு சர்ஜரி தேவை!

ரூபா செலவாகும்.ஐம்பதாயிரம் கொடுத்தீங்கன்னா, நமக்கு வேண்டிய தனியார் ஆஸ்பத்திரியில் வெச்சு நல்லபடியா ஆபரேஷன் பண்ணிடலாம்’னு அவர் சொன்னார். இனியும் தாமதிச்சா, என் மனைவியோட உயிருக்கே ஆபத்து வந்திரும்னு உடனே அங்கிருந்து கிளம்பிட்டோம். முறையா சிகிச்சை தராததால என் மனைவியோட கால்கள் அழுகிருச்சு” என்றார் கண்ணீருடன்.

மானாமதுரையைச் சேர்ந்த முத்துராமன் குடும்பத்தினருக்கும் இதே அனுபவம். “என் மாமி கீழே விழுந்ததில் இடுப்பு எலும்பு முறிஞ்சுருச்சு. சிவகங்கை மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரியில சேர்த்தோம். இருபது நாள்களுக்கு மேலாகியும் எந்தச் சிகிச்சையும் ஆரம்பிக்கலை. எல்லாத்துக்கும் பணம் எதிர்பார்க்குறாங்க. ‘கொடுக்க வேண்டியதைக் கொடுத்தீங்கன்னா, உடனே ஆபரேஷன் நடக்கும்’ என்று அட்டெண்டர் ஒருத்தர் சொன்னார். காசு புடுங்குறதுலேயே குறியா இருக்காங்க” என்றார் வேதனையுடன்.

இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆரம்பிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், முதுகலை மருத்துவம் மற்றும் செவிலியர் கல்லூரியும் ஆரம்பிக்கப்படவில்லை.

“மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனை என்றால், அது ஒரு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவனையாக இருக்க வேண்டும். ஆனால் இது, காய்ச்சலுக்கும் தலைவலிக்கும் மாத்திரைகள் தருகிற ஓர் ஆரம்ப சுகாதார நிலையத்தைப் போல இருக்கிறது. ‘எக்கோ’ எடுக்கும் டாக்டர், வாரத்துக்கு ஒரு முறை

சிவகங்கை ஆஸ்பத்திரிக்கு சர்ஜரி தேவை!

மட்டுமே வருகிறார். இதயத்தில் அடைப்பு என்றால் வெறும் மாத்திரைகளைக் கொடுத்தே காலம் கடத்துகிறார்கள். இங்கு, ஆஞ்சியோ எடுக்க முடியாது. இதய ஆபரேஷன் செய்வதற்கான வசதிகள் கிடையாது.  டயாலிசிஸ் செய்வதற்கான இரு மெஷின்களில் ஒன்று செயல்படவில்லை. பாதுகாப்பு மற்றும் பராமரிப்புப் பணியில் உள்ள தனியார் நிறுவன ஊழியர்கள், சில டாக்டர்களுக்கு நோயாளிகளிடமிருந்து பணம் வசூலித்துக்கொடுக்கும் ஏஜென்ட்களாக செயல்படுகிறார்கள். அவர்களின் அராஜகம் தாங்க முடியவில்லை” என்று வேதனையுடன் சொன்னார், மருத்துவ மனையில் பணியாற்றும் ஓர் ஊழியர்.

“பிரசவத்துக்காக இங்கே அனுமதிக்கப்படுற கர்ப்பிணிகளின் உயிருக்கு உத்தரவாதமே இல்லை. ஒண்ணு, குழந்தை செத்துப்போயிருது... இல்லைன்னா, தாய் செத்துப்போயிருது. அந்தளவுக்குக் கவனிப்பு ரொம்ப மோசம். ஒருத்தர் விபத்துல படுகாயமாகி ஆஸ்பத்திரியில சேர்க்கப்பட்டு ராத்திரியே இறந்துட்டார். மறுநாள் மதியம் மூணு மணி வரைக்கும் அவரது உடலை, போஸ்ட்மார்ட்டம் செய்யலை. நாங்க தலையிட்டு டீன்கிட்டேயும், கலெக்டர்கிட்டேயும் பேசின பிறகுதான் நடவடிக்கை எடுத்தாங்க” என்று வருத்தத்துடன் சொன்னார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் மு.கந்தசாமி.

சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் (பொறுப்பு) மகேஸ்வரியிடம் விளக்கம் கேட்டோம். “டாக்டர் கார்த்திகேயன் பணம் கேட்டார் என்று எங்களுக்கு எந்தப் புகாரும் வரவில்லை. நீங்கள் சொன்னதை வைத்து அவரிடம் கேட்டேன். ‘யாரிடமும் பணம் கேட்கவில்லை’ என்று அவர் சத்தியம் செய்கிறார். ஆனாலும், நோயாளிகளிடம் பணம் கேட்கும் வேலையைச் செய்துவரும் ஒருவரை நெருங்கியுள்ளேன். விரைவில் அவர் பிடிபடுவார். டாக்டர்கள் பற்றாக்குறை போன்ற பிற குறைபாடுகள் படிப்படியாக சரிசெய்யப்படும்” என்றார்.

சிவகங்கை ஆஸ்பத்திரிக்கு சர்ஜரி தேவை!

அமைச்சர் பாஸ்கரன் தொகுதிக்குள்தான் இந்த மருத்துவமனை வருகிறது. மருத்துவமனை தொடர்பான புகார்களை அவர் கண்டுகொள்வது இல்லை என மக்கள் புலம்புகிறார்கள். அமைச்சரின் கருத்தை அறிய அவரைத் தொடர்பு கொண்டபோது, ‘‘மீட்டிங்... மீட்டிங்...’’ எனத் தட்டிக் கழித்தார்களே தவி, கடைசிவரை தொடர்பு கொள்ளவே யில்லை.

இந்த மருத்துவமனைக்கு உடனடியாகத் தேவை ஓர் அறுவை சிகிச்சை.

- தெ.பாலமுருகன்
படங்கள்: சாய் தர்மராஜ்