
சொல்வனம்
இரவைத் தைத்தல்
இந்தத் தேநீரின்
முதல் மிடறில்
ஒட்டிக்
கரைந்தது கொஞ்சம் அந்தி.
ஒரு விமானம்
தாழப் பறக்கிறது
ட்யூசனுக்கு சைக்கிளில் செல்பவன்
அவ்வப்போது கைகளை காற்றில் விரித்து
பறக்கிறான்.
விபத்தில் மிஞ்சிய
கண்ணாடிச்சில்லில் மின்னுகிறது
முதல் விண்மீன்.
ஒற்றைச் செருப்பணிந்து
நிற்பவனின்
அறுந்த செருப்பைத் தைக்கிறவன்
ஊசியில் இரவு நுழைகிறது.
குறிப்பிட்ட
பிரசவநாளைத் தாண்டியவளைத்
தாங்கிய ஆட்டோ
திட்டுகளை வாங்கியபடி
அத்தனை மெதுவாய் நகர்கிறது.
ஒரு பள்ளத்தில்
ஒரு மேட்டில்
இறங்கி
மேலேறுகிறது
பிரபஞ்சம்.
- பிராங்ளின் குமார்

அறுந்த வலையின் அலைகள்
சூடேறும் மணற்பரப்பில் படர்ந்து கிடக்கும் பச்சைக்கொடியில்
அசையும் புழு
வெப்பமற்ற இடம் தேடுகிறது.
நெளி ஓவியமென நீர்ம விளையாட்டைத் தொடங்குகிறது கானல்.
படகு நிழலில் மதுப்புட்டியைத் திறந்தவன்
இரு நெகிழிக் குவளைகளில்
சமமாய்ப் பங்கிட
கடைசிச் சொட்டுத் தீர்ந்த போத்தலை
மீண்டும் மீண்டும் சாய்த்துப் பின் தூக்கியெறிகிறான்.
மணலில் பாதி புதைந்து வெளித் துருத்தித் தெரிகிறது அது.
அமாவாசைக்கென தர்ப்பணம் செய்த இடத்தில்
சிந்திய பிண்டத்தைக் கொத்தும் காக்கைகள்
பித்ருக்களுக்குள் மோதலை உண்டாக்கின.
கூட்டமாய் மேய்ந்த புறாக்களில்
வெள்ளைப் புறாவொன்று அறுந்த வலையில் சிக்கிப் போராடுகிறது.
அஞ்சிய புறாக்கள் பறந்தோடுகின்றன
கரை சேர்ந்த படகிலிருந்து இறங்கியோடுபவர்களின் பதற்றம்
கடற்கரையில் பெரும்கூட்டத்துக்கு வகை செய்கிறது.
அழுது புரள்பவர்களின் ஓசையை இழுத்துப்போகிறது அலை.
- யாழி கிரிதரன்
காருண்யத் தூரிகை
பாதையில் சரிந்து கிடந்த ஒருவரைக் கண்டதும்
உடுக்கை இழந்தவன் கைப்போல
அவன் உதவியபோது பூலோகம்
முழுவதும் அவன் இதயம் விரிந்து
கிடந்தது.
கடற்கரை சாலையில் காலுடைந்து நொண்டிக்கொண்டிருந்த நாய்க்குட்டியை
அள்ளியெடுத்து வந்தவனின் ஓயாத கருணையைப்போல்
அந்த அலைகள் ஒடிக்கொண்டிருக்கின்றன.
எப்போதோ நண்பர்கள் சந்தித்துக்கொண்ட
குழுப்புகைப்படத்தில் உள்ளங்கைப்பற்றிக் கபடமில்லா
புன்னகையெனப் படிந்திருப்பது அவன் இதயம்தான்
அன்பின் வாசங்களென அவன் நட்டுவைத்த
மலர்ச்செடிகள் அவன் துடிப்பெனத்தான்
அசைந்துகொண்டிருக்கின்றன.
பூக்கள் சொல்லாகப் பொழியும் ஒரு கவிதையில்
உயிரினங்கள்மீது காருண்யம் வேண்டி
அவன் இதயத்தைத்தான் அந்தத் தாளில் வரைந்திருந்தான்
நீங்கள்தான் அவன் மாரடைப்பில்
இறந்துவிட்டதாய் சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள்.
- நா.திங்களன்