Published:Updated:

அநீதிக்கு எதிராக புதிய போராளிகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அநீதிக்கு எதிராக புதிய போராளிகள்!
அநீதிக்கு எதிராக புதிய போராளிகள்!

அநீதிக்கு எதிராக புதிய போராளிகள்!

பிரீமியம் ஸ்டோரி

நீதிபதி: ‘‘இனிமேல் போராடுவீங்களா?’’ மணி: ‘‘ நீட் நீக்கப்படும்வரை போராடுவேன்’’

ரசியல் சூழலின் தற்போதைய அழுத்தங்கள், தமிழகத்தில் பல புதிய போராளிகளை உருவாக்கிக்கொண்டிருக்கின்றன.

சென்னை கெல்லீஸில் உள்ள சிறார் நீதிமன்றத்தில்…

நீதிபதி: ‘‘நீட் தேர்வுக்கு எதிராகப் போராடினீர்களா?’’

மணி: ‘‘ஆமாம் மேடம்.’’

நீதிபதி: ‘‘ ‘நீட்’டுக்கு எதிராக ஏன் போராட்டம் நடத்துறீங்க?’’

மணி: ‘‘என் போன்ற மாணவர்களுக்கு ‘நீட்’ அநீதி இழைக்குது. இங்கு சமச்சீர் கல்வி இருக்கு. ஆனா, சி.பி.எஸ்.இ மாணவர்கள்தான் ‘நீட்’ல பாஸ் பண்றாங்க.’’

நீதிபதி: ‘‘அப்படீன்னா... மாநில பாடத்திட்டம் தரமாக இல்லையா?’’

அநீதிக்கு எதிராக புதிய போராளிகள்!

மணி: ‘‘அப்படியில்லை மேடம். சி.பி.எஸ்.இ-யில படிக்கிறவங்க, காசு செலவு செஞ்சு கோச்சிங் கிளாஸ் எல்லாம் போறாங்க. எங்களுக்கு யார் செலவு செய்வாங்க?’’

நீதிபதி:
‘‘அப்படீன்னா.. உங்களுக்குச் சரியான கோச்சிங் இல்லையா?’’

மணி: ‘‘சமச்சீர் கல்வியில் நல்லா படிச்சு நல்ல மார்க் எடுக்குறாங்க. ஆனா, சமச்சீர் பாடத்திட்டத்தில இருந்து வெறும் 10 சதவிகிதம்தான் நீட் தேர்வுல கேக்குறாங்க. அது எப்படி மேடம் சரியா இருக்கும்?’’

நீதிபதி: ‘‘உங்க கோரிக்கை என்ன?’’

மணி: ‘‘ ‘நீட்’ தேர்வை நீக்கணும்.’’

நீதிபதி: ‘‘இனிமேல் போராடுவீங்களா?’’

மணி: ‘‘ ‘நீட்’ நீக்கப்படும்வரை போராடுவேன்.’’

நீதிபதி: ‘‘உங்க அப்பா, அம்மா என்ன வேலை செய்றாங்க?’’

மணி: ‘‘அப்பாவுக்குக் கூலி வேலை. அம்மா வீட்டு வேலை செய்றாங்க’’

நீதிபதி: ‘‘நீ என்ன படிக்கிற?’’

மணி:
‘‘பி.காம் படிக்கிறேன், மேடம்.’’

நீதிபதி: ‘‘நீ… பி.எல் படி!’’

‘நீட்’ தேர்வுக்கு எதிராகப் போராடி புழல் சிறையில் அடைக்கப்பட்டு, பிறகு 17 வயது சிறுவன் என்பதை அறிந்து, சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் மணி அடைக்கப்பட்டார். பிறகு, சிறார் நீதிமன்றத்தில் நீதிபதி கேட்ட கேள்விகளும், மணி அளித்த பதில்களும்தான் மேலே.

வடசென்னையில், கடல்நீர் தெறித்து விழக்கூடிய தொலைவில் மணியின் குடில். நான்கு புறமும் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்கள், சுவர் போல அடைக்கப்பட்டுள்ளன. மேற்கூரைக்கு பிளாஸ்டிக் ஷீட். அந்தக் குடிலின் மொத்த சைஸே 12 X 10 தான். அப்பா, அம்மா, இரு மகன்கள் என நான்கு ஜீவன்களுக்கும் அதுதான் வாழ்விடம். பழைய டிஜிட்டல் பேனர் மீது படுத்திருந்த மணி, நம்மைப் பார்த்ததும் அவசர அவசரமாக எழுந்து, பேனரை விரித்து உட்காரச் சொன்னார். ‘இந்திய மாணவர் சங்கம் சார்பில், நீட் தேர்வில் இருந்து விலக்குக் கேட்டு பள்ளி, கல்லூரிகளில் கறுப்பு பேட்ஜ் அணியும் போராட்டம்!’ என்ற வாசகம் அந்த பேனரில் எழுதப்பட்டிருந்தது.

“நீதிபதியின் கேள்விகளுக்குத் தெளிவான பதில்களைச் சொல்லியிருக்கீங்களே?”

அநீதிக்கு எதிராக புதிய போராளிகள்!

“நான் இந்திய மாணவர் சங்கத்துல இருக்கேன். பெரம்பூரில் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிங்க, ‘நீட்’க்கு எதிராக சாலை மறியல் செஞ்சாங்க. எங்க மாவட்டச் செயலாளர் விஜயகுமார், துணைத் தலைவர் ஜூகைப் எல்லாம் போனோம். மூணு மணி நேரத்துக்கு மேலே மறியல் நடந்துச்சு. மாணவிங்களுக்கு ஆதரவாக நாங்க இருந்தோம். அதனால, எங்களை அரெஸ்ட் பண்ணி புழல் ஜெயில்ல போட்டுட்டாங்க. கைது செஞ்சப்போ என் வயசைக் கேட்டாங்க. 17 வயசுன்னு சொன்னேன். ஆனா, 19 வயசுன்னு எழுதி புழல் ஜெயில்ல போட்டுட்டாங்க.  ரெண்டு நாளைக்கு அப்புறமா, ஹோமுக்கு என்னை அனுப்பிட்டாங்க. எங்க தோழர்கள்தான் என்னை ஜாமீன்ல எடுத்துட்டு வந்தாங்க. ஏரியாவுல பட்டாசு எல்லாம் வெடிச்சு தோழர்கள் வரவேற்பு கொடுத்தாங்க. ‘நீட்’டுக்கு எதிரான எங்களோட அடுத்தகட்ட போராட்டத்தைப் பிளான் பண்ணியிருக்கோம். எங்களை ஜெயில்ல போட்டாலும் அநீதிக்கு எதிராகப் போராடத்தான் செய்வோம்” என்று உறுதிமிக்க குரலில் பேசினார், அரும்புமீசை எட்டிப்பார்க்கும் அந்த இளைஞர்.

‘நீட்’ போராட்ட அலையைக் கிளப்பியது அனிதாவின் குழுமூர்தான். அனிதாவுக்கு அஞ்சலி செலுத்த டி.டி.வி.தினகரன் குழுமூர் சென்றபோது, இந்திய மாணவர் சங்க மாநிலத் தலைவர் மாரியப்பன் தலைமையிலான மாணவர்கள் முற்றுகையிட்டு, “அ.தி.மு.க அரசுதான் அனிதாவின் மரணத்துக்குக் காரணம்” என்று கோஷமிட்டனர். தகவல் அறிந்து விரைந்துசென்று, தினகரனை மீட்டுவந்தார் தொல்.திருமாவளவன். காவல்துறையின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு, ஜெயலலிதா சமாதியில் போராட்டம் நடத்தியதும், மாரியப்பன் தலைமையிலான இந்திய மாணவர் சங்கத்தினர்தான். அவர்கள், புழலில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வந்துள்ளனர்.

உச்சிமாகாளி, மாணவி குறிஞ்சித்தேன், வடசென்னை மஞ்சுளா, நுங்கம்பாக்கம் வெண்மணி, செங்கொடி என நூற்றுக்கும் மேற்பட்ட போராளிகளை அடையாளம் காட்டியிருக்கிறது ‘நீட்’ எதிர்ப்புப் போராட்டம்.

“படிப்போம்... போராடுவோம்!” என்பதுதான் இவர்களின் தாரக மந்திரம்.

- ஆ.பழனியப்பன்
படங்கள்: ப.சரவணகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு