Published:Updated:

இரட்டை இலை காய்ச்சல்... உள்ளாட்சிக்கு இல்லை தேர்தல்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
இரட்டை இலை காய்ச்சல்... உள்ளாட்சிக்கு இல்லை தேர்தல்!
இரட்டை இலை காய்ச்சல்... உள்ளாட்சிக்கு இல்லை தேர்தல்!

இரட்டை இலை காய்ச்சல்... உள்ளாட்சிக்கு இல்லை தேர்தல்!

பிரீமியம் ஸ்டோரி

ள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் இழுத்தடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது தமிழக அரசு.

உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ‘உள்ளாட்சித் தேர்தலை, நவம்பர் 17-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும். அதற்கான அறிவிப்பை, செப்டம்பர் 18-ம் தேதிக்குள் வெளியிட வேண்டும்’ என உத்தரவிட்டது. இந்த நிலையில்தான், ‘உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிப்பதில் தற்போது சிக்கலான சூழ்நிலை உள்ளது. 1996-ம் ஆண்டு பிரிக்கப்பட்ட வார்டு வரையறையின்படி, தேர்தல் நடத்த வேண்டுமா என்பதில் ஆணையத்துக்குக் குழப்பம் உள்ளது. வார்டு வரையறைத் தொடர்பாக நீதிமன்றத்தின் விளக்கம் தேவைப்படுகிறது’ என்று உயர் நீதிமன்றத்தில் மாநில  தேர்தல் ஆணையம் மனு செய்துள்ளது.

இரட்டை இலை காய்ச்சல்... உள்ளாட்சிக்கு இல்லை தேர்தல்!

இது குறித்து அ.தி.மு.க வட்டாரத்தில் பேசியபோது, “இரட்டை இலைச் சின்னம் இந்திய தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டுள்ளது. ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் அணிகள் இணைந்துவிட்டால், இரட்டை இலை கிடைத்துவிடும் என்று பார்த்தோம். ஆனால், இரு அணிகளும் இணைந்தும்கூட, தினகரனின் வியூகத்தால் மீண்டும் அதே நிலை தொடர்கிறது. இரட்டை இலை இல்லாமல், உள்ளாட்சித் தேர்தலைப் பற்றி யோசிக்க முடியுமா?” என்கின்றனர்.

தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து, கிராமங்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் சசிகலா தனசேகரனிடம் கேட்டோம். “குறிப்பிட்ட காலத்தில் நடத்த வேண்டிய உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் சட்டமன்றத்துக்கு அவசர அவசரமாக இடைத் தேர்தலை நடத்தினால் உண்மையிலேயே ஜனநாயகம் செத்துப் போய்விட்டது என்றுதான் அர்த்தம். மாநிலத் தேர்தல் ஆணையத்தால் எந்தப் பயனுமில்லை.  மக்களுக்காக ஜனநாயகமா? ஆட்சியாளர்களுக்காக ஜனநாயகமா? மக்களை முட்டாளாக நினைக்கும் ஆட்சியாளர்களுக்கு, தக்க நேரத்தில் மக்கள் சவுக்கடி கொடுப்பார்கள். ஆட்சியாளர்களின் நோக்கமே தேர்தலை எப்படி சந்திப்பது? எப்படி வெல்வது? எப்படி சம்பாதிப்பது என்பதில்தான் இருக்கிறது. ஆட்டுவிப்பது மத்திய அரசு என்றால், ஆடுவது மாநில அரசாக இருக்கிறது” என்றார்.

இரட்டை இலை காய்ச்சல்... உள்ளாட்சிக்கு இல்லை தேர்தல்!

‘உள்ளாட்சி உங்களாட்சி’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நந்தா சிவகுமார், “உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளிப்போட நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் சொல்லியிருக்கும் காரணங்கள், வேதனை அளிக்கிறது. உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக்காலம், 2016 அக்டோபர் 24-ம் தேதியே முடிந்துவிட்டது. தேர்தலைத் தள்ளிப்போட மாநில அரசுகளோ, தேர்தல் ஆணையமோ பல காரணங்களைச் சொன்னாலும், நீதிமன்ற உத்தரவை வைத்தே உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியும். குஜராத் உட்பட பல மாநிலங்களில் இப்படி நடந்திருக்கிறது.

நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களைப் போன்றே உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலும் முக்கியமானது. மத்திய - மாநில அரசுகள் வலுவாக இருப்பதால், உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் தேவையில்லை என்று அரசுகள் கருதினால், அது மிகவும் மோசமான போக்கு. உள்ளாட்சி அமைப்பு, மாநில அரசுகளின் கைப்பாவை என்று கருதப்படும் நிலை உள்ளது. நீர்நிலைகள் பாதுகாப்பில் தொடங்கி, அனைத்து அடிப்படை வசதிகள் தொடர்பாகவும், கிராம சபைக் கூட்டத்தைக் கூட்டி மக்கள் பிரதிநிதிகள் முடிவெடுப்பார்கள். திட்டத்துக்கான நிதி, கிராம சபையில் இருந்தே பெறப்படும். வரவு - செலவு கணக்கும் அங்கு வைக்கப்படும். பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம் போல, உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடும் ஓர் அடிப்படை உரிமையே. அதிகாரக் குவியல் என்பது ஒரே இடத்தில் இருக்கக் கூடாது என்பதற்காகவே, உள்ளாட்சி என்பது நாட்டின் சட்டமாக்கப்பட்டு, நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது. தேர்தலைத் தள்ளிக்கொண்டே போவதின் மூலம், இப்போது சட்டத்தையே மீறுகிறார்கள்” என்றார் நந்தா சிவகுமார்.

இரட்டை இலை காய்ச்சல்... உள்ளாட்சிக்கு இல்லை தேர்தல்!

உள்ளாட்சித் தேர்தலும் நடக்கவில்லை. ஆர்.கே.நகர் தொகுதி தேர்தலும் நடக்கவில்லை. இந்தநிலையில், ‘தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ-களின் தொகுதிகள் காலியாக இருக்கின்றன’ என இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அவசரமாக கடிதம் அனுப்புகிறார்கள். உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் இருப்பதற்குக் காரணம், இரட்டை இலை காய்ச்சல்தான்.

தேர்தலை நடத்துவதைவிட தேர்தல் ஆணையங்களுக்கு வேறு என்ன வேலை?

- ந.பா.சேதுராமன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு