பிரீமியம் ஸ்டோரி

மைனாரிட்டி  ஆட்சியை மெஜாரிட்டி ஆக்க, எதிர் முகாமிலிருந்து ஆட்களை வளைப்பதுதான், இதுவரையில் கடைப்பிடிக்கப்படும் அரசியல் தந்திரம். ஆனால், தங்கள் கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் 18 பேரைக் காவுக்கொடுத்து முதல்வர் நாற்காலியைக் காப்பாற்ற எடப்பாடி பழனிசாமி செய்த அரசியலானது, ஜெயலலிதாவே செய்யாதது.

பயப்படுறியா குமாரு?

ஜெயலலிதாவுக்கும் மேலாக சூப்பர் ஜெயலலிதாவாக செயல்படுகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட பன்னீர்செல்வம்கூட ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, ஜெ. இருந்த அறையில் அமரவில்லை; கட்அவுட் வைத்துக் கொள்ளவில்லை; 110-வது விதியை வாசிக்கவில்லை. ஆனால், அவை அத்தனையையும் செய்கிறார் எடப்பாடி. ‘அம்மா வழியில் நடக்கும் அரசு’ எனச் சொல்லிக்கொண்டே அம்மாவுக்கு எதிரான வேலைகளைத்தான் செய்தார். முதல்வர் செல்லும் வழிநெடுக போலீஸ், பேனர்கள், ஃப்ளக்ஸ்கள், பிரமாண்டமான மாவட்ட விழாக்கள் என ஜெயலலிதாவுக்கு நிகராக அல்ல... ஜெயலலிதாவுக்கே கிடைக்காதவை எல்லாம் எடப்பாடிக்கு வாய்க்கிறது. அந்த வரிசையில்தான், தகுதிநீக்கம் என்கிற ஆயுதத்தைக் கையிலெடுத்து, ஜெயலலிதாவே செய்யத் துணியாத காரியத்தைச் செய்திருக்கிறார்கள்.

ஜெயலலிதா தேர்வுசெய்து, வேட்பாளர்கள் ஆக்கப்பட்டு, ஜெ. பிரசாரத்தால் எம்.எல்.ஏ-க்கள் ஆன 18  பேரையும் தகுதிநீக்கம் செய்துவிட்டார்கள். ஜெயலலிதா, அப்போலோவில் இருந்தபோதுதான் அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளின் தேர்தல் நடைபெற்றது. அந்தத் தொகுதிகளின் வேட்பாளர்களை ஜெயலலிதாதான்(?) மருத்துவமனையிலிருந்து அறிவித்தார். அதில், அரவக்குறிச்சி வேட்பாளர் செந்தில்பாலாஜியும் ஒருவர். அவருக்கு இரட்டை இலைச் சின்னத்துக்காக ஜெயலலிதா கையெழுத்துக் கூட போடமுடியாமல் கைரேகை வைத்தார். ஜெயலலிதாவால் தேர்வு செய்யப்பட்ட செந்தில்பாலாஜி, தினகரன் முகாமுக்கு மாறியதால் அவரையும் நீக்கிவிட்டார்கள். மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நிலையில் அறிவிக்கப்பட்ட செந்தில்பாலாஜியையும் பதவிநீக்கம் செய்கிறார்கள் என்றால், ஜெயலலிதாவையே இவர்கள் மதிக்கவில்லையோ!

‘‘என் தலைவி என்னைக் கன்னத்தில் அறைந்தார்’’ எனச் சொன்னார் அ.தி.மு.க ராஜ்ய சபா எம்.பி-யான சசிகலா புஷ்பா. சர்வ வல்லமை பொருந்திய ஜெயலலிதா மீது, இப்படியான குற்றச்சாட்டை யாருமே கூறியது கிடையாது. ஜெயலலிதாவின் அரசியல் வரலாற்றில் இப்படியொரு நிகழ்வு நடந்ததில்லை. அப்படிப்பட்ட சசிகலா புஷ்பாவைக் கட்சியிலிருந்து மட்டும்தான் நீக்கினார் ஜெயலலிதா. அவருடைய எம்.பி பதவியைக் கூட பறிக்க நினைக்கவில்லை. ஆனால், இந்த 18   எம்.எல்.ஏ-க்களும் ஜெயலலிதாவுக்குத் துரோகம் செய்யவில்லை. ஆட்சியைக் கலைக்கச் சொல்லவில்லை. முதல்வரை மட்டும்தான் மாற்றச் சொன்னார்கள். அவர்களுக்கு சசிகலா புஷ்பாவைவிட தண்டனை அதிகம். ஜெயலலிதா செய்ய நினைக்காததை எடப்பாடி செய்கிறார்.

பயப்படுறியா குமாரு?

‘‘எடப்பாடி அரசு மெஜாரிட்டியை நிரூபிப்பதற்குச் சட்டசபையைக் கூட்ட ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என நீதிமன்றத்தில் தி.மு.க-வினர் தொடர்ந்த வழக்கில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ சேர்ந்து கொண்டது ஏன்? தி.மு.க-வுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சியைக் கலைக்க முயற்சி செய்கிறார்கள். அதனால்தான், தகுதிநீக்கம் செய்யப்பட்டார்கள்’’ எனத் துருப்பிடித்த ஆயுதங்களைத் தூக்கிவருகிறார்கள். கடந்த பிப்ரவரியில், ‘‘ஸ்டாலினைப் பார்த்து பன்னீர்செல்வம் சிரித்தார். அவர்களுக்குள் ரகசியக் கூட்டணி இருக்கிறது. ஆட்சியைக் கலைக்க பன்னீர்செல்வம் சதிசெய்கிறார். தி.மு.க-வின் சதிக்கு ஓ.பன்னீர்செல்வம் பலியாகிவிட்டார்’’ என்று சொன்னவர்கள் எல்லாம் எங்கே போனார்கள்? அந்தச் சதிகாரரை இப்போது துணை முதல்வராக்கிவிட்டார்கள். நாளை வழக்குப் போட்ட வெற்றிவேல் திரும்பிவந்தால் இணை முதல்வர் பதவி தருவார்களோ?

ஜெயலலிதா ஏற்படுத்திய ஆட்சியை, ‘ஊழல் ஆட்சி’ன்னு சொன்னார்... கட்சியின் சின்னமான இரட்டை இலையை முடக்க தேர்தல் ஆணையத்துக்குப் போனார்... ஆட்சிக்கு எதிராக போராட்டம் அறிவித்தார்... நீதி கேட்டு உண்ணாவிரதம் இருந்தார். ‘பத்து சதவிகித உண்மையைத்தான் சொல்லிருக்கேன். இன்னும் 90 சதவிகித உண்மையைச் சொன்னா அரசியலே தலைகீழா மாறிடும்’ -இப்படியெல்லாம் சொன்ன பன்னீருக்குக் கம்பளம்... 18 பேருக்குத் தகுதிநீக்கமா? எடப்பாடி ஆட்சி மெஜாரிட்டியை நிரூபிக்க நடந்த வாக்கெடுப்பில், எதிர்த்து ஓட்டுப் போட்ட பன்னீர்செல்வம் உட்பட 12 பேரில் ஒருவருக்குத் துணை முதல்வர். இன்னொருவருக்கு அமைச்சர் பதவி. ஆனால், அவர்கள் மீது பாயாத தகுதிநீக்க அஸ்திரம், எதிர்த்து ஓட்டுப் போடாத தினகரன் ஆதரவு  எம்.எல்.ஏ-க்கள் மீது பாய்ந்திருக்கிறது. நியாயத்தராசு எடப்பாடி பக்கம் அல்லவா சாய்ந்துவிட்டது. இவர்களுக்குத் தகுதித்தேர்வு நடத்தினால் ஆட்சி நிலைக்காது என்கிற பயத்தைத் தவிர வேறு என்ன இருக்க முடியும்.

‘‘எடப்பாடி பழனிசாமியும், தினகரனும் கூட்டாளிகள்’’ என மே தினவிழா பொதுக்கூட்டத்தில் சொன்ன பன்னீர்செல்வத்தைப் புனிதர் ஆக்கிவிட்டு, தினகரனை மாமியார் வீட்டுக்கு அனுப்பத் தயாராகிவிட்டார்கள். இந்த அரசியலில், மக்கள் தேர்வு செய்த பிரதிநிதிகளைப் பந்தாடுகிறார்கள்.

கழகங்கள் இல்லாத தமிழகம் அமைந்தாலும் அமையட்டும். ஆனால், வழக்குகள் இல்லாத வாழ்க்கை வேண்டும்; ரெய்டுகள் இல்லா நாள்கள் வேண்டும் என வாழ்பவர்களுக்குப் பதில் இதுதான்.

பயப்படுறியா குமாரு?

- எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு