Published:Updated:

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 11

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 11
பிரீமியம் ஸ்டோரி
கிறுக்கு ராஜாக்களின் கதை! - 11

முகில்

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 11

முகில்

Published:Updated:
கிறுக்கு ராஜாக்களின் கதை! - 11
பிரீமியம் ஸ்டோரி
கிறுக்கு ராஜாக்களின் கதை! - 11
கிறுக்கு ராஜாக்களின் கதை! - 11

மண்ணில் வாழ்ந்த எமன்!

ஹூனர்கள்... மத்திய ஆசியப் பகுதிகளில் வாழ்ந்த நாடோடி இனத்தவர்கள். மேய்ச்சல்தான் பிரதானத் தொழில். ஆனால், கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் அசுரப் பாய்ச்சலில் தங்கள் எல்லைகளை விரிவுபடுத்தி, புதிய ராஜ்ஜியங்களை அமைத்த அதிரடி வீர வரலாறு இவர்களுக்கு உண்டு. இவர்களில் ஒரு பிரிவினர், மேற்கே ரோம் சாம்ராஜ்ஜியத்தை நோக்கிப் படையெடுத்தனர். இன்னொரு பிரிவினர், கைபர் கணவாய் வழியே இந்தியாவை நோக்கிப் படையெடுத்தனர். இங்கே வந்தவர்கள், வெள்ளை ஹூனர்கள் (அல்லது ஹெப்தலைட்ஸ்) என்றழைக்கப்படுகிறார்கள்.  

அப்போது இந்தியாவின் பெரும்பகுதி குப்தப் பேரரசாக விளங்கியது. பேரரசர் ஸ்கந்த குப்தரின் மறைவுக்குப் பிறகு குப்தப் பேரரசு தள்ளாடிக் கொண்டிருந்த நிலையில், ஹூனர்களின் மன்னர் தோரமணன் இந்தியா மீது படையெடுத்தார். இங்கே பல ராஜ்ஜியங்களை வாரிச் சுருட்டி கக்கத்தில் வைத்துக்கொண்டார். சஞ்செலி கல்வெட்டுக் குறிப்புகளின்படி, கி.பி 493 முதல் கி.பி 515 வரை ஆட்சி செய்த மாமன்னர் தோரமணனின் ராஜ்ஜியம், ஈரானியர்களின் பழம்பெரும் நகரமான பாக்திரியாவிலிருந்து, இந்தியத் துணைக்கண்டத்தின் குஜராத், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், காஷ்மீரின் சில பகுதிகள் வரை பரவியிருந்தது.

கி.பி 510-ல் நடந்த ஒரு போரில் குப்த மன்னர் பானு குப்தரிடம் தோரமணன் தோற்றுப்போனார். கி.பி 515-ல் எமனிடம் தோற்றுப்போனார். அவருக்குப் பின் அவரின் மகனான இரண்டாம் தோரமணன்தான் அரியணைக்கு வந்திருக்க வேண்டும். ஆனால், தோரமணனின் இன்னொரு மனைவியின் மகனான மிகிரகுலன் முரட்டு பலத்துடன் அரியணையைக் கைப்பற்றினார். இரண்டாம் தோரமணன் தலைமறைவாக வாழ ஆரம்பித்தார்.

கி.பி 515 தொடங்கி 540 வரை ஆட்சி செய்தார் மிகிரகுலன். (சிலர் 530 வரை என்கிறார்கள்... காலத்தில் குழப்பம் உண்டு!) அவர் பற்றி கல்வெட்டுகள் வழியாகவும், ஓரிரு நூல்கள் வழியாகவும் நமக்குக் கிடைத்திருப்பவை சொற்ப செய்திகளே. ஆனால், அவையே குலைநடுங்கச் செய்பவை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 11

மிகிரகுலன் என்ற பெயருக்கான பொருள், ‘சூரியனை வணங்குபவர்’. ஹூனர்கள், காந்தார தேசத்தில் கால் வைத்தபோது சிவ வழிபாட்டையும் ஏற்றுக்கொண்டார்கள். தோரமணனும் மிகிரகுலனும் சிவ பக்தர்களே. தோரமணனுக்குச் சில பெருமைகள் உண்டு. ஹூனர்களின் படை பலத்தைப் பெருக்கியவர். ஆகச்சிறந்த நிர்வாகி. மக்கள் மீது அக்கறை கொண்டவர். மக்கள் விரும்பிய ஹூன மாமன்னர்.

ஆனால், மிகிரகுலனின் ஆட்சியில் எல்லாம் தலைகீழ். ஹூனர்களே அவரைக் கண்டு நடுங்கும்படியான குணச்சித்திரம் கொண்டிருந்தார் அவர். ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்கப் பயணியான காஸ்மாஸ் இண்டிமோபிளெஸ்டெஸ் என்பவர், மிகிரகுலன் படையை நேரே கண்டு வாய் பிளந்து குறிப்பெழுதியிருக்கிறார். ‘யானைகள் 2,000 இருக்கும். குதிரைப்படை எண்ணிக்கையில் அடங்காது.’ இப்பேர்ப்பட்ட படை கொண்ட மிகிரகுலனின் காட்டுத்தனமான தாக்குதலில் பல ராஜ்ஜியங்கள் வீழ்ந்தன. ஆப்கானிஸ்தான் முதல் மத்தியப்பிரதேசத்தின் குவாலியர் வரை ராஜ்ஜியத்தின் எல்லை பரவிக் கிடந்தது. சகாலாவைத் (பாகிஸ்தானிலுள்ள இன்றைய சியால்கோட்) தலைநகரமாகக் கொண்டு கொடுங்கோல் ஆட்சி புரிந்தார் மிகிரகுலன். பிணந்தின்னிக் கழுகுகளும் வல்லூறுகளும் காகங்களும் மிகிரகுலன் செல்லுமிடங்களிலெல்லாம் சுற்றிச் சுற்றி வந்தன. பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள், பிராமணர்கள், நோயாளிகள் எல்லோரும் சமமே. ஆம், கொல்லப்பட வேண்டிய எதிரிகளே. பிணங்களுக்கும் மரண ஓலங்களுக்கும் மத்தியில் அமர்ந்து ஓய்வெடுப்பதே மிகிரகுலனுக்கு ஆகச்சிறந்த இளைப்பாறலைத் தந்தது.

‘வியக்கத்தக்க வீரன். இயற்கையிலேயே திறமையானவன்’ என்று மிகிரகுலனுக்கு நற்சான்றிதழ் கொடுத்திருப்பவர், ஏழாம் நூற்றாண்டு சீனப் பயணியான யுவான் சுவாங். ஆனால், புத்த மத நூல்கள் பலவும் வெறுப்பு பொங்கச் சொல்லும் செய்தி, ‘இவன் பௌத்தத்தின் பகைவன்!’

ஆம், மிகிரகுலனுக்குப் பௌத்தம் ஆகாது. ஆகவே, பௌத்தத் துறவிகளைக் கொல்வதும், அம்மதத்தைப் பின்பற்றுவர்களைக் கழுத்தறுப்பதும், புத்த மடாலயங்களைத் துவம்சம் செய்வதும் ஹூனர்களுக்கு ‘எக்ஸ்ட்ரா கரிகுலர்’ ஆக்டிவிட்டீஸாக இருந்தன. ‘மிகிரகுலனின் ராஜ்ஜியத்துக்கு உள்பட்ட பகுதிகளிலிருந்த சுமார் 1,400 பௌத்த மடாலயங்கள் அழிக்கப்பட்டன’ என்கிறது ஒரு குறிப்பு.

மண்டோசோர் கல்வெட்டுச் செய்தியின்படி, மால்வாவின் மன்னர் யசோதர்மன், போரில் மிகிரகுலனைத் தோற்கடித்தார் (கி.பி.533). அதன்பிறகு இந்தியாவின் மேற்குப் பகுதியில் தன் பலத்தை நிரூபிக்க நினைத்த மிகிரகுலன், பாடலிபுத்திரத்திலிருந்த நரசிம்ம குப்த பலாதித்யருக்கு ஆணை ஒன்றை அனுப்பினார். ‘நீவிர், உம் ராஜ்ஜியத்தில் உள்ள பௌத்த மடாலயங்களை எல்லாம் அழிக்க வேண்டும். புத்தத் துறவிகளைக் கொல்ல வேண்டும். அங்கே புத்தரின் சுவடுகள் எதுவுமே இருக்கக்கூடாது.’

புத்த நேசரான குப்தர் அதை மதிக்கவில்லை. ஆகவே, மிகிரகுலன் ரத கஜ துரக பராதிகளுடன் வெறிகொண்டு கிளம்பினார். பாடலிபுத்திரத்தை அடைந்தபோதுதான் தெரிந்தது, நரசிம்ம குப்தர் தப்பித்துவிட்டார் என்று. துரத்தினார்... துரத்தினார்... வங்கக்கடல் எல்லை வரை துரத்தினார். ஆனால், குப்தர் சிக்கவில்லை. சிக்கிய புத்த பிட்சுகளெல்லாம் உயிர் தப்பவில்லை.

‘‘அருகில்தான் நாளந்தா பல்கலைக்கழகம். அங்கே செல்லலாமா?’’ என்றார் மிகிரகுலன். படிப்பதற்கு அல்ல, இடிப்பதற்கு. நாளந்தா பல்கலைக்கழகம் முதன்முதலில் தாக்கப்பட்டது மிகிரகுலனால்தான். அங்கே பல்வேறு பொக்கிஷங்களும் சிதைக்கப்பட்டன. பௌத்த துறவிகளும் மாணவர்களும் மரணத்தைத் தழுவினார்கள்.

பிற்பாடு அதே பௌத்த மதம்தான் மிகிரகுலனுக்கு உயிர்ப்பிச்சை போட்டது. நரசிம்ம குப்தர் திரும்பி வந்தார், பெரும் படைபலத்துடன். ஹூனர்களை ஓடவிட்டார். மிகிரகுலன் பிடிபட்டார். பல காலம் சிறைவாசம். ஆனால், கொல்லப்படவில்லை. உயிர்களிடத்தில் கருணை காட்டச் சொல்லியிருக்கிறாரல்லவா புத்தர். ஆகவே, ‘பிழைத்துப் போ’ என்று மிகிரகுலனை அனுப்பி வைத்தார். அவர் சிறைபட்டிருந்த காலத்தில் அவருடைய சகோதரர் இரண்டாம் தோரமணன், ஹூனர்களின் ஆட்சிக்கு உட்பட்ட சில பகுதிகளைத் தன் வசப்படுத்தியிருந்தார்.

மிகிரகுலன் எங்கே செல்வதென்று தெரியாமல் காஷ்மீருக்குச் சென்றார். அங்கே ஓர் அப்பாவி மன்னர், இந்தத் துஷ்டனைக் கண்டு தூர விலகாமல் இஷ்டப்பட்டு அடைக்கலம் கொடுத்தார். அவருக்குக் கஷ்டகாலம் ஆரம்பமானது. ஆரம்பத்தில் சமர்த்தாக இருந்த மிகிரகுலன், பின் அந்த மன்னனுக்கு எதிராகப் படை திரட்டினார். மன்னனைக் கொன்றார். தான் அரியணையில் அமர்ந்தார். மீண்டும் தனது படைபலத்தைப் பெருக்கிக் கொண்டு காந்தார தேசத்தின் மீது படையெடுத்தார். வென்றார். காந்தாரம் கந்தரகோலமானது. காந்தாரத்திலும் காஷ்மீரிலும் பௌத்த மடாலயங்கள் மண்ணோடு மண்ணாயின. கொல்லப்பட்ட பௌத்தர்கள் புத்தருக்குள் நித்திரை அடைந்தனர்.

காஷ்மீரை ஆண்ட மன்னர்களின் கதையைச் சொல்லும் வரலாற்று நூல், ‘ராஜ தரங்கிணி’. பன்னிரண்டாம் நூற்றாண்டில் காஷ்மீரில் வாழ்ந்த கல்ஹனா என்பவரால் எழுதப்பட்ட இந்நூலில், மிகிரகுலன் நிகழ்த்திய குரூரங்களை விவரிக்கும் பக்கங்களும் உண்டு.

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 11

ஒரு சமயம், தன் ராணி ஒருத்தியின் ரவிக்கையை உற்றுக் கவனித்தார் மிகிரகுலன். அதில் மார்புப் பகுதியில் தங்க ஜரிகையால் இரண்டு பாதங்கள் நெய்யப்பட்டிருந்தன. ‘என்ன அது’ என்று விசாரித்தார். ‘‘இது சிலோனில் இருந்து வந்த ரவிக்கை. இந்தப் பாதங்கள் சிலோன் அரசரின் பாதங்களைக் குறிப்பவை’’ என்றார் காரியதரிசி. கோபம் உச்சிக்கு ஏறியது. ‘‘என்னது, எனது ராணியின் ரவிக்கையில் எவனோ ஒருவனின் பாதங்களா? படைகள் கிளம்பட்டும்!’’

சிலோனுக்குப் படையெடுத்துச் சென்ற மிகிரகுலன், அங்கே சர்வ நாசம் விளைவித்தார். அதன் மன்னனைக் கொன்றார். தனக்குக் கட்டுப்பட்ட இன்னொரு பிரகஸ்பதியை அங்கே அரியணையில் அமர வைத்துவிட்டுக் கிளம்பினார். இங்கே தமிழகத்தில் பல்லவர்கள் ராஜ்ஜியத்திலும், சோழர்களின் ராஜ்ஜியத்திலும் மிகிரகுலனின் படைகள் நுழைந்து ஆட்டம் காட்டிவிட்டுச் சென்றதாகச் சொல்கிறது ராஜதரங்கிணி.

காஷ்மீருக்குத் திரும்பிக்கொண்டிருந்த மிகிரகுலனின் படைகள் ஒரு பள்ளத்தாக்குப் பகுதியில் பயணம் செய்தன. அப்போது யானை ஒன்று கால் இடறி, அலறலுடன் பள்ளத்தில் உருண்டு விழுந்து கதறி இறந்தது. அந்தக் கதறலும், வலியின் பிளிறலும், மிகிரகுலனின் காதுகளுக்கு மெல்லிசையாக ஒலித்தது.

‘‘அட, இந்த இசை இன்பமாக இருக்கிறதே. இன்னொரு யானையைத் தள்ளிவிடுங்கள்!’’

தள்ளினார்கள். அதே கதறல். ரசித்துச் சிரித்தார். ‘‘இன்னும் சில யானைகளைத் தள்ளுங்கள்.’’

அந்தப் பள்ளத்தாக்கெங்கும் யானைகளின் அவல ஒலி எதிரொலித்துக்கொண்டே இருந்தது. பேரானந்தத்தில் தன்னை மறந்து சிரித்தபடியே இருந்தார் மிகிரகுலன். அவர் தன் வாழ்வில் சிரித்தது அந்த ஒருமுறை மட்டும்தான். அதற்காகக் கொல்லப்பட்ட யானைகளின் எண்ணிக்கை நூறு இருக்கலாம்.

சந்த்ரகுல்யா ஆற்றை மடை மாற்றிவிடும் வேலைகளைச் செய்தார் மிகிரகுலன். அப்போது, பெரிய பாறை ஒன்று தடையாகக் குறுக்கே இருந்தது. அதை அசைக்க முடியவில்லை. தவம் செய்தார் மிகிரகுலன். தன்னிடம் கடவுள் வந்து, ‘பாறைக்குள் சக்திமிக்க யட்சன் ஒருவன் வசிக்கிறான். பத்தினி ஒருத்தியின் கைபட்டால் அவன் வழிவிடுவான். பாறை நகரும்’ என்று தெரிவித்ததாகச் சொன்னார். பல்வேறு உயர்குடி பெண்கள் வரவழைக்கப்பட்டனர். பாறையைத் தொட்டனர். நகரவில்லை. பின், ஒரு குயவனின் மனைவியான சந்த்ரவதி வந்து பாறையைத் தொட்டாள். நகர்ந்தது. வழி பிறந்தது. மிகிரகுலன் மீதமிருந்த பெண்களைப் பார்த்து கர்ஜித்தார். ‘‘இந்தப் பாவம் பிடித்தப் பெண்களையெல்லாம் கொல்லுங்கள். இவர்களின் குடும்பத்தினரையும் விட்டுவைக்காதீர்கள்.’’ சந்த்ரகுல்யா ஆறு, ரத்த ஆறாக மாறியது.

‘இத்தனைப் பாவங்கள் செய்துவிட்டோமே’ என்று பிராயச்சித்தமாக சில கோயில்களைக் கட்டினார் மிகிரகுலன். அதில் மிகிரேஸ்வரா என்ற அவர் பெயரிலான கோயிலும் அடக்கம். ஹோலடா என்ற நகரத்தின் பெயரை ‘மிகிராபுரா’ என்று மாற்றி வைத்தார். பாவங்களைப் போக்க பிராமணர்களுக்கு நூற்றுக்கணக்கில் அக்ரஹாரங்களைக் கட்டிக் கொடுத்தார். காஷ்மீர் பிராமணர்கள் வேண்டாமென விலகி ஓடினர். காந்தார பிராமணர்கள் ஏற்று மகிழ்ந்தனர்.

இறுதிக் காலத்தில் நோய்வாய்ப்பட்ட மிகிரகுலன், தனக்கு நரகம்தான் வாய்க்குமோ என்று அஞ்சினார். யாகங்களை மேற்கொண்டார். சுபயோக சுபதினம் ஒன்றில், கடும் தவத்துக்குப் பிறகு நெருப்பை மூட்டச் சொன்னார். அதில் கூரிய ஆயுதங்கள் போடப்பட்டன. கையைத் தலைக்குமேல் குவித்து வணங்கியபடி, தகிதகிக்கும் நெருப்பில் குதித்தார். எமனடி சேர்ந்தார். சுபமஸ்து!

டெயில் பீஸ்: மிகிரகுலனுக்கு ‘மண்ணில் வாழ்ந்த எமன்’ என்ற பட்டம் உண்டு. ஆம், போரினாலும் இன்ன பிற கொடூரங்களினாலும் மிகிரகுலனால் கொல்லப்பட்ட உயிர்களின் உத்தேச எண்ணிக்கை மூன்று கோடி இருக்கலாம் என்கிறார்கள்.

(வருவார்கள்...)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism