லியாகத் அலி முன் கதவைத் திறந்துவைத்து, ‘`ஏறிக்கோ பச்சை’’ என்றான். அவன் கதவைத் திறந்துவைத்துக்கொண்டு காத்திருப்பது தெரியாமல், வாசலில் நிற்கிறவர்களிடம், ‘`எல்லாரும் இருங்க. போயிட்டு வாரேன்’’ என்று சொல்லிக்கொண்டு இருந்தாள் பச்சை.

லியாகத் மகள் கல்யாணத்துக்கு அவள் வருவாள் என்று லியாகத்தே எதிர்பார்த்தி ருப்பானா என்று தெரியாது. ஒரு வக்கீல் வீட்டுக் கல்யாணத்துக்கு அவருடைய கட்சிக்காரர்கள் எல்லோருமா வருகிறார்கள்? ஆனால், அவள் வந்ததில் லியாகத்துக்கு மட்டும் அல்ல, கல்யாண வரவேற்புக்கு வந்திருந்த பாதிப்பேருக்குச் சந்தோஷம் என்றுதான் தோன்றியது. அவளும் ரொம்பச் சந்தோஷமாகத்தான் இருந்தாள். இருபத்தைந்து வயதில் ‘7 டயமண்ட்ஸ்’ மெல்லிசைக்குழுப் பாடகியாக எப்படியிருந்தாளோ, அதே துறுதுறுப்போடும், மலர்ச்சியோடும், அவள் விரும்பி அணிகிற கறுப்புக் கண்ணாடியுடன், சிரித்துச் சிரித்து எல்லோரையும் வழியனுப்பியபடி இருந்தாள். வலது தோளிலும் இடது தோளிலும் காரை எலும்பைத் தொட்டு ஒரு இணுக்குக் கீழே தொங்குவதுபோல மல்லிகைச் சரம். வெள்ளி நீல பலூன் கொத்துகளுக்கு இடையிலும், நெடுநெடுவென வாசலில் கட்டப்பட்டிருந்த வாழை மரத்தைத் தொட்டுக்கொண்டு இருக்கையிலும் பச்சைக்குப் புதுப் பொலிவு வந்திருந்தது. குறிப்பாக, அவள் முகத்தைப் பார்த்துப் பேசிக்கொண்டு இருந்த, வியர்வையில் ஜிப்பா நனைந்த ஒரு நடுத்தர வயதுக்காரரின் முகத்தில் ஒரு ரசம் பூசப்பட்ட சந்தோஷம். பச்சையை ஒவ்வொருவரும் முப்பது வருடங்களுக்கு முந்தியே நிறுத்தியிருந்தார்கள். தானும் அப்படியே முப்பது வருடங்களுக்கு முன்னால் போய்விட விரும்பினார்கள்.

‘`நீ நேரே ஊருக்குதானே சுந்தரம்?’’ என்று தாம்பூலப் பை கொடுக்கும்போது லியாகத் கேட்டான். ‘`வேற எங்கே... வீட்டுக்குதான். என்ன விஷயம், சொல்லு?’’ என்று நான் சொல்கையில், அவன் என் பக்கமிருந்து திரும்பி, தூரத்தில் வேறு யாரோ உறவினர் குடும்பத்துடன் நிற்கிற அவனின் மனைவியைக் கையசைத்துக் கூப்பிட்டான். அவர் அங்கிருந்து, ‘என்னையா?’ என்பதுபோல சைகையில் அவருடைய நெஞ்சில் வைத்துக் கேட்க... லியாகத், ``பச்சையை வரச் சொல்லு’’ என்று சற்று உரத்த குரலில் சொன்னான். அது அங்கே கேட்டிருக்க வாய்ப்பில்லை. பக்கத்தில் நின்ற வக்கீல் குமாஸ்தா சீனிவாசகம்தான், அவரே வேகமாகப் போய்ப் பச்சையை அழைத்துவந்தார். அவருக்கும் கூட்டத்துக்கு மத்தியில் பச்சையை அப்படிக் கூட்டிக்கொண்டு ஒன்றாக நடந்துவருவதில் சந்தோஷம்.

‘`நீ தாராபாளையம் வழியா போறதுக்குப் பதிலா, ஒட்டாங்குளம் பாதையில போ. போகிற வழியில பச்சையைக் கூட்டு ரோட்டில இறக்கிவிட்டுரு’’ என்று லியாகத் கேட்டுக்கொண்டான். ‘`உனக்கு ஒண்ணும் சங்கடமில்லையே?’’ என்றான். எனக்கு என்ன சங்கடம்? பச்சையை உத்தேசித்து இதைக் கேட்டிருந்தால்கூட, எனக்கு எந்தச் சங்கடமும் கிடையாது. மேலும், அந்தப் பாதை எனக்கு ரொம்பப் பிடிக்கும். கரையடியான் குளம் தாண்டி, ஆனாவிலக்கு வரை ஒரே பூவரச மரமும், தங்க அரளி மரமுமாக இருக்கும். பொதுவாக, பூவரச மரங்களை இப்படி வரிசையாக நட்டுவைத்திருக்கிற பஞ்சாயத்து ரோட்டை வேறு எங்கும் பார்த்தது இல்லை.

கரையடியான் குளத்தில் குளிக்கவந்த வயதுப்பெண் ஒருத்தி எப்போதோ, தீட்டுத் துணியை மாற்றாமல், விளையாட்டுப் போக்கில் கரையடியானைத் தாண்டிப் போய்விட்டதாகவும், மறுநாள் பூவரச மரத்தடியில் அவள் ஒரு குருத்து வாழைஇலைபோலக் கிடந்ததாகவும், அப்படி அவள் கிடந்த இடத்துப் பூவரச மரம் மஞ்சளுக்குப் பதிலாக அவ்வளவு பூவும் செக்கச் செவேல் என்று பூத்திருந்ததாகவும் ஒரு கதை உண்டு. கரையடியானுக்குக் கொடை எடுக்கும்போதெல்லாம் அந்த மரத்தின் தூரில் சுற்றுக்கட்டாக ஒரு பளபளப்பான ஜரிகை வஸ்திரத் தைக் கட்டி, ஒரு செவ்வந்திப் பூ மாலையைப் போட்டிருப்பார்கள். இவ்வளவும் ஞாபகம் வந்ததே அது வழியாகப் போனதுபோல்தான். இன்னொரு முறை பச்சையுடன் போனால்தான் என்ன?

வந்த இடத்தில் பச்சை, வரவேற்பு மேடையில் இருந்த மாப்பிள்ளை பெண்ணுடன் படம் எடுத்துக்கொண்டாள். லியாகத் அலி, மணமகனுக்கு அவளைப் பாடகி என அறிமுகம் செய்துவைத்தான். ‘இவர் என்ன சொல்கிறது. நான் பாடிக் காட்டுகிறேன்' என்று திடீரென்று வந்த உற்சாகத்தில் மைக்கைக் கேட்டாள். ஒரு மைக் உபயோகத்துக்குத் தயாராக இல்லாததால், வரத் தாமதம் ஆயிற்று. பச்சை அதற்குள் லியாகத் அலியின் குடும்பத்தை மேடைக்கு அழைத்தாள். லியாகத் அலியின் மனைவி கூச்சத்தால் வரவில்லை. பச்சையே கீழே போய்க் கட்டாயப் படுத்திப் படியேற்றி வருகையில், தலைக்கு மேல் துணியை இழுத்துவிட்டுக் கொள்வது அவருக்குச் சிரமப்பட்டது. பச்சை உற்சாகமடைந்திருந்தாள். அவளின் மேடை நாள்களை அவள் அடைந்துவிட்ட நெருக்கம்.

மைக் வந்ததும், அதைத் தாழ்ந்த குரலில் ``ஹலோ... ஹலோ...’’ சொல்லிச் சோதித்துக்கொண்டாள். கீழே இவளையே பார்த்தவராக இருந்த மண்டப உதவியாளரிடம் ஒலி அளவைச் சரிசெய்யச் சொன்னாள். ஒரு திருகை இடம் வலமாகத் திருப்புவதுபோலக் கொஞ்சம் கொஞ்சமாகக் கூட்டிக் குறைத்துச் சைகை செய்து, அவள் விரும்பிய ஒலியை அடைந்ததும், `சரி’ என்றோ, `அருமை’ என்றோ அவருக்குச் சொல்வதுபோலப் பெருவிரலையும் சுட்டுவிரலையும் வளைத்துக்காட்டி ஒரு குலுக்கல்... தன் விரல்களை முத்தமிட்டபடி ஒரு சில நிமிடங்கள் எதிரே இருக்கும் கூட்டத்தைப் பச்சை பார்த்தாள். எதிர் நாற்காலிகளில் இருந்த எல்லோரும் அவளுக்குள் வந்து உட்கார்ந்ததில் அவள் நிரம்பியிருந்தாள். எந்த இசைக்கருவியின் சேர்மானமும் இன்றிப் பாட ஆரம்பித்தாள். ‘மாலையில் யாரோ மனதோடு பேச…’

நான் அப்போது சொர்ணராஜுவுடன் பேசிக்கொண்டு இருந்தேன். சொர்ணராஜ் அவருக்குத் தெரிந்த, சர்க்கஸ் கோமாளியாக இருந்துவிட்டு வயோதிகம் காரணமாகக் கிராமத்துக்கு வந்து, போனவாரம் எதிர்பாராமல் இறந்துபோன ஒருவரைப் பற்றியும், சர்க்கஸ் தொடர்பான மலையாளப் படம் ஒன்றையும் மாற்றி மாற்றிச் சொல்லிக்கொண்டு இருந்தார். அவர் இறந்துகிடந்த விதத்தை அவரால் வார்த்தைகளில் நிகழ்த்த முடிந்தது. கோடு போட்ட பைஜாமாவுடன் பிரம்பு சோபாவின் ஒரு முனையில் காலைத்தூக்கி வைத்திருந்த வாக்கில் இறந்து கிடந்தார் என்று சொல்கையில், சொர்ணராஜின் கைகள் இரண்டும் கால்கள்போல மடங்கி ஓர் உயரத்தில் என் முன்னால் காற்றில் சர்க்கஸ் மிருகங்களின் சாண வாடை உண்டாக்கியபடி நீண்டிருந்தன.

இரண்டு பேருமே பேச்சை அந்தரத்தில் விட்டுவிட்டுக் கேட்டோம். பச்சை இப்போது ‘நெஞ்சமே பாட்டெழுது, அதில் நாயகன் பேரெழுது’ என்று கண்களை மூடிப் பாடி, காணாமல் போயிருந்தாள். மறுபடியும் மேடையில் வந்து இறங்கி, ‘மோகம் வந்ததும் ஓ... மௌனம் வந்ததோ’ என்று பாடி மீண்டும் `மாலையில் யாரோ...’ பாடி முடித்ததும், கைகளுக்குள் மைக்கை வைத்தபடி ரொம்ப நேரம் குனிந்து சபையை வணங்கிக்கொண்டே நின்றாள். ஒரு கல்யாண வரவேற்புக் கூட்டம் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு மட்டுமே குறைவாகத் தட்டியது. பச்சை, கண்களைத் துடைத்துக்கொள்ளக் கைக்குட்டையை உபயோகித்தாள். மாப்பிள்ளை, பெண்ணுக்குக் கை கொடுத்தாள். லியாகத் அலி மனைவியைக் கட்டிப்பிடித்துவிட்டு இறங்கினாள். மேடையில் பரிசு கொடுக்க ஏறியபடி படியில் நின்றவர்களில் ஒருவர் அவளுடன் கை குலுக்கினார். அந்தக் கையை அமுக்கி, தன் அடிவயிற்றில் வைத்துக்கொண்டாள். எனக்குப் பச்சையை ரொம்பப் பிடித்துப்போய்விட்டது.

லியாகத் அவளை ``போகிற வழியில் விட்டுவிடுகிறாயா?’’ என்று கேட்கும்போது, எனக்குச் சந்தோஷம்தான். என்னிடம் சொன்ன பிறகு பச்சையையும் லியாகத் கூப்பிட்டான். ‘`இது என் ஃப்ரெண்டு சுந்தரம். நெடுங்காலிலே இருக்கான். உன்னைப் போகிற வழியில் இறக்கிவிட்டுருவான்’’ என்று விவரம் சொல்லும்போது, ‘`சாரை எனக்குத் தெரியும். பெரிய புலவர் அல்லவா?’’ என்றாள். லியாகத் சிரித்தான். என் தோளில் அடித்தான். ‘`புலவரா? எனக்குத் தெரிஞ்சு கணக்கு வாத்தியான்’’ என்று கையை எடுக்காமல் அப்படியே வைத்திருந்தான். பச்சை, லியாகத்திடம் சொன்னாள், ‘`வெச்ச கையைத் தோளிலே இருந்து எடுக்காமல் இப்படிப் பேசுகிறதைப் பார்க்க நல்லா இருக்கு சார்’’ என்றாள். ‘`இப்படியே தோளிலே கையை வெச்சுக்கிட்டு ரெண்டு பேரும் பேசிக்கிட்டே இருங்க. நான் ஏதாவது மினி பஸ் புடிச்சுப் போயிக்கிட்டே இருக்கேன்’’ என்றாள். சற்று ஏதோ ஓர் ஒட்டுதல் பச்சையிடம் வந்திருந்தது. ‘`அந்தப் பாட்டைக் கேக்குறதுக்கு முன்னாலகூட நான் அப்படிப் போயிருப்பேன். பாட்டைக் கேட்ட பிறகு விட்டுட்டு நான் மாத்திரம் இந்த மண்டபத்தைவிட்டுப் போனால், பாவம் விடாது. ஸ்வர்ணலதா ஏறாமல், என் வண்டி ஸ்டார்ட் ஆகாது இனிமேல.’'

பச்சை நான் சொன்னதை எல்லாம் உதறிவிட்டு, ஸ்வர்ணலதாவை மட்டும் வைத்துக்கொண்டாள். ``பாவம் தாயில்லாத பிள்ளை. முப்பத்தேழு, முப்பத்தெட்டு வயசுக்குக் கல்யாணம் காட்சி இல்லாமலேயே போய்ச் சேர்ந்துட்டா புண்ணியவதியா. அள்ளி அள்ளி, `நீ வெச்சுக்கோ... நீ வெச்சுக்கோ’னு எங்கிட்டே, உங்ககிட்டே, எல்லார்கிட்டேயும் கொடுத்துட்டு...’’ என்றாள். எனக்கு ஒரு சிறிய கணம் பச்சையின் கழுத்தைப் பார்க்கத் தோன்றியது. ஏழெட்டு வருடங்கள் பச்சையும் `இதய ராகம்’ எஸ்.பி.பி நாதனும் ஒன்றாகத்தான் இருந்தார்கள். முன் பற்களின் துருத்தும் நீளத்தின்மேல் இழுத்து மூடிய உதடுகளுடன் சிரிக்கும் ஓர் அழுத்தமான ஊதா உடையணிந்த ஸ்வர்ணலதாவின் முகம், பச்சையின் முகத்தின்மேல், காற்றில் படர்ந்து சன்னமான துணிபோல அப்பி விலகியது. பச்சையின் முகம் தீர்மானிக்க முடியாத ஒருவிதத்தில் தெளிவாக இருந்தது.
ரியர் மிரரில் ஒரு பஞ்சுமிட்டாய்க்காரர் தோளில் கம்பைச் சாய்த்து, மண்டப வாசலுக்குப் பக்கம் போவது தெரிந்தது. வண்டி லேசாக உறுமிக்கொண்டிருக்க, நான் இடதுகையை கியரின் மேல் குமிழாக்கியிருந்தேன்.

``என்ன, முடிஞ்சுதா?’’ என்று காரின் முன் கதவைத் திறந்தவாக்கிலே வைத்தபடி லியாகத் பச்சையைப் பார்த்துச் சத்தம் கொடுத்தான். முகத்தில் எரிச்சல், கோபம் ஒன்றுமில்லை. ஒரு வெள்ளாட்டுக்குட்டியைப் பார்க்கிற பார்வைதான் அது. ‘`அந்தப் பஞ்சு மிட்டாய்க்காரரை எதுக்கு விடுதே? அவரையும் ரெண்டு நிமிஷம் கொஞ்சிவிட்டு வந்திரேன். மண்டபத்திலே யாரும் விட்டுப்போகக் கூடாது அல்லவா?’’ லியாகத் பச்சையைப் பார்த்துச் சொன்னவுடன், ‘`வந்துட்டேன்... வந்துட்டேன்’’ என்று பாவனையாக ஓட்டம் காட்டி வந்தாள்.

``பொறத்தாலே இருந்துக்கிடுதேனே... முன் சீட்டுல காலைத் தொங்கப் போட்டுக்கிட்டு உட்கார நான் என்ன அதிகாரியா?’’ என்று பின் கதவைத் திறக்கப் போனாள். ‘`இப்பிடி வந்து உக்காரு. உன் பாட்டைக் கேட்டுக்கிட்டே புலவர் டிரைவ் பண்ணப் போகிறாராம்'' லியாகத் அப்படிச் சொன்னது பச்சைக்குச் சந்தோஷமாக இருந்திருக்கும். வெட்கப்பட்டுக்கொண்டு கறுப்புக் கண்ணாடியைக் கழற்றி, பைக்குள் வைத்தவளாக, பச்சை காருக்குள் ஏறியவிதம் எனக்குப் பிடித்திருந்தது.

‘`எல்லாத்தையும் எடுத்துக்கிட்டையா?’’ லியாகத் ஒரு பொதுவான விசாரிப்பாக எங்கள் இரண்டு பேரிடமும் கேட்டபோது, லியாகத்தின் வக்கீல் குமாஸ்தா ஒரு சிறிய பையைக் கொண்டுவந்து, பின் கதவைத் திறந்து வைத்தார். பிரியாணி வாசம் அடித்தது. ‘`எங்க அய்யாவுக்குப் பிடிக்கும்னு நாந்தான் வக்கீல் சார் வீட்டு அம்மாகிட்டே சொன்னேன்’’ என்று சொன்ன பச்சையின் குரல் உடைந்திருந்தது. லியாகத் மூடாமல் ஒருச்சாய்த்து இருந்த கதவை நன்றாகத் திறந்து பச்சையின் உச்சந்தலையில் கைவைத்து, ‘`சரி, சரி. இருக்கட்டும்’’ என்று ஆறுதல்படுத்தி, ‘`நான் கேட்டதாகச் சொல்லு’’ என்றான். பச்சை என் பக்கம் திரும்பி, ‘`உடம்புக்கு முடியலை. நல்லா இருந்தா அவரும் என்கூட வந்திருப்பாரு. எல்லாரு வீட்டுப் பந்தலிலேயும் நாலு காலுன்னா, அதில தன் காலு ஒண்ணா இருக்கணும்னு நினைப்பாரு’’ இதைச் சொல்லும்போது பச்சை முன்கண்ணாடி வழியே வெகு தூரம் பார்த்திருந்தாள்.

பின்னால் ஒரு டயர் வண்டி, மாட்டுத் தீவனப் புல்லை ஏற்றிக்கொண்டு, நான் காரை நகர்த்துவதற்காகக் காத்திருந்தது. அதிக பாரமில்லாத வண்டிதான். ஆனால், இழுத்துப் பிடித்திருந்த மூக்கணாங்கயிற்றால் வலப்பக்கத்துக் காளை தலையை உயர்த்தி, கண் செருக நின்றவிதம் என்னவோ செய்தது. நான் குனிந்து லியாகத் துக்குக் கைக் காட்டினேன். பச்சை தன் இரண்டு கைகளையும் கூப்பி வலது பக்கம் உயர்த்தி எம்.ஜி.ஆர். ஞாபகம் வருவதுபோல, லியாகத்தைக் கும்பிட்டாள்.

நான் சகுனம் எல்லாம் பார்ப்பதில்லை. ஆனால், வண்டி நகரும்போது எதிரே வந்த ஒரு முதிர்ந்த நரிக்குறவரையும் அவருடைய சம்சாரத்தையும் பார்க்க ரொம்பப் பிடித்திருந்தது. எவ்வளவு வயதாக வேண்டுமோ, அவ்வளவு வயது அவர்களுக்கு ஆகிவிட்டது. இனிமேல் ஆவதற்கு வயது என்ற ஒன்றே அவர்களுக்குக் கிடையாது. அப்படித்தான் அந்த முகமும் கண் இடுங்கலும் சிரிப்பும் இருந்தன. எங்களுக்கு வழிவிட ரோட்டின் ஓரத்தில் ஒதுங்கி நின்று, எங்களை வழியனுப்புவதுபோல, நாங்கள் தாண்டிப் போகும்வரை அவர்கள் விடாமல் கையசைத்துக்கொண்டே இருந்தார்கள்.

பச்சை என்னைப் பார்த்து, ‘`ஒரு நிமிஷம், ஒரு நிமிஷம்’’ என்றாள். சற்று நிறுத்தச் சொல்லும் சைகையில் அவளுடைய கை தணிந்தது. மடியில் இருந்த பையின் மூடிய நிலையில், இரண்டு பித்தளைக் காம்புகளின் நுனியில் குமிழ் குமிழாக ஒன்றையொன்று திருகிக்கொண்டிருந்த பூட்டு அமைப்பைத் தளர்த்த, அது தன் வெல்வெட் சுருக்கங்களைத் திறந்துகொண்டது. சமீபத்தில் எங்கும் புழக்கத்தில் பார்க்க முடியாத, ஒரு மொடமொடப்பான பச்சை நிற ஐந்து ரூபாய்த் தாள் ஒன்றை எடுத்து அந்த வெற்றிலைக் காவிச் சிரிப்பிடம் கொடுத்துவிட்டுக் கும்பிட்டாள். மறுபடியும் அந்த இரண்டு குமிழ்களும் பொருந்தும் சத்தம் கேட்டது.

‘`பத்து வருஷத்துக்கு முந்தி விருதுநகர் மாரியம்மன் கோயில் கச்சேரிக்குக் கொடுத்த அஞ்சு ரூவா புதுக்கட்டு. பிரிக்காம அப்படியே வெச்சிருந்ததை எடுத்துக்கிட்டு வந்தேன். செல்லுமோ செல்லாதோ... அதுகூடத் தெரியாது. பாவம், அதுகளை ஏமாத்தின மாதிரி ஆகிவிடக் கூடாது” பச்சை என்னிடம் சொன்னாள்.

‘`இது ஏமாத்துற முகம் கிடையாதுன்னு அவங்களுக்கும் தெரியும்’’ நான் இப்படிச் சொன்னதும், பச்சை தன் வலது கையை நெஞ்சோடு வைத்துக் குனிந்தாள். பொதுவாக இது சினிமா சம்பந்தப்பட்டவர்கள் பழக்கம். பச்சை அப்படிச் செய்தது அழகாக இருந்தது. மூன்றும் ஒரே சமயத்தில் நடந்தன. இதயத் துடிப்புப்படும்படி விரல்கள் நெஞ்சை ஒத்தின; குனிந்த முகத்தில் கண்கள் மூடியிருந்தன; உதடுகள் பிரியாமல் மூடி ஒரு மகிழ்ச்சியை நிகழ்த்திக் காட்டின.

சற்றுக் கூடுதலாக அணிந்திருந்த வளையல்களை அதற்கு முந்தைய அசைவின் சரிவிலிருந்து நகர்த்தி நேராக்கிக்கொண்டாள். மூன்று விரல்களில் மோதிரம் இருந்தன. ஒன்று, நவகிரக மோதிரம். ஒன்று, நெளிவு மோதிரம். விரலுக்குப் பொருந்தாமல் கடைசிக் கணு முழுவதையும் மூடுவதுபோல் பெரியதாக ஒன்று. ஒரு மின்னல்போல என் பார்வை அந்த மூன்று விரல்களிலும் கீறல் கீறலாக விழுந்து பச்சையின் மேல் படர்ந்து ஒளிர்ந்தது.

‘`மழை வரும்போல இருக்கு. மின்னுது’’ பச்சை முன் பக்கமே பார்த்துக்கொண்டு இருந்தாள். அதிகம் இமைக்காமல் இருந்த ரப்பை முடிகள் முன்கண்ணாடியைத் துடைத்துவிடும் அளவுக்கு வளைந்திருந்தன.

‘`வரட்டும். பெய்யட்டும். வெத்து ரோட்டைப் பார்த்து ஓட்டுகிறதைவிட அது நல்லாத்தான் இருக்கும்’’ பேச்சு இயல்பான தடத்தில் தொடங்கிவிட்டதுபோல இருந்தது. முகத்தைத் திருப்பாமல், இடது காது கூர்மையாக அவளைக் கேட்கத் தயாராகிவிட்டது. ஆனால், அந்தப் பக்கமிருந்து எந்தப் பேச்சும் இல்லை.

``என்ன, பேச்சையே காணோம்?’’ பச்சை என்று பெயர் சொல்லவில்லை. பச்சையிடம்தான் கேட்டேன்.

தொட்டு உலுக்கினதுபோல ஒரு குரலில், ‘`என்ன கேட்டீங்க?’’

‘` `பேச்சையே காணோமே’ன்னேன்.'’

‘`சில பேரைப் பார்த்தால் நிறையப் பேசணும்னு தோணும். சில பேரைப் பார்த்தால் ஒண்ணுமே பேசக் கூடாதுன்னு தோணும்.’’

‘`என்னைப் பார்த்தா பேசக் கூடாதுன்னு தோணிட்டுதாக்கும்?’’

‘`அது ஒரு மரியாதை. நல்லவங்ககிட்டே வருகிற மரியாதை.”

``நான் நல்லவன்னு யாரு சொன்னாங்க அப்படி?’’

‘`யாரும் சொல்ல வேண்டாம். மனசுக்குள்ளே தானாத் தெரியும்.”

இந்தச் சமயத்தில் அவளுடைய முகத்தைப் பார்க்கும் அவசியம் இருந்தது. அதைச் சொல்லும் நேரத்தில் அந்த முகம் எப்படி இருக்கிறது என்று தெரிந்துகொள்ள இடது பக்கம் திரும்பினேன்.

`‘வக்கீல் சார் உங்களைப் பத்திச் சொல்றதைக் கேட்டிருக்கேன்.’’

‘`அவன் உங்ககிட்டே என்னைப் பத்திச் சொன்னானா?’’

‘`தனியாக் கூப்பிட்டு, `இங்கே வந்து உட்காரு, கேளு...’னா சொல்வாங்க. டாக்டர்கிட்டே போனாலும் வக்கீல்கிட்டே போனாலும் எல்லார் காதிலேயும் எல்லாம்தான் விழுது. வக்கீல் சார் அவர் முன்னால இருக்கிற யார்கிட்டேயோ உங்களைப் பத்தி, அப்படிப் புலத்திப் புலத்திப் பேசுதாரு. சுத்தி இருக்கிற கட்சிக்காரங்க எல்லாருக்கும் வந்திருக்கிற ஆளு எப்போடா எழுந்திருச்சுப் போவானு இருந்திருக்கும். ஆனா, எனக்கு உங்களைப் பத்தி இன்னும் கொஞ்சம் பேசுனா நல்லதுனு இருக்கு.’’

பச்சை இப்போதும் என் பக்கம் திரும்பவில்லை. நான் பார்த்த அந்த அரைத் தோள் வட்டத்தில்கூட எதிர்க் கண்ணாடியில்தான் பதிந்திருந்தாள்.

``வக்கீல் சார் அவர் கையில இருந்த புஸ்தகத்திலே இருந்து வரி வரியா நீங்க எழுதினதை வாசிச்சுக் காட்டினாரு. எனக்குத் தலையும் புரியலை. வாலும் புரியலை. ஆனால், நல்லா இருந்தது.’’

‘`புரியலை. ஆனா, நல்லா இருந்துதா?’’

‘`ஆமா. இங்கே இருந்து ஒரு மீன் துள்ளி ஆத்தில அந்தப் பக்கம் குதிக்கு. கொஞ்ச நேரத்திலே அதே மீன் அங்கே இருந்து மறுபடியும் இங்கே குதிக்கு. அப்படித்தான் இருந்தது கேட்கும்போது.’’

பச்சை குரல் வேறு மாதிரி இருந்தது. பாடுவது போலவும் இல்லை, பேசுவதுபோலவும் இல்லை. மீன் துள்ளுவது மாதிரி. நான் கியர் மாற்றி, இடது புறம் ஒதுக்கி, வண்டியை அப்படியே நிறுத்தியிருந்தேன். `‘கையைக் கொடுங்க’’ என்றேன். ‘அப்படித்தான் இருந்தது’ என்று பதில் சொல்லிவிட்டுக் கையை நீட்டாது இருந்தவளிடம், ‘`கையைக் கொடுங்க பச்சை’’ என்றேன். நெஞ்சில் சினிமாக்காரர்போல பதித்து எடுத்து, வலது கையை என்னிடம் கொடுத்தாள். என் கைக்குள் வைத்துக்கொண்டேன்.

‘`அதே மீன்தான்னு எப்படித் தெரியும். வேற மீனா இருக்காதா?’’

`‘இல்லை. அதே மீன்தான்.’’

‘`எப்படிச் சொல்லுதீங்க?’’

‘`எல்லாத்தையும் எப்படி எப்படினு கேட்க முடியாது. எல்லாத்துக்கும் எப்படி எப்படினு சொல்லிரவும் முடியாது.’’

நான் பேசாமல் இருந்தேன். பச்சை என் கையில் இருந்து மெதுவாகத் தன் கையை உருவிக்கொண்டாள்.

‘`சில சிலதை எப்படினு சொல்லவும் கூடாது’’ இதைச் சொல்லும்போது அந்த முகம் என் பக்கம் திரும்பி விலகியதோ என்னவோ... நான் ரோட்டைப் பார்த்துக்கொண்டு இருந்த நொடி அது. எனக்குள் ஒரு நொடி நேர அரை வட்டத்தில் இங்கிருந்து தவ்வி, அங்கிருந்து மீன் துள்ளி ஆற்றுக்குள் செருகியது.

``எத்தனை லைட் மியூசிக் போறோம். எத்தனை ஸ்டேஜ்ல பாடுதோம். ஒரு நாளைக்கு, மத்தவங்க யாரும் கை தட்டாத இடத்தில் ஒருத்தன் மட்டும் ரசிச்சுக் கை தட்டுவான். அவந்தான் அதுக்கு அப்புறம் ஊர் ஊராகக் கைதட்டிக்கிட்டே வருவான். அவன் தட்டுறதுதான் கூடவே வரும். அது மட்டும்தான் காதுலே விழும்’’ - இதற்கு அப்புறம் கொஞ்சம் அமைதியாக இருந்து, ‘கலகலனு ஓடுகிற ஆத்துக்குள்ளே இங்கே இருந்து அங்கே தாவும்; அங்கே இருந்து இங்கே தாவும்’ வளையல்கள் சரிய, பச்சை தன் வலது கையை அசைத்த இடத்தில் சத்தம் காட்டாமல் மீன் துள்ளும் ஓர் ஆறு ஓடிக்கொண்டு இருந்தது.

மறுபடியும் வண்டியைக் கிளப்பி, ரோட்டில் ஏறுகையில் மரங்கள் மழை வருவதை முன் உணர்ந்திருந்தன. அப்பிக்கொண்டு இருக்கும் ஒரு மரப்பல்லிக்கு, கிளையில் அமரும் பறவைக்கு. கொத்துக் கொத்தாகக் கனிந்த பழங்களின் சிறு விதை சுமந்து திரியும் எறும்புகளுக்கு மழை வருவது தெரிந்துவிடுகிறது. ஏன், ஜல்லியும்,கப்பியும், தாரும் மினுங்கும் இந்தப் பாதைக்குக்கூடத் தெரிந்திருந்தது. இது இப்படியே மினுமினு என்று போகும். நான் முகப்பு விளக்கைப் போட்டுக்கொண்டேன் இப்போது. அப்படியே கூட்டு ரோட்டில் போய்ச் சேரும். வலது பக்கமாகப் போனால், தாராப்பாளையம். இடது பக்கம் என்றால், ஒட்டாங்குளம். பச்சை சொன்ன ஆறு இதுவாகத்தான் இருக்க வேண்டும். இந்த ரோடாகத்தான் இருக்க வேண்டும்.

``இப்போது பாடச் சொன்னால் பாடுவீங்களா, பச்சை?’’ என்று நான் கேட்கும்போது அவள் வாய்க்குள் எதையோ பாடிக்கொண்டு இருந்தாள். அந்தப் பாடலின் அடிகள் முழுவதையும் பாட எடுத்துக்கொண்ட நேரத்தில், அவளுடைய நாசி சுருதி சேர்க்கும் கீழ்க் குரலுக்கு ஊடாகக் கொஞ்ச தூரம் என் வாகனத்தைச் செலுத்தப் பிடித்திருந்தது.

அவள் தன்னைச் சற்று வேறுவிதமாக வடிவமைத்துக்கொண்டாள். சிறு அசைவுகளின் மாயத்தில் அவளுடைய உருவம் மாறுவதுபோல இருந்தது. எல்லாவற்றுக்கும் நிறைவுபோல, அவள் தன் புடவைத் தலைப்பைப் பின்பக்கமாகக் கொண்டுபோய் வலது தோள் வழியாக இழுத்துப் போர்த்திக்கொண்டாள். ஏற்கெனவே லியாகத் வீட்டு வரவேற்பில் அவள் உடுத்தியிருந்த அதே சேலை இப்போது ஒரு தாழம்பூ நிற, வாடாமல்லிக் கறையிட்ட பட்டுப் புடவையாகிவிட்டதுபோல இருந்தது. மணியோசை கேட்பதாகவும்... புறாக்கள் பறக்கும் சிறகடிகூடக் கேட்டது.

``ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன். அருள்மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்...’’ பச்சையின் முகம் பளிங்குபோலாகியிருந்தது. ‘`உன் இறைவன் அவனே அவனே, எனப் பாடும் மொழி கேட்டேன்...’’ என்ற இடத்தில் ஒரு நெடுஞ்சுடர் ஒளிர்ந்தது.

மழை விழ ஆரம்பித்து வைப்பர்களின் துடைப்பில் துளிகள் வழியும்போது அவள் இரண்டு மூன்று வரிகளைத் தாண்டியிருந்தாள். ``காதல் கோயில் நடுவினிலே கருணை தேவன் மடியினிலே யாரும் அறியாப் பொழுதினிலே அடைக்கலம் ஆனேன் முடிவினிலே...’’ என்ற இடத்தில் நானும் பாட ஆரம்பித்திருந்தேன். பச்சையின் குரலும் என் குரலும் பின்னிக்கொண்டு ஒரு பந்தலில் படர்வதுபோல இருந்தது.

``உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்...’’ என்ற இறுதி வரிகளை நான் மட்டும் பாடிக்கொண்டு இருப்பது எதிரே வந்த வாகனத்துக்கு வெளிச்சம் குறைத்து வெளிச்சம் ஏற்றித் தாண்டும்போதுதான் தெரிந்தது. எதிரே வந்த வாகனத்தில் இருந்து வெளியே சாய்ந்து எதையோ கையசைத்துச் சொல்லிக்கொண்டு போனது மழைச்சத்தத்தில் கேட்கவில்லை. எதுவும் கேட்க வேண்டாம்; கேட்பதற்கு எதுவுமில்லை.

``எனக்கு அழுகை வந்துட்டுது’’ பச்சை என்னைப் பார்த்துக் கும்பிட்டாள். மறுபடியும், ``உங்களுக்குக் கரகரனு கண்ணீர் வரவைக்கிறது மாதிரி ஒரு குரல். நாங்க எல்லாம் பாடுகிறது வேற. இது வேற’’ என்று சொல்லும்போதும் கண்களில் அந்தப் பளபளப்பும் ஈரமும் இருந்தன.
பச்சையின் வலதுகை என் பக்கமாகத் துழாவி, கியர்மேல் குமிழாகப் பொத்தியிருந்த கையைப் பொத்தி அப்படியே இருந்தது. நெளிவு மோதிரம் கொத்தியது.

மழை வலுத்திருந்தது. காற்று வளைத்து வளைத்துப் பாதையைத் துப்புரவாக அலசி விட்டது. முடுக்கப்பட்ட வைப்பர் வேகமாகத் தண்ணீர் துடைத்தது. துடைப்பதற்கு முன் வழிந்தது; வழிவதற்கு முன் துடைத்தது. எது முன் எது பின் என்று அறியாத இயக்கம். எதற்கும் முன்பின் அற்று, எல்லாம் ஒன்றாகித் துலங்கிக் கொண்டு இருந்தது.

பச்சை எதுவும் பேசவில்லை. அப்படியே இருந்தாள். அவ்வப்போது அவளே எதையோ சொல்லிக்கொண்டாள். ‘`எங்க போய்க்கிட்டு இருக்கோம்? எந்த இடம்னே தெரியலை’’ - இரண்டு கைவிரல்களையும் குளிருக்குப் பூட்டுவதுபோல் கோத்துக்கொண்டாள். ‘`மடமடனு தீப்பிடிச்சு எரியுத மாதிரி இருக்கு’’ இதை அவளால் சொல்ல முடிந்தது. சுள்ளி எரிந்து விறகுக் கணு வெடித்துச் சிலிர்க்கிற மழைச் சத்தம். பாதையைவிட்டுப் பார்வையை விலக்க முடியவில்லை. வெளிச்சம் கூட்டி, வெளிச்சம் குறைத்துப் பாதையைப் பாய்ந்து பாய்ந்து வேட்டையாடி விழுங்க வேண்டியது இருந்தது. பச்சை, நான், கண்ணாடிகள் இறக்கப்பட்ட இந்த மொத்த வாகனம் எல்லாம் ஓர் அம்புபோல, தைப்பதற்கு முந்தைய விடுதலையில் சீறிக்கொண்டு போயின.

‘`எங்க அய்யா எப்படி இருக்கோ?’’ என்ற பச்சையின் முகம் நாடியை உயர்த்தினாற் போலச் செதுக்கப்பட்டிருந்தது. கூட்டத் திலிருந்து சற்றுப் பின்தங்கித் தனியாகி, மறுபடியும் இணைந்துகொள்ளும் தீவிரத்தில் மழைக்குள் ஓடுவதைப்பற்றித் தீர்மானிக்கும் ஒரு காட்டு விலங்குபோல நுட்பமான அவதானிப்பில் மொத்த உடலும் அடுத்த அசைவுக்குத் தயாராகியிருந்த நிலை.

``ரெண்டு தட்டு ஓட்டு வூடு. அவரு நார்க்கட்டில் கிடக்கிற இடத்தில் பனங்கை ஏற்கெனவே இறங்கியிருந்துச்சு’’ இதைச் சொல்லும்போது பச்சையின் நாசிகள் விரிந்திருக்கும் என்று நினைத்துக்கொண்டேன். தூரத்தில் மண் கிளறப்படுகிற, கிளை ஒடிந்து பச்சை வாசம் அடிக்கிற, தாக்கப்படும்போது உண்டாகிற தீனக் குரலின் சன்னம் படர்கிற ஈரக்காற்றுக்குப் பளபளத்து விம்முகிற நுனிநாசி.

‘`இப்படி மழை வரும்னு எதிர்பார்க்கலை’’ பச்சை திரும்பிப் பார்த்தது பின் சீட்டில் வைக்கப்பட்ட, லியாகத் அலி வீட்டு பிரியாணிப் பொட்டலமாக இருக்கலாம்.

‘`எனக்கு ஒண்ணும் சிரமம் இல்லை. உங்களை உங்க வீட்டில விட்டுட்டுத்தான் போகப் போறேன்’’ - இதைப் பச்சையின் முகத்தைப் பார்த்துச் சொல்ல முடியவில்லை. எதிரே அடுத்தடுத்து ஒரு இ்னோவாவும் டவேராவும் இடது சக்கரங்களை ரோட்டிலிருந்து இறக்கிப் படகுபோல அசைந்துகொண்டு எதிர்ப்பக்கம் இருந்து வெளிச்சத்தைக் குறைக்காமல் சீறிக்கொண்டு போனதில் தண்ணீர் பாளமாக மடிந்து சிதறியது.

இருபது அடிகளுக்குப் பின்னால் வந்த ஆட்டோவில் இருந்தவர்கள் கையை அசைத்து அசைத்துத் தடுத்தார்கள்.

‘`என்னமோ சொல்லுதாங்க’’ பச்சை சொல்லும்போதே நான் கண்ணாடியைத் தணித்திருந்தேன். ஜன்னலுக்கு வெளியே தொங்கின கை உடனடியாக மழைத் தாரையில் நனைந்து சொட்டியது. ‘`தருவைமுத்தூர்லே வழக்கம்போல ஏதாவது தகராறால், வெட்டுக்குத்தா இருக்கும்” பச்சையின் குரலும் வலது பக்கம் திரும்பியிருந்தது.

‘`கரையடியான் கோயில் பக்கத்தில நவ்வா மரம் சாஞ்சுட்டுது. அந்தப் பக்கம் இந்தப் பக்கம் வண்டி போக முடியாது’’ இதைச் சொல்லிவிட்டு நகர்ந்த ஆட்டோவை ஒட்டிவந்து நின்றுகொண்டிருந்த பைக்கில் பின்னால் இருந்த பெண் குரல், ``நல்லவேளை, நாங்க ஒரு ஆசை பொழைச்சோம். அந்த ஆட்டோ, அதுக்குப் பின்னால நாங்க. ரெண்டு பேரும் தாண்டி ரெண்டு நிமிஷம் இருக்காது; அது அடியோடு அப்படியே சாய்ஞ்சு விழுது. ஒரு சத்தம் இல்லை. அந்தக் கரையிலே இருந்து இந்தக் கரைக்கு விழுந்து கிடக்கு. பூச்சி பொட்டு தாண்டிப் போகணும்னால்கூட முடியாது” என்று சொல்லி, முகத்தில் வழிந்த தண்ணீரை வழித்துவிட்டுக் கொண்டது. வண்டி உறுமிக் கிளம்பும்போது மறுபடியும், ‘`லைட்டுப் போயிட்டுது. இருட்டுக் கசமாக் கிடக்கு’’ என்று சொன்னது. உச்சியிலிருந்து மழைத் தண்ணீர் வழிகிற முகத்தை எனக்குப் பிடித்திருந்தது.

‘`சும்மா நாம போவோம்’’ பச்சை சத்தம் கொடுத்தாள். நான் வந்த வழியில் திரும்பிவிடக் கூடாது என்று தடுப்பதுபோல பச்சையின் கை என் இடது தோளில் இருந்தது.

‘`சும்மா போவோம்னா, எங்கே?’’

‘`அங்கேதான். கரையடியான் கோயிலுக்கு...’’

‘`அதுக்கு அந்தப் பக்கம் போக முடியாதுனு அந்தப் பொம்பிளை சொல்லுச்சே, கேக்கலையா?’’

‘`அதுக்கு அந்தப் பக்கம் யாரு போகச் சொல்லுதா, அது பக்கம் வரைக்கும் போலாம்ல?’’ பச்சையின் கை தோளிலேயேதான் இருந்தது.

‘`சின்னப் பிள்ளையா நீங்க?’’ மிஞ்சிப் போனால் எனக்கு இரண்டு மூன்று வயது குறைவாக இருக்கிற - நான் அப்படித்தான் நினைக்கிறேன்... ஒருவேளை கூட இருக்குமோ? - பச்சையைப் பார்த்து அப்படிக் கேட்கும்போது எனக்குச் சிரிப்பு வந்தது. பச்சை முகத்திலும் சிரிப்புதான். வெற்றிலை போட்டிருப்பதுபோல வாயைக் குவித்து, லேசாக உப்பின கன்னத்துக்குள் கண்ணின் கீழ் கோடு விழுகிற விதம். ஒரு சிரிப்பு. அதற்கு ஒரு பதில் சிரிப்பு. இவ்வளவு தெள்ளத் தெளிவாக, கலங்கலே இல்லாமல் இப்படியும் அது இருக்க முடியும்போல.

``நான் அந்த மரத்தடியில நவ்வாப் பழம் பொறுக்கியிருக்கேன். நான் என்ன... எங்க அய்யா பொறுக்கியிருக்காரு. தெக்குத் தெரு, வடக்குத் தெருனு எங்க ஊரே பொறுக்கியிருக்கும்...’’ பச்சை சொல்லும்போது, நான் ஹேண்ட் பிரேக்கைத் தளர்த்தி, முதல் கியருக்குப் போயிருந்தேன்.

‘`இப்போ நினைச்சாலும் நவ்வாப் பழக் கறையோட ஒரு கிழிசத் துண்டும் உப்பு மரவையும் தெரியுது.’’

நான் வண்டியை நகர்த்த ஆரம்பித்திருந்தேன்.

‘`அந்த நவ்வா மரத்துக்கு நூறு வயசு இருக்கும். அதுக்கு மேலயும் இருக்கும். சொல்லப் போனா, அதுக்கெல்லாம் வயசே கிடையாது.’’

இதைச் சொல்கிற பச்சைக்கும் வயது கிடையாது என்றுதான் எனக்குப்பட்டது. அதை அவளிடம் சொல்ல வேண்டும்போல இருந்தது. சொன்னால்தான் என்ன? இதைச் சொல்லாமல் வேறு எதைச் சொல்லப் போகிறேன்.

‘`உனக்கும் வயசே கிடையாது பச்சை.’’

‘`வயசு கிடையாதா... வயசு தெரியலையா?’’

‘`வயசு கிடையாது.’’

‘`அப்படி இருந்திருந்தால் அல்லல் இல்லாமல் போயிருக்கும். இருவது, முப்பது, நாப்பதுனு ஒவ்வொரு வயசா வர வரத்தானே நாங்க இப்படிக் கிடந்து யார் யார் கையிலேயோ சீரழிய வேண்டியது இருக்கு?’’ பச்சையின் குரல் ஒலிப்பதிவுக்கு உரியதுபோல் எந்தக் கரகரப்பு மற்றுத் திருத்தமாக இருந்தது.

‘`ஒரு பத்து வருஷம் பதினஞ்சு வருஷம் ராத்திரியும் வெளிச்சம், பகலிலேயும் வெளிச் சம்னு கிடக்கும். தரையும் தெரியாது, மானமும் தெரியாது. எல்லாம் அந்தரத்திலேயே மிதந்துக் கிட்டுப் போகும். யாராவது ஒரு எஸ்.பி.பி.நாதன் வந்து `உன்னைவிட்டால் கிடையாது’ம்பான். நமக்கும் அவனைவிட்டால் கிடையாதுன்னுதான் இருக்கும். `அவனுக்கு ஏற்கெனவே குடும்பம் இருக்கு தாயி’ என்று யாராவது சொல்லுவாங்க. அது நம்ம காதுலேயே விழாது. `ஐயோ... காதிலே விழாமல் போச்சே’னு ஒரு ஸ்டேஜ் வரும்போது நாம குப்புற விழுந்துகிடப்போம். அவன், அவனுடைய பொண்டாட்டி தோளிலே கையை ஊனிக்கிட்டு எந்திருச்சுப் போயிருப்பான். நான் இப்படிச் சீக்குக்கார அப்பனை நார்க்கட்டிலில் படுக்கப் போட்டுட்டு, வக்கீலய்யா வீடு எங்கே இருக்குனு அலைஞ்சுக்கிட்டு இருப்பேன்.’’

எதிரே இருந்து எந்த வண்டியும் வரவில்லை. ஒதுங்கி மரத்தடியில் நிற்கிற போக்கு மாடு ஒன்றின் கண் நீலக்கோலி உருட்டியது. பச்சையின் பேச்சு அகல இலைகளுள்ள மரத்தின் மேல் பட்டுத் தெறிக்கும் அடைமழையின் நிதானம் கொண்டிருந்தது. மொத்த மரமும் ஈரத்தில் கனத்துக் குனிவதுபோல, ஒரே ஒரு கிளை தணிவதுபோல, ஒரு இலை தன்னை உதறிக்கொள்வதுபோல எல்லாம் இருந்தது.

``எல்லாரும் தண்ணி கனக்காதுனு நினைச்சுக் கிடுதாங்க. பாறாங்கல்லு மாதிரி அதுவும் கனத்துத்தானே கிடக்கு?’’ பச்சை தன் உள்ளங்கையைக் குவித்து, அதில் இருக்கிற தண்ணீரை என்னிடம் நீட்டிக்காட்டுவது போன்ற சைகையில் இருந்தாள். அது வேறொரு முகம். அவளுடையது இல்லை. அதில் வழிகிற கண்ணீரைத் துடைக்க அவசியமில்லை என்று, அவள் குரலில் இருந்து முகத்தை வெகுதூரத்தில் வைத்திருந்தாள்.

‘`மூணு மருது எல்லாம் தாண்டியாச்சுபோல?’’ என்று பச்சை என்னிடம் கேட்டாள். நான் பக்கவாட்டில் பார்க்காமல் முன்னால் முகப்பு வெளிச்சதூரத்தில் செலுத்திக்கொண்டிருந்த தால், எதையும் கவனிக்கவில்லை.

மூன்று மருத மரங்கள் பெரியதாக இருக்கும் அந்த இடத்தை ‘மூணு மருது’ என்று சொல்வதை நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். பங்குனி, சித்திரையில் அநேகமாக அந்த மருத மரத்தின் கீழ் குடும்பம் குடும்பமாக நரிக்குறவர்கள் கூடாரம் போட்டிருப்பார்கள். இரண்டு, மூன்று கூண்டு வண்டிகள் நிற்கும். ஒரு குதிரையைக்கூடப் பார்த்த ஞாபகம் உண்டு. நாய்களின் குரைப்பு சதா கேட்கும் காலமாகவும் அது இருக்கும். இப்போது அந்த இடத்தில் ஒரு மருத மரம்கூட இல்லை. எனக்கு மருதங்காய் ஒன்றை இந்த நிமிடம் கையில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று இருந்தது.

பச்சை என்னிடம் கண்ணாடியை இறக்கிவிடச் சொன்னாள். முழுவதுமாக இறக்கிவிட்ட சன்னல் வழியாகக் கையை நீட்டினாள். ‘`மழை நல்லா வெறிச்சுட்டு’’ என்றாள். கையை உள்ளே இழுத்துச் சேலைத் தலைப்பால் துடைத்து, மறுபடியும் வெளியே நீட்டிச் சோதித்தாள். ‘`லேசாப் பெய்யுது’’ என்றாள்.

மழை வெளியே பெய்யும்போது, எல்லோருக் குள்ளும் அது பெய்கிறது. வெளியே வெறிக்கும்போது உள்ளேயும் வெறிக்கிறது. எனக்குள்ளும் பெய்திருக்கும்; வெறித்திருக்கும். வாகனத்தை ஓட்டிக்கொண்டு போவதால், வெளியே பெய்வதை மட்டும் கவனிக்க வேண்டியதாயிற்று. ஒரு வேகமான நடனம் முடிந்து, சபைக்கு வந்தனம் சொல்வதுபோல, இடுப்பிலிருந்து பாதம் வரை தளர்ந்துகிடக்கும் சுருக்கங்கள் உள்ள மெல்லிய உடையை இடமும் வலமும் நுனிவிரல்களால் உயர்த்தி, சிரம் தாழ்த்துவதாக மழை தணிந்துகொண்டிருந்தது. கிளையிலிருந்து பிய்த்துக்கொண்டு வந்த ஒரு நுனிக்கொப்பு இலைகளோடு மழைத் தண்ணீரில் சறுக்கி ஒதுங்கியது. முன் விளக்கின் பாயும் வெளிச்சத்தில் இலைகளின் பளபளப்பு, இதுவரை துழாவிக் கொண்டிருந்த மொத்தத்தையும் சாலையின் கறுப்பின்மேல் வைத்துப் பக்கவாட்டில் சறுக்கியது.

``நவ்வா இலையாத்தான் இருக்கும்’’ நான் யாரிடமும் சொல்லவில்லை; ஆனால், சொன்னேன்.

‘`இருக்காது’’ பச்சை ஒற்றைச் சொல்லாகச் சொன்னாள்.

‘`நானும் பார்த்தேன். கொப்பு முறிஞ்சு கிளை முறிஞ்சு போயிருந்தா, மரம் தப்பியிருக்கும். ஒரு இலை, ஒரு துளிரையும் விட்டுக்கொடுக்காத தனாலதான் அது அப்படி முழுசாச் சாஞ்சிருக்கு. நூறு வயசு மரம். அது எப்படி இன்னைக்குப் பொறந்த மழைக்கும் காத்துக்கும் விட்டுக்கொடுக்கும்? இது நவ்வா இலை இல்லை. புங்கை, உசுலை இப்படி ஏதாவதா இருக்கும்.’’

பச்சை இதைச் சொல்லி முடிப்பதற்குள் ஒரு முப்பதடி தூரத்துக்குள் வந்துவிட்டோம். இடப் பக்கத்திலிருந்து சாய்ந்து வலப்பக்கத்தையும் தாண்டி அந்த நாவல் மரம் பரந்துகிடப்பது தெரிந்தது. ஒரு பத்துப் பதினைந்து பேர் அதை ஒட்டி இங்கும் அங்குமாக நகர்ந்துகொண்டு இருந்தார்கள். இரண்டு மூன்று டார்ச் லைட் வெளிச்சங்கள் குறுக்குமறுக்காகக் கோடு போட் டுக் கலைந்தன. ஒன்றிரண்டு பெண்பிள்ளைகள் மரம் விழுந்திருப்பது எங்களுக்குத் தெரியாததுபோல் கையைக் காட்டித் தடுத்தனர். ஏதோ மின்கசிவு உண்டானதுபோல, விஷக்கடி உச்சிக்கு ஏறுகிற மாதிரி என்னுடைய இடது பக்கம் பூராவும் விறுவிறுவென்றிருந்தது.

நான் போதுமான இடைவெளியுள்ள தூரத் தில் வண்டியை நிறுத்தி, விளக்குகளை மட்டும் எரியவிட்டேன். கண்ணைச் சுருக்கிக்கொண்டு, நெற்றியில் விரல் மறைப்பிட்டவர்களாக இரண்டு மூன்று பேர் எங்கள் பக்கம் பார்த் தார்கள். நான் இறங்குவதற்குள் பச்சை இறங்கி விட அவசரப்பட்டாள். ‘`இதைக் கொஞ்சம் திறந்துவிடுங்க’’ என்று கதவோடு முண்டிக் கொண்டு இருந்தாள். ‘`இருங்க இருங்க, நான் வாரேன்’’ என்று சொல்லும்போதும், பச்சையின் அவசரம் இருந்தது. என் இடத்தில் இருந்து சாய்ந்து, பச்சையின்மீது அழுந்தும் தோளுடன் திறந்துவிட்டேன்.

கதவு திறந்தவுடன், கார் மட்டத்துக்குள் வரப் போவதுபோல ரோட்டில் மழைத் தண்ணீர் ஓடுகிற சத்தம் கேட்டது. அந்தச் சத்தம் அந்த நேரத்தின் செய்தியாக இருந்தது. பச்சை இறங்கி, ஓடிப்போய்க்கொண்டு இருந்தாள். இந்த ஜென்மத்திலிருந்து தப்பித்து முந்தைய ஜென் மத்துக்கும் முந்தைய ஜென்மத்துக்குள் நுழைவது போல அவள் அந்த மரத்தின் பக்கம் போய்ச் சேர்ந்தாள்.

நான் பக்கத்தில் போயிருக்கும்போது, பச்சை அதன் கிளைகளையும் இலைகளையும் விடாமல் தொட்டுத் தொட்டுக் கும்பிட்டுக்கொண்டு இருந்தாள். என்னைப் பார்த்து அடையாளம் கண்டுகொண்டு மிகவும் இளகியதுபோலப் பச்சையையும் அவர்களுக்குத் தெரிந்திராமல் இராது. யாரோ கையில் வைத்திருந்த ஐந்து செல் டார்ச்சை, நான் கேட்காமலே என்னிடம் கொடுத்து, ‘`பார்த்து வாங்க, சார்’ என்றார். டார்ச்லைட் உலோகம் அத்தனை மழையின் குளிரையும் வாங்கிவைத்து என்னிடம் கைமாற்றியது.

`‘எல்லாம் கரையடியான் புண்ணியம். ஒரு உசிர்ச்சேதம் கிடையாது’’ என்று தலைப் பாகையை மரியாதையாக அவிழ்த்தபடி அதன் பக்கம் போய் ஒருத்தர் கும்பிட்டார். குடித்திருக் கலாம். அதே துண்டைச் சுருட்டி வாய்ப்பக்கம் வைத்து என் பக்கமாக வந்தார். என் பக்கத்துக்குப் போகாமல், தன் பக்கமாக வந்துவிடும்படி ஒருத்தர் சைகை செய்ததும், அவர் ஒதுக்கமாகப் போனார்.

பச்சையின் அப்பா பெயரைச் சொல்லி `இன்னார் மகளே...’ என்று ஒரு சடை விழுந்த மனுஷி பச்சையின் தோளில் ஒப்புச்சொல்லி அழப்போவதுபோலக் கையைப் போட்டாள். அவளுடைய எலும்பு முண்டுகிற வலது கையைத் தானாகவே முன்வந்து தன்னுடைய தோளைச் சுற்றிக் கழுத்துப் பக்கம் இன்னொரு வயசாளி போட்டுக்கொண்டதும், பச்சை நடுவில் இருக்க, மரத்தின் பக்கமாகக் குனிந்து, முன்பக்கமாக மடங்கி மடங்கி அசைந்தபடி வாய்விட்டுப் பாடி அழ ஆரம்பித்தார்கள்.

மற்ற இரண்டு பேரின் குரல்களும் ஒரு நடுக்கத் துடனும் தணிவாகவும் இருக்க, பச்சையின் குரல் தெளிவாகவும் உருத்தாகவும் ஓர் இலை பாக்கிவிடாமல் முழு மரத்தையும் ஆவி சேர்த்துத் தழுவிக்கொண்டு இருந்தது.