Published:Updated:

நீதிமன்றம் நியமித்த துப்பறிவாளன்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நீதிமன்றம் நியமித்த துப்பறிவாளன்!
நீதிமன்றம் நியமித்த துப்பறிவாளன்!

நீதிமன்றம் நியமித்த துப்பறிவாளன்!

பிரீமியம் ஸ்டோரி
நீதிமன்றம் நியமித்த துப்பறிவாளன்!

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, ரயில்வே ஐ.ஜி-யான பொன்.மாணிக்கவேல், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவையும் கூடுதலாக கவனிக்கும் ஐ.ஜி-யாக நியமிக்கப்பட்ட பிறகு, சிலைக்கடத்தலுக்கு எதிரான தனது அதிரடி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளார்

தமிழக சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி-யாக நான்கரை வருடங்கள் இருந்தார், பொன்.மாணிக்கவேல். இவர் தலைமையிலான டீம், தமிழகக் கோயில்களில் திருடப்பட்ட 155 கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகளை மீட்டது. சுமார் 250 கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகள் கடத்தப்படுவதையும் தடுத்திருக்கிறது. சிலைக்கடத்தல் பிரிவில் 33 வழக்குகளும் தமிழகம் முழுவதும் 455 வழக்குகளும் பதிவாகின. இந்த நிலையில்தான் பொன்.மாணிக்கவேலை ரயில்வே ஐ.ஜி-யாக மாற்றியது தமிழக அரசு. சிலைக்கடத்தல் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ‘சிலைக்கடத்தல் தொடர்பான 19 வழக்குகளை பொன்.மாணிக்கவேல் விசாரிப்பார். பிற வழக்குகளை சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு விசாரிக்கும்’ என்று அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். அதனால் ஆத்திரடைந்த நீதிபதி, ‘531 வழக்குகளை பொன்.மாணிக்கவேல் விசாரிக்க உத்தரவிடப்பட்ட நிலையில், எதன் அடிப்படையில் 19 வழக்குகளை மட்டும் அவர் விசாரிப்பதற்கு டி.ஜி.பி உத்தரவு பிறப்பித்தார்’ என்று கேள்வி எழுப்பினார். இதையடுத்து, சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் ஐ.ஜி-யாக பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்டுள்ளார்.

பொன்.மாணிக்கவேலிடம் பேசினோம்.

நீதிமன்றம் நியமித்த துப்பறிவாளன்!

“சர்வதேச அளவில் சிலைக் கடத்தல் நெட்வொர்க் எப்படிச் செயல்படுகிறது?”

‘‘சென்னையில் தீனதயாளனிடமிருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகளைக் கைப்பற்றினோம். அவரைச் சிறையில் அடைத்தோம். சென்னையில் தீனதயாளன், மகாபலிபுரத்தில் நச்சு என்கிற லட்சுமிநாராயணன், மும்பையில் இந்தோ நேபாள் ஆர்ட் சென்டர் நடத்துகிற ஒரு மார்வாடி பிரமுகர் ஆகியோர் மூலமாக சிலைகள் லண்டனை அடையும். அங்கிருந்து அமெரிக்காவுக்குப் போய்விடும். நியூயார்க்கில் உள்ள சுபாஷ் கபூர் என்பவர்தான் உலகம் முழுவதும் சிலைகளை விற்பவர். தமிழகத்தில் திருடப்பட்ட 40 சிலைகள் அமெரிக்காவுக்குக் கொண்டுசெல்லப்பட்டன. அவற்றை போலீஸார் கைப்பற்றி, ஏழு சிலைகளை மட்டும் நமக்குத் திருப்பிக்கொடுத்துள்ளனர். ஆஸ்திரேலியாவுக்குக் கடத்தப்பட்ட 12 சிலைகளில், எட்டு சிலைகள் திரும்பிவந்துவிட்டன. சிங்கப்பூருக்குக் கடத்தப்பட்ட 16 சிலைகளில், ஒன்றுதான் திரும்பிவந்தது. சுபாஷ் கபூரைப் பொறி வைத்து பிடித்தது பெரிய விஷயம். கடந்த ஐந்து வருடங்களாக அவர் திருச்சி சிறையில்தான் உள்ளார். அவரை, அமெரிக்காவுக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்ல பல முயற்சிகள் நடக்கின்றன. அவர் மீது இங்கு நிறைய வழக்குகள் உள்ளதால், நிச்சயமாக அவரை விடமாட்டோம்.’’

‘‘சிலைத் திருட்டில், சம்பந்தப்பட்ட கோயில் அதிகாரிகளுக்கு எந்தளவுக்குத் தொடர்பு உள்ளது?”

‘‘வெளிநாட்டு மியூஸியங்களில் உள்ள தமிழ்நாட்டுச் சிலைகளை எங்களுடன் தொடர்புடைய நபர்கள் பார்த்தார்களென்றால், அதைப் புகைப்படமெடுத்து எங்களுக்கு அனுப்புகிறார்கள். அதை வைத்து, அது எந்தக் கோயிலைச் சேர்ந்த சிலை என்று துப்பறிகிறோம். உதாரணமாக, விருத்தாசலம் அருகே ஒரு கோயிலின் சிலை கடத்தப்பட்டிருக்கிறது. அந்தக் கோயிலுக்கு நாங்கள் போனபோது, சிலை திருடுபோகவில்லை என்றார்கள். ஆனால், அந்தக் கோயிலின் சிலை ஆஸ்திரேலியாவில் உள்ள ஆர்ட் காலரி ஒன்றில் இருந்தது. ஒரிஜினல் சிலையை அபேஸ் செய்து, அதேபோன்ற ஒரு சிலையைச் செய்து கோயிலில் வைத்திருந்தனர். இதற்குச் சம்பந்தப்பட்ட கோயிலின் அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளனர். ஸ்ரீபுரத்தான் கோயிலின் உலோகச் சிலை ஒன்றை, ஆஸ்திரேலியாவில் 31 கோடியே 80 லட்சம் ரூபாய்க்கு மியூஸியம் ஒன்றுக்காக வாங்கியுள்ளனர். எங்கள் புகாரின் பேரில், அந்த மியூஸியத்தின் இயக்குநர் தற்போது சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளார். தமிழ்நாட்டில் சிலைக் கடத்தலுக்குத் துணைபோன அதிகாரிகள் யாராக இருந்தாலும் நடவடிக்கை உறுதி.’’

‘‘சிலைக் கடத்தலை முற்றிலுமாகத் தடுக்க முடியாதா?’’

‘‘நிச்சயமாக முடியும். ஒவ்வொரு கோயிலிலும் ஸ்ட்ராங் ரூம் நிறுவி, அதில் சிலைகளைப் பாதுகாக்க வேண்டும். தொன்மையான சிலைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியாது. ஆனால், கைவினைப்பொருள் என்கிற பெயரில், மத்திய அரசு துறை ஒன்றின் அதிகாரியிடம் கையெழுத்து வாங்கி தொன்மையான சிலைகளை வெளிநாடுகளுக்குக் கடத்துகிறார்கள். உதாரணத்துக்கு, ஸ்ரீபுரத்தான் கோயிலில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 64 கோடி ரூபாய் மதிப்புள்ள எட்டு சிலைகள். அவற்றைக் கைவினைப் பொருள் என்கிற பெயரில்தான் கடத்தியுள்ளனர். அதனால், சட்டத்திலும் சில திருத்தங்களைக் கொண்டுவர முயற்சிசெய்து வருகிறோம்.’’

- சூரஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு