Published:Updated:

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 12

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 12
பிரீமியம் ஸ்டோரி
News
கிறுக்கு ராஜாக்களின் கதை! - 12

அநாதை To அதிபர்

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 12

ந்தக் கிராமத்தின் தலைவரான மிண்டோகோன், பிரெஞ்சுக் காவலர்களால் தரதரவென இழுத்துச் செல்லப்பட்டார். அவர் மீது சுமத்தப்பட்ட குற்றம் கீழ்ப்படியாமை மற்றும் புரட்சியைத் தூண்டியது. 1927, நவம்பர் 13 அன்று  Mbaiki என்ற நகரத்திலுள்ள சதுக்கத்துக்கு மிண்டோகோனை, பிரெஞ்சுக் காவலர்கள் இழுத்து வந்தார்கள். எல்லோர் முன்னிலையிலும் தாக்கித் துன்புறுத்தினார்கள். அடியும் உதையும் மிதியும் தொடர்ந்துகொண்டே இருந்தது, அவர் உயிரிழக்கும் வரை.

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், மத்திய ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் பிரான்ஸின் காலனி ஆதிக்கம் கொடிக்கட்டிப் பறந்தது. பிரான்ஸைச் சேர்ந்த பதினேழு நிறுவனங்கள், அந்தப் பகுதிகளின் இயற்கை வளங்களைச் சுரண்டிக் கொழித்தன. அதற்கு வேலை செய்வதற்கென்றே உள்ளூர் மக்களை அடிமைகளாகப் பயன்படுத்தினர்.

Bobangui என்ற கிராமத்தின் தலைவராக இருந்தவரே மிண்டோகோன். பிரான்ஸின் ஒரு நிறுவனத்துக்கு அடிமைகளாக வேலை செய்ய தன் கிராமத்து ஆள்களை விநியோகித்து வந்தார். கங்காணி வேலை. அதே சமயம் கர்னு என்ற தலைவர் பிரான்ஸின் ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடிவந்தார். மிண்டோகோனும் கர்னுவால் ஈர்க்கப்பட்டார். ஆள்களை விநியோகம் செய்வதை நிறுத்தினார். பதிலுக்கு அவர்கள் மிண்டோகோனின் மூச்சை நிறுத்தினார்கள்.

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 12

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தன் கணவன் இறந்த துக்கம் தாளாமல் தற்கொலை செய்துகொண்டாள் மிண்டோகோனின் மனைவியான மேரி. இந்தத் தம்பதிக்கு மொத்தம் பன்னிரண்டு பிள்ளைகள். அதில் ஒரு மகனே பொகாஸா. அப்போது அவனுக்கு வயது ஆறு. ‘நான் இப்படி அநாதையாகக் காரணம் பிரான்ஸ்தான். பிரெஞ்சுக்காரர்களுக்கு எதிராகப் போராடி என் தாய் மண்ணை மீட்பேன். என் பெற்றோரைக் கொன்றவர்களைப் பழி வாங்கியே தீருவேன்’ என்று சபதம் எடுக்கும் தெளிவெல்லாம் அவனுக்கு இல்லை. பிரான்ஸ் நடத்திய ஒரு கிறிஸ்தவ மிஷனரி பள்ளிதான் பொகாஸாவுக்கு ஆதரவு கொடுத்தது. பிரான்ஸின் அரவணைப்புடன்தான் பொகாஸா வளர்ந்தான். சாகும் வரையில் பிரான்ஸ் மீதான அதீதப் பாசம் குறையவே இல்லை.

பள்ளியில் பொகாஸா தனிமைப்படுத்தப்படுவது வாடிக்கையானது. அநாதை என்று சக சிறுவர்கள் பரிகசிப்பதும் வலித்தது. இருந்தும், படிப்பில் கவனம் செலுத்தினான். ஜீன் பெடெல் என்பவர் எழுதிய பிரெஞ்சு இலக்கணப் புத்தகம் அவனை ஈர்த்தது. அதையே படித்துக் கொண்டிருந்தான். ஆசிரியர்கள் அவனை ‘ஜீன் பெடெல் பொகாஸா’ என்றே வேடிக்கையாக அழைக்க ஆரம்பித்தனர். அதையே தன் முழுப் பெயராகவும் பெருமையுடன் மாற்றியமைத்துக் கொண்டான். அவனுக்கு பிரெஞ்சு மொழி பிடித்தது. பிரெஞ்சுக்காரர்களைப் பிடித்தது. பிரெஞ்சுக் கலாசாரம் ஈர்த்தது. எல்லாவற்றையும்விட, பிரான்ஸின் மாவீரன் நெப்போலியனை அதிகம் பிடித்தது. ‘நானும் ஒருநாள் நெப்போலியன் போல சக்கரவர்த்தி ஆவேன்!’ - அவன் கண்களில் கனவு மிதந்தது.

அதற்கேற்பவே பொகாஸாவின் வாழ்க்கைப் பாதையும் அமைந்தது. பருவ வயதில் ராணுவத்தில் இணைந்தார், பொகாஸா. பிரான்ஸ் தேசத்துக்காகப் பணியாற்றும் மத்திய ஆப்பிரிக்க ராணுவ வீரர். இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியின் நாஸிப் படைகளை எதிர்த்துப் போரிட்டார். போரின் இறுதியில் ஜெர்மனிக்குள்ளேயே புகுந்து, எஞ்சிக் கிடந்த நாஸி வீரர்களைத் துவம்சம் செய்யும் படைப் பிரிவிலும் இருந்தார். போருக்குப் பிறகும் ரேடியோ தொலைத்தொடர்பு நுட்பம் கற்றுக்கொண்டு, பிரான்ஸின் ராணுவத்திலேயே பணியாற்றினார்.

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 12

பிரெஞ்சு காலனியான இந்தோசீனா பகுதிக்கு 1950-ல் சென்ற படைப் பிரிவில் பொகாஸாவும் இருந்தார். வியட்நாம். அங்கே ஒரு பெண் இவர் விழியில் விழுந்து, இதயம் நுழைந்து, உயிரில் கலந்தாள். திருமணம் செய்து கொண்டார்கள். பொகாஸா தகப்பனும் ஆனார். பிறந்த பெண் குழந்தையை பிரெஞ்சுக் குடிமகளாகப் பதிவுசெய்தார். 1953-ல் வியட்நாமிலிருந்து கிளம்ப வேண்டியதிருந்தது. ‘அழாதே பெண்ணே! நிச்சயமாக நான் மீண்டும் இங்கே வருவேன்.’ - பிரிவு முத்தத்துடன் சத்தியம் செய்துவிட்டுக் கிளம்பினார். சத்தியமாக அங்கு திரும்பி வரவே இல்லை.

உபாங்கி ஆற்றின் கரைகளிலும், சாரி ஆற்றின் படுகையிலும் அமைந்துள்ள மத்திய ஆப்பிரிக்கப் பிரதேசத்தை பிரெஞ்சுக்காரர்கள் ‘உபாங்கி-சாரி’ என்றே அழைத்தனர். பிரெஞ்சுக் காலனியாக இருந்த உபாங்கி-சாரி, 1958-ல் பிரான்ஸின் சுயாட்சி உரிமை பெற்ற நாடாக மாறியது. 1960, ஆகஸ்ட் 13-ல் பிரான்ஸிடம் இருந்து விடுதலை பெற்று, ‘மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு’ என்ற புதிய தேசமாக மலர்ந்தது.

இந்தோசீனாவிலிருந்து மீண்டும் பிரான்ஸுக்குத் திரும்பிய பொகாஸா, அங்கே லெப்டினன்ட்டாகப் பதவி உயர்வு பெற்றுப் பணியைத் தொடர்ந்தார். சுமார் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு தன் தாய் மண்ணான உபாங்கி-சாரிக்குத் திரும்பினார் (1959). ‘சிலுசிலுவெனக் குளிர் அடிக்குது அடிக்குது… சிறு அரும்புகள் மலர் வெடிக்குது வெடிக்குது… வனம் விட்டு வனம் வந்து மரங் கொத்தி பறவைகள் மனம் விட்டு சிரிக்கின்றதே...’ -பொகாஸோவின் மனம் மகிழ்ந்தது.
டேவிட் டாக்கோ. உபாங்கி-சாரியின் முக்கிய அரசியல்வாதி. அமைச்சராகப் பணியாற்றிய அனுபவம் மிக்கவர். மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு மலர்ந்தபோது, அதன் முதல் அதிபராக நியமிக்கப்பட்டவர் டேவிட் டாக்கோதான். பொகாஸாவின் ஊர்க்காரர். இருவரும் தூரத்து உறவினர்களும்கூட. ஆகவே, 1962-ல் பிரான்ஸ் ராணுவப் பணியிலிருந்து விலகிய பொகாஸா, மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் ராணுவத்தில் இணைந்தார். டேவிட், ராணுவ பலத்தைப் பெருக்கும் பொறுப்பையும், தலைமைத் தளபதி பொறுப்பையும் நம்பிக்கையுடன் பொகாஸாவிடம் ஒப்படைத்தார். அதுவரை மனித பலத்துடன் இயங்கிக்கொண்டிருந்த பொகாஸா, ஆப்பிரிக்க யானை பலத்துடன் பிளிற ஆரம்பித்தது அதற்குப் பிறகுதான்.

பிரான்ஸின் ராணுவத்தில் பணியாற்றிய பேரனுபவம் கைகொடுத்தது. தேசத்தின் மொத்த ராணுவத்தையும் அதிகாரம் செய்யும் கர்னலாக உயர்ந்தார் (1964). பொது நிகழ்ச்சிகளில் மிடுக்குடன் கலந்துகொண்டார். அவர் அதுவரை வாங்கிய ராணுவப் பதக்கங்களும் அங்கீகாரங்களும் அவரது உடையில் பளபளத்தன. அதிபர் டேவிட்டுக்கு இணையாக அமர்ந்து கெத்து காட்டினார். அவரது ஆணவமும் அதிகாரமும் கொடிகட்டிப் பறந்தன. அரசின் தலைமைப் பாதுகாப்பு அதிகாரியான ஜீன் பவுல், அதிபரிடம் எச்சரித்தார். ‘ஆட்டம் ஜாஸ்தியா இருக்குது. பாத்துக்கோங்க.’

டேவிட்டும் லேசுப்பட்ட ஆள் அல்ல. சர்வாதிகார லட்சணங்கள் கொண்டவரே. தான் அதிபராக வந்த சில மாதங்களிலேயே எதிர்க்கட்சிகளை எல்லாம் ஏறக்கட்டினார்.

MESAN என்ற தனது கட்சியைத் தேசத்தின் ஒரே கட்சியாக்கினார். 1964-ல் ‘ஜனநாயக’ முறைப்படி தேர்தலும் நடத்தி, 60 மீஸான் உறுப்பினர்கள் அடங்கிய பூரணப் பெரும்பான்மை கொண்ட ஆட்சி அமைத்தார். எங்கும் எதிலும் ஊழல். 

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 12

எப்போதும், எல்லா இடங்களிலும் பெரியண்ணன்களின் தலையீடுதானே பிரச்னை. மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, சுதந்திர தேசமென்றாலும், அதன் பாதுகாப்பு, வணிகம், பொருளாதாரம், வெளியுறவுக் கொள்கைகளில் பெரியண்ணன் பிரான்ஸின் தலையீடு அமோகமாக இருந்தது. அந்தத் தேசத்தின் வைர வளம், பிரான்ஸுக்கு அவ்வளவு முக்கியமாக இருந்தது. இங்கே சீனா, தனது சப்பை மூக்கை நுழைத்தது. ‘நாங்கள் உங்களுக்குத் தொழில் வளர்ச்சியில் உதவுகிறோம். அதற்கான கடன்களை அள்ளி அள்ளிக் கொடுக்கிறோம். ஆதரிப்பீர் கம்யூனிசம்!’ என்று செவ்வொளி பரப்ப முயன்றது. பிரான்ஸின் ஏகபோக அதிகாரத்தை விரும்பாத டேவிட்டும் சீனாவின் பக்கம் சாய நினைத்தார்.

தளபதிகள், ராணுவப் புரட்சி செய்து, ஆட்சியைக் கவிழ்த்து, சர்வாதிகாரியாக உருமாறுவதுதானே உலக வழக்கம். அதேபோன்ற சூழல்தான் மத்திய ஆப்பிரிக்கக் குடியரசிலும் நிலவியது. அமைச்சர்கள் சிலர், அதிபரை எச்சரித்தனர். ‘கர்னலை ராணுவப் பணியிலிருந்து விடுவித்து, ஏதேனும் ஒரு துறைக்கு அமைச்சராக்கிவிடுங்கள். ஆபத்து குறையும்.’ அதிபர் கேட்கவில்லை. பொகாஸாவைத் தவறாக எடைபோட்டார். ‘கர்னலுக்குக் கொத்துக் கொத்தாக மெடல்களை வாங்கிக் குத்திக்கொள்வதில்தான் ஆர்வம். ஆட்சியைக் கவிழ்க்கும் அளவுக்கு அவர் புத்திசாலி அல்ல.’

பிறகு, பொகாஸாவின் மமதை ததும்பும் நடவடிக்கைகள் எல்லை மீற, டேவிட்டுக்குப் பயம் வந்தது. 1965 -ம் ஆண்டு ஜூலையில், விழா ஒன்றுக்காக பாரிஸுக்குச் சென்றார் பொகாஸா. டேவிட், அவரை நாடு திரும்ப விடாமல் தடுத்தார். ‘நான் என்றுமே பிரான்ஸின் உண்மைத் தொண்டன். எனக்கு ஆதரவு கொடுங்கள்!’ என்று பிரெஞ்சு அரசியல்வாதிகளின் ஆதரவைத் திரட்டினார் பொகாஸா. பிரான்ஸ், தன் வளர்ப்பு மகன் பொகாஸாவை நம்பியது. ‘கர்னலைத் தேசத்துக்குள் அனுமதிக்காமல் தடுப்பது உங்களுக்கு நல்லதல்ல’ என்று அதிபர் டேவிட்டை மிரட்டியது.

பொகாஸா நாடு திரும்பினார். அதிபருக்கும் அவருக்குமான முட்டல், மோதல்கள் வேலி தாண்டின. பொகாஸாவைக் கைது செய்து சிறையில் அடைக்கும் சந்தர்ப்பத்துக்காக டேவிட் காத்திருந்தார். டேவிட்டை மொத்தமாக முடக்கும் சந்தர்ப்பத்தை பொகாஸா உருவாக்கிக் கொண்டார்.

சம்பளமே வரவில்லை என்று ஊழியர்கள் ஸ்டிரைக் நடத்திக் கொண்டிருந்தார்கள். எல்லைகளிலும் ஏகப்பட்ட பிரச்னைகள். பொருளாதாரச்  சீரழிவால் தேசமே அதிபர் மீது அதிருப்தியில் இருந்தது. 1965, டிசம்பர் 31. பொகாஸாவின் ராணுவப் புரட்சி அரங்கேறியது. அலெக்சாண்ட்ரே பான்ஸா என்ற ராணுவத் தளபதி, பொகாஸாவின் வலதுகரமாகச் செயல்பட்டார். ராணுவம் மற்றும் போலீஸின் துணையுடன் அரசின் தலைமையகத்தை, முக்கிய அலுவலகங்களைக் கைப்பற்றினார்கள். எதிரிகள் உதிரிகளாக்கப்பட்டார்கள். அதிபர் டேவிட் கைதுசெய்யப்பட்டு, சிறைச்சாலை ஒன்றுக்கு அழைத்துவரப்பட்டார். அங்கே பொகாஸா வந்தார். வன்மம் நிறைந்த சிரிப்புடன் அதிபரை அணைத்தார். ‘உங்களை எச்சரிக்க நினைத்தேன். ஆனால், காலம் கடந்துவிட்டது. மரியாதையாகக் கையெழுத்துப் போடுங்கள்.’

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 12

டேவிட்டின் ராஜினாமா கடிதத்தில் கையெழுத்து வாங்கப்பட்டது. அவர் சிறையில் அடைக்கப்பட்டார். 1966, புது வருட தினம். அதிகாலை மூன்று மணி. மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் ரேடியோக்கள் இரைந்தன. தொண்டையைச் செருமிக்கொண்டு உரையாற்றினார் பொகாஸா. ‘மன் கீ பாத்’ போல் மனதிலிருந்து ஓர் உரை!

‘மத்திய ஆப்பிரிக்கர்களே! கர்னல் பொகாஸா பேசுகிறேன். அதிகாலை மூன்று மணி. இப்போது உங்கள் ராணுவம் இந்த ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது. டேவிட் டாக்கோ ராஜினாமா செய்துவிட்டார். நீதி வென்றுவிட்டது. முதலாளித்துவம் தோற்கடிக்கப்பட்டது. சமத்துவம் நிரம்பிய புதிய சகாப்தம் பிறந்திருக்கிறது. உங்களையும் உங்கள் சொத்துகளையும் ராணுவம் என்றும் பாதுகாக்கும். மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு நீடுழி வாழட்டும்!’

ஜீன் பெடெல் பொகாஸா, தன்னைத் தானே புதிய அதிபராக அறிவித்துக் கொண்டார். மத்திய ஆப்பிரிக்கக் குடியரசுக்கு ‘பதின்மூன்றரைச் சனி’ அமோகமாக ஆரம்பமானது.

(அடுத்த இதழிலும் பொகாஸா வருவார்...)