Published:Updated:

“தோட்டாக்கள் தீரும் வரை எழுதித் தீர்ப்போம்’’

“தோட்டாக்கள் தீரும் வரை எழுதித் தீர்ப்போம்’’
பிரீமியம் ஸ்டோரி
News
“தோட்டாக்கள் தீரும் வரை எழுதித் தீர்ப்போம்’’

“தோட்டாக்கள் தீரும் வரை எழுதித் தீர்ப்போம்’’

“ஓர் இந்தியக் குடிமகளாக பி.ஜே.பி-யின் பாசிச மற்றும் இனவாத அரசியலை என்னால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்து மதத்துக்குள் உள்ள சாதிய அமைப்பைத் தொடர்ந்து எதிர்ப்பேன். நம் அரசியல் சட்டம், மதச்சார்பின்மையை எனக்குக் கற்றுக்கொடுத்தது. எனவே, வகுப்புவாதத்துக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுப்பது என் அடிப்படை உரிமை” - இப்படிச் சொன்ன கவுரி லங்கேஷ் துப்பாக்கி குண்டுகளுக்குப் பலியாகியிருக்கிறார்.

வகுப்புவாதத்துக்கு எதிராகத் தீவிரமாக செயல்பட்ட நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி வரிசையில் கவுரி லங்கேஷும் படுகொலை செய்யப்பட்டிருப்பது பத்திரிகையாளர்கள், படைப்பாளிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. வகுப்புவாதம், வெறுப்பு, சகிப்பின்மை ஆகியவற்றுக்கு எதிராகப் பேசிவந்த, எழுதிவந்த இடதுசாரி சிந்தனையாளரும், பத்திரிகையாளருமான கவுரி லங்கேஷை, பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகர் வீட்டில், அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். மூன்று குண்டுகள் அவரது உடலில் இருந்ததாக பிரேதப் பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“தோட்டாக்கள் தீரும் வரை எழுதித் தீர்ப்போம்’’

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ உட்பட பல நாளேடுகளில் பணியாற்றிய கவுரி, தன் தந்தை பி.லங்கேஷால் 40 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட ‘லங்கேஷ் பத்திரிகே’ என்ற வார இதழை நடத்திவந்தார். பி.லங்கேஷ் பற்றியும் இங்கு குறிப்பிட வேண்டும். அவர், கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டம் த்யஜவள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர். பிறப்பால் லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்தவரான இவர், சிறு வயது முதலே பகுத்தறிவு, இடதுசாரி சிந்தனை உடையவராக இருந்தார். படிப்பின் நிமித்தமாக பெங்களூருக்குக் குடிபெயர்ந்த அவர், நாடகம், கலை, கவிதை, இலக்கியம், சமூக செயற்பாட்டாளர் எனப் பன்முகத் தன்மையோடு விளங்கினார். பெங்களூரு பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றியபோது ‘லங்கேஷ்  பத்திரிகே’ இதழை நடத்தினார். அந்தப் பத்திரிகையில், விளம்பரங்களே கிடையாது. சாதி, மத, மூட நம்பிக்கைகளுக்கு எதிராகவும், ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் அவலங்கள் குறித்தும் இதில் எழுதினார். அரசியல்வாதிகளின் அந்தரங்கங்களைத் தோலுரித்துக் காட்டும் புலனாய்வுக் கட்டுரைகளையும் எழுதி கன்னட பத்திரிகை உலகில் புதிய பரிணாமத்தை ஏற்படுத்தினார்.

இவருடைய மூத்த மகளான கவுரி லங்கேஷ், தந்தையைப் போலவே பகுத்தறிவு, இடதுசாரி சிந்தனையால் ஈர்க்கப்பட்டவர். டெல்லியில் இதழியல் படிப்பை முடித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா, சண்டே மேகஸின் உட்பட சில பத்திரிகைகளில் பணியாற்றினார். தந்தையின் மரணத்துக்குப் பிறகு, 2000-ல் லங்கேஷ் பத்திரிகையின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். தன் சகோதரர் உடனான சொத்துப் பிரச்னை எழுந்த பிறகு, 2005-ல் தன் பெயரில் ‘கவுரி லங்கேஷ்’ என்ற  புதிய இதழைத் தொடங்கினார். அதில், இந்து சனாதன முறையைக் கடுமையாக விமர்சித்து எழுதினார். பசுக் காவலர்களால் தலித்துகள் கொல்லப்படுவதையும், ஒரே நாடு, ஒரே கொள்கை என்பதையும் எதிர்த்து எழுதி வந்ததால், இந்துத்வா அமைப்பினரின் கோபத்துக்கு ஆளானார். பெருமாள் முருகன் எழுதிய ‘மாதொரு பாகன்’ நாவலை கன்னடர்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக அங்கு மொழிபெயர்த்து வெளியிட்டார். காவிரிப் பிரச்னையில் கர்நாடக வாழ் தமிழர்கள் தாக்கப்பட்டபோது, பெங்களூரு தமிழ்ச் சங்கத்துக்குச் சென்று விசாரித்து தலையங்கம் எழுதி, கன்னடர்களின் எதிர்ப்பையும் சம்பாதித்தார். கர்நாடகாவில் மாவோயிஸ்ட் பிரச்னை தீவிரமானபோது, அவர்களோடு பேசி, பலரை வெகுஜன அரசியலுக்குள் கொண்டுவந்தார்.

“தோட்டாக்கள் தீரும் வரை எழுதித் தீர்ப்போம்’’

கவுரியின் படுகொலைக்கு எதிராக இந்தியா முழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. கவுரி லங்கேஷின் உடல், கர்நாடக அரசு மரியாதையோடு அடக்கம் செய்யப்பட்டது. கர்நாடக வரலாற்றில் பத்திரிகையாளர் ஒருவரை அரசு மரியாதையோடு அடக்கம் செய்தது இதுதான் முதல் முறை.

‘தோட்டாக்கள் தீரும் வரை எழுதித் தீர்ப்போம். எழுதுகோல் உங்களை அச்சுறுத்தினால் பீரங்கிகளைக் கொண்டு வாருங்கள். எழுதும் கரங்களையெல்லாம் ஓர் இடத்தில் அடைத்து அணுகுண்டு வீசுங்கள். துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பின்பும் வீரியமிக்க எழுத்துகள் முளைத்துக் கொண்டுதான் இருக்கும்’’ என்பது கவுரி லங்கேஷின் தாரக மந்திரம்.

- வீ.கே.ரமேஷ்