Published:Updated:

நீட் மட்டும் தகுதியல்ல... சேவை மனப்பான்மை வேண்டும் - சொல்லி அடிக்கும் சி.எம்.சி.

நீட் மட்டும் தகுதியல்ல... சேவை மனப்பான்மை வேண்டும் - சொல்லி அடிக்கும் சி.எம்.சி.
பிரீமியம் ஸ்டோரி
News
நீட் மட்டும் தகுதியல்ல... சேவை மனப்பான்மை வேண்டும் - சொல்லி அடிக்கும் சி.எம்.சி.

நீட் மட்டும் தகுதியல்ல... சேவை மனப்பான்மை வேண்டும் - சொல்லி அடிக்கும் சி.எம்.சி.

னிதாவின் தற்கொலைக்குப் பிறகு, தமிழகமெங்கும் நீட் தேர்வுக்கு எதிரான உணர்வு தகிக்கத் தொடங்கியிருக்கிறது. மாணவர்கள் வீதியில் இறங்கியிருக்கும் நிலையில், வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி (சி.எம்.சி), ‘நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்போவதில்லை’ என்று அறிவித்திருப்பதாக பரவிய செய்தி இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உண்மை என்ன?

தமிழக அரசு உருவாக்கிய மசோதா, அரசாணை, கோரிக்கைகள் எதையும் மத்திய அரசு ஏற்றுக்கொள்ளாத நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படியே, நீட் தேர்வு அடிப்படையில், அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. வேலூர் கிறிஸ்தவக் கல்லூரியில் 100 எம்.பி.பி.எஸ் இடங்கள் உண்டு. ஒரு மாணவரை மட்டுமே சேர்த்ததோடு, சேர்க்கையை நிறுத்தி வைத்துள்ளார்கள். உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கு (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இங்கு 62 இடங்கள் உள்ளன. அதிலும் ஒரு மாணவர் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளார். பிற இடங்களுக்கான சேர்க்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ‘முதுகலைப்படிப்பான எம்.டி, எம்.எஸ் படிப்புகளுக்கும் நீட் ரேங்க் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. ஆயினும், இக்கல்லூரியில் உள்ள 182 முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கும் வழக்கமான நடைமுறைப்படி மாணவர் சேர்க்கையை நடத்தி முடித்திருக்கிறார்கள்.

வேலூர் கிறிஸ்தவக் கல்லூரி, 1900-ம் ஆண்டில் ஐடா ஸோபியா ஸ்கடர் என்ற அமெரிக்கப் பெண்மணியால் நர்சிங் பள்ளியாகத் தொடங்கப்பட்டது. தன்னைப் போலவே நிறைய பெண்களை மருத்துவப் பணிக்குக் கொண்டு வரவேண்டும் என்ற நோக்கில் அவர் உருவாக்கியதுதான் இந்தப்பள்ளி. 1918-ம் ஆண்டில் இங்கு எல்.எம்.பி (லைசன்ஸ்டு மெடிக்கல் பிராக்டிஷனர்) என்ற மருத்துவப் படிப்பு தொடங்கப்பட்டது. 1942-ல் எம்.பி.பி.எஸ் வந்தது. இப்போது, எம்.பி.பி.எஸ், நர்சிங் உள்பட 179 வகையான படிப்புகள் இங்கே வழங்கப்படுகின்றன. இந்தியாவின் டாப் ரேங்கிங் கல்வி நிறுவனங்களில் ஒன்றாக இந்நிறுவனம் இயங்குகிறது.

நீட் மட்டும் தகுதியல்ல... சேவை மனப்பான்மை வேண்டும் - சொல்லி அடிக்கும் சி.எம்.சி.

வழக்கமாக, இக்கல்லூரி நிர்வாகமே நடத்தும் நுழைவுத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடக்கும். நீட் தேர்வு கொண்டு வரப்பட்டபோது, ’சிறுபான்மை நிறுவனங்களுக்கு விலக்களித்து பழைய நடைமுறைப்படியே சேர்க்கை நடத்த அனுமதிக்க வேண்டும்’ என்று இக்கல்லூரி நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது. ஆனால் நீதிமன்றம் ஏற்கவில்லை. இதையடுத்து, வேலூர் கிறிஸ்தவக் கல்லூரி உள்ளிட்ட சில கல்வி நிறுவனங்கள், ’நீட் தேர்வு ரேங்க் அடிப்படையில் குறிப்பிட்ட அளவுக்கு மாணவர்களை அழைத்து, வழக்கமான எங்கள் நடைமுறைப்படி நேர்முகத்தேர்வு நடத்தி தேர்வு செய்துகொள்ள அனுமதிக்க வேண்டும்’ என நீதிமன்றத்திடம் அப்பீல் செய்தன. ஆனால், ‘இந்த நடைமுறை, நீட் தேர்வின் நோக்கத்தையே கேள்விக்குறி ஆக்கிவிடும்’ என்று கூறி, இந்திய மருத்துவக் கவுன்சில் அதை ஏற்க மறுத்தது. ஆனாலும், கடந்த ஆண்டுக்கு மட்டும் இதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. இந்த ஆண்டு அனைத்து தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்களும் நீட் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்தி முடித்துவிட்ட நிலையில், வேலூர் கிறிஸ்தவக் கல்லூரி மட்டும் நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு வரும்வரை சேர்க்கையை நிறுத்தி வைத்திருக்கிறது.

இதுகுறித்துக் கல்லூரியின் மக்கள் தொடர்பு அலுவலர் நம்மிடம் விரிவாகப் பேசினார். ‘‘நாங்கள் நீட் தேர்வை எதிர்க்கவில்லை. ஆனால், அத்தேர்வு எங்களுடைய தனித்தன்மையைப் பாதிக்கக்கூடாது. எங்கள் கல்வி நிறுவனம் வணிக நோக்கிலானது அல்ல. இந்தியா முழுவதும் சேவை செய்து கொண்டிருக்கும் 250 மருத்துவமனைகளுக்கு இங்கிருந்து மருத்துவர்களை உருவாக்கி அனுப்பிக் கொண்டிருக்கிறோம். இங்கு படிக்கத் தேர்வு செய்யப்படும் ஒருவர், 2 ஆண்டுகள் கட்டாயம் எங்கள் மருத்துவமனையில் பணிபுரியவேண்டும். அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டபிறகுதான் சேர்க்கையே வழங்குவோம். தவிர, ஆண்டுக்கு வெறும் 3,000 ரூபாய்தான் கல்விக்கட்டணம்.

நீட் தேர்வு, மருத்துவம் படிப்பதற்கான தகுதியுள்ள மாணவர்களைத் தேர்வு செய்கிறது என்பதில் எங்களுக்கு மாற்றுக்கருத்தில்லை. ஆனால், எங்கள் கல்வி நிறுவனத்தில் படிக்கப்போகும் மாணவர்களுக்கு அந்தத்தகுதி மட்டும் போதாது. சேவை மனப்பான்மை, தலைமைப்பண்பு, கனிவான அணுகுமுறை என பல தகுதிகள் தேவை. படிப்பை முடித்து, இவர்கள் அடித்தட்டு மக்கள் மத்தியில் மருத்துவ சேவையாற்றப் போகிறார்கள். அதற்கான அடிப்படை தகுதியைப் பரிசோதிப்பது எங்கள் உரிமை.

கடந்த ஆண்டும் நாங்கள் நீட் ரேங்க் அடிப்படையில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்களை அழைத்து, 3 நாள் நேர்முகத்தேர்வு உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளை நடத்தி, அவற்றில் தேர்ச்சி பெற்ற 99 மாணவர்களைத் தேர்வு செய்தோம். உச்ச நீதிமன்றம் எங்கள் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டது. அந்த வழக்கில் வரும் அக்டோபர் 11-ம் தேதி இறுதித் தீர்ப்பு வர உள்ளது. அதற்காகக் காத்திருக்கிறோம். 1961-ம் ஆண்டில் இருந்து, எம்.பி.பி.எஸ் மற்றும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்புகளில் மத்திய அரசு பரிந்துரைக்கும் ஒரு மாணவருக்கு இடம் வழங்கி வருகிறோம். இப்போது அந்த  இடத்தை மட்டுமே நிரப்பியிருக்கிறோம். மற்ற சேர்க்கைகளைத் தீர்ப்பு வரும்வரை நிறுத்தி வைத்திருக்கிறோம்’’ என்றார் அவர்.

வெயிலூர்... அனல் கக்க ஆரம்பித்திருக்கிறது!

- வெ.நீலகண்டன், படம்: ச.வெங்கடேசன்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz