Published:Updated:

அதிபர்! - சிறுகதை

அதிபர்! - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
அதிபர்! - சிறுகதை

தமிழ்மகன் - ஓவியங்கள்: மனோகர்

நிஷாவின் திருமணம் நிச்சயமான அன்றுதான் அதிபரின் அறிவிப்புச் செய்தி பரவ ஆரம்பித்தது. முதலில் இந்த அறிவிப்பு வாட்ஸ்அப் மூலம் பரவலாகிக்கொண்டிருந்தது. வேடிக்கை என நினைத்தே அதைப் பலரும் ஃபார்வேர்டு செய்துகொண்டிருந்தனர். அந்த அறிவிப்பு ஒரு மீம்ஸ் செய்யும் அளவுக்கான தரத்தோடுதான் இருந்தது.

எல்லோரும் நினைத்ததுபோல அவ்வளவு எளிமையானதாக இருக்கவில்லை அந்த அறிவிப்பு. திடீரென நாட்டு மக்களின் நன்மை கருதி இந்த அறிவிப்பைச் செய்திருந்தார். அது நிஜமாகவே அதிபரின் அறிவிப்புதான் எனத் தொடர்ந்து செய்தி சேனல்கள் உறுதிப்படுத்தின. நிஷா, டி.வி-யை உயிரூட்டிப் பார்த்தபோது, எல்லா சேனல்களிலும் அதிபர்தான் கையை உயர்த்திப் பேசிக்கொண்டிருந்தார். அதிபரின் உரை தீர்க்கமாக இருந்தது. நீள் அங்கி அணிந்து, சீன அறிஞர் கன்ஃபூசியஸ் உருவத்தை நினைவுபடுத்தும்விதமாக இருந்தார் அதிபர். அவருடைய ஆங்கில உச்சரிப்பு அழுத்தமாக... கருங்கல்போல உறுதியுடன் இருந்தது. சொல்லே கல்.

அதிபர்! - சிறுகதை

அவர் நிறுத்தி, நிதானமாக ஒவ்வொரு சொல்லாக எறிந்தார். “இன்று இரவு முதல் திருமணங்கள் செல்லாது.’’ இதுவரை நடந்த திருமணங்களா, இனி நடக்க இருப்பவையா? அதுபற்றி யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. அறிவிப்பைத் திரும்பத் திரும்ப மக்கள் பார்த்துக்கொண்டே இருந்தனர். அந்தப் பிரசங்கம் திரும்பத் திரும்ப வந்துகொண்டிருந்ததால், திரும்பத் திரும்பப் பார்க்க வேண்டியதாக இருந்தது. எத்தனைமுறை பார்த்தபோதும் அவருடைய அந்த விநோத அறிவிப்பில் எந்த மாற்றமும் இல்லை. அதே வார்த்தைகளைத்தான் சொன்னார். பதிவு செய்யப்பட்ட ஒரு வீடியோ பேச்சு அப்படித்தான் இருக்கும் எனினும் அது, பார்க்கப் பார்க்க அச்சத்தை அதிகப்படுத்துவதாக இருந்தது. ஒரே பேச்சை மறுபடி மறுபடி கேட்கும்போது அது கெட்டியாக மாறுகிறது. பாலாக இருந்து தாராக மாறிவிடுகிறது.

‘‘இன்று இரவு பன்னிரண்டு மணிக்குமேல் யாரும் தம்பதியராக இருக்க முடியாது. இன்று நள்ளிரவுக்குப் பிறகான பாலுறவுகள் அனைத்தும் கள்ளத்தனமானவை எனக் கருதப்படும். மக்கள்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் நியாயமான காரணத்துக்காக அரசு எடுத்திருக்கும் இந்த அவசர நடவடிக்கைக்குத் தம்பதியர் யாவரும் ‘ஒத்துழைக்காமல்’ இருப்பதன்மூலம் ஒத்துழைக்க வேண்டும்’’ என்ற வரிகளில் அதிபரின் இலக்கிய ரசனை வெளிப்பட்டிருப்பதாக ஒரு சேனலில் கருத்துச் சொல்லிக்கொண்டிருந்தார் ஓர் ஆதரவாளர். ஆனால், அதிபர் அதைத் தன் நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்துவதற்காகப் பயன்படுத்தியிருந்தார். மிக முக்கியமான ஆலோசனைகளின் நடுவே அதிபர் அப்படித்தான் தன் நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்துவார். முன்னர் ஒருமுறை நிலநடுக்கம் ஏற்பட்டு மக்கள் மூக்கில் மண் ஏறி, பூமியின் அழுத்தத்தால் இறந்தபோது ‘பூகம்பம் ஏற்படும் வேளைகளிலும் வான்கோழி உடலுறவில் ஈடுபடும். அந்தப் பகுதியில் வான்கோழி உண்டா?’ எனத் தன் அறிவியல் நகைச்சுவையை வெளிப்படுத்தினார்.

இந்தமுறை இப்படி ஒரு நகைச்சுவை. அடுத்த சில மணி நேரங்களில் அதிபரின் அறிவிப்பால் ஒவ்வொரு குடும்பமும் புயல் பாய்ந்த வயல்போல சிதைந்துகிடந்தது. பழைய மனைவிகளை எங்கு கொடுத்து, என்னவாக மாற்றுவது என்கிற கவலை கணவர்களுக்கு. கணவன்களை வைத்துக்கொண்டு இனி என்ன செய்வது என்ற கவலை மனைவிகளுக்கு.

‘நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் செல்லுமா?’ என்ற கேள்வியில் எந்த அர்த்தமும் இல்லாவிட்டாலும் நிஷா அதைத் தனக்குள் கேட்டுக்கொண்டாள்.

இரவு முழுவதும் நாடே உறக்கத்தை உதறிப்போட்டுவிட்டுக் கேள்விக்குறிகளுடன் அலைந்தது. கேள்விகளின் பாரம் அழுத்தியது. இல்லறத்துக்காக இல்லை எனினும் பல முதியோர்கள், குடும்ப ஓய்வூதியம் இனி கிடைக்குமா எனக் கலங்கிப்போய்த் தம் வயதொத்த ஓய்வூதியதாரர்களிடம் தொலைபேசி உரையாடல்களில் மூழ்கியிருந்தனர். `இன்று இரவு முதல் யாரும் உயிருடன் இருக்கக் கூடாது’ எனத் தெளிவாகச் சொல்லித் தொலைத்திருக்கலாம் என நிஷாவின் பாட்டி புலம்பிக்கொண்டிருந்தார். கணவன் இறந்த பிறகு குடும்ப பென்ஷன் மூலம் வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்தார் அவர். அவருடைய புலம்பலைத் தவிர்க்க ஓர் அறையில் வைத்துப் பூட்ட வேண்டியிருந்தது.

‘செல்லாத திருமணச் சட்டம்’ தாம்பத்யத்தைச் சில சட்ட விதிகளுக்குட்பட்டு அனுமதிக்குமா என்பதற்கான விடையை இணையத்தில் தேடிக்கொண்டிருந்தனர் சில தம்பதிகள். பெரும்பாலும் புதிதாகத் திருமணமானவர்கள் அவர்கள். நிஷாவின் அண்ணனும் அண்ணியும் நள்ளிரவுக்குள் ஒரு கடைசி வாய்ப்பைத் தவறவிடக் கூடாது என நினைத்திருந்தனர்.

திருமணங்கள் செல்லாமல் போனதில் மகிழ்ந்த சில ஆண்களும் பெண்களும் இருக்கத்தான் செய்தனர். அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் வருந்துவதுபோல நடிக்க வேண்டியிருந்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
அதிபர்! - சிறுகதை

திருமண வயதில் இருந்த பலர் பதறிப்போயிருந்தனர். அதில் நிஷாவையும் முக்கியமாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும். அவளுக்கு இப்போதுதான் மாப்பிள்ளை பார்த்து முடிவு செய்திருந்தனர். செல்போன் எண்களைப் பரிமாற்றி, இதுவரை இரண்டு முறைதான் பேசியிருந்தனர். கற்பு என்பது கணவனுக்கு மனைவி சமர்ப்பிக்கவேண்டிய பொக்கிஷம் என்பதில் நம்பிக்கை நிறைந்திருந்த நிஷாவுக்கு இந்த அறிவிப்பு, வாழ்வையே கேள்விக்குறி ஆக்கியிருந்தது. தனக்கு இனி திருமணம் ஆகாது என்பதை நினைத்து அழுவதை மற்றவர்கள் பார்ப்பதுகூட கற்புக்குக் களங்கமாகி விடக்கூடும் என நினைத்த அவள், யாரும் பார்க்காத நேரத்தில் மனதுக்குள் மட்டுமே அழுவதற்குத் தன்னைத் தயார்படுத்தியிருந்தாள்.

இதுவரை ஒருமுறையும் திருமணம் செய்யாதவர்கள் அனைவருக்குமே ஏறத்தாழ அந்த வருத்தத்தின் விகிதம் இருந்தது. எதற்காகத் திருமணங்கள் நடைபெறுகின்றதோ, அதை ஒருபோதும் அனுபவிக்காதவர்கள் என்பதில்தான் அவர்களின் ஏக்கமும் பதற்றமும் பல மடங்காக ஒளிந்திருந்தன.

நிஷாவின் அம்மாவுக்கு இனியும் தான் அவளுக்கு அம்மா முறை கொண்டாடலாமா என்பதில் குழப்பம் இருந்தது. தம்பதி உறவு இல்லை என்றால், எல்லா உறவும் அர்த்தம் இழந்துவிடுமா எனத் தொலைக்காட்சிகளில் விவாதங்கள் நடந்தன. விடைதான் கிடைக்கவில்லை.
அதிபரின் அறிவிப்பு அந்த இரவைக் கடித்துக் குதறியிருந்தது. உலகில் மனித ஜீவராசிகள் சிந்திக்கத் தொடங்கியிருந்த காலத்துக்குப் பின்னர், நினைவுகூரத்தக்க மோசமான இரவு. தொலைக்காட்சியில் புதிய சட்டத்தின் விளக்கங்கள் ஏதேனும் வெளிவருகிறதா என விழி இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தனர் மக்கள். இரவு முடித்து மறுநாள் இரவு வந்த பின்னரும் அதிபரிடமிருந்து விளக்கம் வரவில்லை.

அதிபர் முதல் நாள் அறிவித்ததையே மீண்டும் மீண்டும் ஒளிபரப்பிக்கொண்டிருந்தார்கள். அந்தத் திருமணச் சட்டத்தின் பிரிவு, 13ஏ என்பதாக விவாதத்தின்போது தெரிந்துகொள்ள முடிந்தது. திருமணத்துக்கு என ஒரு சட்டம் இருப்பதைப் பலர் அப்போதுதான் அறிந்தனர். ஏராளமான வாக்குறுதிகள் கொடுத்து, பதவிக்கு வந்த அதிபரால் அவற்றில் ஒன்றைக்கூட நிறைவேற்ற முடியாததால்தான் மக்களை இப்படித் திசை திருப்பியிருக்கிறார் என்பதைச் சிலர் வதனப்புத்தகத்தில் கருத்தாகச் சொல்லியிருந்தார்கள். ஆனால், அவர்களின் சமூகவலைப் பக்கங்கள் உடனே அழிக்கப்பட்டன. அவர்களும் சேர்த்தே அழிக்கப்பட்டுவிட்டதாகவும் ரகசியமாகப் பேசிக்கொண்டார்கள்.

இரண்டாம் நாள் இரவில் அதிபர் நிச்சயமாகத் தொலைக்காட்சி உரையின் வழியே இந்தப் பிரச்னையைத் தீர்த்துவைப்பார் எனச் சொன்னார்கள். இப்படிச் சொன்னவர்கள் எல்லாம் அதிபரின் கட்சியைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள்தான். திருமணங்கள் நடப்பதால் தேவையில்லாமல் மக்கள்தொகை பெருகுவதாகவும் அதைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காகவும் மட்டுமின்றி, இனிப் பிறக்கப்போகும் குழந்தைகளுக்கு `செனிரியோ சைனி’ எனும் விபரீதமான நோய் ஒன்று தாக்க இருப்பதை அறிந்தே அதிபர் இப்படி ஒரு முயற்சி எடுத்திருப்பதாகவும் விஞ்ஞான ரீதியாகக் காரணம் சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஆனால், அதிபரின் கட்சியைச் சேர்ந்த பலர் தொடர்ந்து தங்கள் மனைவியரிடமும் பிற பெண்களிடமும் கள்ள உறவு மேற்கொண்டதைச் சில பத்திரிகைகள் வெளிச்சம்போட்டுக் காட்டின.

தொடர்ச்சியான திருமணங்களால் நாட்டில் பரம்பரை நோய்கள் பெருகுவதாக அதிபரின் ஆதரவாளர் ஒருவர், கடைந்தெடுத்த நியாயமான தொனியில் சொன்னார். அதேசமயம், உலகின் பல நாடுகளில் இந்தத் திட்டத்தால் நல்ல பயன் விளைந்திருப்பதாகச் சொன்னவர்களால் உலக வரைபடத்தில் அப்படி ஒரு நாட்டையும் அடையாளம் காட்ட இயலவில்லை. அதை நம்பவைக்கும் பொருட்டுப் புதிதாக ஒரு நாட்டின் பெயரையும் சொல்லக்கூடும் என நிஷாவின் தந்தை தன் மகளுக்கு மட்டும் கேட்கும்படி சொன்னபோது, அவருக்கு வியர்த்துப்போய்விட்டது. காதுகளின் இருபுறம் மட்டும் நரைத்த வழுக்கைத் தலையரான அவர், தன் மெல்லுடல் மகளே தன்னைக் காட்டிக்கொடுத்துவிடுவாளோ எனப் பயந்துபோவதை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. தன் அழகிய, அன்பான மகள் அத்தகையவள் அல்ல என நன்றாகத் தெரிந்திருந்தும் தானாகவே அச்சத்தால் அவருடைய உடல் வியர்த்துக் கொட்டியது. அப்பா தன்னை சந்தேகித்த காரணத்துக்காக வேதனைப்படுவதைத் தவிர்க்க, ‘‘என்னப்பா புழுக்கமா இருக்கா?’’ என்று கேட்டுவிட்டு, 17 டிகிரியைக் காட்டிக்கொண்டிருந்த ஏ.சி ரிமோட்டை 16 டிகிரிக்கு மாற்றிவைத்தாள் நிஷா.

அதிபர்! - சிறுகதை

அதிபர் நான்காம் நாள் நள்ளிரவு தொலைக் காட்சியில் பேசினார். ‘‘மக்கள் படும் அவதிகளுக்கு நான் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்கிறேன். ஓர் ஆண்டில் நிலைமை சரியாகிவிடும். நிலைமையைச் சமாளிக்கும் பொருட்டு புதிய முடிவு எடுத்திருக்கிறேன். இரண்டு முறை திருமணம் செய்தவர்களின் திருமணங்கள் மட்டும் செல்லும். அதை அவர்கள் ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும். இந்த அதிரடி அறிவிப்பில் நாட்டில் பத்து சதவிகிதம் தம்பதியர் பலன் அடைவார்கள்’’ என அதிபர் தன் இரண்டாம் அறிவிப்பின் இறுதி வரிகளில் தெளிவுபடுத்தினார். அதற்கு அதிபர் சொன்ன காரணம் விநோதமாக இருந்தது. மக்களின் பிரச்னையைத் தீர்க்கப் பலவிதங்களில் ஆலோசனை நடத்தியதாகவும் ஒரு பிரிவினருக்காவது மீண்டும் திருமண உரிமையை அளிக்கலாம் என முடிவெடுத்ததாகவும் அதிபர் சொன்னார். அந்த ‘ஒரு பிரிவினர்’ யார் என்பதை வகைப்படுத்துவதில் வெற்றிகண்டுவிட்டதாக அதிபர் சொன்னார். இரண்டு முறை திருமணம் செய்தவர்கள் நாட்டில் பத்து சதவிகிதம் பேர்தான் என்பதால், அவர்களுக்கே அந்தச் சலுகையின் பலனைத் தருவதற்குத் தீர்மானித்ததாகச் சொன்னார். ‘பலன் அடைவார்கள்’ என்பது ‘தாம்பத்யம் மேற் கொள்ளலாம்’ என்பதைக் குறிப்பதாக மக்கள் அவர்களாகவே அர்த்தம் கற்பித்துக்கொள்ள வேண்டியிருந்தது. அது அவருடைய நகைச்சுவையின் சாதுர்யம் என்பதை அறியாதவர்கள் அல்ல அவர்கள். 90 சதவிகிதம் தம்பதியர் பயன் பெறத் தகுதியற்றவர்கள். அவர்களின் விவரங்கள் தயாரித்து முடிக்கப்பட்டுவிட்டதாகவும் அவர்களில் யாராவது தாம்பத்யத்தில் ஈடுபட்டால், உடனடியாகக் கைதுசெய்யச் சட்டம் இயற்றப்படுவதாகவும் அரசுத்துறையினர் பயமுறுத்தினார்கள். பயன்பெறா தம்பதியர் தங்கள்மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் எல்லா நேரமும் விலகியிருந்தனர். எவரும், ‘இரண்டு முறை திருமணம் செய்தவர்களால் மக்கள் பெருக்கம் ஏற்படாதா?’ எனக் கேட்கவில்லை. ஒரு முறையும் திருமணம் ஆகாதவர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்கலாமே எனவும் கேட்கவில்லை.

வழக்கம்போல சாலைகளில் வாகனங்கள் ஓடின. சூரியன் தோன்றி மறைந்தது. மேகம் அற்ற வானில் நட்சத்திரங்கள் பிரகாசமாகவே ஒளிர்ந்தன. மனிதர்கள் மட்டும் உயிர் இல்லாமல் நடமாடிக் கொண்டிருந்தார்கள். மறுநாள் காலை எல்லா குடும்ப மையங்களிலும் இரண்டு முறை திருமணம் ஆனதற்கான ஆதாரங்களைக் காட்ட மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்தனர். நிஷாவின் அண்ணன் அந்த வரிசையில் காத்திருந்தான். அண்ணியும் அண்ணனுக்குத் தெரியாமல் இன்னொரு வரிசையில் நின்றிருந்தார். முன்னாள் காதலனோடு, காதலிகளோடு எடுத்திருந்த புகைப்படங்களை முதல் திருமணம் என நிரூபிப்பதற்கான முயற்சி அது. அந்த உத்தி பலிக்காமல் திரும்பினர். இரண்டாவது திருமணம் முதல் மனைவிக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்பதோடு, இரண்டு மனைவிகளும் சாட்சிக் கையெழுத்திட வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தப்பட்டதால், பத்து சதவிகிதப் பயனாளிகளும்கூட பயனடைய வாய்ப்பு இல்லை.

இரண்டாவது, மூன்றாவது திருமணங்கள் ரகசியமானவை, கள்ளத்தனம் நிறைந்தவை... கள்ளக்காதல்கள் என அவற்றைப் புறந்தள்ள வேண்டியிருந்தது. கள்ளம் இல்லாத காதல் என்பதை நிரூபிப்பதற்கான 41ஏ படிவத்தை அவர்கள் பூர்த்திசெய்து தர வேண்டியிருந்தது. ஒரே பெண்ணை இரண்டு ஆண்களோ, ஒரே ஆணை இரண்டு பெண்களோ அடையாளம் காட்டினர். சரியான ஆதாரங்கள் திரட்டுவதற்காக மக்கள் விழிபிதுங்கிப் போயிருந்த ஐந்தாம் நாள் இரவில் அதிபரின் அடுத்த அறிவிப்பை வெளியிட்டனர்.

‘‘ஒரு பெண்ணே பல ஆண்களை மணமுடித்திருந்தால், அது மக்கள்தொகைப் பெருக்கத்தை வெகுவாகக் கட்டுப்படுத்திவிடும்’’- இந்த அறிவிப்பை அதிபருக்குப் பதிலாக எரிசக்தித்துறை அமைச்சர் வெளியிட்டார். அதிபர் தன் அதிகாரத்தைத் தன் அமைச்சகத்தில் உள்ள சகலருக்கும் பகிர்ந்தளிப்பதன் பெருந்தன்மையை அதிபரின் ஆதரவாளர்கள் போஸ்டர் அடித்துக் கொண்டாடினர். நாடே விழாக் கோலமாக இருந்தது. ஒரு நாடு எப்படி முன்னேற்றப் பாதையில் வீறுநடை போடுகிறது என்பதற்கு அதிபரின் அதிகாரப் பகிர்வு நல்ல உதாரணம் என எரிவாயு விநியோக நிலையங்களில் கட்-அவுட் வைத்தனர். ஆனால், அதை ஏன் எரிசக்தித்துறை அமைச்சர் மூலம் வெளியிட்டார் என்பது யாருக்கும் புரியவில்லை. ஆனால், இந்த அறிவிப்பு நிஷாவின் அப்பாவுக்கு வயிற்றில் புளியைக் கரைக்கும் விஷயமாக இருந்தது. மகாபாரதத்தில் பலரைத் திருமணம் செய்த பெண் கதாபாத்திரங்கள் உதாரணம் தரப்படும் ஊடகங்களில் நிகழ்ச்சிகள் காட்டப்பட்டன.

பத்தாம் அறிவிப்பு நடந்த இரவு.

நிஷாவுக்கு ஒரு போன் வந்தது. பேசியவள் ஹாசினி. அவள் குஜராத்திப் பெண். ``அவசரமாகச் சந்திக்க வேண்டும்’’ எனச் சொன்னாள். நிஷாவுக்கு இருந்த மன அழுத்தத்தில் அவள் யாரையும் சந்திக்க விரும்பவில்லை. அதே மன அழுத்தம்தான் யாரையாவது சந்தித்தால் நன்றாக இருக்கும் எனவும் எண்ண வைத்தது. நிஷா இதில் எந்த முடிவையும் எடுக்கும் முன்னரே, ஹாசினி, ‘‘இரவு ஒன்பது மணிக்குள் வந்துவிடுவேன்’’ என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டாள்.

சொன்னபடி ஹாசினி வந்துவிட்டாள். ஒரே ஒரு தகவலை மட்டும் அவள் மறைத்துவிட்டாள். அவளுடன் அவளுடைய காதலன் ரித்திக்கும் வந்திருந்தான். மறுநாள் காலை அவன், வெளிநாடு புறப்பட வேண்டியிருந்தது. அங்கு அவனுக்கு வேலை நிரந்தரமாகியிருந்தது. காலையில் செல்ல வேண்டியிருப்பதால், விமான நிலையம் அருகில் இருக்கும் நிஷாவின் வீட்டில் தங்க முடிவெடுத்ததாக ஹாசினி சொன்னாள். அவள் முகத்தில் பதற்றம் தெரிந்தது. பாதி சொல்லிக்கொண்டிருக்கும்போதே, அது நிஜமான காரணம் இல்லை என நிஷாவுக்கு நன்றாகவே தெரிந்துவிட்டது என ஹாசினிக்கும் தெரிந்தது. நிஷாவின் தந்தை வீட்டில் அனுமதிக்க முடியாது என்று கண்டிப்புடன் சொன்னார். இரவில் அவர்கள் அந்த வீட்டில் என்ன காரியம் செய்ய நினைக்கிறார்கள் என்பது அவர்கள் முகத்தைப் பார்த்தாலே தெரிந்தது. அவருக்கு மிகுந்த அச்சமாக இருந்தது. அவர்களை உடனே வெளியேறிவிடும்படி சொன்னார். நிஷாவுக்குத் தன்னைத் தேடி வந்தவளை விரட்டி அனுப்ப மனதில்லை. அதுவும் இல்லாமல் இரவு ‘நல்’லை நெருங்கிக்கொண்டிருந்தது. அண்ணனுக்கும் அண்ணிக்கும் அன்று இரவுப் பணி என்பதால், அவர்களுடைய கருத்துகளுக்காகக் காத்திருக்க வேண்டியது இல்லை.

அதிபர்! - சிறுகதை

அப்பா உக்கிரமாகக் கேட்டார்: ‘‘அவர்களை வெளியே அனுப்பப் போகிறாயா, இல்லையா?’’

‘‘யாரும் பார்த்திருக்க மாட்டார்கள் அப்பா. இருவரும் ஜீன்ஸ் பேன்ட், சட்டை போட்டுக்கொண்டு வந்ததால், இருட்டில் இருவரையும் ஆண்கள் என்றே நினைத்திருப்பார்கள்’’ என்றாள் வந்தவர்களுக்கு ஆதரவாக.

அம்மாவுக்கு அந்த அச்சச் சூழல் அப்பாவின் பதற்றத்தால் உணர்த்தப்பட்டிருக்க வேண்டும். ‘‘ஒன்று அவர்கள் இருக்க வேண்டும். இல்லை, நாங்கள் இருக்க வேண்டும்’’ என்ற அரதப் பழசான சவாலைப் பிரயோகித்துப் பார்த்தார். நிஷா அமைதியாக இருந்தாள்.

ஹாசினி காலையில் பூரண திருப்தியோடு நிஷாவுக்கு நன்றி சொல்லிவிட்டு வெளியேறியபோது, போலீஸ் அதிகாரி ஒருவர் தம் வீட்டை நோட்டம் விட்டுக்கொண்டிருந்ததாக அப்பா பயத்துடன் சொன்னார்.

ரத்தம் உறையக் காத்திருக்கும் வெட்டுண்ட ரணம்போல மக்கள் அதிபரின் அறிவிப்புகளை எதிர்பார்த்துக்கிடந்தனர். உண்மையிலேயே நலம் தரும் திட்டம் ஒன்றை அதிபர் அறிவிக்கக்கூடும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது. ஆனால், மக்கள்தொகை கட்டுப்பாட்டில் உறுதியாக இருந்த அவர், ‘‘நான் நினைத்திருந்தால், ஒரே நாளில் மக்கள் அனைவருக்கும் கருத்தடை செய்திருக்க முடியும். மக்கள்தொகைப் பெருக்கத்தைக் குறைக்க அதுதான் சரியான வழி என்பதை அறியாதவன் அல்ல நான்’’ எனக் குரல் உயர்த்திச் சொன்னார். அப்போது அவருடைய முகம் ரத்தமெனச் சிவந்திருந்தது. ``அந்த ஈவிரக்கமற்ற செயலை நான் செய்ய விரும்பவில்லை’’ என்ற அவருடைய பத்தாம் நாள் அறிவிப்பின்போது அதிபருக்கு ஈவிரக்கத்தின்பால் நம்பிக்கை இருப்பது தெளிவாகவே உணர்த்தப்பட்டது. அதனால் மக்கள் அச்சத்துடன் அவருடைய அறிவிப்பைக் கைதட்டி வரவேற்றனர்.

நிஷாவுக்கு ஒரே ஒரு வாய்ப்பு மட்டும்தான் இருந்தது. பலதார மணத்துக்குச் சம்மதிப்பது. அவள் முகம் வாடியிருந்தது. அப்படி ஒரு திருமணம் தனக்கு வேண்டாம் எனச் சொல்லும் தைரியம் அவளுக்கு இல்லை. செல்லாத திருமணத் திட்டத்துக்கு முன்னர் அவளுக்குப் பார்க்கப்பட்ட மணமகன் ரவி. ஐந்து கணவன்மார்களில் ஒருவராக இருக்க அவளுக்கு முழுச் சம்மதம் எனத் தெரிவித்துவிட்டான் அவன். மணமானால் போதும் என அவனும் நினைத்தான்.

நிஷாவுக்கு ஐந்து பேரை மணம் முடிப்பதாகத் தீர்மானித்து மேலும் நான்கு வரன்களைத் தேட ஆரம்பித்தனர். குறைந்தபட்சம் 10 பேரையாவது ஒரு பெண் மணக்க வேண்டும் என்ற அறிவிப்பு விரைவில் வரப்போவதாகவும் அதனால், உடனடியாக ஐந்து பேரைத் தேர்வு செய்யும்படி அவசரப்படுத்தப்பட்டதால், நல்லவேளையாக நாம் தப்பித்தோம் என நிஷாவின் பெற்றோர் தங்கள் குலதெய்வத்துக்கு நன்றி கூறினர்.

நிஷாவுடன் ரவியும் சேர்ந்து மற்ற நான்கு பேரைத் தேடிக் கண்டுபிடித்தான். இளைஞர்களும் இந்தக் கடைசி வாய்ப்பை நழுவவிடக்கூடாதென தீவிரமாக இருந்தனர். ஆனால், இளைஞர்கள் பற்றாக்குறையால் ஒரு இளைஞனே வெவ்வேறு பெயர்களில் போலி ஆதாரங்களுடன் அலைய ஆரம்பித்திருந்தான். நிஷா, ரவியிடம் தீர விசாரித்து முடிவெடுக்குமாறு சொல்லியிருந்தாள். ஒரு தடவைக்குப் பத்து முறை தீர விசாரித்துத்தான் முடிவெடுத்திருப் பதாகவும் நம் குடும்பத்தில் அத்தகைய எந்தச் சச்சரவுக்கும் இடம் இல்லை என உறுதியாகச் சொன்னான். ரவி கண்டுபிடித்துக் கொண்டு வந்திருந்த நான்கு நபர்களும் உண்மையான நபர்கள்தான் என்று சொன்னான். நிஷாவுக்கு விஜயன் மீது சற்றே அவநம்பிக்கை இருந்தது. ஒருவேளை அவன் போலி நபராக இருக்கக்கூடும் எனச் சந்தேகித்தாள். அவனை நகரின் சந்தேகத்துக்குரிய கடற்கரை பிரதேசத்தில் பார்த்திருப்பதாக நிஷாவின் அண்ணனும் சொன்னான். அண்ணன் ஏன் அந்தச் சந்தேகத்துக்குரிய பகுதிக்குச் சென்றான் என நிஷா கேட்கவில்லை.

அப்பா மிகவும் அவசரப்பட்டார். மகளுக்கு எப்படியாவது கல்யாணம் ஆகிவிட வேண்டும் என்ற நிஜமான தவிப்பு. தன் மகளுக்குக் கல்யாணம் செய்து பார்த்த திருப்தியோடு அவர் கண்ணை மூட விரும்பினார். நிஷா திருமணம் சிறப்பாக நடந்த அன்று, போலீஸ் அதிரடியாக உள்ளே நுழைந்தது.

‘‘ஹாசினி விவகாரம்தான். அந்தப் பெண் நம் வீட்டுக்கு வந்தபோதே நினைத்தேன்’’ என அப்பா புலம்ப ஆரம்பித்தார். போலி ஆவணத்தோடு ஓர் இளைஞன் நிஷாவைத் திருமணம் செய்ய வந்திருப்பதாகச் சொன்ன போலீஸ், அந்தப் போலி இளைஞன் என ரவியைக் கைது செய்தது. ஒருமுறை திருமணம் தடைபட்டவர்கள், அடுத்த திருமணம் செய்ய வாய்ப்புள்ளதா என நிஷாவின் அப்பா திருமணச் சட்ட அலுவலகத்தில் விசாரிக்க ஆரம்பித்திருந்தார்.