Published:Updated:

“ரத்த ஆற்றில் இறக்கிவிடாதீர்கள்!”

“ரத்த ஆற்றில் இறக்கிவிடாதீர்கள்!”
பிரீமியம் ஸ்டோரி
“ரத்த ஆற்றில் இறக்கிவிடாதீர்கள்!”

சென்னையில் இருக்கும் ரோஹிங்கியா முஸ்லிம்களின் துயரக் கதை

“ரத்த ஆற்றில் இறக்கிவிடாதீர்கள்!”

சென்னையில் இருக்கும் ரோஹிங்கியா முஸ்லிம்களின் துயரக் கதை

Published:Updated:
“ரத்த ஆற்றில் இறக்கிவிடாதீர்கள்!”
பிரீமியம் ஸ்டோரி
“ரத்த ஆற்றில் இறக்கிவிடாதீர்கள்!”

குறுகலான சந்துக்குள் இறங்கி நடந்ததும் கண்களில் பேரதிர்ச்சியுடன் கூடிவிட்டார்கள் அந்த மக்கள். மொத்தம் 19 குடும்பங்கள்... குழந்தைகள், பெண்கள் என அங்கிருந்த 93 பேரும் நம்மை வெறித்துப் பார்த்தபடியே நின்றிருந்தனர். அவர்கள்... மியான்மரில் தற்போது நரவேட்டையாடப்பட்டு வரும் ரோஹிங்கியா முஸ்லிம்கள். ‘தமிழகத்தில் ரோஹிங்கியா முஸ்லிம்களா?’ என்ற கேள்வியுடன் சென்ற நமக்கு, பல அதிர்ச்சித் தகவல்கள் காத்திருந்தன.

“ரத்த ஆற்றில் இறக்கிவிடாதீர்கள்!”

கேளம்பாக்கம் புயல் பாதுகாப்பு மையத்தில்தான் இவர்கள் வாழ்ந்து வருகின்றனர். 2012-ம் ஆண்டு இவர்கள் தமிழ்நாட்டுக்கு வந்தார்கள். அப்போது, மியான்மரில் இப்போது போன்றே ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராகக் கலவரம் வெடித்தது. அதைத் தொடர்ந்து பல்லாயிரம் பேர் வங்கதேசத்துக்கு அகதிகளாகப் புலம் பெயரத் தொடங்கினர். இதைப் பயன்படுத்திக்கொண்ட சில ஏஜென்ட்டுகள், பணம் வாங்கிக்கொண்டு, ஆசை வார்த்தைக் காட்டி இவர்களைப் பக்கத்து நாடுகளுக்கு முறைகேடாகக் கொண்டுவந்து சேர்த்தனர். தங்களது மொத்தப் பணத்தையும் கொடுத்து மியான்மரில் இருந்து தப்பித்து அகதிகளாக வெளியே வந்துள்ளனர் இவர்கள்.

நம்மிடம் பேசிய நூர் முகமது, ‘‘மியான்மரில் இருந்து படகுகள் மூலம் கடல் வழியாக வங்கதேசத்துக்கு வந்துவிட்டோம். பின்னர், ஏஜென்ட் ஒருவர் எங்களைப் பேருந்து மூலம் கொல்கத்தாவுக்கு அனுப்பிவிட்டார். கொல்கத்தாவில் இருந்து ரயில் மூலம் இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கு எங்களைப் போன்ற அகதிகளை அனுப்பிவைத்தனர். என் குடும்பத்தினரையும் எங்களைப் போன்ற சிலரையும் பணத்தை வாங்கிக்கொண்டு சென்னை ரயிலில் ஏற்றிவிட்டுக் கிளம்பிவிட்டார் அந்த ஏஜென்ட். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வந்திறங்கிய எங்களை மற்றொரு ஏஜென்ட் அழைத்துச் சென்று, ஒரு வருடம் வேலை வாங்கினார். எங்களில் சிலருக்கு மீன்பாடி வண்டியைத் தந்தார்கள். குப்பைத்தொட்டிகளில் இருக்கும் பிளாஸ்டிக்குகளைச் சேகரிக்கும் வேலை. எங்கள் வீட்டுப் பெண்கள், குழந்தைகள் என எல்லோரும் இதைச் செய்தோம். ஒரு வருடம் இப்படிச் செய்து, ஒவ்வொருவரும் தலா 18 ஆயிரம் ரூபாயை ஏஜென்ட்டிடம் கொடுத்த பின்னரே எங்களை விட்டனர்.

ஆரம்பத்தில் மணலி பகுதியில் ஒன்றாக இருந்தோம். அங்கிருந்து சிலரால் விரட்டியடிக்கப்பட்டு கோவளம் கடற்கரைப் பகுதிக்கு வந்தோம். பின், தையூர் கிராமத்தில் கொஞ்ச காலம் தங்கியிருந்தோம். போலீஸார் எங்களை அழைத்து இங்கே தங்கவைத்தனர். கடந்த இரண்டு வருடங்களாக இங்குதான் இருக்கிறோம்’’ என்கிறார்.

சமீபத்தில், மியான்மருக்குச் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அரசின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் ஆங் சான் சூ கியுடன் ரோஹிங்கியா முஸ்லிம்கள் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது இவர்களைத் திருப்பி மியான்மருக்கு அனுப்புவது பற்றியும் பேசப்பட்டிருக்கிறது. இதுகுறித்த கேள்விகளை நாம் எழுப்பியபோது, நன்றாகப் பேசிக்கொண்டிருந்த இவர்களிடம் பயம் தொற்றிக்கொள்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“ரத்த ஆற்றில் இறக்கிவிடாதீர்கள்!”

நம்மிடம் பேசிய முகமது யூசுப், ‘‘ஒரு மாதத்துக்கு முன்னர் எங்களின் விவரங்களை அரசு அதிகாரிகள் பெற்றுச் சென்றனர். மியான்மரில் நாங்கள் எந்த இடத்தில் இருந்தோம்... எப்படி வந்தோம் என்பது உள்பட எங்களுடைய முழு விவரங்களையும் வாங்கினர். இப்போது மியான்மரில் ரத்த ஆறுதான் ஓடுகிறது. மியான்மர் கலவரம் தொடர்பான வீடியோக்களைச் சிலர் காண்பித்தபோது எங்கள் ரத்தம் உறைந்துவிட்டது. மியான்மரின் ரக்கைன் மாநிலத்தில் இருக்கும் எங்கள் உறவினர்களிடம் வழக்கமாக நாங்கள் பேசுவோம். ஆனால், சில நாள்களாக நாங்கள் தொடர்ந்து போன் செய்தும் அவர்கள் எடுக்கவேயில்லை. மிகவும் பயமாக இருக்கிறது. இப்போது எங்களை மியான்மருக்கு அனுப்பிவிடாதீர்கள். கலவரம் முடிந்ததும் எங்களை அனுப்பி வையுங்கள்’’ என்கிறார் படபடப்புடன்.

இங்கு தங்க வைக்கப்பட்டுள்ள ரோஹிங்கியா குழந்தைகள் நன்றாகத் தமிழ் பேசுகிறார்கள். இப்பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் இவர்கள் படித்து வருகிறார்கள். மாலை 5 மணி முதல் 6 வரை இவர்களில் உள்ள இளைஞர் ஒருவரே இந்தக் குழந்தைகளுக்கு அரபி வகுப்பு எடுக்கிறார். இங்குள்ள ஆண்கள், பக்கத்திலுள்ள கேளம்பாக்கம் பகுதி ஓட்டல்களிலும் கறிக்கடைகளிலும் வேலை செய்கிறார்கள். பெண்கள் பிளாஸ்டிக்குகளைச் சேகரித்து கடைகளில் கொடுத்து சிறிய அளவில் சம்பாதிக்கின்றனர்.

இவர்களுக்கென வீடெல்லாம் இல்லை. புயல் பாதுகாப்பு மையத்தின் வராண்டாவில், புடவைகளையும் நீண்ட துணிகளையும் கட்டி தடுப்பு ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஒவ்வொரு தடுப்பிலும் ஒரு குடும்பம் என 19 குடும்பங்களும் வசிக்கின்றன. சமையல் செய்வதற்கு மூன்று அடுப்புகளை வௌியில் வைத்திருக்கிறார்கள். அதில், அனைவருக்கும் சேர்த்து சமைத்துக்கொள்கிறார்கள். 93 பேருக்கும் சேர்த்து இரண்டு கழிப்பறைகள் மட்டுமே உள்ளன. சுகாதார நிலை ‘ஜீரோ’வில் இருக்கிறது. எப்போது எங்கே அனுப்புவார்களோ என்ற மரண பயம் இவர்களின் கண்களில் தெரிகிறது. தனித்தனியாக அகதிகளாக வந்தவர்கள், இங்கு ஒரே குடும்பமாக வசித்து வருவது மட்டுமே இவர்களுக்கு ஆறுதல் தருகிறது.

சொந்த தேசத்தில் வாழ வழியற்று வரும் அகதிகளை அரசு பாதுகாக்க வேண்டும்.

- சி.மீனாட்சிசுந்தரம்
படங்கள்: வருண் பிரசாத்

அகதிகளை ஏன் அனுப்புகிறார்கள்?

மி
யான்மரிலிருந்து ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகளாக வெளியேறுவது கடந்த ஆறு ஆண்டுகளாக நீடிக்கும்  துயரம். ‘அரசும் ராணுவமும் பௌத்தர்களுக்கு ஆதரவாக இருக்கிறது’ என்பது ரோஹிங்கியாக்களின் குற்றச்சாட்டு. Arakan Rohingya Salvation Army என்ற போராளிக்குழு சமீப நாட்களில் மியான்மர் ராணுவ முகாம்கள்மீது தாக்குதல் நடத்தியதுதான், இப்போதைய பிரச்னைகளுக்குக் காரணம். பாகிஸ்தானின் கராச்சியில் பிறந்து, சவுதி அரேபியாவில் படித்த ஒருவரால் உருவாக்கப்பட்டக் குழு இது. ரோஹிங்கியாக்கள் இந்தக் குழுவை ஆதரிக்கிறார்கள்.

இந்தக் குழுவை ஒழிக்க, கிராமம் கிராமமாகப் புகுந்து கண்மூடித்தனமாக ராணுவம் தாக்குதல் நடத்துகிறது; ஊரையே மொத்தமாக கொளுத்துகிறது. உயிரைக் காப்பாற்றிக்கொள்ள குழந்தைகள், முதியவர்கள் என எல்லோரும் வங்கதேசத்துக்கு மலைகளையும் சகதியான பாதைகளையும் தாண்டிச் செல்லும் பயணம் கண்ணீர் வரவழைக்கிறது. கடந்த இரண்டு வாரங்களில் 2,70,000 பேர் அகதிகளாக வங்கதேசம் வந்துள்ளனர். இவர்களுக்கு இந்தியா வந்தால் வளமான வாழ்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே, சட்டவிரோதமாக எல்லை தாண்டி வருகிறார்கள். சில ஏஜென்ட்டுகள் பணம் வாங்கிக்கொண்டு இவர்களை இந்தியாவுக்குள் கடத்துகிறார்கள். இப்படி சுமார் 40 ஆயிரம் ரோஹிங்கியா அகதிகள்,இந்தியாவில் உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

‘‘இவர்களுக்குள் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளும் இருக்கலாம்’’ என்பதே மத்திய அரசு இந்த அகதிகளை நாடு கடத்துவதற்குச் சொல்லும் காரணம். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.