Published:Updated:

“முதல்வராக இருந்தாலும், எடப்பாடியும் ஓர் அடிமைதான்!”

“முதல்வராக இருந்தாலும், எடப்பாடியும் ஓர் அடிமைதான்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“முதல்வராக இருந்தாலும், எடப்பாடியும் ஓர் அடிமைதான்!”

வாள் வீசுகிறார் வளர்மதி

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகத் துண்டு பிரசுரம் கொடுத்தார் என்பதற்காக குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட சேலத்தைச் சேர்ந்த மாணவி வளர்மதி, நீண்ட சட்டப்போராட்டத்துக்குப் பிறகு வெளியே வந்திருக்கிறார். இத்தனை நாள்கள் சிறையில் இருந்ததற்கான எந்தச் சுவடும் அவர் முகத்தில் இல்லை. கோவை சிறையிலிருந்து வெளியில் வந்ததும் நேராக அவர் சென்றது, அனிதாவின் மரணத்துக்கு நியாயம் கேட்கும் போராட்டத்துக்குத்தான். போராட்டம் முடிந்த சின்ன இடைவேளையில் வளர்மதியிடம் பேசினோம்...

‘‘குண்டர் சட்டம்... இரண்டு மாத சிறைவாசம்... நீதிமன்றப் போராட்டம்... என்ன நினைக்கிறீங்க வளர்மதி?’’

‘‘மக்களுக்காகப் போராடும் திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன், வளர்மதி போன்றவர்கள் மீது குண்டர் சட்டத்தைப் பாய்ச்சும் அளவுக்குத்தான் இருக்கிறது நம் ஜனநாயக நாடு. தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் வழக்குப் போட்டு, என்னை மிகப்பெரிய தீவிரவாதியாக சித்திரிப்பார்கள் என்றுதான் நினைத்தேன். குண்டர் சட்டம் என்பது சின்ன ஏமாற்றத்தைத் தந்தது. கதிராமங்கலத்தில் போராடுகிறவர்களைக் காவல்துறை அடித்தபோது, எதிர்த்து நின்றவர்களை ‘மாவோயிஸ்ட்கள்’ என்றுதான் முத்திரை குத்தினார்கள். யாரெல்லாம் இந்த அரசாங்கம் செய்யும் தவறுகளை எதிர்க்கிறார்களோ, அம்பலப்படுத்துகிறார்களோ... அவர்களுக் கெல்லாம் இந்த அரசாங்கம் கொடுக்கும் பட்டம், நக்சலைட்... மாவோயிஸ்ட்... தீவிரவாதி. இந்தச் சிறை வாழ்க்கை என்னை மேலும் வலுப்படுத்தியிருக்கிறது. இன்னும் வேகமாக நெடுவாசலை நோக்கிப் போவேன்.’’

“முதல்வராக இருந்தாலும், எடப்பாடியும் ஓர் அடிமைதான்!”

‘‘நீங்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட பிறகு ‘வளர்மதி ஒரு மாவோயிஸ்ட்’ என்று சொன்னார்கள். உண்மையில் வளர்மதி யார்?’’

‘‘பொதுநல மாணவர் எழுச்சி இயக்கம்ங்கிற அமைப்பில் ஏழு வருடங்களாக உறுப்பினர். கண் முன்னால நடக்குற அநியாயங்களையும் அநீதிகளையும் தட்டிக் கேக்கணும்னு துடிக்கிற ஒரு பொண்ணு. போராளி ஆகணும்னு முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கிற ஒரு பொண்ணு. என் அப்பாவும் அம்மாவும் பல போராட்டங்கள்ல இருந்தவங்கதான். ஆனால், எனக்கு விவரம் தெரியும் முன்பே அந்தப் போராட்டங்களை யெல்லாம் கைவிட்டுட்டாங்க. ஆனா, என்னை வளர்க்கிறப்போ ‘ஆணும் பெண்ணும் சமம், சாதிகள் இல்லை’னு சொல்லி வளர்த்தாங்க. அந்த வளர்ப்பும், என் கண் முன்னால் நான் பார்த்த அநீதிகளும்தான் என்னை வீதியில் இறங்கி போராட வெச்சிருக்கு. எங்க கிராமத்துல இன்னமும் தீண்டாமை எல்லா வடிவங்களிலும் இருக்கு. சமூகத்தில் நடக்கும் அநியாயங்கள்தான், எல்லாருக்குள்ளும் ஒரு தாக்கத்தை உருவாக்கும். எனக்கும் அப்படித்தான்!’’

‘‘திருச்சி சிறையில் உங்களை நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்ததாக புகார் எழுந்தது. கோவை சிறையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினீர்கள். சிறைக்குள் என்ன நடக்கிறது?’’

‘‘திருச்சியில் நடந்தது உண்மைதான். நான் வெளிப்படையா சொல்றேங்கிறதால என் ஒருத்திக்குத்தான் அப்படி நடக்குதுனு நினைக்கறாங்க. சாதாரண கேஸ்ல உள்ள போறவங்களுக்குக்கூட இந்தச் சித்ரவதைகள் நடக்குது. ஒரு பொண்ணு கூனிக்குறுகி மத்தவங்க முன்னாடி நிர்வாணமா நிற்கும் மனநிலையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. எல்லா சிறைச்சாலைகளும் இப்படித்தான் இருக்கு. கோவையில் அதுபோன்ற சித்ரவதைகளுக்கு நான் ஆளாக்கப்படவில்லை, ஆனால் வேறுவிதமான தொல்லைகள் கொடுத்தார்கள். என்னைப் பார்க்க வந்த என் தம்பியின் நண்பரை வீடு தேடிப் போய் அச்சுறுத்தல்கள் கொடுத்திருக்கிறது உளவுத்துறை.’’

‘‘உங்கள் ஊர்க்காரரான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நீங்கள் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்ததாக சட்டசபையில் சொல்லியிருக்கிறாரே?’’

‘‘இதே அ.தி.மு.க அரசு இயந்திரத்தின் கூலிப்படைகளால்தான் வாச்சாத்தியில் 18 பெண்கள் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டார்கள். தர்மபுரியில் 3 மாணவிகள் உயிரோடு எரிக்கப்பட்டதும் அ.தி.மு.க-வினரால்தான். வீரப்பன் தேடுதல் வேட்டையில் நூற்றுக்கணக்கான பெண்கள் சித்ரவதை செய்யப்பட்டதும் இதே அ.தி.மு.க ஆட்சியில்தான். ஜெயலலிதா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டபோது இந்த அ.தி.மு.க அரசு தமிழ்நாட்டுல சட்டம் ஒழுங்கை எந்த லட்சணத்துல வெச்சிருந்துச்சுன்னு எல்லாருக்கும் தெரியும். இவர்களுக்குச் சட்டம் ஒழுங்கு பற்றிப் பேச என்ன தகுதி இருக்கு? அ.தி.மு.க அரசை மட்டும் விமர்சிக்கணும்ங்கிறது என்னுடைய நோக்கம் இல்லை. அவர் சொன்னது பற்றி என்னுடைய கேள்விகள் இவை. மற்றபடி  அவர் எங்க ஊர்க்காரரா இருந்தா என்ன? முதல்வரா இருந்தா என்ன? அவரும் அதிகார வர்க்கத்தின் அடிமைதான். அவருக்குத் தேவை ஆளும் நாற்காலி. அதற்காகத்தானே இப்படி அடித்துக்கொள்கிறார்கள்!’’

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
“முதல்வராக இருந்தாலும், எடப்பாடியும் ஓர் அடிமைதான்!”

‘‘தினம்தோறும் ஏதாவது ஒரு போராட்டம் வெடிக்கும் அளவுக்கு இருக்கிறதே தமிழ்நாடு. இதில் ஒரு பெண்ணாக வீதிக்கு வருவதில் இருக்கும் பிரச்னைகள் என்ன?’’

‘‘இன்னைக்கு என் குடும்பம் கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்குன்னா, நான் வேலைக்குப் போய் சம்பாதிக்கிறதனால மட்டும் என் குடும்பத்தின் கஷ்டம் தீர்ந்துடாது. ஒட்டுமொத்த சமூகத்தீர்வு வேண்டும். அதுக்காகத்தான் போராடிக்கிட்டு இருக்கேன். பெண்கள் கலந்துகொள்ளாத போராட்டங்கள் வரலாற்றில் கிடையவே கிடையாது. பெண்கள் போராட வர்றப்போ, அவங்களைப் பற்றி சொல்லப்படும் கருத்துகள் எல்லாமே அவர்களுடைய ஒழுக்கம் சார்ந்ததாகவே இருக்கு. எனக்கே எங்க ஊர்ல நாலஞ்சு முறை கல்யாணம் பண்ணி வெச்சிருப்பாங்க. பல கேவலமான பார்வைகள் மேல விழும். அப்படிப்பட்ட பார்வைகளைக் கடக்கத் துணிய வேண்டும். துணியாமல் போராட்டக்களம் சாத்தியமில்லை.’’

- எம்.புண்ணியமூர்த்தி
படங்கள்: க.விக்னேஷ்வரன்