Published:Updated:

அனிதா இறந்தது மருத்துவக் கல்விக்காக... - சுமித்ரா இறந்தது பஸ் வசதிக்காக!

அனிதா இறந்தது மருத்துவக் கல்விக்காக... - சுமித்ரா இறந்தது பஸ் வசதிக்காக!
பிரீமியம் ஸ்டோரி
அனிதா இறந்தது மருத்துவக் கல்விக்காக... - சுமித்ரா இறந்தது பஸ் வசதிக்காக!

ஆம்புலன்ஸும் வரவில்லை... ஆட்சியாளர்களும் கண்டுகொள்ளவில்லை

அனிதா இறந்தது மருத்துவக் கல்விக்காக... - சுமித்ரா இறந்தது பஸ் வசதிக்காக!

ஆம்புலன்ஸும் வரவில்லை... ஆட்சியாளர்களும் கண்டுகொள்ளவில்லை

Published:Updated:
அனிதா இறந்தது மருத்துவக் கல்விக்காக... - சுமித்ரா இறந்தது பஸ் வசதிக்காக!
பிரீமியம் ஸ்டோரி
அனிதா இறந்தது மருத்துவக் கல்விக்காக... - சுமித்ரா இறந்தது பஸ் வசதிக்காக!

ம்மா, மகள்... என இரண்டே பேர்கொண்ட எளிய குடும்பம் அது. தாய்க்கு ஒரு நோய் என்றால் தாங்கும் அந்த மகளின் கரங்கள். மகளின் துயர் அறிந்து துடைக்கும் தாயின் விரல்கள். இருவருக்கும் வேறு ஆதரவு யாருமில்லை என்பது தெரிந்ததும் விதி தன் விளையாட்டை ஆடிப்பார்த்துவிட்டது. ஆம்... இளம் வயதிலேயே பாம்பின் விஷத்துக்குக் கணவனைப் பறிகொடுத்த அந்த ஏழைத் தாய், ஒற்றை ஆறுதலாக இருந்த மகளையும் பஸ் விபத்தில் பறி கொடுத்துவிட்டு தனிமரமாகக் கலங்கித் தவிக்கிறார்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் இருந்து 12 கி.மீ தொலைவில் உள்ளது ஆதனகுறிச்சி கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த பரிமளாவின் கணவர் சங்கர், 13 ஆண்டுகளுக்கு முன் பாம்பு கடித்து இறந்து போனார். தனது மகளான சுமித்ராவை வளர்த்து ஆளாக்கும் கனவுடன், மகளுக்காகவே வாழ்ந்து வந்தார் பரிமளா. கூலி வேலைக்குச் சென்று தனது ஒரே மகளைக் கஷ்டப்பட்டு வளர்த்தார். கடந்த 8-ம் தேதி காலை பள்ளிக்கூடத்துக்கு மினி பேருந்தில் சென்றபோதுதான் நடந்தது அந்த மரண விபத்து.

அனிதா இறந்தது மருத்துவக் கல்விக்காக... - சுமித்ரா இறந்தது பஸ் வசதிக்காக!
அனிதா இறந்தது மருத்துவக் கல்விக்காக... - சுமித்ரா இறந்தது பஸ் வசதிக்காக!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆதனகுறிச்சிக்கும் அதனைச் சுற்றியுள்ள கிழவனேரி, கண்ணன் கோட்டை, கையகம், இளங்காவூர் உள்ளிட்ட கிராமங்களுக்கும் முழுமையான போக்குவரத்து வசதி இன்னும் வாய்க்கவில்லை. அதனால் சுமித்ராவுக்கு வாய்க்கரிசி போட்டுவிட்டார்கள். சுதந்திர இந்தியாவில் இந்தக் கிராமங்களுக்கு மிகவும் பெருந்தன்மையாக தினமும் இரண்டு முறைதான் அரசுப் பேருந்துகளை இயக்குகிறார்கள் ஆட்சியாளர்கள். அந்த அரசுப் பேருந்து அதிகாலையிலேயே வந்து சென்றுவிட, இந்தக் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பள்ளிக்கூடம் செல்வதற்கும் வேலைக்குப் போவதற்கும் பெரிதும் நம்பியிருப்பது தனியார் மினி பேருந்துகளைத்தான். அவை எப்போதும் பயணிகளை நெருக்கி அடைத்தபடியேதான் செல்லும்.

கிராமங்களின் அடையாளமாகத் திகழும் ‘பல்லாங்குழி’ சாலைகளில் அதிகமான பயணிகளை ஏற்றிக்கொண்டு, செல்போனில் பேசியபடியே ஓட்டுநர் அசுர வேகத்தில் இயக்கியதால், சாலையின் அருகில் இருந்த சேற்றுப் பள்ளத்தில் பல்டியடித்தது அந்தப் பேருந்து. அடியில் சிக்கிக்கொண்ட மாணவி சுமித்ரா, சேற்றில் புதைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். தீயணைப்புத் துறை, காவல் துறை, ஆம்புலன்ஸ் என அரசுத் துறையினர் யாரும் விபத்து நடந்து இடத்துக்கு வந்து சேரவில்லை. மந்திரி அடிபட்டிருந்தால் அரசு இயந்திரம் அங்கே குவிந்திருக்கும். சுமித்ராவை அங்கிருந்தவர்களே மீட்டு டூ வீலரில் மருத்துவமனைக்கு அழைத்துப் போனார்கள். அதன்பிறகு கார் கிடைத்து மருத்துவமனைக்குப் போய்ச் சேர்ந்தபோது... சுமித்ரா இந்த உலகத்தைவிட்டே போயிருந்தாள். ஆம்புலன்ஸ் வர தாமதம் ஆனதால், ஒரு உயிர் பலியானது.

தனக்கு இருந்து வந்த ஒற்றை ஆதரவையும் இழந்த நிலையில் புலம்பித் தவித்துக்கொண்டிருந்த பரிமளா, ‘‘கல்யாணம் முடிஞ்ச நாலு வருஷத்தில வீட்டுக்காரரு பாம்பு கடிச்சு இறந்து போயிட்டாரு. அப்ப மகளுக்கு மூணு வயசு. அவள அப்பா இல்லேங்கிற குறையே தெரியாம வளர்த்தேன். அவளும் நிலைமைய புரிஞ்சுக்கிட்டு நல்லபடியா படிச்சா. 10-ம் வகுப்புல 415 மார்க் எடுத்திருந்தா. அவ படிச்ச முதுகுளத்தூர் பள்ளிவாசல் பள்ளிக்கூடத்திலேயே தொடர்ந்து படிச்சா நல்ல மார்க் எடுப்பா என நினைச்சுதான், தூரமாக இருந்தாலும் அங்கேயே படிக்க வெச்சேன். ஸ்கூல் பேக்கைகூட நான்தான் பஸ் ஸ்டாப்பு வரை தூக்கிட்டுப் போவேன். அன்னைக்கு அவளை பஸ்ல ஏத்தி விட்டுட்டு நான் வீட்டுக்குக்கூட திரும்பல. சுமித்ரா செத்துட்டாள்னு சேதி வந்துருச்சு. ‘நல்லா படிச்சு நான் ஐ.ஏ.எஸ் ஆகி உன்னைக் காப்பாத்துவேன்’னு அடிக்கடி சொல்லுவா. இப்படி என்னைய தவிக்க விட்டுட்டுப் போயிட்டாளே’’ எனக் கதறினார்.

அனிதா இறந்தது மருத்துவக் கல்விக்காக... - சுமித்ரா இறந்தது பஸ் வசதிக்காக!

சுமித்ராவின் உறவினரான கருப்பையா, ‘‘விவசாய காலம் போக மத்த நேரத்துல டவுனுக்குத்தான் வேலைக்குப் போகணும். அங்க போக மினி பஸ்ஸதான் நம்பியிருக்கோம். மினி பஸ் டிரைவர் செல்போன்ல பேசிக்கிட்டே பஸ்ஸை வேகமா ஓட்டியிருக்காரு. ஸ்பீடா போனதால, ரோட்டு வளைவுல திருப்ப முடியாம வயல்காட்டுக்குள்ள பஸ் கவுந்திருச்சு. டிரைவரும் கண்டக்டரும் அங்கிருந்து ஓடிட்டாங்க. சிலர் சேத்துக்குள்ள சிக்கிக்கிட்டாங்க. ஊர்க்காரங்க ஒண்ணா சேர்ந்தும் பஸ்ஸைப் புரட்ட முடியல. பக்கத்து ஊருக்குத் தகவல் சொல்லி ஜே.சி.பி-யை வரவெச்சு பஸ்ஸைத் தூக்குனோம். அதுக்கு அடியில என் பேத்தி சுமித்ரா சேத்துல புதைஞ்சு கிடந்தா. அதுவரைக்கும் ஆம்புலன்ஸ்கூட வரலை. அதனால் பைக்கில் வெச்சு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போனோம். அங்க என் பேத்தி ஏற்கெனவே செத்துப் போயிட்டதா சொல்லிட்டாங்க. இதுவரைக்கும் அந்த பஸ்காரங்க தரப்பில இருந்து ஒருத்தர்கூட சமாதானம் சொல்ல வரல. ஏற்கெனவே இதே பஸ் ரெண்டு முறை விபத்தில சிக்கி ரெண்டு பேர் இறந்துட்டாங்க. இனிமேலாவது அரசு பஸ் எங்க ஊருக்கு வரணும். அதிகாரிங்க அதற்கு நடவடிக்கை எடுக்கணும்’’ என்றார்.

பக்கத்திலேயே பள்ளிக்கூடம் இல்லாதது, போதிய பேருந்து வசதி இல்லாதது, உடனடியாக ஆம்புலன்ஸ் வராதது... எல்லாம் சேர்ந்து ஓர் ஏழைச் சிறுமியைப் பலிவாங்கியிருக்கிறது.

அனிதா இறந்தது மருத்துவக் கல்விக்காக. சுமித்ரா இறந்தது பஸ் வசதிக்காக!

- இரா.மோகன்
ஆர்.எம்.முத்துராஜ்