Published:Updated:

“கழுத்தை அறுத்துக்கொண்டு சாக அனுமதி கொடுங்கள்!”

“கழுத்தை அறுத்துக்கொண்டு சாக அனுமதி கொடுங்கள்!”
பிரீமியம் ஸ்டோரி
“கழுத்தை அறுத்துக்கொண்டு சாக அனுமதி கொடுங்கள்!”

டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகள்

“கழுத்தை அறுத்துக்கொண்டு சாக அனுமதி கொடுங்கள்!”

டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகள்

Published:Updated:
“கழுத்தை அறுத்துக்கொண்டு சாக அனுமதி கொடுங்கள்!”
பிரீமியம் ஸ்டோரி
“கழுத்தை அறுத்துக்கொண்டு சாக அனுமதி கொடுங்கள்!”

நீட் எதிர்ப்புப் போராட்டம், அ.தி.மு.க-வின் அதிகாரப் போட்டி, ‘ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸைக் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்’ என்ற உத்தரவு தொடர்பான சர்ச்சை, கவுரி லங்கேஷ் படுகொலை... இப்படிப் பல விஷயங்களுக்கு நடுவில் நாம் மறந்துபோனது தமிழக விவசாயிகளின் போராட்டத்தை! டெல்லியில் நாடாளுமன்றம் அருகேயுள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெறும் தமிழக விவசாயிகளின் போராட்டம் 100 நாள்களைத் தொட்டிருக்கிறது. அரசின் கவனத்தை ஈர்க்க இவர்கள் நடத்தும் விதவிதமான போராட்டங்கள், இதயமுள்ளவர்களுக்கு நிச்சயம் வலி ஏற்படுத்தும்.

“கழுத்தை அறுத்துக்கொண்டு சாக அனுமதி கொடுங்கள்!”

விவசாயக் கடன்களை ரத்து செய்யக்கோரியும், பொய்த்த பயிர்களுக்கு நிவாரணம் கேட்டும் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து இவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பட்டினிப் போராட்டம், எலிக்கறி உண்ணும் போராட்டம், வறட்சியால் இறந்த விவசாயிகளின் மண்டை ஓடுகளுடன் போராட்டம், அரை நிர்வாணப் போராட்டம், சிறுநீர் குடிக்கும் போராட்டம் என நடத்திப் பார்த்தும் அரசின் பார்வை தங்கள் பக்கம் திரும்பாததால், 97-ம் நாளன்று, தங்களது கழிவுகளைத் தாங்களே உண்ணும் கொடுமையான போராட்டத்தை நிகழ்த்தியுள்ளனர். ‘‘எங்களை வேற என்ன செய்யச் சொல்றீங்க?’’ என்று கதறலாய் ஒலிக்கின்றது விவசாயிகளின் குரல்.

உணர்ச்சியைத் தூண்டும் உச்சபட்ச போராட்டத்தை நடத்தியிருக்கிறார்கள் தமிழக விவசாயிகள். ‘மனிதக் கழிவுகளை மனிதர்கள் அள்ளக்கூடாது’ என்று சட்டம் இருக்கும் தேசத்தில்தான், விவசாயம் பொய்த்து அதே மனிதக்கழிவுகளை விவசாயிகள் உண்டு போராட்டம் நடத்தியுள்ளனர். அடுத்ததாக கோமணத்தை உடலின் முன்பக்கம் மட்டும் கட்டிக்கொண்டு போராட்டம் நடத்திய இவர்களை, பொது இடத்தில் அசிங்கமான செயலில் ஈடுபட்டதாகக் கூறி கைது செய்தது டெல்லி போலீஸ்.  

பின்னர் விடுவிக்கப்பட்ட அய்யாக்கண்ணுவிடம் பேசினோம். ‘‘வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு கொடுக்க மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிய 21,708 கோடி ரூபாயில் ஒரு ரூபாய்கூட எங்களுக்கு வந்து சேரவில்லை. தமிழகத்தில் வறட்சி என்று அறிவித்தபிறகு, தேசியப் பேரிடர் மேலாண்மை நிதியத்திடமிருந்து நிவாரணத் தொகை கோரியிருந்தோம். அதற்கும் எந்தப் பதிலும் இல்லை.

ஒரு பக்கம் விவசாயிகளுக்காக அமைக்கப்பட்ட எம்.எஸ்.சுவாமிநாதன் ஒரு நபர் கமிட்டியால் பரிந்துரைக்கப்பட்ட திட்டங்கள் இன்னும் நிறைவேற்றப்படாமலேயே இருக்கின்றன. ‘நான் ஆட்சிக்கு வந்தால் விவசாய விளைபொருள்களுக்கு இரண்டு மடங்கு லாபம் அதிகரிக்கச் செய்வேன்’ என்றார் மோடி. ‘நதிநீர் இணைப்புக்கான நடவடிக்கைகளை எடுப்பேன்’ என்றார். இதில் எதையுமே அவர் செய்யவில்லை. பயிர்க் காப்பீடு செய்தாலும் முறையாக இன்ஷுரன்ஸ் கிடைக்கப் பெறுவதில்லை என்பதால், தனி நபர் இன்ஷுரன்ஸ் கோரிக்கையை முன்வைத்தோம். அதற்கும் அரசு செவி சாய்க்கவில்லை. 60 வயது தாண்டிய விவசாயிகள் அனைவருக்குமே பென்ஷன் தரும்படி கோரிக்கை வைத்தோம். இந்த 100 நாள் போராட்டத்தில் இத்தனைக் கோரிக்கைகளில் ஒன்றுக்குக்கூட பதில் கிடைக்கவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“கழுத்தை அறுத்துக்கொண்டு சாக அனுமதி கொடுங்கள்!”

எங்கள் குடும்பங்களை விட்டுவிட்டு டெல்லி வந்து இங்கே தெருவில்தான் தூங்குகிறோம்... அதே தெருவில்தான் போராடுகிறோம். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மற்ற கட்சிகளின் தலைவர்கள் என்று பலரும் வந்து எங்களைச் சந்தித்துவிட்டுச் சென்றனர். ஆனால், விவசாயிகளின் கோரிக் கையை ஏற்று அவர்களைச் சந்திக்க வேண்டியது ஜனநாயக நாட்டில்  ஒரு பிரதமருடைய கடமை. அவர் அதைச் செய்யவே இல்லை.

பிரதமருக்கு எங்கள் குரல் கேட்கும் என்று கொசுக்கடியோடு இந்த வெட்டவெளியில் அமர்ந்து போராடுகிறோம். டெங்கு ஜுரம் வந்து சிலர் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டிருக்கிறார்கள். டெல்லியில் எங்களுக்குச் சாப்பாடு கிடைக்க வழியில்லை. இங்கிருக்கும் குருத்வாராக்களில் சீக்கியர்கள் தரும் உணவுதான் எங்கள் பசியைப் போக்குகிறது. உடல்நிலை சரியில்லை என்று எய்ம்ஸ் மருத்துவமனைக்குப் போனால், ‘தமிழ்நாட்டு விவசாயியா... உனக்கு மருத்துவம் பார்க்க மாட்டோம்’ என்று திருப்பி அனுப்புகிறார்கள். இத்தனை கொடுமைகளுக்கு நடுவில்தான் எங்கள் கோரிக்கையை வைக்கிறோம். தங்கள் தேசத்து விவசாயியை அவனுடைய கழிவையே சாப்பிடும் நிலைக்குத் தள்ளியதுகூட அவர்களுக்குக் கேவலமாகத் தெரியவில்லை. இனியும் தகுந்த பதில் கிடைக்கவில்லை என்றால், ஜனாதிபதி மாளிகைக்குச் செல்கிறோம். ‘எங்களுக்குச் சாக அனுமதி தாருங்கள்’ என்று அவரிடம் மனு அளித்துவிட்டு, கழுத்தை அறுத்துக்கொள்ளும் போராட்டத்தை நடத்த இருக்கிறோம். இது மிரட்டலாகத் தெரியலாம். ஆனால், வாழ வழியில்லாத நாட்டில் விவசாயிகளுக்குச் சாவு ஒன்றுதான் வழி” என்று கலக்கத்துடன் முடித்தார்.

நம் வயிற்றுக்குச் சோறு இடுபவர்கள் தங்கள் வயிற்றை மனிதக்கழிவுகளால் நிரப்பிக் கொள்கிறார்கள். இன்னும் என்னென்ன இழிவுகளைக் காணப்போகிறதோ இந்தத் தேசம்!

- ஐஷ்வர்யா