Published:Updated:

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 10

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 10
பிரீமியம் ஸ்டோரி
கிறுக்கு ராஜாக்களின் கதை! - 10

முகில்

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 10

முகில்

Published:Updated:
கிறுக்கு ராஜாக்களின் கதை! - 10
பிரீமியம் ஸ்டோரி
கிறுக்கு ராஜாக்களின் கதை! - 10

நாலடி மரணப்பெட்டி!

தாவோயிசம். சீனாவின் சமய தத்துவக் கோட்பாடுகளில் ஒன்று. ‘மாற்றம் என்பது தானாக நிகழும்’ என்பது தாவோயிசத் தத்துவம். அதை கொரிய இளவரசரான யி ஸன் மனப்பூர்வமாக நம்பினார். ‘ஆம், என்றைக்காவது ஒருநாள் என் தந்தையிடமும் மாற்றம் என்பது தானாக நிகழும். அவர் என்னிடம் பாசம் காட்டுவார்!’

மன்னர் இயோங்ஜோவுக்கு தாவோயிசம் பிடிக்காது. தன் எதிர்பார்ப்புகளுக்கு எதிராக நடக்கும் மகனையும் சுத்தமாகப் பிடிக்காது. அவருக்குள் மாற்றம் நிகழவில்லை. பதிலாக, தான் வெறுக்கும் மகனது பெயரை மாற்றினார். ‘‘இனி அவன் பெயர் யி ஸன் அல்ல. சடோ! அப்படித்தான் அவனை அழைக்கவேண்டும்.’’ அந்தப் பெயருக்கான பொருள், ‘மிகுந்த வருத்தத்துக்குரியவன்!’ மன்னரின் கட்டளை என்பதால், இனி ‘சடோ’ என்றே நாமும் குறிப்பிடுவோம்.

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 10

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தன் மூத்த சகோதரி Hwahyop மீது சடோவுக்கு அளவற்ற பாசம் உண்டு. பேரழகி அவள். திருமணமான அவளுக்கு ஆண் பிள்ளை பிறக்கவில்லை என்ற காரணத்தினால் மன்னர் அவளை வெறுத்தார். ஆகவே, அவளை சடோவுக்கு அதிகம் பிடித்தது. தாயிடம் கிடைக்காத அன்பு, அவளிடம் கிடைத்தது. கி.பி 1752-ல் அந்தச் சகோதரி அம்மை நோயில் இறந்தபோது அம்மாவையே இழந்ததுபோல அழுது தீர்த்தார் சடோ.

அவரது மன அழுத்தம் தீவிரமானது. தாவோயிச மந்திர வித்தைகளைக் கற்றுக்கொள்வதில் சடோவின் கவனம் திரும்பியது. ‘Okchugyeong’ என்ற தாவோயிச நூலை ஆழ்ந்து வாசித்தார். அதில் இடிகளின் கடவுளான லெய்காங் தோன்றி மிரட்டினார்... சடோவின் கனவுகளிலும். சடார் சடாரென தூக்கத்திலிருந்து எழுந்து அலறுவார். இடிச்சத்தம் கேட்டாலே பதறுவார். ‘‘என்னை இடிகளின் கடவுள் தாக்க வருகிறார்’’ என்று தன்னிலை இழப்பார்.

‘இடி’, ‘இறப்பு’ போன்ற அமங்கல வார்த்தைகளைக் கேட்டாலே காதுகளைக் கழுவும் பழக்கம் மன்னருக்கு இருந்தது. பிறகு சடோ வந்து பேசிச் சென்றாலே மன்னர் காதுகளைக் கழுவ ஆரம்பித்தார். அவனோடு பேசியதற்காக வாய் கொப்பளித்தார்; உடையை மாற்றினார். அதீத வெறுப்புடன் சடோவுக்குப் புதிய பொறுப்பினைக் கொடுத்தார். குற்றவாளிகளைச் சித்ரவதை செய்யும் சிறையின் மேற்பார்வையாளர் பணி. அந்தக் காட்சிகள் சடோவின் மனநலத்தை மேலும் குரூரமாக்கின. கி.பி 1755. ராணி (மன்னரின் முதல் மனைவி, சடோவின் அதிகாரபூர்வ தாய்) மரணப் படுக்கையில் கிடந்தாள். மன்னரின் கட்டளைப்படி ராணியைப் பார்க்க வந்தார் சடோ. என்னவோ, மகனைக் கண்டதுமே மன்னரின் தொங்கு தாடி கோபத்தில் துடித்தது. ‘‘எங்க வந்த? ஓடிப்போயிரு!’’ பதறிய சடோ, அரண்மனை ஜன்னல் வழியே வெளியே எகிறிக் குதித்து ஓடினார். சில நாள்களில் ராணி இறந்துபோனாள். நிலை தடுமாறிய சடோ, தன் பணியாளர்களாக இருந்த திருநங்கைகளைக் கண் மூடித்தனமாக அடித்துத் துன்புறுத்தினார்.

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 10

இப்படி இருவேறு துருவங்களாகத் திரிந்த தந்தையும் மகனும் ஒரு ‘மேட்டரில்’ மட்டும் ஒரேபோலத் திகழ்ந்தார்கள். கட்டில்களில் கடமையாற்றி தொட்டில்களைப் பெருக்குவது. முதல் ராணி போய்ச் சேர்ந்த பின் இன்னொருத்தியைத் திருமணம் செய்து, அவளுக்கு அதிகாரபூர்வ ராணி அந்தஸ்து வழங்கினார் இயோங்ஜோ. அந்த இரண்டாவது ராணிக்கு சடோவைவிட பத்து வயது குறைவு.

இன்னொருபுறம் சடோவும், இளவரசி தவிர வேறு வேறு துணைவிகளுடன் இன்பத்துப் பால் காய்ச்சினார். சடோவின் ஒரு துணைவியான யோங்பின் என்ற பெண் கி.பி 1754-ல் கர்ப்பமுற்றாள். ‘இவன் கெட்ட கேட்டுக்கு இதெல்லாம் தேவையா?’ மன்னர் சீறினார். பீதியான சடோ அந்தப் பெண்ணின் கருவைக் கலைக்க முயன்றார். கலையவில்லை. அவளையே கொல்ல முயன்றார். இளவரசி ஹையெஜியோங் அவளைக் காப்பாற்றி, மறைத்து வைத்து, பிரசவம் பார்த்தாள். ஆண் குழந்தை. அடுத்த வருடமும் சடோ அதே துணைவியுடன் ஓர் ஆண் குழந்தை பெற்றுக்கொண்டார். அதே சமயத்தில் மன்னருக்கும் அவருடைய வேறு துணைவிகளுக்கும் தொடர்ச்சியாக இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன. ‘அவனுக்கு மட்டும் ஆண் குழந்தையா?’ பொறாமையில் பொசுங்கினார் மன்னர்.

சடோவின் லீலைகள் எல்லை மீறின. புதிதாக பிங்கே என்ற துணைவியுடன் கலந்தார். அவள் ஜோஸியான் பரம்பரையைச் சேர்ந்தவள். ஒருவிதத்தில் சடோவின் சகோதரி முறை. உண்மை தெரிந்த மன்னர் கொதித்தெழுந்தார். பயம் தலைக்கேற ஓடிப்போய் கிணற்றில் குதித்தார் சடோ. அது பனிக்காலம் என்பதால் கிணறு உறைந்து கிடைத்தது. சடோ சாகவில்லை. பிறகு பிங்கேவையும் கொல்ல முயன்றார். வழக்கம்போல இளவரசிதான் காப்பாற்றினாள். கி.பி 1761-ல் பித்தமும் ரத்தவெறியும் தலைக்கேறிய ஒரு பொழுதில் பிங்கேவை அடித்தே கொன்றார் சடோ.

தினமும் தன் மாளிகையில் நள்ளிரவு விருந்துகளில் கூத்தடித்த சடோவை, ஒருநாள் மன்னர் நேரடியாகவே தேடி வந்து பரேடு விட்டார். அவர் போன பிறகு, சடோவின் கிறுக்குத்தனங்கள் அரங்கேறின. தன் வேலையாள்களைக் கொலைவெறியுடன் துரத்தினார். தீப்பந்தங்களை அவர்கள் மீது எறிந்தார். மாளிகை தீப்பற்றியது. அப்போது இளவரசி ஹையெஜியோங் நிறைமாத கர்ப்பிணி. பதறி எழுந்து தன் மகன் ஜியோன்ஜோவைத் தூக்கிக் கொண்டு நெருப்பிலிருந்து எப்படியோ தப்பித்தாள்.

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 10

சடோவுக்கு வழக்கமாக உடையணிந்துவிடும் வேலையாள், ஒருநாள் கவனம் தடுமாற சடோ மூர்க்கமானார். வேலையாளைக் கொன்றார். அதுமுதல் சடோவை நெருங்குவது என்றாலே வேலையாள்கள் கிலியானார்கள்; பலியும் ஆனார்கள். ஒருநாள் சடோ, தன் ஆடைகளில் துர்சக்தி புகுந்துவிட்டது எனக்  கதறி, பல ஆடைகளைக் குவித்துப் போட்டுக் கொளுத்தினார். சில சமயங்களில் பிறந்த கோலத்தில் திரிந்தார்.

ஒருமுறை தன்னைச் சந்திக்க சடோ வந்தபோது இளவரசி ஹையெஜியோங் அலறினாள். அவர் கையில் ஒரு கோல். அதில் அறுக்கப்பட்ட ஒரு திருநங்கையின் தலை சொருகப்பட்டிருந்தது. அந்தப்புரப் பெண்கள்மீது சடோ முரட்டுத் தனமாகப் பாய்வதும், இணங்க மறுப்பவர்கள் உயிர் மாய்வதும் தொடர்ந்தன. சடோவின் வேலையாள்கள், வைத்தியர், அந்தப்புரப் பெண்கள், அரசு அலுவலர்கள் என்று தினமும் ஓரிரு பிணங்கள் மாளிகையை விட்டு வெளியே எடுத்துச் செல்லப்பட்டன. ‘‘அதென்னவோ தெரியல... ரத்தம் பார்த்து உயிரைக் கொன்னாதான் என் மனசு அமைதியாகுது’’ என்று மனச்சலனமற்ற ஒரு பொழுதில் இளவரசியிடம் வாக்குமூலம் தந்தார் சடோ. பின்பு ஒரு நாளில் சதுரங்கப் பலகையால் இளவரசியையே கடுமையாகத் தாக்கினார். அவள் காயங்களோடு உயிர் தப்பினாள்.

இறந்து போன சடோவின் சகோதரி Hwahyop-ன் கணவனுக்கும் சடோவுக்கும் ஒரு பிரச்னை. ஒரு கட்டத்தில் சடோ, அரண்மனை வளாகத்திலேயே கொலைவெறியுடன் தன் மச்சானைத் துரத்தினார். மச்சான் பதுங்கித் தப்பிக்க, மன்னரின் மாளிகை வளாகத்தில் சடோ வெறியுடன் திரிந்தார். செய்தி திரிக்கப்பட்டது. ‘இளவரசர், மன்னரையே கொல்வதற்கு முயற்சி செய்கிறார்.’ இயோங்ஜோவுக்கு அழுத்தம் அதிகமானது. ‘‘இந்தப் பிரச்னையைத் தீர்க்கலேன்னா, உம்ம பதவிக்கே ஆபத்து!’ நோரோன்கள் மன்னரை எச்சரிக்கைகளால் பிதுக்கினார்கள். சடோ, தன் இளைய சகோதரி ஒருத்தியிடமும் அத்துமீற, அவளும் மன்னரிடம் கதறினாள். சடோவின் தாயாரும் தன் கணவரிடம் கண்ணீர் சிந்தினாள். ‘‘நம்ம பேரன் ஜியோன்ஜோவைக் காப்பாத்தணும்னா வேற வழியே இல்லை. நீங்க சடோவை...’’ - நெஞ்சில் அடித்து அழுதாள்.

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 10

கி.பி 1762. ஜூலை 4. மன்னர் முன் சடோ குற்றவாளியாக நிறுத்தப்பட்டார். ‘‘இனி இவன் ராஜ வாரிசு இல்லை’’ என அறிவித்தார் இயோங்ஜோ. ‘‘ஏன் இப்படிக் குற்றங்கள் செய்தாய்?’’ என மன்னர் கேட்க, கண்ணீருடன் சடோ சொன்ன பதில், ‘‘நீங்கள் என் தந்தை. நான் உங்களிடம் எதிர்பார்த்தது ஒரு துளி அன்பை மட்டுமே. அது எப்போதுமே கிடைக்கவில்லை. இப்போதாவது...’’

மரண தண்டனையை நிறைவேற்றச் சொல்லி அந்தத் தகப்பன் கட்டளை இடவில்லை. காரணம், அவர்களது மரபுப்படி குற்றவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டால், அவனது மனைவியும் குழந்தைகளும் கொல்லப்பட வேண்டும். ஆகவே சடோவுக்கு வேறொரு முறையில் சாகும் வாய்ப்பளித்தார். மரத்தாலான ஒரு அரிசிப் பெட்டியை அங்கே கொண்டு வந்து வைத்தார்கள். நான்கடி நீளம், நான்கடி அகலம், நான்கடி உயரமுள்ள அந்த அரிசிப்பெட்டி, சடோவுக்கான வாய்க்கரிசிப் பெட்டியாக முடிவு செய்யப்பட்டது.

இளவரசி ஹையெஜியோங் கண்ணீர் மல்க நின்றாள். பேரன், மன்னர் முன் விழுந்து கெஞ்சினான். ‘‘என் அப்பாவை விட்டுவிடுங்கள்!’’ இருவரும் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டனர்.

சடோ, தன் தந்தையைக் கடைசியாகக் கண்ணீர் மல்கப் பார்த்தார். இனியும் பேசுவதற்கு ஏதுமில்லை. அந்தப் பெட்டிக்குள் இறங்கினார். இறுதியாக ஒருமுறை சடோவின் கண்கள் வெளி உலகத்தை, ஆகாயத்தைப் பார்த்தன. பெட்டி மூடப்பட்டது. அதன் மேல் ஆணிகள் இறங்கின.

சடோவின் கதறல் சத்தம் அன்று முழுக்கக் கேட்டுக்கொண்டே இருந்தது. ஏழாவது நாள் இறுதியாக ஒருமுறை கேட்டது. எட்டாவது நாள் 27 வயது சடோவின் பிணம் பெட்டியிலிருந்து வெளியே எடுக்கப்பட்டது. சகல மரியாதையுடனும் சடோவின் அடக்கம் நடந்தது. கூடவே அவருடைய வேலையாள்கள், அலுவலர்கள், வீரர்கள், ஆசைநாயகிகள் சிலரும் மன்னரின் கட்டளைப்படி கொல்லப்பட்டனர்.

தாய் நாய் ஒன்றை, குட்டிகள் பாசத்துடன் தேடி ஓடி வருவது போல சடோ வரைந்த ஓவியம் பிரபலமானது. அதுதான் அவர் தன் வாழ்வில் எதிர்பார்த்துக் கிடைக்காத விஷயமும்கூட. பெற்றோரின் வாஞ்சையான அரவணைப்போடு இளவரசர் வளர்க்கப்பட்டிருந்தால், அவர் விதி வேறு மாதிரியும் இருந்திருக்கலாம்.

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 10

மன்னர் இயோங்ஜோ கி.பி 1776-ல் இறந்துபோனார். அவருக்குப் பிறகு சடோவின் மகன் ஜியோன்ஜோ மன்னர் ஆனார். தன் தந்தை சடோவுக்கு ‘இளவரசர்’ என்ற பட்டத்தை மீண்டும் வழங்கி, பிரமாண்ட கோட்டையொன்றில் நினைவிடம் அமைத்து மரியாதை செய்தார். (‘Hwaseong’ என்ற அந்தக் கோட்டை, யுனெஸ்கோவால் பாரம்பர்ய சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.)

இளவரசி ஹையெஜியோங், தன் கணவனின் நினைவுகளைப் புத்தகமாக எழுதி வைத்தாள். அந்தப் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு, சடோவின் கதை பலமுறை படமாக்கப்பட்டிருக்கிறது. 2015-ல் வெளியான ‘The Throne’ என்ற கொரிய படம் கூட பிளாக் பஸ்டர் ஹிட். சடோ, வாழ்க்கையில் தோற்றவர். அந்தத் தோல்வியாளரின் கதை சினிமாவாக என்றைக்குமே தோற்றதில்லை.

(வருவார்கள்...)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism