Published:Updated:

“எம்.எல்.ஏ-வா... ரியல் எஸ்டேட் புரோக்கரா?”

“எம்.எல்.ஏ-வா... ரியல் எஸ்டேட் புரோக்கரா?”
பிரீமியம் ஸ்டோரி
“எம்.எல்.ஏ-வா... ரியல் எஸ்டேட் புரோக்கரா?”

மனோன்மணிக்கு எதிராக கொந்தளிக்கும் வீரபாண்டி

“எம்.எல்.ஏ-வா... ரியல் எஸ்டேட் புரோக்கரா?”

மனோன்மணிக்கு எதிராக கொந்தளிக்கும் வீரபாண்டி

Published:Updated:
“எம்.எல்.ஏ-வா... ரியல் எஸ்டேட் புரோக்கரா?”
பிரீமியம் ஸ்டோரி
“எம்.எல்.ஏ-வா... ரியல் எஸ்டேட் புரோக்கரா?”

ழைக் குடும்பங்களுக்கு வழங்க வேண்டிய இலவச வீட்டு மனைகளை, பட்டா ஒன்றுக்கு மூன்று லட்சம் ரூபாய் வரையில் வாங்கிக் கொண்டு வசதிபடைத்தவர்களுக்கு வழங்கியதாக வீரபாண்டி அ.தி.மு.க எம்.எல்.ஏ மனோன்மணி மீது பகீர் புகார் கிளம்பியுள்ளது.

இது பற்றி மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்டக் குழு உறுப்பினர் அன்பழகனிடம் பேசினோம். “சேலம் கெஜ்ஜல்நாயக்கன் பட்டி பகுதியில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த 250 குடும்பத்தினர் வசித்து வந்தோம். அந்த இடத்தை கழிவுநீர்க் குட்டை புறம்போக்கு, ஓடைப் புறம்போக்கு என்று கூறி எங்கள் வீடுகளை இடித்துவிட்டனர் அதிகாரிகள். கலெக்டரைச் சந்தித்து, ‘இலவச வீட்டுமனை வேண்டும்’ என வலியுறுத்தினோம்.  போராட்டங்களும் நடத்தினோம். அதையடுத்து, 193 குடும்பத்தினருக்கு தலா 800 சதுர அடி இலவச வீட்டு மனை கொடுப்பதாக உறுதியளித்தனர். இதற்காக, கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் ஐந்து ஏக்கர், 16 சென்ட் தனியார் நிலத்தைக் கையகப்படுத்தி, 2002-ல் முதற்கட்டமாக 72 குடும்பத்தினருக்குப் பட்டா வழங்கப்பட்டது.

“எம்.எல்.ஏ-வா... ரியல் எஸ்டேட் புரோக்கரா?”

அதை எதிர்த்து அந்த நிலத்தின் உரிமையாளர் உயர் நீதிமன்றம் சென்றார். ‘அந்த நிலத்தை வீடற்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட ஏழை மக்களுக்குக் கொடுப்பதில் தடையில்லை’ என்று 2017 பிப்ரவரியில் தீர்ப்பு வந்தது. இதைத் தொடர்ந்து ஊர்க் கூட்டம் போட்டு வீட்டுமனைப் பட்டா வாங்காதவர்களின் பெயர்ப் பட்டியலை தனித் தாசில்தார் தேன்மொழியிடம் கொடுத்தோம். அவர் மீண்டும் கள ஆய்வு செய்து 121 குடும்பத்தினரின் பெயர்ப் பட்டியலை அறிவித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த நிலையில், 27.5.2017 அன்று ஏற்காடு கோடை விழாவில், முதல்வரின் கையால் 56 பேருக்குப் பட்டா வழங்கப்பட்டது. அவர்களில் பெரும்பாலானவர்கள், ஒன்றரை லட்ச ரூபாய் முதல் மூன்று லட்ச ரூபாய் வரை அ.தி.மு.க ஊராட்சி செயலாளர் குணசீலனிடம் பணம் கொடுத்த வசதிபடைத்தவர்கள். உதாரணத்துக்கு, குணசீலனின் சொந்த அண்ணன் கண்ணனுக்கே இலவச மனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது. இவர், தோட்டம் மற்றும் பண்ணை வீடு என வசதிவாய்ப்புடன் இருப்பவர்” என்றார் அன்பழகன் வேதனையுடன்.

“எம்.எல்.ஏ-வா... ரியல் எஸ்டேட் புரோக்கரா?”

அ.தி.மு.க-வைச் சேர்ந்த தாமரைக்கண்ணன் என்பவர், “குணசீலன் என்னை அவரது வீட்டுக்கு வரச் சொல்லி, ‘யார் ஒரு லட்சம் கொடுக்கிறார்களோ அவர்களுக்குத்தான் பட்டா கொடுக்க வேண்டுமென நம் எம்.எல்.ஏ சொல்லியிருக்கிறார். நீ, அந்த மக்களிடம் இதைச் சொல்லி பணம் வாங்கிட்டு வா’ என்றார். இது தவறு என்று எனக்குத் தோன்றினாலும், கட்சி நிர்வாகியின் பேச்சை மீற முடியவில்லை. முதல் தவணையாக, 12 லட்சம் ரூபாயை நானும் குணசீலனும் எம்.எல்.ஏ-விடம் கொடுத்தோம். பிறகு, குணசீலன் மட்டும் சென்று 18 லட்சம் ரூபாயை எம்.எல்.ஏ-விடம் கொடுத்தார்” என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் மோகன், “நீதிமன்ற உத்தரவை மனோன்மணி எம்.எல்.ஏ மீறியுள்ளார். ‘அந்த இடம் ஒரு சதுர அடி 1,000 ரூபாய்க்குப் போகிறது. 800 சதுர அடி என்றால், எட்டு லட்சம் ரூபாய். வெளியே நிலம் வாங்கினால் கிரயம், புரோக்கர் கமிஷன் என ஒரு லட்சத்துக்கு மேல் செலவாகும். அந்தப் பணத்தைக் கொடுத்துவிட்டுப் பட்டா வாங்கிக்கொள்ளுங்கள்’ என்று ஏழை மக்களிடம் கூறியிருக்கிறார். இவர் எம்.எல்.ஏ-வா, இல்லை ரியல் எஸ்டேட் புரோக்கரா?” என்று கொந்தளித்தார்.

தனித் தாசில்தார் தேன்மொழியிடம் கேட்டபோது, “வி.ஏ.ஓ மற்றும் ஆர்.ஐ கொடுத்த பட்டியலின்படிதான், இலவச மனை கொடுத்துள்ளோம். அதில் முறைகேடு இருந்தால், புதிய பெயர் பட்டியல் தயாரித்துக் கொடுக்கலாம்” என்றார்.

குணசீலனிடம் பேசினோம். “50 மனைகள் வேண்டுமென்று கம்யூனிஸ்ட் கட்சியினர் கேட்டனர். அவர்களுக்கு 20 கொடுத்தோம். அதனால் சிலரைத்  தூண்டிவிடுகிறார்கள். அன்பழகனின் அம்மா, அக்கா, மனைவி என மூன்று பேருக்கு மனை கொடுத்துள்ளோம். மக்களிடம் நான் பணம் வசூலிக்கவில்லை” என்றவரிடம், “உங்க அண்ணன் பெயரிலும் பட்டா வழங்கப்பட்டுள்ளதே?” என்று கேட்டோம். “ஆமாம். அதையெல்லாம் எழுதாதீங்க” என்றார். மீண்டும் அன்பழகனிடம் பேசியபோது, ‘‘என் அப்பாவுக்கு மனை கொடுத்தார்கள். மற்றவர்கள் என் ரத்த உறவுகள் அல்ல’’ என்றார்.

“எம்.எல்.ஏ-வா... ரியல் எஸ்டேட் புரோக்கரா?”

எம்.எல்.ஏ மனோன்மணியிடம் பேசினோம். “நான் பணம் வாங்கியதாகச் சொல்வது தவறான தகவல். வீடற்ற ஏழைகளுக்குத்தான் இலவசப் பட்டா கொடுக்கப் பட்டுள்ளது. தேவையில்லாமல் கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் பிரச்னையைக் கிளப்புகிறார்கள். மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் கொடுக்குமாறுதான்  உயர் நீதிமன்றம் சொல்லியிருக்கிறதே தவிர, அந்த ஊர்க்காரர்களுக்கு மட்டும் கொடுக்குமாறு சொல்லவில்லை” என்றார்.

இந்த லாஜிக் புதுசா இருக்கே?!

- வீ.கே.ரமேஷ்
படங்கள்: க.தனசேகரன்