Published:Updated:

“விழுந்த வாக்குகளும் அச்சுறுத்தலால் கிடைத்தவை” - சாரணர் சர்ச்சை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“விழுந்த வாக்குகளும் அச்சுறுத்தலால் கிடைத்தவை” - சாரணர் சர்ச்சை
“விழுந்த வாக்குகளும் அச்சுறுத்தலால் கிடைத்தவை” - சாரணர் சர்ச்சை

“விழுந்த வாக்குகளும் அச்சுறுத்தலால் கிடைத்தவை” - சாரணர் சர்ச்சை

பிரீமியம் ஸ்டோரி

ரு பொதுத் தேர்தலைப் போல பெரும் எதிர்பார்ப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்திவிட்டது தமிழ்நாடு சாரணர், சாரணியர் இயக்கத்தின் தேர்தல். 

பி.ஜே.பி-யின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவும் பள்ளிக்கல்வித் துறையின் முன்னாள் இயக்குநர் மணியும் மோதிய தேர்தலில் ஹெச். ராஜா தோற்றுவிட்டார். மெரினா கடற்கரைச் சாலையில் உள்ள தமிழ்நாடு பாரத சாரணர், சாரணியர் இயக்கத்தின் தலைமையகத்தில், செப்டம்பர் 16-ம் தேதி காலையில் வாக்குப்பதிவு தொடங்கியது. திடீரென்று, ‘தேர்தலை நிறுத்த வேண்டும்’ என்று தடையாணை ஒன்றை ஹெச்.ராஜாவின் ஆதரவாளரான கே.எல்.ரமேஷ் என்பவர் காண்பித்தார். அதைக் கேட்டு, மணியின் ஆதரவாளர்கள் கொந்தளித்தனர். “மத்திய தேர்தல் பார்வையாளர் சங்கரன் தலைமையில் தேர்தல் நடக்கிறது. இதுவரை எனக்கு எந்த தடையாணையும் வரவில்லை” என்றார் தேர்தல் அதிகாரி கலாவதி.

“விழுந்த வாக்குகளும் அச்சுறுத்தலால் கிடைத்தவை” - சாரணர் சர்ச்சை

இந்தப் பரபரப்புடன் வாக்குப்பதிவு தொடர்ந்தது. மதியம் இரண்டு மணியளவில் வாக்குப்பதிவு முடிந்தது. இரு தரப்பினரும் பதற்றத்துடன் காத்திருக்க, “மொத்தம் 286 வாக்குகள் பதிவாகின. ஹெச்.ராஜா 52 வாக்குகள் பெற்றார். இரு வாக்குகள் செல்லாதவை. 232 வாக்குகள் பெற்று தலைவராக மணி வெற்றி பெற்றுள்ளார்” எனத் தேர்தல் அதிகாரி அறிவித்தார். மகிழ்ச்சியில் மணியின் ஆதரவாளர்கள் துள்ளிக்குதித்தனர். கடுகடுத்த முகத்துடன் ராஜாவின் ஆதரவாளர்கள் வெளியேறினர்.

ஹெச்.ராஜாவிடம் பேசினோம். “இது, முழுக்க முழுக்க முறைகேடாக நடந்த தேர்தல். வாக்காளர்கள் சேர்க்கையில் முறைகேடு உள்ளதாக சாரணர், சாரணியர் இயக்கத்தின் தேசியத் தலைமையிடம் புகார் செய்யப்பட்டுள்ளது. முதலில் ஆகஸ்ட் 23-ம் தேதி தேர்தல் என்றவர்கள், பிறகு செப்டம்பர் 16-ம் தேதிக்கு மாற்றியுள்ளனர். இதையொட்டியே தேர்தலை நிறுத்தவேண்டும் என்று தேசியத் தலைமைக்குக் கடிதம் கொடுக்கப்பட்ட பிறகும், மீறி தேர்தலை நடத்தியுள்ளனர். கடந்த 12 ஆண்டுகளாக சாரண, சாரணியர் இயக்கத்தில் எந்தவிதப் பயிற்சியும் முறையாக நடைபெறவில்லை. சுதந்திர தின அணிவகுப்பும் கூட ஒழுங்காக நடக்கவில்லை. இவற்றையெல்லாம் மாற்றி, தேசிய உணர்வை ஊட்டவேண்டும் என்பதற்காகத்தான் என்னை நண்பர்கள் நிறுத்தினர். ஆனால், நான் வெற்றி பெறக்கூடாது என்று செயல்பட்டுள்ளனர். அனைத்தையும் மேலிடத்துக்குப் புகாராக அனுப்பி விட்டேன். நிச்சயம் நடவடிக்கை எடுப்பார்கள். மீண்டும் தேர்தல் நடக்கும். நான் வெல்வேன்” என்றார்.

வெற்றிபெற்ற மகிழ்ச்சியுடன் நம்மிடம் பேசிய மணி, “அனைத்துக் கல்வி நிலையங்களுக்கும் சாரணர், சாரணியர் இயக்கம் கொண்டு செல்லப்பட வேண்டும். என் பேரக் குழந்தைகளான பல்லாயிரக்கணக்கான மாணவ கண்மணிகளுக்குப் பொதுச்சேவை உணர்வு, சகோதரத்துவம் போன்ற அற உணர்வை ஊட்ட வேண்டும். ஆளுநர், குடியரசுத் தலைவர் ஆகியோரிடம் சிறந்த சாரணர், சாரணியர் விருதுகளை வாங்கும் மாணவச் செல்வங்களின் எண்ணிக்கையைப் பெருக்க வேண்டும். அவர்களுக்குக் கிடைக்கும் இந்தப் புள்ளிகள் மூலம் வேலைவாய்ப்பில் முன்னுரிமை கிடைக்கும். அவர்களின் வாழ்வும் சிறப்பாக மலரும். இவை அனைத்தையும் முதன்மைச் செயலரான பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் இளங்கோவனுடன் இணைந்து நடத்திக்காட்டுவேன். நல்ல குடிமக்களாய் மாணவச் செல்வங்களைக் கொண்டு வருவதே என் முன்பாக உள்ள இலக்கு” என்றார் உறுதியுடன்.

“விழுந்த வாக்குகளும் அச்சுறுத்தலால் கிடைத்தவை” - சாரணர் சர்ச்சை

பள்ளிக்கல்வித் துறை வட்டாரத்தில் பேசினோம். “ஹெச்.ராஜாவைத் தேர்தலில் வெற்றிபெற வைக்க, ஆளும்கட்சி மூலம் பல முயற்சிகள் நடந்தன. ஹெச்.ராஜாவுக்கு விழுந்த வாக்குகளும்கூட, ஆளும்கட்சியினரும் சில அதிகாரிகளும் அச்சுறுத்தியதால் கிடைத்தவையே. அந்த அச்சுறுத்தலால்தான் பலரும் வாக்களிக்கவே வரவில்லை. இன்னொருபுறம், டி.ஆர்.பி தேர்வின் காரணமாகவும் பலர் வரவில்லை. இவற்றையெல்லாம் கடந்துதான், மணி வெற்றிபெற்றார். இதைத் தாங்க முடியாமல், எப்படியாவது மறுதேர்தல் நடத்திவிட வேண்டுமென்று, சாரணர், சாரணியர் இயக்கத்தின் அகில இந்திய தலைவர் டாக்டர் அனில் ஜெயின் மூலமாக ஹெச்.ராஜா தரப்பு முயற்சி செய்கிறது” என்றனர்.

சாரணர், சாரணியர் இயக்கத்தை வளர்த்தெடுக்கும் வாய்ப்பு மணிக்குக் கிடைத்துள்ளது. தமிழக மாணவர்களைச் சிறந்த குடிமக்களாக உருவாக்குவதற்கான முயற்சியாக விசிலை ஊத ஆரம்பித்துவிட்டார் மணி.

இந்த தேர்தலின் முடிவைத் தேசிய ஊடகங்கள் அடக்கி வாசிக்க, சமூக வலைதளங்களிலோ மணியின் வெற்றியைக் கொண்டாடினார்கள் என்பதைவிட, ஹெச்.ராஜாவின் தோல்வியைக் கொண்டாடித் தீர்த்தனர் என்றுதான் சொல்ல வேண்டும். “காவிக்கு எதிராக பெரியார் பிறந்தநாள் பரிசு” என மீம்ஸ்கள் பறந்தன. ஹெச்.ராஜா தோல்விக்காக டெல்லி பி.ஜே.பி தலைமை, தமிழக ஆட்சியாளர்களுக்குச் செம டோஸ் விட்டதாம்.

- சே.த.இளங்கோவன்
படங்கள்: பா.காளிமுத்து, கே.ஜெரோம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு